நாம் இப்போது 2020வது கிறிஸ்மஸைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
நாம் எப்படிக் கோலாகலமாய்க் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று நமக்குத் தெரியும்.
முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்?
டிசம்பர் 24.
இன்று நாம் கிறிஸ்மஸ் கேக்கும், விதவிதமான sweets ம் வாங்குவதற்காக கடை கடையாய் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம்.
அன்று இதே நாளில் சூசையப்பர் இயேசு பிறப்பதற்கான இடம் தேடி வீடு வீடாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.
பெத்லகேம் சூசையப்பரின் சொந்த ஊர்.
"யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். ஏனெனில், அவர் தாவீதின் குலத்தவரும் குடும்பத்தவருமாக இருந்தார்."
(லூக்.2: 5)
அவர் கலிலேயா நாட்டு நாசரேத்தூரில் வாழ்ந்தாலும், அவரது உறவினர் பலர் வாழ்ந்து கொண்டிருந்த ஊர் பெத்லகேம்.
ஆகவே உறவினர் வீடுகளில்தான் முதலில் இடம் தேடினார்.
ஆனால் எல்லோரும் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள்.
வீடுகளில் இடம் கிடைக்காததால் சத்திரத்தில் இடம் தேடினார்.
அங்கும் இடம் கிடைக்கவில்லை.
"சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை." (லூக்.2:7)
எந்த உலகத்தை இறைவன் படைத்தாரோ,
எந்த உலகத்தில் வாழும் மக்களை மீட்பதற்காக மனிதனாகப் பிறக்க திட்டமிட்டாரோ
அந்த உலகத்தில் பிறக்க அவருக்கே இடம் கிடைக்கவில்லை!
சூசையப்பர் முணுமுணுக்கவில்லை, முறையிடவில்லை.
மனிதர்கள் இடம் தரவில்லை. ஆனாலும் மிருகங்கள் தந்து உதவின.
மாதாவின் ஆலோசனைப்படி சூசையப்பர் ஊருக்கு வெளியே இருந்த ஒரு மாட்டுத் தொழுவைத் தேடிச் சென்றார்.
தொழுவிற்குள் நுழைந்தார்.
ஒரே சாணி நாற்றம்.
மாதாவை வெளியே நிறுத்திவிட்டு, தொழுவைப் பெருக்கி சுத்தப்படுத்தினார்.
இருட்டி விட்டது.
மின்சார வசதி இல்லாத காலம்.
அவரால் இயன்ற ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைத்தார்.
மாதாவை உள்ளே அழைத்துச் சென்றார்.
சாணி நாற்றத்தை அனுபவித்துக் கொண்டே, ஒரு துணியை விரித்து அதன் மேல் மாதா அமர்ந்தார்.
சூசையப்பர் கழுதையையும் உள்ளே அழைத்து வந்து, அதை ஒரு இடத்தில் கட்டிக் கொண்டிருந்தபோது,
"குவா, குவா" சப்தம் கேட்டது.
'திரும்பிப் பார்த்தார்.
மாதாவின் கையில் குழந்தை இருந்தது.
நல்ல வேளை மாதாவுக்கு பிரசவ வலி ஏதும் இல்லை.
கண்ணாடி வழியே ஒளி ஊடுருவி வருவது போல,
இயேசு மாதாவின் வயிற்றிலிருந்து பிறந்தார்.
சூசையப்பர் ஓடிச் சென்று குழந்தையை கையில் வாங்கினார்.
குழந்தை சூசையப்பரைப் பார்த்து புன்முறுவல் பூத்தது.
அந்த தெய்வீகப் புன்னகையில் அதுவரை தான் பட்ட கஷ்டங்களை யெல்லாம் சூசையப்பர் மறந்துவிட்டார்.
குழந்தை புன்னகைத்தாலும் அது மார்கழி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது.
"மேரி, இங்கே பார். குழந்தை குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறது."
மாதா கிறிஸ்மசுக்கென்று புதிய டிரஸ் எதுவும் வாங்கி இருக்கவில்லை.
கர்ப்ப காலத்தில் இயேசுவுக்காக பின்னி வைத்திருந்த துணியை அணிவித்து,
பழைய துணிகளில் பொதிந்து
மாட்டின் தீவனத் தொட்டியில் கிடத்தினாள்.
யார் பிறந்த விழாவை கொண்டாட நாம் லட்சங்கள் செலவழித்து டிரஸ் வாங்குகிறோமோ
அவருக்குப் போர்த்திக்கொள்ள பழைய துணிதான் கிடைத்தது!
"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்." (லூக். 6:20)
என்ற தனது போதனையை தனது பிறப்பிலேயே வாழ்ந்து காட்டியவர் நம் ஆண்டவர்!
கிறிஸ்மசுக்காக புது dress வாங்குபவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வாங்கிய புது dress ஐ ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு,
நாம் பழைய துணியை அணிவதில்தான்
உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அடங்கியிருக்கிறது!
தீவனத் தொட்டியில் படுத்துக் கொண்டு,
கை கால்களை ஆட்டிக் கொண்டு,
மாதாவையும், சூசையப்பரையும் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார் குழந்தை இயேசு.
நடுச்சாம வாக்கில் தொழுவிற்குள் யாரோ வரும் சப்தம் கேட்டது.
மாதாவும் , சூசையப்பரும் திரும்பிப் பார்த்தார்கள்.
ஆட்டு இடையர்கள் சிலர் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.
வானதூதர் அவர்களுக்கு கூறிய செய்தியை மாதாவிடம் கூறிக் கொண்டே குழந்தையைப் பார்க்கச் சென்றார்கள்.
அவர்களுக்காக பிறந்த மீட்பரும், ஆண்டவருமாகிய மெசியா அவரே என்று அவர்களுக்கு தெரியுமாகையால் அவர்கள் குழந்தையை ஆராதிப்பார்கள்.
தாங்கள் கொண்டு வந்திருந்த ஆட்டுப்பாலையும், சில உணவுப் பொருட்களையும் மாதாவிடம் கொடுத்தார்கள்.
"ஏம்மா, பாலன் பிறக்க வீடு ஏதும் கிடைக்கவில்லையா?"
மாதா விபரங்களைச் சொன்னார்.
ஒரு இடையர்,
"அம்மா, கடவுள் பிறந்த தொழு பாக்கியம் பெற்றதுதான்.
ஆனால் காலையில் எங்களுடனே எங்கள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்.
நாங்கள் உங்களை எங்கள் பெற்றோர் போல கண்ணுக்குக் கண்ணாய்க் கவனித்துக் கொள்வோம்."
எல்லா இடையரும் அதையே சொன்னார்கள்.
டிசம்பர். 25
மறுநாட் காலையில் ஒரு இடையர் இயேசுவைக் கையில் எடுத்துக் கொண்டார்.
மாதா கழுதைமேல் ஏறிக்கொண்டார்.
எல்லோரும் இடையர் படை சூழ, ஆடுகளும், ஆட்டுக்குட்டிகளும் சூழ்ந்து வர இடையர் குடிக்குச் சென்றார்கள்.
இடையர் குலப் பெண்களுக்கு
இரவிலே தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.
பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சிப் பெருக்குடன் திருக்குடும்பத்தை வரவேற்றார்கள்.
குழந்தையை கையில் வைத்திருந்த இடையர் குழந்தையுடன் நேரே தன் வீட்டிற்குள் சென்றார்.
அந்த வீட்டிற்குள்ளே மாதாவும், சூசையப்பரும், மற்ற பெண்களும் சென்றார்கள்.
ஏழைக் குடும்பத்தில் என்ன வசதிகள் இருக்குமோ அதே வசதிகள் இயேசுவுக்கு அளிக்கப்பட்டது.
வசதிகளை விட, இடைக்குடி மக்களின் அன்பைத்தான் திருக்குடும்பம் அனுபவித்தது.
எப்போதும் இயேசுவைச் சுற்றி சிறுவர்களும், ஆட்டுக் குட்டிகளும் விளையாடிக் கொண்டிருக்கும்.
இயேசு பாலனுக்கு அது ரொம்பப் பிடிக்கும்.
எட்டாம் நாள் வந்தபோது, குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டியிருந்தது.
தாய் கருத்தரிக்கும் முன்பே தூதர் குறிப்பிட்டிருந்த " இயேசு " என்னும் பெயரை அதற்கு இட்டார்கள்.
அந்த விழாவையும் ஏழைகளாகிய இடையர்குடி மக்களே கொண்டாடினார்கள்.
ஒரு நாள் இரவு, விண்மீன் ஒன்று குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்பதை மக்கள் கண்டு,
அனைவரும் வீட்டின் முன் கூடினார்கள்.
மூன்று ஒட்டகங்கள் அவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தன.
அவற்றின் மேல் மூன்று ஞானிகள் அமர்ந்திருந்தார்கள்.
அருகே வந்ததும் ஞானிகள் ஒட்டகங்களிலிருந்து இறங்கி
வீட்டிற்குள் போய்,
பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு,
தெண்டனிட்டு வணங்கினர்.
தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப்போளமும்
அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.
இடைக்குடி பெண்கள் அனைவரும் இக்காட்சியை மகிழ்ச்சியுடன் கண்டு களித்தார்கள்.
ஞானிகளைப் பார்த்து ஒரு இடையர் கேட்டார்,
"மீட்பர் பிறந்திருப்பதை வான தூதர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்.
உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"நாங்கள் கீழ்த்திசை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
யூதர்களின் அரசர் பிறந்திருக்கும் செய்தியை
இதோ இந்த அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு அறிந்தோம்.
அதுதான் வழிகாட்டி எங்களை அழைத்து வந்தது.
அது இந்த வீட்டின் மீது நின்றதும் பிறந்த அரசர் வீட்டிற்குள்தான் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டோம்."
இடையர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடிய முடியவில்லை.
மகிழ்ச்சியைக் கொண்டாட ஞானிகளுக்கு விருந்து வைத்தார்கள்.
விருந்து முடிந்து ஞானிகள் ஊருக்குத் திரும்பினார்கள்.
இயேசுவின் முதல் கிறிஸ்மஸ் அவர் ஆசைப்பட்டபடி எளிய கிறிஸ்துமஸ் ஆக இருந்தது.
ஏழைகளோடு ஏழையாக இயேசு பாலன் மகிழ்ச்சியோடு இருந்தார்.
முதல் கிறிஸ்மசையும், 2020வது
கிறிஸ்மசையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
முதல் கிறிஸ்மஸ் அவர் ஆசைப்பட்டபடி எளிமையாக இருந்தது.
இன்றைய கிறிஸ்மஸ் நாம் ஆசைப்படுகிறபடி பணக்காரத்தனமாக இருக்கிறது.
இன்றும் ஏழைகளின் வீட்டில், அவர்களது வசதிகளுக்கு ஏற்ப மிக எளிமையாக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ்தான் இயேசுவுக்கு ரொம்ப பிடிக்கும்.
எங்கே அன்பு இருக்கிறதோ அங்கு இயேசு பாலனும் இருக்கிறார்.
Where love is there Child Jesus is.
கொண்டாட்டத்தை மையமாக வைக்காமல்,
அன்பை மையமாக வைத்து நடைபெறும் கிறிஸ்மஸ்தான்
முதல் கிறிஸ்மஸ்,
முதல்தரமான கிறிஸ்மஸ்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment