Wednesday, December 23, 2020

.*அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.*

.*அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.*



"கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது". (1. கொரி.2:9)


"கண்ணுக்குப் புலப்படாதது,
காதுக்கு எட்டாதது,
மனித உள்ளத்தில் எழாதது,"

அதாவது மனித கற்பனைக்கு எட்டாதது, எது?

கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள மோட்ச பேரின்பம்.

உலக அனுபவத்தில் 

சுற்றுலா செல்பவர்கள் தாங்கள் செல்லக்கூடிய இடங்களைப் பற்றி 

முன்னாலேயே 
கேள்வி மூலமாகவோ 
வாசிப்பு மூலமாகவோ 
அறிந்து வைத்திருப்பார்கள்.

 அவற்றை நோக்கி பயணிக்கும்போது  

தாங்கள் பார்க்க இருக்கும் இடங்களின் இயற்கை அழகை கற்பனை செய்து கொண்டே போவார்கள்.

 அதைப் பற்றியே பேசிக் கொண்டே போவார்கள். 

நாம் இவ்வுலகில் விண்ணகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் உலகைப் பற்றிய ஈடுபாடுதான் அதிகமாக இருக்கிறதே தவிர,

 விண்ணுலக அழகையும் இன்பத்தையும் பற்றி யாரும் ஆழமாக சிந்திப்பதாக தெரியவில்லை.

விண்ணகம், மோட்சம், நித்தியம் பேரின்பம் என்ற வார்த்தைகளை அப்பப்போ பயன்படுத்துகிறோமோ தவிர அதைப் பற்றி அதிகமான சிந்திப்பதில்லை.

மோட்சத்துக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுவோம்,


ஆனால் அதைப்பற்றி யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

காரணம், நம்மைப் படைத்த இறைவன் எப்படி நமது கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரோ

 அப்படியே அவர் வாழும் விண்ணுலகும் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. 

 நம்மால் நமது கண்ணுக்கு தென்படுகின்ற, காதுக்கு எட்டுகின்ற, கையால் தொட்டு பார்க்கக் கூடிய இடத்தைத்தான் கற்பனையால் கூட அனுபவிக்க முடியும்.

மோட்சத்தைப் பற்றி விபரிப்பவர்கள் கூட நமது கண்ணால் ரசிக்கக்கூடிய இடத்தை விபரிப்பதுபோல்தான் விபரிப்பார்கள்.

நம் ஆண்டவர்கூட,

"என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன:

 இல்லாதிருந்தால் உங்களுக்குச் சொல்லி இருப்பேன். 

ஏனெனில், உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்.


3 நான் போய் உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்தபின், திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்:

 அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்."

என்று மோட்சத்தை ஒரு இல்லத்தை விபரிப்பதுபோலவே விபரிக்கிறார்.

நம்மை மோட்சத்தை பற்றி கற்பனை செய்யவிட்டால் 

படங்களில் பார்ப்பது போல

இரண்டு சிம்மாசனங்களில் தந்தையும் மகனும் அமர்ந்திருப்பது போலவும்,

அவர்களுக்கு மேலே பரிசுத்த ஆவி புறா வடிவில் பறந்து கொண்டிருப்பதுபோலவும்,

 அன்னை மரியாள் இயேசுவின் அருகே அமர்ந்திருப்பது போலவும், 

அவர்களைச் சுற்றி சம்மனசுக்கள் பறந்து கொண்டே தெய்வீக சங்கீதம் இசைத்துக் கொண்டிருப்பது போலவும்,

 அவர்கள் எல்போரையும் சுற்றி புனிதர்கள் பல வரிசைகளில் அமர்ந்து பரிசுத்த தம திரித்துவத்தை ஆராதிததுக் கொண்டிருப்பது போலவும்

 நித்திய காலமும் இப்படியே இருப்பது போலவும் கற்பனை செய்வோம்.

இதெல்லாம் கற்பனைதான்.

உருவம் அற்றவர்களை உருவம் அற்ற நிலையில் எப்படி கற்பனை செய்வது?

அதனால் தான் மோட்சம் கற்பனைக்கு எட்டாதது என்கிறோம்.


கத்தோலிக்க திருச்சபையின் போதனைப்படி

 தண்ணீராலோ, இரத்தத்தாலோ ஆசையினாலோ ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் 

மரிக்கும்போது தனித்தீர்வை முடிந்தவுடன்,

தேவ இஸ்டப்பிரசாத நிலையில் இருந்தால்

நேராகவோ, உத்தரிக்கிற ஸ்தலம் வழியாகவோ விண்ணகம் எய்துவோம். 

அங்கு சர்வ வல்ல, அளவு கடவுளை அவர் இருக்கிறபடியே நேருக்கு நேர் பார்ப்போம்.

அவரோடு இணைந்து பேரின்ப நிலையில் நித்தியத்துக்கும் வாழ்வோம்.

சர்வ சதா காலமும் இறைவனை அன்பு செய்வதும், அவரை ஆராதிப்பதும், அவரோடு உரவாடுவதும் மட்டுமே நமது வேலை.

இவ்வுலகில் நாம் எவ்வளவு முயன்றாலும் இறைவனை அவர் உள்ள படியே நம்மால் தியானிக்க இயலாது.


அவர் செய்துவருகின்ற நன்மைகளை மட்டுமே சிந்திக்க முடியும்.

ஆனால் மோட்சத்தில் இறைவனை இறைவனாகவே பார்ப்போம்.

நாம் அவருக்குள்ளும் அவர் நமக்குள்ளும் கலந்துவிடுவதால் அவரது அழகையும் அன்பையும் அத்தனை பண்புகளையும் உள்ள படியே பார்ப்போம்.

இன்று அவரைப் பற்றி புரியாத காரியங்கள் அன்று நமக்கு புரிந்துவிடும்.

இறைவனில் இணைந்து வாழும் நம்மால் பாவம் செய்ய முடியாது.

நமது இறையன்பு முழுமையாக இருக்கும். 

அங்கு நமக்கு விசுவாசம் தேவையில்லை, இங்கு நாம் விசுவசிப்பதை அங்கு நேரிலேயே பார்ப்போம்.

அங்கு நமக்கு நம்பிக்கை தேவையில்லை, எது கிடைக்கும் என்று நம்புகிறோமோ அது நமக்குக் கிடைத்திருக்கும்.

அன்பு மட்டும் முழுமையாக நிலைத்திருக்கும்.

 விண்ணில் நாம் வெற்றிபெற்ற வீரர்கள். இவ்வுலகில் போராடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்காக இறைவனிடம். பரிந்து பேசுவோம்.

இவ்வுலகில் நமது மீட்பிற்காகப் போராடுகிறோம், மோட்சத்தில் நமது மீட்பு முழுமை பெறும்.

விண்ணிலும் நமக்கு சுதந்திரம் இருக்கும். அது இறைவனின் சுதந்திரத்தோடு கலந்துவிடுவதால் இறைவன் எடுக்கும் முடிவே அதன் முடிவு.

பரி பூரண சுதந்திர உணர்வோடு 
இறைவனோடு இணைந்து வாழ்வோம்.

இவ்வுலகில் அளவுள்ள நம்மால் அளவற்ற இறைவனை அவர் உள்ளபடியே உணரமுடியவில்லை.

'கடவுள் அளவில்லாதவர்' என்று விசுவசிக்கும் நம்மால் அளவற்ற தன்மையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதனால்தான் நமது வாழ்க்கை நமது விசுவாசத்திற்கு ஏற்றதாக அமைவதற்கு கஷ்டப்படுகிறது..

மோட்சத்தில் இறைவன் தன்னை உள்ளபடியே நமக்கு முழுமையாக வெளிப்படுத்தி விடுவதால் நமக்கு விசுவாசம் தேவையில்லை, நமது வாழ்வும் முழுவதும் இறைவனது சித்தப்படியே இருக்கும்.

அனைத்து மோட்ச வாசிகளின் சித்தங்களும் இறைவனின் ஒரே சித்தத்தோடு இணைந்து விடுவதால் 
.
அனைத்து மோட்ச வாசிகளிடையேயும் முழுமையான சமாதானம் நிலவும்.

எல்லோரோடும் ஒரே இறைவனே இரண்டறக் கலந்து விடுவதால், அனைவரிலும் ஒரே இறைவனே செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

அனைத்து மோட்ச வாசிகளும் இறைவனோடு இணைந்த ஒரே முழுமையான அன்பில் தான் வாழ்வர்.

இதுதான் பரிபூரண சமாதானமான வாழ்வு.
.
இவ்வுலகில் சமாதானத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் நாம் விண்ணுலகில் அதை முழுமையாக அனுபவிப்போம்.


மோட்சம் எங்கே இருக்கிறது?

மோட்சம் ஒரு இடம் அல்ல. 

அது வாழ்க்கை நிலை. 

இறைவனோடு இணைந்து வாழும் பேரின்ப நிலை.


"எங்கே இருக்கிறது" என்ற கேள்வி சடப் பொருள்களுக்குதான் பொருந்தும்.


விண்ணுலகப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் நமக்கு பயண இறுதியில் காத்திருக்கும் நான்கு விசயங்கள் எப்போதும் நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.

1, பயண முடிவு.

2 தீர்வை.

3 மோட்சம்.

4 நரகம்.


1, பயண முடிவு:

இவ்வுலகப் பயணம் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும்.


பயணம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் முடிவும் முக்கியம்.

 முடிவு எப்படி இருக்கிறதோ அதன்படிதான் அடுத்து வரும் நித்திய வாழ்வும் இருக்கும்.

நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வின் முடிவுதான் நிரந்தரமான மறுவுலக வாழ்வில் ஆரம்பம்.

நமது முடிவு என்று வரும் என்று நமக்குத் தெரியாது. ஆகவே நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நமது முடிவுக்காக நாம் தயாராக இருக்க வேண்டும்.


நாம் எப்போதும் இறை உறவு நிலையிலேயே இருக்க வேண்டும்.

இறை உறவு நிலையில் உள்ளவர்கள் முடிவைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை.


மகிழ்ச்சியாகவே வாழ்ந்து, மகிழ்ச்சியாகவே மரித்து,
நித்திய மகிழ்ச்சிக்குள் நுழையலாம்.



2 தீர்வை:

தீர்வை நாளை உலகக் கண்ணோக்கில் பார்க்கக்கூடாது.

உலக நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிபதி விசாரிப்பார்.

விசாரணை முடிவில் தீர்ப்பு வழங்குவார்.

நீதிபதியின் தீர்ப்பே இறுதியானது.

ஆனால் ஆன்மீகத்தில் நமது தீர்ப்பை நாம்தான் எழுதுகிறோம். கடவுள் அதை மாற்றமாட்டார்.

ஒரு வகையில் நாம் வாழ்வதே நமது தீர்ப்பை எழுதுவதற்காகத்தான்.

இயேசுவின் வழி நடத்துதலின் படி, 

பாவம் இல்லாமல்

வாழ்ந்தால், விண்ணகம் செல்வோம்.

பாவ வாழ்க்கை வாழ்ந்தால் அதற்கு எதிர்த் திசையில் போகவேண்டியிருக்கும்.

இவ்வுலக வாழ்வு முடியும் நொடியில் தனித்தீர்வை.

"நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்."

"நான் கூறிய வார்த்தையே அவனுக்கு இறுதி நாளில் தீர்ப்பிடும்."

 இயேசு தீர்ப்பிட மாட்டார்.

கூறிய வார்த்தையே தீர்ப்பிடும்,

அதாவது, அவர் கூறிய வார்த்தைகளின்படி நடந்தால் விண்ணகம், இன்றேல் நரகம். 

தனித்தீர்வை ஒரு நொடியை விட குறைந்த நேரத்தில்,(Within a fraction of a second) முடிந்து முடிந்துவிடும்.

நாம் பாவம் இல்லாமல் வாழ்ந்திருந்தால் அடுத்த நொடியில் விண்ணகத்தில் இருப்போம்.

தேவைப் பட்டால் உத்தரிக்கிற ஸ்தலம் வழியே செல்வோம்.

நமது காலம் முடிந்தவுடன், நித்தியத்திற்குள் நுழைந்து விடுவோம்.

பொதுத் தீர்வை உலக முடிவில்.


3 மோட்சம்: நல்ல வாழ்விற்கான சம்பாவனை நித்திய மோட்சம்.

இறைவனோடு இணைந்த பேரின்ப வாழ்வு.

இறைக் குடும்பத்தில் நமது சகோதர சகோதரிகளான புனிதர்கள், (விண்ணகத்தில் வாழும் அனைவருமே புனிதர்கள்தான்.) மற்றும் இறைத்தூதர்களோடு நித்தியத்திற்கும் பேரின்பம் பொங்க வாழ்வோம்.

4. நரகம் : இறைவனை விரும்பாதவர்கள் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பேரிடர் நிலை. 

இறைவன் யாரையும் இந்நிலைக்கு அனுப்புவதில்லை.

 யாருடைய சுதந்திரத்திலும் இறைவன் இறைவன் குறுக்கிடுவதில்லை. 

அவரவர் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அவரவர்தான் பொறுப்பு.


இயேசு மனிதனாகப் பிறந்தது நம்மை பாவ நிலையிலிருந்து மீட்டு விண்ணக வாழ்விற்குத் அழைத்துச் செல்வதற்காகத்தான்.

இயேசுவின் வழி நடப்போம்.
இயேசுவோடு இணைவோம் நித்தியத்துக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment