Friday, December 4, 2020

இறைவனுள் இருந்து செயல்படுவோம்.

இறைவனுள் இருந்து செயல்படுவோம்.



அமைதியில் தான் ஆண்டவர் பேசுகிறார்.

 ஆண்டவர் பேசுவதைக் கேட்க வேண்டுமென்றால் நாம் அமைதியாக இருக்க வேண்டும்.

 நமது முழு கவனத்தையும் நமது உள்ளத்தை நோக்கி திருப்ப வேண்டும்.

நாம் வாழ்வதோ ஆரவாரம் நிறைந்த உலகம்.

நம்மை சுற்றி எப்போதும் ஏதாவது சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. 

 வெளியே நாம் கேட்கும் சப்தம் நம் உள்ளத்திலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

கூச்சல் குழப்பத்திற்கு இடையே நம்மால் தியானிப்பது கொஞ்சம் கடினம்தான்.

ஆகவேதான் அந்த காலத்தில் ஆண்டவரைத் தியானித்து அவரோடு பேச விரும்புவோர்

 உலகத்தைத் துறந்து காடுகளுக்குச் சென்று தனிமையில் அமைதியாக ஆண்டவரை உள்ளத்தில் தியானித்தனர். 


அவர்கள் வெளி உலக தொடர்பை முற்றிலும் அறுத்துக் கொண்டதால் 

அவர்களால் நிம்மதியாக தியானிக்க முடிந்தது.

அவர்களைத் தொடர்ந்து வெளி உலகில், ஜெபத்திலும் தவத்திலும் நாள் முழுவதையும் செலவழிக்க ஆசைப்பட்டவர்கள் துறவற சபைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

துறவற சபைகளில் வாழ்ந்தோர் வெளி உலகில் இறைப்பணி ஆற்றினாலும், ஜெப தவங்களுக்காக கால அட்டவணை (Time table) போடப்பட்டு,

மெளன நிலை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதால்

அமைதியில் ஆண்டவரோடு பேசவும், அவர் பேசுவதைக் கேட்கவும் அவர்களால் முடிந்தது.

அவர்கள் ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் ஆகிய வார்த்தைப் பாடுகளுக்கு உட்பட்டு வாழ்ந்ததால்,

ஆண்டவரோடு இணைந்த, தியானம் நிறைந்த ஆன்மீக வாழ்வு வாழ முடிந்தது.

ஆரவாரம் நிறைந்த உலகில் குடும்ப நிலையில் வாழும் நாமும் 

இறைவனோடு பேசவும்,
 அவர் பேசுவதைக் கேட்கவும் கேட்டபடி நடக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

உண்மையில் குடும்பத்தினராகிய நாம் ,
ஆண்டவரோடு இணைந்த ஆன்மீக வாழ்வு வாழ்ந்தால்தான்

 நம்மில் இருந்து உண்மையான துறவிகள் தோன்ற முடியும்.

கனி சுவையாக இல்லாவிட்டால் அதற்கான முழு பொறுப்பு மரம்தான்.

வேப்ப மரத்திலிருந்து மாங்கனி காய்க்காது.

இதை மனதில் வைத்துக்கொண்டு குடும்பத்தவர்கள் ஒழுங்கான ஆன்மீக வாழ்வு வாழ முடிவெடுக்க வேண்டும்.

இப்பொழுது கேள்வி ஆரவார உலகில் வாழும் நாம் எப்படி அமைதியில் ஆண்டவரோடு பேசுவது என்பதுதான்.

காலையில் எழுந்து சிலுவை அடையாளம் வரைந்து விட்டு, சிறிது தியானிக்க அமர்வோம்.

"அப்பா ..ஆ.. ஆ"

"என்னடா?"

"ஆய் வருது."

அதை முடித்துவிட்டு திரும்ப வந்து அமர்வோம்.

"என்னங்க!"

"என்னடி?"

"ஆபீஸ் போக வேண்டாமா?"

"போகணும்."

"நானும் போகணும். கொஞ்சம் சமையல் கட்டு பக்கம் வாங்க."

அவ்வளவு தான் அன்றைய தியானம் out!


இதே மாதிரியான நிகழ்வுகள் குடும்ப வாழ்வில் தவிர்க்க முடியாதவை.

நமக்கென்று கால அட்டவணை எல்லாம் போட முடியாது.

போட்டாலும் அதன்படியே நடக்க முடியாது.

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பணி புரியும் இடத்திலும் சரி நாம் நமது கட்டுப்பாட்டிற்குள் இல்லை.

திருப்பலிக்கு சென்றால்கூட 
நம்மை சுற்றியுள்ளோரைக் கவனிக்காமல் பீடத்தைக் கவனிக்க முடியாது.

முதல் வாசகம் வாசிக்க ஆரம்பித்திருப்பார்.

 நம் அருகில் உள்ளவருக்கு அப்போதுதான் ஏதாவது சந்தேகம் வரும்.

 மெதுவாக நம் தோள்பட்டையை தட்டுவார்.

 அவரை பார்த்துவிட்டு திரும்புமுன் வாசகம் முடிந்திருக்கும்.

 என்ன வாசித்தார்கள்?
 யாருக்கு தெரியும்!!

அமைதியின்மைக்குப் பேர்போன உலகில் எங்கே அமைதியைத் தேடி ஆண்டவரோடு பேசுவது?


நமக்கு ஒரு அடிப்படை உண்மையைத் தெரிந்திருக்க வேண்டும்.

அமைதி அற்ற இவ்வுலகில் முதலில் நாம் தேட வேண்டியது மன அமைதியைத் தான். 

மன அமைதியில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

மன அமைதியை எங்கே போய் தேடுவது?

மனம் நமக்குள்ளே தான் இருக்கிறது.

அமைதியின்மை நமக்கு வெளியே இருக்கிறது.

நாம் பிறக்கும்போது அமைதியான மனதோடுதான் பிறந்தோம்.

நமது ஐம்புலன்கள்தான் வெளியிலுள்ள அமைதி இன்மையை மனதிற்குள் செலுத்துகின்றன.

ஐம்புலன்கள் வழியேதான் பாவச் சோதனைகள் மனதிற்குள் நுழைகின்றன.

நாம் சோதனைகளுக்கு இடம் கொடுத்துவிட்டால் அவற்றிலிருந்து பிறக்கும் பாவம் மனதை ஆக்கிரமித்து,

  நம்மோடு பிறந்த அமைதியை வெளியே விரட்டி விடுகிறது.

We lose our peace of mind through our sin.

பாவம் செய்யாமலும், 

அப்படியே செய்து விட்டாலும் அதற்காக வருந்தி இறைவனிடம் மன்னிப்பு பெற்றும் ,

நமது மன அமைதியை நிலையாக காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

மன அமைதியை பெற்றபின் அதை கைவிடாமல் காப்பாற்ற மனதை இறை அருளால் நிரப்ப வேண்டும்.

அருள் கேட்டு இறைவனிடம் வேண்டினால் போதும் போதிய அருளை அவர் இலவசமாக தருவார்.

நமது ஐம்புலன்களை பத்திரமாக வைத்திருந்தால்,

இறையருள் வாழும் நல்ல மனதின் அமைதியை வெளியுலக அமைதி இன்மையால் ஒன்றும் செய்ய இயலாது.

எவ்வளவு குழப்பங்கள் நிறைந்த. உலகில் நாம் வாழ்ந்தாலும் 

நமது உள்ளத்தில் உண்மையான
 அமைதி இருக்குமானால் இறைவன் பேசுவதைத் தெளிவாக கேட்கலாம்.

நமது ஐம்புலன்களையும் அடக்கி வைத்திருந்தால்

உலகில் நம்மை சுற்றி இருக்கும் தேவையற்ற குழப்பங்கள் நமது மனதிற்குள் நுழைய முடியாது.

நாம் உலகில் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இறையருளால் இயக்கப்படும் நமது மனது அது நேசிக்கும் இறைவனோடு அமைதியாக இணைந்திருக்கும்.

அதாவது நமது உள்ளத்தில் இறைவனது பிரசன்னம் இருக்கும்.

இதை அவரவர் அனுபவத்தால் அவரவர் அறியலாம்.

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கலாம்.

 ஆனாலும் நமது மனதில் இறைவனின் பிரசன்னத்தை உணர்வோம்.

நாம் இறைவனோடு மட்டுமல்ல இறைவனுள் இருக்கிறோம்,
இறைவன் நம்முள் இருக்கிறார்.

 We no longer live ‘with’ 
but rather one in the other, 

சாப்பாடு ருசியாக இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

"ருசி இல்லாத உணவாக இருந்தாலும் எனக்காக அதைச் சாப்பிடு" 

என்ற இறைவனின் குரலை நமது மனது உணரும்.


அலுவலகத்தில் நமது மேலதிகாரி மற்றவர்கள் முன் நம்மைத் திட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

நமக்கு அவமானம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

அப்போது நமது உள்ளத்தில்,

" இந்த அவமானத்தை எனக்காக தாங்கிக் கொள்"

 என்ற இறைவனின் குரலை மனது உணரும்.

நல்ல மனம் உள்ள நாமும் அந்த தூண்டுதலின் படி ஏற்றுக்கொள்வோம்.

இரண்டு செயல்பாடுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை நமக்கு வரும் போது அமைதியாக நமது உள்ளத்தில் இறைவன் ஒலி நமக்கு வழிகாட்டுவதை உணரலாம்.

யாராவது 

"இதை ஏன் தேர்ந்தெடுத்தாய்?" என்று கேட்டால்

 நமது வாயிலிருந்து ஒரே ஒரு பதில்தான் வரும்.

 "இது எனக்கு சரியாக பட்டது. ஆகவே தேர்ந்தெடுத்தேன்."

 அது சரி எனப் படுவதற்கு உதவியவர் நம்முள் பேசிய இறைவன்தான் என்று நமக்கு மட்டுமே தெரியும்.

இது நமது மனது பாவம் இன்றி
இறையருள் உள்ளதாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

Suppose,

நமது மனது இறைவனுக்கு எதிர்நிலையில் இருந்தால் பேசுவதும் இறைவனுக்கு எதிர் நிலையில் உள்ள ஆளாகவே இருக்கும்!


ஆகவே எப்போதும் நமது மனதை இறைஅருள் நிலையோடு பாவ மாசு இல்லாமல் வைத்திருக்க வேண்டும்.

நம்முள் கடவுளின் செயல்களை வரையறுக்க முடியாது.

ஆகவே நமது ஒரே வேலை நமது மனதை அவரோடு இணைத்து விட்டு விடுவதுதான். 

அதாவது இறை அருளோடு இருப்பதுதான். 

நம்முள் இருக்கும் இறை அருள் காரணமாக நாம் அவருள்ளும் அவர் நம்முள்ளும் இருந்தாலே போதும்.

அவர் எப்படி நம்மை வழிநடத்துகிறார் என்பதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சில சமயங்களில் நாம் விரும்பாதவை கூட நமக்கு நடக்கும்.

 அப்போது ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்,

 எது நடந்தாலும் அவரது சித்தப்படியே நடக்கும்.


 அவர் நம்மிடம் சொல்லிவிட்டுத்தான் நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நாம் நம் பிள்ளைகளை அவர்களிடம் ஆலோசனை கேட்டா கவனித்துக் கொள்கிறோம்?

வாகனத்தை ஓட்டுனரிடம்
 ஒப்படைத்தபின் அவர் 
ஓட்டுகிறபடிதான் வாகனம் ஓடும், வாகனத்தின் இஷ்டப்படி அல்ல. 

அதே போல்தான் நம்மையும் இறைவன் வசம் ஒப்படைத்து விட்டால் நமக்கு எந்தவித கவலையும் இல்லை.

ஒரு Key board தன்னை music master ரிடம் ஒப்படைத்துவிட்டு அது சும்மா இருந்தாலே போதும்.

music master அதிலிருந்து இனிமையான ராகங்களை "வெளிக்கொணர்வார்.

நாமும் இறைவனின் இயக்கத்திற்கு நம்மை முற்றிலுமாக கையெளித்து விட்டு இயக்கியபடி இயங்கினாலே போதுமானது.

அவரது சாதனைகள் எல்லாம் நமது சாதனைகள் ஆகிவிடும்.

 அவருடைய சாதனைகளுக்கு நமக்கு நித்திய சன்மானம் கிடைக்கும்.

அன்னை மரியாளும் சூசையப்பரும் இதைத்தான் செய்தார்கள்.


சில சமயங்களில் நம் ஆண்டவர் சீடர்களோடு கடலில் பயணிக்கும்போது படகில் தூங்கியது போல 

நம் உள்ளத்திலும் தூங்குவது போல் தெரியும்.

சில சமயங்களில் நம்மை கவனிக்காததுபோல் பின்னாலிருந்து நம்மை தொடர்ந்து வருவது போல் தோன்றும்.

ஆனால் கடைசியில் தான் தெரியும் remote control அவர் கையில் இருந்தது என்று!

தாயின் இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தை எங்கே போகவேண்டும் என்று தாயிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை,

 ஏனெனில் தாய்க்குத் தெரியும் பிள்ளையின் தேவை எது என்று.

 சில சமயங்களில் தாய் தன் பிள்ளையை தோளில் 
போட்டிருக்கும்போது அது நன்றாக தூங்கும்..

 போக வேண்டிய இடம் போன உடனே அது இறங்கி ஓடும். 

அதே போல் தான் சில சமயங்களில் நாம் என்னதான் செய்தாலும் ஒன்றுமே செய்யாது போல் தோன்றும்.

இறைவனே நமக்கு வேண்டியது எல்லாம் செய்திருப்பார்.

நாம் ஒன்றுமே செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் அவர் நமக்காக எல்லாம் செய்வார் என்று அர்த்தமல்ல.

நாம் அவருக்குள் இருந்து செயல் புரிந்தால் அவர் நமக்குள் இருந்து செயல்படுவார்.

நாம் அவருக்குள் இருந்து செயல் புரியும்போது, எல்லாம் இலேசாகத் தெரியும். ஏனெனில் சுமையை எல்லாம் அவர் தாங்கிக் கொள்வார்.

உலகம் எவ்வளவு ஆரவாரமாய் இருந்தாலும் நாம் இறைவனுள் இருந்து செயல்பட்டால் அவர் 
நம்மோடு பேசுவது மட்டுமல்ல நமக்காக செயல்படவும் செய்வார்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment