Friday, December 11, 2020

"விசுவசிக்கிறோம்" என்று சொல்கிறோமே, விசுவசிக்கிறோமா?

.



"விசுவசிக்கிறோம்" என்று சொல்கிறோமே, விசுவசிக்கிறோமா?



"மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று. சமாதானமாய்ப் போ."
(லூக்.8:48)

குணமாக்குபவர் கிறிஸ்து.

ஒவ்வொரு முறை குணமாக்கும் போதும், இயேசுவே குணமாக்கிவிட்டு,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

என்றுதான் சொல்கிறார்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

இயேசுவின் சர்வ வல்லமை நமக்கு உதவ எப்போதும் தயாராக காத்துக் கொண்டிருக்கிறது.

அதை நம்முடைய விசுவாசத்தை கொண்டு பயன்படுத்த வேண்டியது நாம்தான்.

கிணற்றில் நிரம்ப தண்ணீர் இருக்கிறது. அதை அள்ளி குடிக்க வேண்டியது நாம்தான்.

கிணற்றின் அருகே நின்று கொண்டு,

"தண்ணீர் வேண்டும், தண்ணீர் வேண்டும்"

  என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் போதாது.

 இருக்கும் தண்ணீரை நாம்தான் அள்ளிக் குடிக்க வேண்டும். 

நமக்கு வேண்டியது எல்லாம் இயேசுவிடம் இருக்கிறது.

 அவற்றைப் பெற நாம் செய்யவேண்டியது ஒரே ஒரு காரியம்தான்.

 விசுவசிக்க வேண்டும்.

 விசுவாசத்தால் ஆகாதது எதுவுமில்லை.


 நாம் ஒவ்வொரு நாளும்,

 "விசுவசிக்கிறேன்'

 என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம்.

 ஆனால் உண்மையில் விசுவாசிக்கிறோமா? 

விசுவசித்தால் நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்று சொல்ல மாட்டோம்.

 கடலில் புயற்காற்று வீசிக்கொண்டிருந்தபோது அப்போஸ்தலர்கள்,

 "குருவே, குருவே, மடிந்துபோகிறோம்" என்று அவரை எழுப்பினார்கள்.


இயேசு அவர்களைப் பார்த்து,

"உங்கள் விசுவாசம் எங்கே?" என்று கேட்டார்.

"எல்லாம் வல்ல இறைவன் நம்மோடுதானே இருக்கிறார்.

 அவர் நமக்கு பாதுகாவலாய் இருக்கும்போது புயல் காற்றால் நமக்கு எந்த விபத்தும் வந்து விடாது"

 என்ற விசுவாசம் இருந்திருந்தால் இயேசுவைப் பார்த்து கத்தியிருக்க மாட்டார்கள்.

 அமைதியாக இருந்திருப்பார்கள்..

 புயற்காற்று அவர்களை எதுவுமே செய்திருக்காது, விசுவாசம் இல்லாததால் தான் அவரை எழுப்பினார்கள்.

நாமும் அப்போஸ்தலர்கள் 
செய்ததைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

நம்மிடமும் இயேசு அதே கேள்வியைத்தான் கேட்கிறார், "உங்கள் விசுவாசம் எங்கே?"

நமக்கும் நமது விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பின் நெருக்கத்தைப் பற்றி நாம் தியானித்து பார்க்க வேண்டும்.

விசுவாசம் நமக்குள் இருக்கிறதா?.

 அல்லது 

நம்மோடு இருக்கிறதா?

 அல்லது 

 விசுவாசம் என்ற வார்த்தை மட்டும் நமக்கு இருக்கிறதா?


ஏதாவது ஒரு கஷ்டத்தில் நாம் மாட்டிக் கொண்டு இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

Money purse ல் பணம் இருப்பது போல் நம்மிடம் விசுவாசம் இருந்தால்,

(Money purseல் இருக்கும் பணத்திற்கும், Money purse க்கும் உறவு இல்லை. இரண்டையும் பிரித்து விடலாம். அதுபோல் உறவு நிலை இல்லாத விசுவாசம் நம்மோடு இருக்குமானால்)

அதை ஆண்டவரின் உதவியை கேட்க பயன்படுத்துவோம், பணத்தை பயன்படுத்துவது போல.

விசுவாசம் நம்மோடு 

அதாவது உயிரைப் போல நம்மோடு கலந்து இருக்குமானால்,

நாம் நமது கஷ்டத்தின் உருவில் நம் ஆண்டவரைப் பார்ப்போம்.

நம்மிடம் இருப்பது கஷ்டம் அல்ல கஷ்டத்தின் உருவிலுள்ள ஆண்டவர்.

நமக்குள் இருக்கும் ஆண்டவரை நோக்கி,

" என்னை விட்டு வெளியேறும்" என்று சொல்வோமா?

அல்லது,

"நன்றி ஆண்டவரே, என்ன உருவில் வந்தாலும் நான் உம்மை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொல்வோமா?

பாடுபட்ட சுருபத்தை பார்த்தாலே நமக்கு புரிய வேண்டும், கஷ்டம் என்றாலே இயேசுதான் என்று.

சிலுவையில் கஷ்டப்பட்ட ஆண்டவர்தான் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

 சிலுவையும் ஆண்டவரே, உயிர்ப்பும் ஆண்டவரே என்ற உண்மையைப் புரிந்து கொண்டால்,

 கஷ்டமாக நமக்குள் வந்திருக்கும் ஆண்டவர் 

உயிர்ப்பாகவும் வருவார் என்பதை புரிந்து கொள்வோம்.  

அதை புரிந்து கொண்டால்,

"எல்லாம் இயேசுவே,
 எனக்கு எல்லாம் இயேசுவே.

கஷ்டமும் இயேசுவே,
 இன்பமும் இயேசுவே, மகிழ்ச்சியும் இயேசுவே.

எந்த நிலையில் நீர் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் இயேசுவே"

என்ற மனநிலை நம்மிடம் இருக்கும்.

வந்திருக்கும் கஷ்டம் நமக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும்.

விசுவாசம் என்ற வார்த்தை மட்டும் நம்மிடம் இருந்தால்,

நாம் பேருக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக இருப்போம்.

 செயலளவில் யாராக வேண்டுமானாலும் இருப்போம்.


நமது விசுவாச அளவிற்கு ஏற்ப தான் நம்முடைய விண்ணக பயண வேகமும் இருக்கும்.

விசுவாசம் அதிகமாக அதிகமாக அருள் வரங்களின் வரத்தும் அதிகமாகும்.

பஞ்ச நேரம்,

 லாரியில் தண்ணீர் வருகிறது.

 எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டால் என்ன செய்வோம்?

  எவ்வளவு பெரிய பாத்திரம் கொண்டு போக முடியுமோ அவ்வளவு பெரிய பாத்திரம் கொண்டு போவோமா, 

அல்லது 

ஒரு குட்டி தம்ளரை எடுத்துக்கொண்டு போவோமா?

இயேசு சொல்லியிருக்கிறார்,

 "கேளுங்கள் கொடுக்கப்படும்."

நாம் கேட்டால் கட்டாயம் கொடுக்கப்படும்.

 ஆனால், நமது விசுவாச பாத்திரத்தின் அளவிற்கு ஏற்ப கொடுக்கப்படும்.

 நமது விசுவாச பாத்திரம் பெரியதாக இருந்தால் நிறைய கிடைக்கும்.

 விசுவாச பாத்திரம் குட்டி தம்ளர் அளவு இருந்தால் அவ்வளவுதான் கிடைக்கும்.

 விசுவாசம் பேருக்கு மட்டும் இருந்தால் என்ன கிடைக்கும்?


நமக்கு வரும் துன்பங்களை எல்லாம் ஏதாவது ஒரு கருத்துக்காக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பது நாம் ஆண்டவரின் விருப்பம்.

ஒப்புக் கொடுப்பதற்கான துன்பங்களை அனுப்பும் அவர் 

வரும் துன்பங்களை அனுபவிப்பதற்கான தைரியத்தையும் சேர்த்துதான் அனுப்புவார்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக நமது துன்பத்தை ஒப்புக் கொடுக்கலாம்.

மற்றவர்களது நன்மைக்காக நமது துன்பத்தை ஒப்புக் கொடுக்கலாம்.

நமது நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் நமக்கு வரும் துன்பங்களை துன்பங்களாகக் கருத மாட்டோம்.

நோக்கத்தை அடைவதற்கான வழியாகத்தான் கருதுவோம்.


"தைரியமாயிருங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்" (மத்.14:27)

இயேசு தன் சீடர்களுக்கு சொன்ன வார்த்தைகள்.

நம்மிடமும் அதே வார்த்தைகளைத்தான் சொல்கிறார்.

"துன்பங்களைக் கண்டு பயப்படாதீர்கள்.

அவை துன்ப வடிவில் வந்த எனது ஆசீர்வாதங்கள்.

எனது துன்பங்கள் தானே உலகிற்கு மீட்பை கொண்டு வந்தன!

  உனது துன்பங்களால் உனது கருத்துக்கள் நிறைவேறும்."


உலகியலில், 

"ஒரு நாள் பட்டினி இருந்தால் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும்"

 என்று அரசு அறிவிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

 பட்டினி இருக்க பயப்படுவோமா?

 எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும் பட்டினி இருப்போம். 

அத்தனை கோடி ரூபாய் அல்லவா!

ஆன்மீகத்திலும் அப்படியே இருக்க வேண்டும்.

"இவ்வுலகில் எவ்வளவு கஷ்டமோ,

 ஏற்றுக்கொண்டு ஒப்புக் கொடுத்தால்,

 மறுவுலகில் அவ்வளவு பேரின்பம்!''

இந்த விசுவாசம் இருந்தால் துன்பத்திற்குப் பயப்படுவோமா?



இறைவன் நமது விசுவாசத்தின் வழியேதான் அதிசயங்கள் புரிகிறார்.

நமது ஒவ்வொரு சிந்தனையிலும் 

ஒவ்வொரு சொல்லிலும்

 ஒவ்வொரு செயலிலும்
 நமது விசுவாசம் வெளிப்பட வேண்டும்.

"எல்லாம் வல்ல தந்தை இறைவனை விசுவசிக்கிறேன்."

நாம் தினமும் வெளியிடும் இந்த விசுவாச அறிக்கை நமது உள்ளத்தில் இருந்து வர வேண்டும்.


"இறைவன் நமது தந்தை,

 அவர் சர்வ வல்லவர்,

 அவர் எப்போதும் நம்முடனே இருக்கிறார்,

 அவருடைய அனுமதியின்றி நம்மை எதுவும் அணுக முடியாது,

அவர் என்ன செய்தாலும் அது நமது நன்மைக்கே"


என்று நாம் ஆழமாக விசுவசித்தால் 

நாம் நம்மைப் பற்றி கவலைப்பட மாட்டோம்.

அவருக்கு சேவை செய்வதிலேயே
 முழுக் கவனத்தையும் செலுத்துவோம்.

நம்மை அவர் பார்த்துக் கொள்வார்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment