Thursday, December 3, 2020

".சாவோ வாழ்வோ,இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது."(தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/12/blog-post_3.html


".சாவோ வாழ்வோ,
இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது."
(தொடர்ச்சி)


கல்லூரியில் பயிலும் மகன் டிசம்பர் மாதம் முதல் நாள் கல்லூரியிலிருந்து ஊருக்கு வருவதாக அம்மாவுக்கு phone செய்திருந்தான்.

அம்மா மகனைப் பார்க்கவிருக்கும் எண்ணத்தில் முந்தின இரவே தூங்கவில்லை.

வரவிருந்த நாளில் அதிகாலையிலிருந்தே மகனுக்கு பிடித்தமான ருசியான அறுசுவை மதிய உணவு தயாரிப்பிலேயே ஈடுபட்டிருந்தாள்.

ஆனால் மகன் மதிய உணவிற்கும் வரவில்லை, அன்று இரவும் வரவில்லை.

அம்மா அந்த நாள் முழுவதும் சாப்பிடவில்லை, இரவிலும் தூங்கவில்லை.

மகன் அடுத்த நாள் காலையில் வீட்டிற்கு வந்தான்.

வரவேண்டிய நாளை அம்மாவுக்கு தகவல் கொடுக்காமலே மறு நாளைக்கு மாற்றியிருந்தான்.

 தாய் முகம் கோணாமல்,

மகன் வராததால் தான் பட்ட 
மன வேதனையை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

அன்புடன் வரவேற்று உபசரித்தாள்.    

காரணம் என்ன?

மகன் மீது அவளுக்கு இருக்கும் அபரிமிதமான அன்பு.

மகனின் எந்த செயலும் தாயை அவளுடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது.

அதேபோல்தான் இறைவனை நாம் அழைக்கும்போது அவர் நமது குரலைக் கேட்க காலம் தாழ்த்துவது போல் தோன்றினாலும் 

அவர் மீது நமக்கு உண்மையாக அன்பு இருந்தால் 

தாழ்த்தப்பட்ட காலத்தால் நம்மை இறை அன்பில் இருந்து பிரிக்க முடியாது.

ஒரு வரலாற்று உதாரணம் புனித மோனிக்கம்மாள்.

தன் மகன் அகுஸ்தீன் மனம் திரும்ப வேண்டும் என்று 30 ஆண்டுகள் இறைவனிடம் செபித்தாள்.

ஆழமான விசுவாசத்தோடு செய்த அவளது செபம் வெற்றியைக் கண்டது.

நாம் ஓரிரு நாட்கள் செபித்துவிட்டு நமது செபம் கேட்கப்படவில்லையே என்று இறைவனைக் குறை கூறினால் அது நமது அன்பு குறைவையே காண்பிக்கிறது.



தாங்கள் அன்பு செய்தவருக்கு என்ன பிடிக்குமோ என்பதை நன்கு தெரிந்து .
.
அதை செய்து முடிக்க தயாராக இருப்பவர்களை 

அவர்களுடைய அன்புக்குரியவரிடம் இருந்து பிரிக்க முடியாது.

நமது அன்புக்குரியவர் இயேசு.

அவருக்கு பிடித்தமான ஒரே செயல் நம் எல்லோரையும் அன்பு செய்வது மட்டும்தான்.

நாம் நம்முடைய பிறருக்கு அன்பு செய்ய வேண்டும், வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்ல,

நமது செயல்களாலும்.

இயேசுவின் அன்பை விட்டு பிரியாமல் இருப்பதற்காகத்தான் அவரது விருப்பப்படி நாம் அனைவரையும் அன்பு செய்கிறோம்.

இறைவனுக்காகப் பிறரை அன்பு செய்கிறோமா,

 அல்லது,

  பிறருக்காக இறைவனை அன்பு செய்கிறோமா?

இறைவனுக்காக மட்டுமே பிறரை அன்பு செய்கிறோம்.

எவனொருவன்,

"நான் எனது பிறனை அன்பு செய்கிறேன்,

 ஆனால் இறைவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, ஆகவே என்னிடம் இறையன்பு இல்லை"

என்று சொன்னால் அவன் பொய்யன்.

இது, ''Main switch ஐ off செய்து விட்டேன்.

ஆனாலும் என் அறையிலுள்ள switch ஐ on பண்ணினால் bulb எரியும்" என்று சொல்வதற்குச் சமம்.

ஒருவன் தன் தந்தையை அன்பு செய்யாமல் 

அவர் தன்னிடம் தந்திருக்கும் பணத்தை மட்டும் விரும்பினால்,


 அது பணத்தின் மேல் உள்ள பாசத்தினால் அல்ல,

 தன் மேல் தனக்கு உள்ள பாசத்தினால் மட்டுமே.

 பணம் தனக்குப் பயன்படுகிறது என்பதற்காக அதை விரும்புவானேயொழிய பணத்தை பணத்திற்காக விரும்பமாட்டான்.

இறைவனை மையமாகக் கொண்ட பிறரன்பு தான் உண்மையான அன்பு.

அத்தகைய அன்பு உடையவர்களை

 யாராலும், எந்தப் பொருளாலும், எந்த சக்தியாலும்

 தேவனுடைய அன்பில் இருந்து பிரிக்க முடியாது.

அவர்களுடைய அன்பின் வேர் இறைவனிடம்தான் இருக்கிறது.



"அதுபோல நீங்களும் விழிப்பாயிருங்கள். -- ஏனெனில், வீட்டுத்தலைவர் மாலையிலோ நள்ளிரவிலோ கோழி கூவும் பொழுதோ காலையிலோ எப்பொழுது வருவார் என்று உங்களுக்குத் தெரியாது."
(மாற்கு 13:35)

இயேசு நம்மை அழைக்க எப்பொழுது வருவார் என்று நமக்குத் தெரியாது.

இந்த விநாடியில் வருவாரா, இந்த நிமிடத்தில் வருவாரா, இந்த நாளில் வருவாரா,
 இந்த வருடத்தில் வருவாரா, எத்தனை வருடங்கள் கழித்து வருவார்,

 எதுவுமே நமக்கு தெரியாது.

 இருந்தாலும் நாம் விழிப்பாக அவருக்காக காத்திருக்க வேண்டுமென்றால்

 நமக்கு அவர்மீது குறையாத, மாறாத அன்பு இருக்க வேண்டும்.

விசுவாசத்தின் அடிப்படையில் இயேசு இந்த வினாடியே நம்மை அழைக்க வந்தாலும் நமக்கு மகிழ்ச்சி தான்.

நமது மனித சுபாவம் நாம் நீண்ட நாள் இந்த உலகில் வாழ வேண்டும், அதன் பின்னர் விண்ணகம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு தான்.

நாம் ஒருவரை ஒருவர் வாழ்த்தும் போது "நீண்ட நாள் வாழ்க" என்றுதான் வாழ்த்துகிறோம்.

ஆனாலும் ஆண்டவர் வரும் நாளைத் தீர்மானிப்பது நாம் அல்ல, அவர் தான்.

அவர் எப்போது வந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

நமது மனதில் ஆழமாக பதிந்து இருக்கவேண்டிய எண்ணம் 

நாம் மண்ணகத்தில் வாழ்ந்தாலும் 

விண்ணகத்தில் வாழ்ந்தாலும்

 இறைவனில்தான் வாழ்கிறோம் என்பதுதான்.

 நாம் விண்ணகம் செல்லும்போது நம்மோடு வாழவிருக்கும் அதே இறைவன் தான் இப்போதும் நம்மிடம் வாழ்கின்றார்.

எங்கே வாழ்ந்தாலும் இறைவனோடுதான் வாழ்வோம் என்ற விசுவாசம் நம்மில் இருந்தால்,

எப்போதும் நம்மோடு இருக்கும் அவர்

 எப்போது அழைத்தாலும் ,
எங்கு அழைத்தாலும் 
அவரோடு நாம் செல்ல தயார் நிலையில்தான் இருப்போம்.

 இந்நிலையில் நாம் இருந்தால் நம்மை யாராலும் இறை அன்பில் இருந்து பிரிக்க முடியாது.


இவ்வுலகில் நாம் வாழும்போது நமது செயல்கள் அனைத்தும் இறையன்பை மையமாக கொண்டு இருக்க வேண்டும்.

  நமது அந்தஸ்தின் கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும்.

குடும்ப நிலையில் இருந்தாலும்,
'
 துறவற நிலையில் இருந்தாலும்,

 அரசு பணியில் இருந்தாலும் ,

 தனியே தொழில் செய்து வந்தாலும் 

கடமைகள் மாறலாம், நோக்கம் ஒன்றுதான்.

இறையன்பில் நிலைத்து நிற்பதற்காக.

இறையன்பில் நிலைத்து நின்று கடமைகளை ஆற்றுவதால் ஆன்மீக ரீதியாக பல வகைகளில் பயன் பெறுகிறோம்.

1.இறையன்பிற்கு எதிராக எதுவும் செய்யமாட்டோம், அதாவது, பாவம் நமக்குள் புகாது.

2. அன்பிற்காக செய்யப்படும் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நற்செயலாக மாறுகிறது. 

ஒவ்வொரு செயலிலும் இயேசுவின் அன்பு வெளிப்படுகிறது. 

நமது வாழ்வின் வழியாக மௌனமாக நற்செய்தியை அறிவித்த வண்ணமாக இருக்கிறோம்.


3. நாம் பரிசுத்தத் தனத்தில் வளர்கிறோம்.

இறைவன் பரிசுத்தமானவர். அவர் வாழும் விண்ணகத்திற்குள் பரிசுத்தவான்கள் மட்டுமே நுழைய முடியும்.

ஞானஸ்நானத்தின்போது நாம் பரிசுத்தம் அடைகிறோம்.

நமது வாழ்நாளய பணியே நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தில் வளர்வதுதான்.

இறை அன்பிற்காக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நாம் பரிசுத்தத்தனத்தில் வளர உதவியாக இருக்கும்.

4. மற்றவர்களையும் பரிசுத்தத் தனத்தில் வளரச் செய்கிறோம்.

எரியும் மெழுகுதிரி தான் பிரகாசமாக இருப்பதோடு 

தனது பிரகாசத்தால் மற்றவர்களும் பயன்பெற செய்வதுபோல 

பரிசுத்த தனத்தில் வாழ்பவர்கள் 

தங்களது நன்மாதிரிகையால் மற்றவர்களும் பரிசுத்தமாய் வாழ உதவுகிறார்கள்.

இறையன்பில் நிலைத்து நின்று கடமைகளை ஆற்றுவர்களை இறையன்பிலிருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment