. முதல் வேத சாட்சிகள்!
கைக்குழந்தையாக இடையர்குடியில் 'வாழ்க்கையை ஆரம்பித்த இயேசு, அன்னை மரியாளுக்கு மட்டுமல்ல, அங்கு வாழ்ந்த அனைவருக்குமே கைக்குழந்தையாக இருந்தார்.
எந்த நேரமும் சிறுவர்கள் அவரைக் கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் கையில் எப்போதும் இயேசு மகிழ்ச்சியாக இருப்பார்.
குழந்தை இயேசு எப்போதும் சிறுவர்களை அவரிடம் வர விடுவார்.
மாதாவைச் சுற்றி இடையர் குடிப் பெண்கள் இருப்பார்கள். மாதாவுக்கும், குழந்தை இயேசுவுக்கும் உதவி செய்து கொண்டே இருப்பார்கள்.
மூன்று வயது முதலே கோவிலில் வளர்ந்த அன்னை மரியாள், அங்கு தான் கற்ற வேதாகமக் கல்வியை இடையர்குலப் பெண்மணிகளுக்கு ஊட்டிக் கொண்டிருப்பாள்.
மெசியா ஒரு கன்னியின் வயிற்றில்
பிறப்பார் என்று வேதாகம பாடத்தில் கற்றிருக்கிறார்.
ஆனால் தன் வயிற்றில் பிறப்பார் என்று அவள் அவர் எதிர்பார்க்கவில்லை.
இதை மாதா பெண்களிடம் சொல்லும்போது அவர்கள் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.
கபிரியேல் தூதர் தன்னிடம் தூது உரைத்ததிலிருந்து இயேசு பிறந்தவரை எல்லா விவரங்களையும் இடையர் குல பெண்களோடு மாதா பகிர்ந்து கொண்டாள்.
இயேசுதான் மெசியா என்று இடையர்களுக்கு அறிவித்ததும் வானதூதர்கள்தான்.
இயேசு கடவுள் என்பதையும், மரியா கடவுளின் தாய் என்பதையும் ஏற்றுக் கொண்ட அவர்கள்,
அவர்களின் பாவங்களுக்கு பரிகாரம் செய்ய பாடுபட்டு மரிக்கவே
கடவுள் மனிதனாக பிறந்திருக்கிறார் என்பதை அறிந்து கடவுளின் அன்பை எண்ணி வியந்தார்கள்.
உலகைப் படைத்த கடவுளே தங்களைப் போல ஒரு ஏழையாகப் பிறந்திருப்பதை அறிந்தபோது தங்களது ஏழ்மையை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
தாங்கள் ஏழைகளாக இருந்ததால்தான் இறைவனோடு வாழ முடித்ததாக எண்ணி மகிழ்ந்தார்கள்.
''ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."
என்று இயேசு பிற்காலத்தில் வாயால் போதிக்க இருந்ததை குழந்தையாக இருந்தபோதே செயலில் போதித்தார்.
குழந்தை இயேசுவை தங்கள் அரசராக எண்ணி அம் மக்கள் வாழ்ந்தார்கள்.
குழந்தை இயேசுவுக்காக தங்களது உயிரைக் கூட தியாகம் செய்யக்கூடிய அளவிற்கு அம் மக்கள் அவர் மேல் பற்று வைத்திருந்தார்கள்.
ஒருநாள் காலையில் ஒரு பெண்மணி வழக்கம்போல் ஒரு செம்பில் ஆட்டுப் பாலைக் கரந்து எடுத்துக் கொண்டு மாதாவைப் பார்க்கச் சென்றாள்.
மாதா அவளிடம்,
"நாங்கள் வேறு ஒரு ஊருக்கு போகவேண்டும் என்று இறைவனிடமிருந்து கட்டளை வந்திருக்கிறது."
என்றாள்.
அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து,
"எதற்காக அம்மா?"
இறைத்தூதர் சூசையப்பரிடம்,
"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம்.
நான் சொல்லும்வரை அங்கேயே இரும்.
ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்"
என்று சொன்ன செய்தியை அவளிடம் மாதா சொன்னாள்.
உடனே அந்தப் பெண் வெளியே சென்று அனைவருக்கும் அச் செய்தியை அறிவிக்க,
அனைவரும் வீட்டு முன் கூடி விட்டார்கள்.
சூசையப்பர் அவர்களிடம்,
"ஏரோது அரசன் இயேசு தனக்கு போட்டி யாக உலகில் பிறந்து இருக்கிறார் என்று தவறாக எண்ணி,
இயேசுவைக் கொலை செய்ய தேடுகிறான்.
ஆகவே நாங்கள் உடனே எகிப்திற்கு செல்ல வேண்டும் என்று இறைத்தூதர் இன்று இரவு என்னிடம் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி.
நாங்கள் எகிப்துக்கு செல்கிறோம், விடை கொடுங்கள் என்றார்."
"குழந்தை இயேசுவை எங்கள் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவோம். நீங்கள் எதற்காக அவனுக்கு பயந்து எகிப்துக்கு ஓட வேண்டும்?"
"ஏரோதுவுக்கு பயந்து நாங்கள் போகவில்லை. இறைவனது கட்டளை, ஆகவேதான் போகிறோம்.
குழந்தை இயேசுதானே எங்களை வழி நடத்துகிறார்!"
"எகிப்து வரை நடந்து போவது எவ்வளவு கடினம்! நாங்கள் யாராவது உங்களுக்கு துணைக்கு வரலாமா?"
"நாங்கள் தனியாக போகவில்லை. கடவுளோடு கூட தானே போகிறோம்."
ஒரு பொடியன்,
"தம்பி கூட விளையாடுவதற்கு நான் வரட்டுமா? என்னை தம்பிக்கு ரொம்ப புடிக்கும்."
"உன்னால் எங்களுடன் நடக்க முடியாது, இங்கு இருந்து நன்றாக விளையாடு."
பெண்களுக்கு மாதாவை விட்டு பிரிவதற்கு மனது இல்லை. ஆயினும் இறைவனது கட்டளை என்பதால் அவர்களால் மறுக்க முடியவில்லை.
எல்லோரும் சேர்ந்து சூசையப்பரிடம் வழிச் செலவிற்கு பணமும் சில நாட்கள் உண்பதற்கான உணவு வகைகளும் கொடுத்தார்கள்.
கண்களில் நீர் ததும்ப அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.
மாதா இயேசுவுடன் கழுதையின் பேல் அமர்ந்துகொண்டாள்.
சூசையப்பர் நடந்து சென்றார்.
அவர்கள் சென்ற பின் இடையர்கள் அனைவரும் ஒரு கூட்டம் போட்டார்கள்.
ஒருவர் பேசினார்,
"மெசியா பெத்லகேமில் தான் பிறந்திருக்கிறார் என்று ஏரோது விற்கு தெரிந்திருக்கும்.
ஆகவே அவரை கொல்ல மன்னரின் ஆட்கள் இந்தப்பக்கமும் வருவார்கள். நாம் யாருக்கும் பயப்பட கூடாது.
இயேசுவை தெரியாது என்று யாரும் அவரை மறுதலிக்கக் கூடாது.
மறுதலித்தால் பாவம். ஆனால் அவர் எகிப்துக்கு சென்றுள்ள விவரத்தை உயிர் போனாலும் வெளியிடக் கூடாது."
எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
ஒரு வாரம் கழித்து படைவீரர்கள் சிலர் இடையர் குடிக்கு வந்தார்கள்.
இடையர்கள் எங்கும் பயந்து ஓடவில்லை. ஆண்களும் பெண்களும் படைவீரர்களை சந்தித்தார்கள்.
ஒரு படைவீரர்.
"ஒரு தச்சனும், அவருடைய மனைவியும் தங்கள் சிறு குழந்தையோடு இந்த பக்கம் வந்தார்களா?"
"எதற்காக அவர்களைத் தேடுகிறீர்கள்?"
"அந்த குழந்தை ஏரோது மன்னனுக்குப் போட்டியாக நாட்டை ஆளப் பிறந்திருக்கிறது.
அதைக் கொல்ல வேண்டும் என்பது மன்னனின் கட்டளை."
"ஆள்வதற்கு என்றே பிறந்த குழந்தையை உங்களால் எப்படி கொல்ல முடியும்?"
"அது எங்கள் வேலை. அக்குழந்தையை உங்களுக்கு தெரியுமா?"
ஒரு பொடியன்,
"எங்கள் எல்லோருக்கும் தெரியும். அம்மாவும், அப்பாவும், குழந்தையும் எங்களோடு கூட தான் இருந்தார்கள். ஆனால் இப்போது எங்களுடன் இல்லை.''
"இப்போது எங்கே போயிருக்கிறார்கள்?"
"அது தெரியாது."
'தெரிந்தும் சொல்லாவிட்டால் மரண தண்டனை கிடைக்கும். இது அரசனின் உத்தரவு."
ஒரு சிறுவன்,
"காட்டிக் கொடுப்பவன் துரோகி!"
"அந்த குழந்தையை காட்டிக் கொடுக்காவிட்டால் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்.
இது அரசு உத்தரவு. அரச குழந்தையைக் காட்டிக் கொடுக்கிறீர்களா?
உங்கள் குழந்தைகளை இழக்கிறீர்களா?"
பெண்கள்,
"இயேசுவைக் காட்டிக் கொடுக்க மாட்டோம். இயேசுவுக்காக நாங்கள் எல்லோரும் சாகத் தயார்."
"அப்போ சரி. வீரர்களே, வாருங்கள். ஒவ்வொரு வீடாகத் தேடுங்கள்.
இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளை எல்லாம் கொல்லுங்கள்."
"கடவுளுக்காக உயிரைக் கொடுக்க எங்கள் குழந்தைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்."
அங்கு இருந்த சில நாட்களில் குழந்தை இயேசு அனைவர் உள்ளத்திலும் வீரத்தை வளர்த்திருக்கிறார். அவர்கள் சாவுக்கு அஞ்சவில்லை.
இயேசுவுக்காக எல்லோருமே உயிரைக் கொடுக்க தயாராக இருந்தார்கள்.
இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகள் எல்லாம் அன்று இயேசுவுக்காகப் பலியானார்கள்.
வீரத்தாய்மார்கள்.
வீரத்தோடு தங்கள் பிள்ளைகளை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்.
ஏரோது "பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்." (மத்.2:6)
மாசற்ற இயேசுவுக்காக பலியான மாசில்லா குழந்தைகள்!
திருச்சபையின் வரலாற்றில் முதல் வேத சாட்சிகள்!
அந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களது விசுவாசம் இன்னும் ஆழமாயிற்று.
ஆடு மேய்ப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்ட அந்த படியாத பாமர மக்களிடம் இருந்த விசுவாசம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
ஆச்சரியப் பட்டால் மட்டும் போதாது.
நமது விசுவாசத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும்.
வேதசாட்சிகளாக வாழவேண்டும்.
தேவைப்பட்டால் மரிக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
"மாசில்லா குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment