Saturday, December 19, 2020

தீமையிலிருந்து எங்களை இரட்சித் தருளும்.

தீமையிலிருந்து எங்களை இரட்சித் தருளும்.

"கடவுள் நல்லவராய் இருக்கும்போது அவரால் படைக்கப்பட்ட உலகத்தில் ஏண்ணே இவ்வளவு தீமைகள் இருக்கு?"


"தீமைகள்னு எதைச் சொல்றீங்க தம்பி?"

"இயற்கையைக் கடவுள்தான் படைத்தார். இயற்கையை நம்பிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்."

"திரும்ப  சொல்லுங்க."

"கடவுளையே நம்பிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதை நான் மறுக்கவில்லை.

ஆனாலும் இவ்வுலகத்தில் வாழ்வதற்காக ஆதாரமாக கடவுள்தானே நமக்கு இயற்கையை தந்திருக்கிறார்.

இயற்கை தீமைகள் நிறைந்ததாக இருப்பதால் தானே நமது வாழ்வில் நிறைய சங்கடங்கள் ஏற்படுகின்றன!

கடவுள் நல்லவராய் இருக்கும்போது ஏன் அவரால் படைக்கப்பட்ட இயற்கையில் இத்தனை தீமைகள்?"


"தீமைகள்னு எதைச் சொல்றீங்க என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் உங்கள் கேள்வியையே பழையபடி ஆரம்பிக்கின்றீர்கள்!"


"இயற்கையில் ஏற்படக்கூடிய நிலநடுக்கங்கள், புயல்கள், அளவுக்கு மிஞ்சிய மழை, மழையே பெய்யாமை, வெள்ளம், தண்ணீரே இல்லாமை, சுனாமி கடலரிப்பு போன்றவை."

"இவையெல்லாம் தீமைகள் என்று உங்களுக்கு சொன்னது யார்?" 


"இவை எல்லாம் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றனவே,

 தீங்கு விளைவிப்பது தீமைதானே!"


"தீங்கு விளைவிப்பதுதான் தீமை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், யாருக்குத் தீங்கு விளைவிப்பது?"


"மனிதனுக்கு."

"மனிதன்னா யாரு?"

"இதென்ன கேள்வி. நாம்தான் மனிதர்கள்.

சுனாமி வந்தபோது எத்தனை ஆயிரம் பேர் இறந்து போனார்கள்!

வெள்ளம் வந்த போது எத்தனை பேர் தங்கள் உடைமைகளை இழந்தார்கள்!"


"ஹலோ! நாம் இப்போது ஆன்மீகம் பேசுகிறோம். 
லௌகீகம் அல்ல.

நீங்கள் சொன்னவை எல்லாம் இயற்கை நிகழ்வுகள்.

இயற்கையின் விதிகள்படி நடப்பவை.

இமயமலை மீது கடல்வாழ் பிராணிகளின் புதைபடிவங்கள் (fossils) நிறைய உள்ளன.

அதனால்தான் அஸ்ஸாமில் பெட்ரோலியம் கிடைக்கிறது

இதிலிருந்து என்ன தெரிகிறது?

ஒரு காலத்தில் இமயமலை கடலுக்கு அடியில் இருக்கிறது.


ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்த இமயமலையில்தான் இன்று உலகிலேயே உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் இருக்கிறது.

கடலுக்குள் அடியில் இருந்த பகுதி மேலே வருவது இயற்கை நிகழ்வு. தீமை அல்ல.

நீங்கள் குறிப்பிட்ட நிலநடுக்கங்கள், புயல்கள், அளவுக்கு மிஞ்சிய மழை, மழையே பெய்யாமை, வெள்ளம், தண்ணீரே இல்லாமை, சுனாமி கடலரிப்பு போன்றவை இயற்கை நிகழ்வுகள். இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டவை"


"அப்போ தீமை என்பது எது?"

"மனிதன் அழியாத ஆவிப் பொருளாகிய ஆன்மாவும் , அழியக்கூடிய சடப்பொருளாகிய உடலும் உடையவன்.

உடல் சடப்பொருள், இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டது.

இன்று பூமியின் மேல் இருக்கும் உடல் பூமிக்குள் போவது இயற்கை நிகழ்வு. தீமை அல்ல.

ஆனால் விண்ணிற்கு என்று படைக்கப்பட்ட ஆன்மாவுக்கு  பாவத்தினால் விளைவதுதான் தீமை.

இயற்கை நிகழ்வுகள் இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டவை,

 ஆனால் பாவமாகிய தீமை இறைவன் தந்த கட்டளைகளுக்கு எதிர் மாறானது,

 ஆன்மீகத்தில் இறைவன் விதித்திருந்த விதிகளுக்கு எதிராக செல்வதுதான் பாவம்.

இயற்கை பொருட்கள் இயற்கை விதிகளை மீறமுடியாது.

ஆனால் மனிதனுக்கு சிந்தனை சொல் செயல் சுதந்திரம் இருப்பதால் அவனால் இறைவனது கட்டளைகளை சுதந்திரமாக அனுசரிக்கவோ, மீறவோ முடிகிறது.

மீறுவது தான் பாவம். அதுவேதான் தீமை. 


இந்த தீமையிலிருந்து நம்மை இரட்சிக்கும்படி தான் நாம் தினமும் பரலோகத் தந்தையிடம் வேண்டுகிறோம்."

".பாவத்தின் விளைவு தானே மரணம்."

"உலகியல் ரீதியாக நாம் பேசும்போது உடலிலிருந்து அவரது ஆன்மா பிரிவதை மரணம் என்கிறோம்.

ஆன்மீகத்தில் நாம் சாவான பாவம் செய்யும்போது நமது ஆன்மா மரணம் அடைகிறது.

நமது  ஆன்மாவின் உயிர் இறைவனின் அருள்.

பாவம் செய்யும்போது நமது ஆன்மா இறை அருளை இழப்பதால் இறைவனோடு உள்ள உறவையும் இழக்கிறது.

இந்த இறை உறவு இழப்பை தான் ஆன்மாவின் மரணம் என்கிறோம்.

ஆனாலும் நாம் இறைவனிடமிருந்து பாவத்திற்கு மன்னிப்பு பெறும்போது நமது ஆன்மா இறை அருளை பெற்று உயிர் பெறுகிறது.

இங்குதான் ஒப்புரவு அருட்சாதனம் முக்கியத்துவம் பெறுகிறது.

உலகியல் ரீதியாக மரணமடை
வது தீமை அல்ல.


உலகியல் ரீதியாக மரணமடையும்போது 

நமது ஆன்மா ஆன்மீக ரீதியாக இறை அருளோடு, அதாவது, உயிரோடு இருக்க வேண்டும்.

 அப்படி இருக்க தவறுவதுதான் தீமை."


"அப்படியானால் சுனாமியின் போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தவர்கள் எந்தவகை?"


"சுனாமி மட்டுமல்ல எந்த இயற்கை நிகழ்வினாலும் மக்கள் உயிர் இழப்பது 

உடலைப் பொறுத்த மட்டில் இயற்கை நிகழ்வு,

ஆன்மாவைப் பொறுத்தமட்டில் ஆன்மீக நிகழ்வு.

ஆன்மா 'இறை அருளோடு' உயிரோடிருந்தால் இறைவனடி சேரும், இல்லாவிட்டால் இறைவனை  இழக்கும்.


"இறைவனடி சேர்வது மோட்சம்.

இறைவனை  இழப்பது நரகம்."


"உடலுக்கு வரும் நோய் நொடிகள் தீமை இல்லையா?"

"நமது விசுவாச அடிப்படையில் தீமை என்ற வார்த்தையை ஆன்மாவிற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

ஆன்மாவை தீமை அணுகாதபடி,
 அதாவது, 

பாவம் அணுகாதபடி,

 பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.

நோய்நொடிகள் புனிதர்களுக்கும் வரும் பாவிகளுக்கும் வரும்.

புனிதர்கள் தங்களுக்கு வரும் நோய் நொடிகளை இறைவன் அனுப்பும் சிலுவையாக ஏற்று பொறுமையுடன் சுமப்பார்கள்.

அவர்களைப் பொறுத்தமட்டில் நோய்நொடிகள் மட்டுமல்ல, என்ன கஷ்டங்கள் வந்தாலும் அது இறைவன் தரும் ஆசீர்வாதங்கள்.

சாதாரண மக்கள்தான் துன்பம் வரும்போது முணுமுணுப்பார்கள்."

"துன்பமே இல்லாத உலகை இறைவனால் படைத்திருக்க முடியுமா? முடியாதா?"

"முடியும். பாவமே செய்ய 
முடியாதபடிகூட நம்மைப் படைத்திருக்கலாம்.     

அப்படிப் படைத்திருந்தால் அவர் மனிதனாகப் பிறந்து 
பாடுபட்டிருக்க வேண்டிய அவசியம் கூட  இருந்திருக்காது."

"பிறகு  ஏன் அப்படிப் படைக்கவில்லை?"

"இது உங்களது பெற்றோரைப் பார்த்து,


" என்னை பெறாமல் இருந்திருக்க முடியுமே,

ஏன் பெற்றீர்கள்?"

 என்று கேட்பது போல் இருக்கிறது.

உங்களைப் பார்த்து யாராவது,
"விளையாடப் போகாமல் இருக்கலாமே, ஏன் விளையாடப் போகிறீர்கள்?"

என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?"

"அது என் இஸ்டம்" என்று சொல்வேன்.

"கடவுளும் அவரது விருப்பப்படிதான் எல்லாவற்றையும் படைத்திருக்கிறார்.

இயற்கைப் பொருட்கள் அவர் கொடுத்த விதிகளை மீற முடியாதபடி படைத்திருக்கிறார்.

மனிதர்களுக்கு மட்டும் விதிகளைக் கொடுத்ததோடு  அவற்றின்படி நடக்க முழு சுதந்தரத்தையும் கொடுத்திருக்கிறார்.

சுதந்தரமாக விதிகளை மீறாமல் நடப்பவர்களுக்கு நித்திய சம்பாவனையும் கொடுக்கிறார்.

மனிதரால் மட்டுமே விதிகளை மீறமுடியும்.

விதிகளை மீறுவது மட்டுமே தீமை.

இயற்கையால் விதிகளை மீற முடியாது. ஆகவே இயற்கை நிகழ்வுகள் எதுவும் தீமையானவை அல்ல."

"ஆனால் இயற்கை நிகழ்வுகள் மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றனவே."

"இயற்கைக்கு சிந்திக்கத் தெரியாது. மனிதனுக்கு மட்டுமே சிந்திக்க தெரியும்.

இயற்கையை அனுசரித்து வாழும் மனிதனுக்கு இயற்கையால் எந்த தொந்தரவும் ஏற்படாது.

உதாரணத்திற்கு தண்ணீர்  மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் என்பது இயற்கை விதி.

பள்ளமான  ஏரிகளில் வீடுகளை கட்டிக்கொண்டு மழை காலத்தில் தண்ணீர் வீட்டிற்குள் வருகிறது என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்?

மனிதர் வீடு கட்டும் விசயத்தில் தன் மூளையைப் பயன்படுத்த வில்லை என்றுதான் பொருள்.

மழைக்கு காரணமான  இயற்கை காடுகளை அழித்துவிட்டு "பருவமழை செய்யவில்லையே" என்று என்று இயற்கையை குறை கூறுவது ,

மனிதன், "எனக்கு எனது மூளையை பயன்படுத்தத் தெரியவில்லை" என்பதற்கு சமம்.

மனிதன் இயற்கை உணவுகளை சாப்பிடுவதை கை விட்டதுதான் 
இன்று அநேக நோய்களுக்கு காரணம்.

அணுவிற்குள் சக்தியை வைத்தது இறைவன்.

ஆனால் அந்த இயற்கை கத்தியை அழிவிற்கு தவறாக பயன்படுத்தியது  மனிதன்.

Man misused the atomic power for his own destruction.

உணவை அளவோடு சாப்பிட்டால் சக்தியாக மாறும்.

 அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டால் வயிற்று வலி வரும்.

 வயிற்று வலிக்கு பொறுப்பு உணவா? சாப்பிடுபவரா?"

"அதாவது மூளை இல்லாத இயற்கையை மூளை உள்ள மனிதன் தவறாக பயன்படுத்தும் போதுதான் மனிதனுக்கு இயற்கையிலிருந்து கஷ்டங்கள் வருகின்றன. 

 அதாவது இயற்கை நிகழ்வுகளால் வரும் மனித நஷ்டங்களுக்கு மனிதனே பொறுப்பு என்கிறீர்கள். சரியா?"

"Super சரி. இயற்கை கூர்மையான கத்தி மாதிரி. பழம் வெட்டவும் பயன்படுத்தலாம்,

 கையை வெட்டவும் பயன்படுத்தலாம்."

"சுருக்கமாக 

ஆன்மா  இறைவனை அனுசரித்து வாழ்ந்தால்    பாவம் நுழையாது.

உடல் இயற்கையை அனுசரித்து நடந்தால் இயற்கை நிகழ்வுகளால் இடர் வராது."


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment