"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், கண்டடைவீர்கள்: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்."
(மத்.7:7)
நாம் ஒன்றுமில்லாதிருந்தோம்.
கேட்பதற்கே நாம் இல்லை.
நம்மைக் கேளாமலேயே நம்மைப் படைத்தார்.
நாம் கேளாமலேயே அவரது சாயலை நமக்குத் தந்தார்.
அவர் சொல்லைக் கேளாமல்
நாம் பாவம் செய்தோம்.
நாம் கேளாமலேயே பாவத்திலிருந்து மீட்க மனிதனாகப் பிறந்தார்.
நாம் கேளாமலேயே நமக்காகப் பாடுபட்டார்.
நாம் கேளாமலேயே நமக்காக மரித்தார்.
நாம் கேளாமலேயே நமக்காக விண்ணகத்தை தயார் நிலையில் வைத்திருக்கிறார்.
இவ்வளவும் செய்து விட்டு நம்மைப் பார்த்து,
"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்." என்கிறார்.
ஏன்?
உறவினர்களை ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இணைத்து வைப்பது அவர்களுக்கு இடையே இருக்கும் அன்பு என்னும் உறவு தான்.
இது நண்பர்கள், அன்பர்கள், பழகியவர்கள் ஆகியோருக்கும்
பொருந்தும்.
அன்பினால் உந்தப்பட்டு அன்புக்கு உரியவர்களிடம் உரிமையோடு கேட்டுப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சி
கேளாமல் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியை விட அதிகமானது.
இது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
குழந்தையை கேட்டு அதன் தாய் அதை பெறவில்லை.
பெறுவதில் மகிழ்ச்சி இருந்தது, பெற்றாள்.
மகனைப் பெறும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட,
அம்மகன் தனக்கு வேண்டியதை உரிமையோடு கேட்டுப் பெறும்போது
கொடுக்கும் தாய்க்கும்
பெறும் மகனுக்கும் ஏற்படும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.
குழந்தை தாயிடம் மட்டும்தான் உரிமையோடு பால் கேட்கும்.
மகன் தந்தையிடம் மட்டும்தான் உரிமையோடு செலவுக்குப் பணம் கேட்பான்.
வெளியூரில் வாழ்ந்து வரும் 70 வயதைத் தாண்டிய மகன்
90 வயதைத் தாண்டிய தன் தாயிடம் வந்து,
"அம்மா, உங்கள் மடியில் கொஞ்ச நேரம் தலை வைத்து படுக்கலாமா,
அப்படியே எனக்கு ஒரு முத்தம் கொடுக்கிறீர்களா,
உங்கள் கையால் எனக்கு உணவு ஊட்டி விடுகிறீர்களா
என்றெல்லாம் கேட்கும் போது தாய்க்கு ஏற்படும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.
கேட்டுப் பெறும்போது மகனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி தாயின் மகிழ்ச்சிக்கு இணையானது.
ஒரு சிறு குழந்தைக்கு நாமாக முத்தம் கொடுப்பதைவிட அது நம்மிடம் ஆசையாக கேட்டுப் பெறுவது நமக்கு மிக மிக ஆனந்தமான அனுபவம்.
இறைவனிடம் உரிமையோடு கேட்டு பெறுதல் நமக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.
நம்மை படைத்தவரிடம் நாம் எதுவும் கேட்காதிருந்தால் நமக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி ஆகிவிடும்
அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தால்தான் அவரின்றி நம்மால் இயங்க முடியாது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்வதாகும்,
அவரின்றி நம்மால் இயங்க முடியாது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்வதே அவரிடமிருந்து அபரிமிதமான அருள் வரங்களை கொண்டு வரும்.
எதைக் கேட்க வேண்டும்?
ஆசிரியர் பாடம் நடத்தி முடித்துவிட்டு மாணவர்களை நோக்கி,
"நடத்தப்பட்ட பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்."
என்றார்.
ஒரு மாணவன் கையை உயர்த்தினான்.
"நின்று கேள்."
"சார், நீங்கள் பாடம் ஆரம்பித்த நேரத்திலிருந்து இந்த வலது பக்க சன்னலுக்கு வெளியே இருந்து, 'கொடக் கொடக்' என்று ஒரு சப்தம் வந்து கொண்டே இருக்கிறது.
அது என்ன சப்தம்?"
"அப்போ என் பாடத்தை நீ கவனிக்கவேயில்லை!"
"கவனிக்க முடியவில்லை."
"இங்கே வா. கையை நீட்டு.''
"சாஆஆர்."
'சார்தான். நீட்டு....."
"சார், வலிக்கு...."
"இப்போ அந்த சப்தம் கேட்கா?"
"சார், கேட்கல."
"இனிமே கேளாது. இடத்திலே போய் உட்கார்ந்து நான் சொல்வதைக் கவனி. போ."
நாமும் இப்படித்தான் கடவுள் கேட்கச் சொன்னால் சம்பந்தம் இல்லாத விஷயங்களை கேட்டு நமது நேரத்தை வீணடித்து கொண்டிருப்போம்.
ஆசிரியரிடம் பாடத்தை பற்றி பேசவேண்டும்.
டாக்டரிடம் நமக்குள்ள நோய் பற்றி பேசவேண்டும்.
கடைக்காரரிடம் நாம் வாங்க வேண்டிய பொருள்கள் பற்றி பேச வேண்டும்.
பஸ் கண்டக்டரிடம் ticket பற்றி பேச வேண்டும்.
இறைவனிடம் நமது ஆன்மீக வளர்ச்சி பற்றி பேச வேண்டும்.
இறைவனிடம் நாம் வாழும் உலக சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி பேசக் கூடாதா?
உதாரணத்திற்கு, நமது உணவு, உடை, இருப்பிடம், வசதிகள், வேண்டியவை, வேண்டாதவை, நோய் நொடிகள், சுகம் அடைதல்
இது போன்ற ஆன்மீக சம்பந்தமில்லாத விஷயங்களை பற்றி இறைவனிடம் பேசக்கூடாதா?"
"இறைவன் எல்லாவற்றிற்கும் ஆதி காரணர். இருப்பவை எல்லாம் அவரால் தான் இருக்கின்றன.
ஆகவே இறைவனிடம் எதைப் பற்றி வேண்டுமென்றாலும் பேசலாம்.
ஆனால் ஒரு அடிப்படை உண்மையை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆன்மீக சம்பந்தமில்லாத விஷயம் என்று எதுவுமே கிடையாது.
ஆன்மா வாழ்வதற்காகத்தான் உடல் படைக்கப்பட்டது,
உடல் வாழ்வதற்காகத்தான் உலகம் படைக்கப்பட்டது.
உலகம் இயங்குவதற்காகத்தான் பிரபஞ்சம் படைக்கப்பட்டது.
எல்லாமே இறைவனால்தான் படைக்கப்பட்டன.
இருப்பவை எல்லாம் இறைவனால் தான் இருக்கின்றன.
இறைவன் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை.
ஆகவே எல்லா பொருட்களும் இறைவன் சம்பந்தப்பட்டவையே.
எல்லா பொருள்களும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவையே.
நமது உடல் ஆன்மாவிற்காகப் படைக்கப்பட்டிருப்பதால், உடலும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதே.
ஆகவே நாம் எதைப்பற்றி வேண்டினாலும் அது நமது ஆன்மீகம் சம்பந்தப் பட்டதாகவே இருக்கும். .
ஆகவே இறைவனிடம் எதற்காக வேண்டினாலும் நமது ஆன்மீக வாழ்விற்கு யாதொரு இடையூறும் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக வருமானம் வரும் என்ற அடிப்படையில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.
அந்த வேலை நமக்குக் கிடைக்குமானால் வருமானம் நிறைய வரலாம்.
ஆனால் அது நமது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமா இருக்காதா என்று கடவுளுக்கு மட்டும் தெரியும்.
அது லஞ்சம் புரளும் வேலையாய் இருந்தால் நிச்சயமாக வருமானம் கோடிக்கணக்கில் வரலாம்.
ஆனால் லஞ்சக் கடலில் மாட்டி ஆன்மா அழிந்து போவது உறுதி.
தெரிந்தும் விஷத்தை யாரும் குடிப்பார்களா?
லஞ்சம் வாங்குவதற்கு இறைவனது உதவியை கேட்பது தவறு.
மற்றொரு வேலை எப்படி பட்டது என்று நமக்கு தெரியாது.
அந்த வேலைக்கு விண்ணப்பிக்கும்போது இறைவனிடம்,
"இறைவா நான் விண்ணப்பத்திருக்கும் வேலை எனது ஆன்மீக நலனுக்கு இடையூறு இல்லாத தாக இருந்தால் அதை எனக்கு பெற்றுத்தாரும்."
என்று ஜெபித்தால் வேலை கிடைத்தாலும் நன்றி கூறுவோம்
கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்.
வருமானத்தை தரும் வேலை உலகம் சம்பந்தப்பட்டதுதான்.
ஆனால் அதில் ஆன்மீகமும் சம்பந்தப்படுகிறது.
நாம் முதலிடம் கொடுக்க வேண்டியது ஆன்மீகத்துக்கு மட்டும்தான்.
ஆக எதற்காக வேண்டுமானாலும் வேண்டலாம்.
படிப்பது மனதில் தங்குவதற்காக வேண்டலாம்,
தேர்வில் வெற்றி பெறுவதற்காக
வேண்டலாம்,
நல்ல வேலை கிடைப்பதற்காக
வேண்டலாம்,
திருமணம் சிறப்பாக நடைபெறுவதற்காக வேண்டலாம்,
குழந்தைப் பேறுக்காக வேண்டலாம்.
எதற்காக வேண்டினாலும்,
" இறைவா, உமது சித்தம் இருந்தால் தருக." என்ற வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் கேட்டது கிடைக்காவிட்டால் அது இறைவனது சித்தம் அல்ல என்பதைப். புரிந்து கொள்ள வேண்டும்.
எதை வேண்டுமானாலும் கேட்கலாம்.
ஆனால், எதை கட்டாயம் கேட்க வேண்டும்?
"தேடுங்கள், கண்டடைவீர்கள்:"
என்று சொன்ன ஆண்டவர் எதைத் தேட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
''கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:"
(மத், 6: 33)
இவ்வுலகைச் சார்ந்தவையும் சேர்த்துக் கொடுக்கப்படும்.
இட்லிக்கு order கொடுத்தவர்கள் சட்னி, சாம்பாருக்கு order கொடுக்கத் தேவையில்லை. அவையாகவே கொண்டு வரப்படும்.
இறையரசை நாம் தேடும் போது இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு உதவக்கூடிய மற்ற அனைத்தும் நாம் தேடாமலேயே கிடைக்கும்.
இறையரசை பெற நாம் தேட வேண்டியது யாரை?
இறையரசை பெற நாம் தேட வேண்டியது இறைவனை மட்டும்தான்.
இறைவன் தனது அருள் வரங்களை தேவத் திரவிய அனுமானங்கள் மூலம் நமக்குத் தருகிறார்.
தேவத் திரவிய அனுமானங்களை
தங்குதடையின்றி நாம் பெற வேண்டிய வசதிகளை தரும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.
ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி, திருவிருந்து ஆகியவற்றில் தகுதியுடன் கலந்து கொள்ள வேண்டிய அருள் வரங்களை நமக்குத் தர வேண்டும் என்று கேட்க வேண்டும்.
இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கவும்,
நமது அயலானை நம்மைப்போல நேசிக்கவும்,
இறைவனுக்காக பிறர் பணி செய்யவும்
நமக்கு உதவ வேண்டும் என்று இறைவனை வேண்ட வேண்டும்.
இவையனைத்தும் லெளகீக கலப்படம் இல்லாத ஆன்மீகம்.
கலப்படமில்லாத ஆன்மீக வாழ்வு வாழ்வதில் நமக்கு உதவிகரமாய் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்ட வேண்டும்.
"கேளுங்கள் கொடுக்கப்படும் என்று வாக்களித்த இயேசுவே,
உம்மை மட்டுமே கேட்கிறோம். எம்மில் எழுந்தருளி வாரும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment