Wednesday, December 9, 2020

*சூசையிடம் போங்கள்.*

http://lrdselvam.blogspot.com/2020/12/blog-post_9.html



*சூசையிடம் போங்கள்.*


பழைய ஏற்பாட்டில் ஒரு சூசை இருந்தார்.

எகிப்து நாட்டை பஞ்ச காலத்தில் பட்டினியிலிருந்து காப்பாற்றியவர்.


செழிப்புக் காலத்தில் தானியத்தைச் சேமித்து வைத்து, 

பஞ்ச காலத்தில் மக்கள் பஞ்சத்தை உணராத அளவுக்கு தானியத்தைக் கொடுத்து காப்பாற்றியவர்.

பாரவோன் மன்னன்,

"தானியம் வேண்டுமா? சூசையிடம் போங்கள்."

என்று கூறுமளவிற்குப் பிரபல்யமானவர்.

பழைய ஏற்பாட்டு சூசை புதிய ஏற்பாட்டு சூசைக்கு முன் அடையாளம்.

பழைய ஏற்பாட்டு சூசை நாட்டின் பாதுகாவலர்.

புதிய ஏற்பாட்டு சூசை திருச்சபையின் பாதுகாவலர்.
(Protector of the Church.) 

புனித சூசையப்பரை 

பாப்பரசர் ஒன்பதாம் பத்திநாதர்
(Blessed Pope Pius IX.)


திருச்சபையின் பாதுகாவலராக அறிவித்த 150வது ஆண்டு தினத்தை (150th anniversary ) கொண்டாடும் வேளையில்,

அவரது பெருமைகளை நினைத்துப் பார்ப்பது நமது ஆன்மீக வாழ்வுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

நினைத்துப் பார்ப்பதை விட, அவரிடமே சென்று சில கேள்விகளைக் கேட்போமா!

"அப்பா! தங்களை அப்பா என்று கூப்பிடலாமா?"

"அதுதான் கூப்பிட்டாச்சே!
 பிறகு என்ன கூப்பிடலாமா?

நித்திய காலமாக விண்ணகத் தந்தையையே அப்பா என்று அழைத்தவர்
.
 என்னை அப்பா என்று அழைத்த போது எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

'என்ன பெத்த ராசா' என்று கூறி அவரை அள்ளி அணைத்துக் கொண்டேன்."

"என்ன பெத்த ராசாவா?"


"ஆமா. நான் அவரைப் பெறவில்லை. ஆனால் என்னைப் பெற்றவர்,

அதாவது, படைத்தவர்,

அவர்தானே!"

"உங்களிடம் சில கேள்விகள் கேட்டு பதில்களை பெற வேண்டும் என்ற ஆவலுடன் உங்களிடம் வந்திருக்கிறேன் கேட்கலாமா?"

"அதுதான் வந்தாச்சே. கேள்."

"முதல் கேள்வி கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கும். தப்பாய் எடுத்துக்கொள்ள கூடாது."

 "நோக்கம் சரியாக இருந்தால், சரி. கேள்."

"நீங்கள் புதிய ஏற்பாட்டிற்குள் நுழையும் போது,

"மரியாளின் கணவரான சூசை."

 என்ற பட்டத்துடன் நுழைகிறீர்கள்.

ஆனால் இரண்டே வசனங்கள் கழித்து 

"அவள் கணவர் சூசை நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்."

என்ற செய்தி வருகிறது.

ஏன் மரியாளை விலக்கிவிட வேண்டும் என்றிருந்தீர்கள்?"

"காரணமும் அங்கேதான் கொடுக்கப்பட்டிருக்கிறதே."

"அதாவது நீதிமானாய் இருந்தீர்கள்.

அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராய் இருந்தீர்கள்.

அது புரிகிறது. ஆனால் மரியாளை விலக்கிவிட்டால் அது அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பது நீதிமானான உங்களுக்குத் தெரிந்திருக்குமே.
 
தெரிந்தும் ஏன் விலக்கிவிட நினைத்தீர்கள்?"

"நீ சொல்வது உனக்குப் புரியவில்லை. விளக்குகிறேன்.


எங்களுக்கு மண ஒப்பந்தம் ஆவதற்கு முன்னாலேயே,

தான் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்த விபரத்தைக் கூறி,

நான் அவளது கன்னிமைக்குப் பாதுகாவலனாக, சகோதரன் போல் இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாள்.

மண ஒப்பந்தம் ஆனவுடனே அவளை வீட்டில் விட்டுவிட்டு கட்டட வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டேன்

வேலை முடிந்து வந்தவுடன் அவள் கருவுற்றிருப்பது தெரியவந்தது.

மரியாள் மூன்று வயதிலிருந்தே கோவிலில் வளர்ந்த பக்தியுள்ள பெண்மணி.

 அவள் தவறு செய்திருக்க மாட்டாள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.

ஆனால் நிலைமைக்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.

நான் அவளது கன்னிமைக்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டும் என்று சத்தியம் வேறு வாங்கியிருந்தாள்" 
 

"அது சரி. நீதிமானாகிய நீங்கள்
உண்மை தெரியாமல் மரியாளை விலக்கிவிட எப்படித் தீர்மானிக்கலாம்?

விலக்கிவிட்டால் அது மாதாவுக்கு அவமானம் என்று தெரியவில்லையா?"

"தெரியும். அதனால்தான்
அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாமல் அவளை மறைவாக விலக்கிவிடத் தீர்மானித்தேன்."

"அது எப்படி மறைவாக? 

விலக்கி விட்டபின் விஷயம் வெளியே தெரிந்து விடுமே ?"

"அது எப்படித் தெரியும்?

 மறைவாக என்றால் இரகசியமாக, யாருக்கும் தெரியாமல், மரியாளுக்குக் கூட தெரியாமல்."


" அப்பா, நீங்கள் சொல்வது புரியவில்லை.

மாதாவுக்குக் கூட தெரியாமல் எப்படி விலக்கிவிட முடியும்?"


"முடியும். எங்களுக்குள் ஆகியிருந்தது திருமண ஒப்பந்தம் மட்டுமே.

அதை நானே மரியாளுக்கும் தெரியாமல் முறித்துக் கொள்வேன்.

அதாவது திருமண 
ஒப்பந்தத்திலிருந்து நான் விலகிக் கொள்வேன்

அவள் திருமண ஒப்பந்த நிலையிலே இருப்பாள்.

நான் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யாமலேயே அவளோடு, நான் ஏற்கனவே வாக்கு கொடுத்திருந்தபடி, சகோதரனாக வாழ்வேன்.

கருத்தரித்தது பற்றி மரியாளிடம் எதுவும் கேட்கமாட்டேன்.

அவளாகச் சொன்னால் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்வேன்.

அவள் மனது மென்மையானது.

என் எண்ணம் தெரிந்தால் அவள் மனது மிகவும் வருந்தும்.

மனதில் உள்ளதை காட்டிக் கொள்ளவே மாட்டேன்.

நிச்சயமாக அவள் தவறு எதுவும் செய்திருக்க மாட்டாள்.

குழந்தை பிறந்தால் மாமனாக அதை வளர்ப்பேன்.

நான் யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன்.

இதுதான் அப்போது நான் இருந்த நிலை."


"இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?"

"ஆனாலும் கடவுளின் தூதர் என் கனவில் தோன்றி உண்மையை எனக்கு விளக்கிவிட்டார்."

''உண்மையிலேயே நீங்கள் நீதிமான்தான்.

இயேசு பிறக்க வீடு கிடைக்காதபோது மரியாளின் வயிற்றில் இருந்த இறை மகனிடம் முறையிட்டீர்களா?"


"அவர்தானே எங்களை வழிநடத்திச் சென்றார். அவரிடம் ஏன் முறையிட வேண்டும்.

அவரிடம் நன்றி சொன்னேன்." 

"மாதாவையும் இயேசுவையும் கவனித்துக்கொள்வது உங்களுக்கு கஷ்டமாக இருந்ததா?':

 "எனக்கு என்ன கஷ்டம்?

நான் கீழ்ப்படிதல் உள்ள பிள்ளை.


 நான் என்ன செய்ய வேண்டும் என்று இறைவனிடம் இருந்து கட்டளை வந்ததோ அதைச் செய்தேன்.

 எதிர்க் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்தேன்.


"உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ளும்."

 என்று கட்டளை வந்தது. ஏற்றுக்கொண்டேன்.


"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்"


என்று கட்டளை வந்தது.


எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போனேன்.


"எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும்."

என்று கட்டளை வந்தது.

இஸ்ராயேல் நாட்டுக்குச் சென்றேன்.


அங்கு சென்றவுடன்,

கலிலேயாவுக்குப் போகச் சொல்லி என்று கட்டளை வந்தது.

அங்கே சென்று, நசரேத்தில் தங்கினேன்.

அங்கு நான் தச்சு வேலை செய்தேன்.

மரியாள் சமையல் வேலை செய்தாள்.

இயேசு நாங்கள் சொன்னதை கேட்டு வளர்ந்தார்.

கீழ்ப்படிந்து நடப்பவருக்கு எதுவுமே கஷ்டம் இல்லை."


"கபிரியேல் தூதர் உங்களுக்கு சொல்லும்போது


' இதெல்லாம் பைபிளில் எங்கே இருக்கிறது?'

 என்று நீங்கள் அவரிடம் கேட்க வில்லையா?"

சூசையப்பர் சிரித்து விட்டார்.

"கீழ்ப்படிய விரும்பாதவன் தான் ஆதாரம் கேட்பான்."

"இயேசுவும் உங்களோடு தச்சு வேலை செய்திருப்பார், அல்லவா?"

"ஆமா. அவர் மிகச்சிறந்த உழைப்பாளி."

"அவர் உங்களைப் படைத்த கடவுள். அவரை எப்படி உங்களால் வேலை ஏவ முடிந்தது?"

" எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நான் செய்தேன் அவ்வளவுதான்.

அவர் உலகம் முழுவதையும் பராமரிப்பவர்,

 என்னையும் கொஞ்சம் பராமரி என எனக்கு கட்டளை கொடுத்திருந்தார். 

 என்னை படைத்த இறைவனின் கட்டளைப்படி நடப்பதுதான் எனது பணி. 

சொன்னதைச் செய்வேன் வேறொன்றும். தெரியாது."


"உங்களை நன்மரணத்தின் பாதுகாவலர் என்கிறார்களே ஏன்?"

"என்னோடு வாழ்ந்த இறைமகன் இயேசுவின் திட்டப்படி 

நான் வாத நோயால் அவதிப்பட்டேன். 

 இயேசுவே என்னோடு இருந்து எனக்கு ஆறுதல் கூறினார்.

 இறைவன் என்னோடு இருந்தாலும் நான் அவரை என்னை குணமாக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளவே இல்லை,


ஏனெனில் எது நடந்தாலும் இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்பது எனக்குத் தெரியும். 

இறைவன் சித்தத்திற்குப் பணிந்து நடப்பது தான் என் கடமை.

 உலகில் எனது இறுதி நேரம் வந்தபோது நான் இயேசுவின் மடியில் தலைவைத்து என் ஆன்மாவை அவரிடம் ஒப்படைத்தேன். 

நான் இயேசுவின் மடியில் தலையை வைத்து உயிர் விட்டதால், 

அதே போன்ற பாக்கியமான மரணம் தங்களுக்கும் வர வேண்டும் என்று விரும்புகிறவர்கள்

 என்னிடம் நன் மரணத்திற்காக இயேசுவிடம் பரிந்து பேசும்படி கேட்கிறார்கள்.

 நானும் என்னிடம் வேண்டுபவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறேன்."

"திருக் குடும்பத்திற்கும், நல்ல மரணத்திற்கும் பாதுகாவலராக இருக்கும் உங்களை

 திருச்சபையின் பாதுகாவலராக பாப்பரசர் ஒன்பதாவது பத்திநாதர் அறிவித்தாரே.


திருச்சபை பரிசுத்த ஆவியினால் தானே வழி நடத்தப்படுகிறது. உங்களுடைய பாதுகாப்பு அதற்கு ஏன் தேவை?

"பாப்பரசரின் சொற்களை புரிந்துகொள்ள வேண்டிய விதமாக புரிந்து கொள்ள வேண்டும்.

 திருச்சபையை நிறுவியவர் இறைமகன் இயேசு,

 அவர் எப்போதும் திருச்சபையுடன்தான் இருக்கிறார்.

 திருச்சபை பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுகிறது. 

இயேசுவும் பரிசுத்த ஆவியும் ஆள் வகையில் வெவ்வேறாக இருக்கலாம்.

ஆனால் அவர்கள் தந்தையோடு இணைந்து ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.

ஆகவே திருச்சபையை நிறுவியவரும், வழி நடத்துபவரும் ஒரே கடவுள்தான்.

 நான் திருச்சபையின் வளர்ச்சிக்காக எப்போதும் இறைவனிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.

புனித சவேரியார் வேத போதகர்களின் (Missionaries) பாதுகாவலர்.

 புனித மரிய வியான்னி பங்குக் குருக்களின் பாதுகாவலர்.

புனித அந்தோனியார் காணாமற்போன பொருட்களின் பாதுகாவலர்.

இவர்கள் எல்லாம் எதற்கெல்லாம் பாதுகாவலர்களோ  
.
அது சம்பந்தப்பட்டவர்களுக்காக இறைவனிடம் விசேஷமாக பரிந்து பேசுபவர்கள்.

அந்த பொருளில் தான் நான் திருச்சபையின் பாதுகாவலன்."


"கடைசியாக ஒரு கேள்வி.

  இதை அப்போவே கேட்டிருக்க வேண்டும்.

 இப்போது தான் ஞாபகத்துக்கு வருகிறது

 உங்களுடைய வளர்ப்பு மகன் இயேசு அவருடைய பொதுவாழ்வின் போது சென்றவிடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கி கொண்டே சென்றார்.

 அவரை வளர்த்த உங்களுக்கு வாத நோய் வந்தபோது உங்களை ஏன் கூட குணமாக்கவில்லை? நீங்கள் ஏன் குணமாக்கும்படி கேட்கவில்லை?"

"அவர் சர்வ வல்லவர். தன்னைக் கொன்றவர்களிடமிருந்து தன்னை ஏன் காப்பாற்றிக் கொள்ளவில்லை?"

"மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக தன்னைத்தானே உயிர்ப் பலியாக்க வேண்டும் என்பதுதானே அவர் திட்டம்.

 அவர் திட்டத்திற்கு விரோதமாக அவரே செயல் படுவாரா?"

"அப்படித்தான் இதுவும். நான் வாத நோயால் அவதிப் பட வேண்டும் என்பதும், அவர் மடியில் தலையை வைத்து உயிரை விட வேண்டும் என்பதும் அவரது திட்டம்."

"நமது திருச்சபை எதிரிகளின் கையால் எவ்வளவு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

 நீங்கள் திருச்சபையின் பாதுகாவலர்.

நீங்கள் உங்களது வளர்ப்பு மகனிடம் திருச்சபைக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

 நாங்கள் என்ன செய்ய வேண்டும்?"

"எதிரிகளை நேசிக்க வேண்டும் என்பது இறை மகனின் கட்டளை.

ஆகவே எல்லா எதிரிகளும் திருச்சபையில் நண்பர்களாக மாற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

நானும் வேண்டிக்கொள்கிறேன்."

"ரொம்ப நன்றி, அப்பா."


ஆண்டவரே இவ்வுலகில் வாழ சூசையிடம்தான் சென்றார்.


வாருங்கள். நாமும் சூசையிடமே போவோம்.

இயேசுவைப் பாதுகாத்தது போலவே நம்மையும் பாதுகாப்பார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment