கிறிஸ்மஸ் தாத்தா.
ஒரு ஏழையின் குடும்பம், ஏழைக் குடும்பம்.
அம்மா, அப்பா, மூன்று பெண் குழந்தைகள்.
அப்பா அன்றாடக் கூலி. அன்றன்றைய உழைப்பு அன்றன்றைய சாப்பாட்டுக்குப் போதும்.
அம்மா வீட்டுவேலை, குழந்தைகள் வளர்ப்பு.
குழந்தைகள் குழந்தைகளாக இருந்த மட்டும் பிரச்சனைகள் இல்லை.
கூலி வேலை வருமானம் சாப்பாட்டுக்குப் போதும்.
ஆனால் சாப்பிட்டு வளர வளர
தேவைகள் வளர்ந்தன.
ஆனால் வருமானம் தேவைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப வளரவில்லை.
ஆனால் சாப்பாடு போக எஞ்சிய செலவுகளுக்காக வாங்கிய கடன் வட்டியும் குட்டியுமாக வளர்ந்து கொண்டிருந்தது
மூன்றும் பெண்பிள்ளைகள்.
திருமண வயதும் வந்தது, அதைத் தாண்டிய வயதும் வந்தது.
திருமணம் செய்து கொடுக்கப் பணம் வரவில்லை, வருவதற்கு வழியும் இல்லை.
பெற்றோர் இயலாமல் அழுதார்கள், பிள்ளைகளுக்கு அழத்தான் இயன்றது.
காலப்போக்கில் நம்பிக்கையும் கறைந்து போயிற்று.
இனி வாழ்வதில் பயனில்லை என்று எண்ணுமளவிற்கு வாழ்க்கை மீது வெறுப்பு தோன்றி வளர்ந்தது.
தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல், கடன் கொடுத்தவர்களும் நெருக்கும்போது, வாழ்ந்து என்ன பயன்? என்ற எண்ணம் மனதில் தோன்றி வளர ஆரம்பித்தது.
விளைவு?
தற்கொலைத் தீர்மானம், குடும்பத்தோடு.
டிசம்பர் 25 கிறிஸ்மஸ்.
23 இரவில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வது என்று தீர்மானம்.
ஒரு மகள் சொன்னாள்,
" அப்பா, ஏதாவது வழி பிறக்கும், அப்பா, இயேசு பாலன் நமக்கு ஏதாவது செய்வார் அப்பா."
மற்றவர்கள் நம்பவில்லை.
23 இரவு. எல்லோரும் ஆளுக்கு ஒரு தம்ளர் மருந்து கலந்த பால் கையில் தயாராக வைத்திருந்தார்கள்.
நடு இரவை தாண்டியவுடன் குடித்துவிட்டு படுக்க வேண்டும்.
இரவு மணி11.30.
சமையலறையில் ஏதோ ஒரு பொருள் மேலிருந்து விழுந்தது போன்ற சப்தம்.
அம்மா எழுந்து சமையல் அறைக்கு ஓடினாள்.
மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள்.
புகைப்போக்கிக்கு நேர் கீழே அடுப்பின் மேல் ஒரு பெரிய போட்டலம் விழுந்து கிடந்தது.
"இயேசு பாலனின் கிறிஸ்மஸ் பரிசு'' என்று அதன் மேல்
எழுதியிருந்தது.
அங்கு வைத்தே போட்டலத்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.
Dress உட்பட கிறிஸ்மஸ் செலவிற்கான பணம் இருந்தது!
அதற்குள் இன்னொரு போட்டலம் இருந்தது.
அதன் மேல் "பிள்ளைகளுக்கு
.இயேசு பாலனின் திருமணப் பரிசு" என்று எழுதியிருந்தது.
அதைப் பிரித்துப் பார்த்தார்கள்.
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள். சில தங்க கட்டிகள் அவர்களைப் பார்த்து புன்னகை பூத்தன.
அங்கேயே முழந்தாள் படியிட்டு இயேசு பாலனுக்கு நன்றி கூறினார்கள்.
பாலை அடுப்பிற்குள்ளே கொட்டிவிட்டு போட்டலத்தை எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றார்கள்.
அனைவரின் உள்ளங்களிலும் அதுவரை அனுபவித்திறாத மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி ஓடியது.
"என் ஜெபத்தை இயேசு பாலன் கேட்டுவிட்டார். அவருக்கு நன்றி கூறுவோம்" ஒரு மகள் சொன்னாள்.
நன்றி உணர்ச்சியோடு, புத்தாடை உடுத்தி கிறிஸ்மஸைக் கொண்டாடினார்கள்.
கிறிஸ்மஸ் அன்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்,
"எங்கள் வீட்டுக்கு இரவில் கிறிஸ்மஸ் தாத்தா வந்தார். பரிசுகள் தந்தார்." என்று.
யார் அந்த கிறிஸ்மஸ் தாத்தா? யாருக்குமே தெரியாது.
அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசுகள் தொடர்ந்தன.
சில ஆண்டுகள் கழித்து அந்த ஊர் பங்குத்தந்தை ஆயராக உயர்த்தப்பட்டார்.
அவருக்கு வழியனுப்பு விழா நடந்தபோது அவரைப் பாராட்டி பேசிய ஒருவர் அவரையும் அறியாமல் உண்மையை கக்கி விட்டார்.
அத்தனை ஆண்டுகளும் கிறிஸ்மஸ் தாத்தாவாக செயல்பட்டவர் அவர்களுடைய பங்குத்தந்தை சங்கைக்குரிய நிக்கோலாஸ் அடிகளார்!
யார் யாருக்கு என்ன தேவை என்பதை ரகசியமாக கண்டறிய அடிகளார் உதவியாளர்கள் வைத்திருந்தார்.
அவர்களில் ஒருவர்தான் ரகசியத்தை உடைத்தவர்.
அதற்காக தந்தை அவர் மீது கோபப்படவில்லை.
அவர் ஆயர் ஆகி பங்கை விட்டுப் போன பின்னும் அவருடைய தாத்தா பணியை பங்கு இளைஞர்கள் பக்தியோடு தொடர்ந்தார்கள்.
அவர் ஆயராக
"பெறுவதினும் தருவதே இன்பம்." (அப்போ.20:35)
என்ற இறைவாக்கையே தன்னுடைய விருதுவாக்காக வைத்திருந்தார்.
வாழ்வின் இறுதிவரை அவரது கொடுக்கும் பணியைத் தொடர்ந்தார்.
ஆயர் நிக்கோலாஸ் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தார்.
வீட்டில் நிறைய பணம் இருந்தது. ஆனால் அவருக்கு பணத்தின் மீது பற்று இல்லை.
இறைப் பணிக்கு தன்னை அர்ப்பணித்து விட்டார்.
பெற்றோர் இறந்ததும் சொத்துக்கள் எல்லாம் அவர் பேருக்கு வந்தன.
சொத்துக்கள் எல்லாவற்றையும் ஏழைகளுக்கு உதவி செய்வதிலேயே செலவழித்தார்.
உதவி செய்தது தான் என்று வெளியே காட்டிக் கொள்ளாமல் கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவத்தில் ஏழைகளுக்கு உதவினார்.
அவர் காலத்திலேயே அவர் பெயரை வைத்துக் கொண்டு
கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பலர் தோன்றி யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே பிறர் பணியில் ஈடுபட்டனர்.
ஆயர் நிக்கோலாஸ் மரித்த பின்
புனித நிக்கோலாஸ் (Saint Nicholas) நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
அதன் பின் Saint Nicholas Santa claus ஆனார்.
அன்று முதல் இன்று வரை
உலகெங்கும் ஆயிரக்கணக்கான உதவியாளர்கள் தங்களை Santa claus என்ற பெயரில் கிறிஸ்மஸ் தாத்தாக்களாக மாற்றி
இறைப் பணி ஆற்றி வருகிறார்கள்.
பிறர் உதவி பணி ஆற்றுவதற்கு புனித நிக்கோலாஸ் போல வசதியாக குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களும் பிறர் உதவி பணி ஆற்றலாம்.
நாம் ஆன்மீக வளர்ச்சிக்காக பல தவ முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.
ஒருசந்தி இருத்தல்,
ருசி உள்ள பண்டங்களைச் சாப்பிடாதிருத்தல்,.
'
தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தல,
எளிமையாக உடை உடுத்தல் போன்ற எளிய தவமுயற்சிகளை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
இவற்றால் நமது செலவு கொஞ்சம் குறையும்.
இதனால் நம்மிடம் மீந்த பணத்தை நாம் என்ன செய்கிறோம்?
பணத்தை மிச்சம் பிடிக்கிறோம்.
மிச்சம் பிடித்ததை வேறு செலவுகளுக்கு பயன்படுத்துகிறோம்.
தவ முயற்சிகளினால் மிச்சம் பிடித்ததை நாமே செலவழித்தால்
நாம் எந்த தியாகமும் செய்யவில்லையே!
தியாகமே இல்லாத முயற்சி எப்படி தவ முயற்சியாகும்?
மிச்சம் பிடித்ததை ஏழைகளுக்கு கொடுத்தால் நாம் செய்தது தியாகம் ஆகும்.
ஹோட்டலுக்கு சாப்பிட போகிறோம் .
முழு சாப்பாடு 100 ரூபாய்.
50 ரூபாய்க்கு மட்டும் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மீதி 50 ரூபாயை தேவை உள்ளோருக்கு கொடுத்தால்தான் நாம் செய்தது தவ முயற்சி.
இல்லாவிட்டால் அது வெறும் சிக்கன முயற்சியே.
இறைவன் முன் உதவியின் பெருமை நாம் கொடுக்கும் பொருளின் அளவில் இல்லை,
நமது மன நிலையில் இருக்கிறது.
உதவும் மனப்பான்மை இருந்தால் நாம் எல்லோருமே கிறிஸ்மஸ் தாத்தாக்களாக வாழலாம், வாழ வேண்டும்.
வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment