சரணடைதல் என்ற வார்த்தையை யுத்த களத்தில் பயன் படுத்துகிறோம்.
இரண்டு படைகள் போரிடும்போது ஒரு படை வெற்றியை நோக்கியும், அடுத்த படை தோல்வியை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கும்.
வெற்றி பெறுவது உறுதி என்ற நிலையிலுள்ள படை தொடர்ந்து போரிடும்.
ஆனால் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் படை தோல்வி உறுதி என்று தெரிந்தவுடன்,
தொடர்ந்து மரணங்களைத் தவிர்க்கும் பொருட்டு
தோல்வியை ஏற்றுக்கொண்டு எதிரியிடம் சரணடைந்துவிடும்.
உலகியலில் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தை முற்றிலும் மாறுபட்ட பொருளில் ஆன்மீகத்தில் பயன் படுத்தப் படுகிறது.
1. உலகியலில் தோல்வி அடைந்தபின் சரணடைகிறோம்.
ஆன்மீகத்தில் தோல்வி அடையாமல் இருப்பதற்காகச் சரணடைகிறோம்.
2.உலகியலில் எதிரியிடம் சரணடைகிறோம்.
ஆன்மீகத்தில் எதிரியிடம் போகக்கூடாது என்பதற்காக இறைவனிடம் சரணடைகிறோம்.
ஆன்மீக வாழ்வே ஒரு போராட்டம் என்பதை முதலில் உணர வேண்டும். போராட்டம் நமக்கும் சாத்தானுக்கும் இடையிலானது.
நாம் தனித்து நின்று போராடி வெல்ல முடியாது என்பதை உணர வேண்டும்.
போராட்டம் ஆரம்பிக்கும் முன்பே நாம் முற்றிலும் இறைவனிடம் சரணடைந்து விட வேண்டும்.
இறைவனிடம் சரணடைந்து விட்டால் நமக்காக போராடும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார்.
நான் முற்றிலும் இறைவன் வசம் இருக்கும்போது சாத்தானால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
இறைவனிடம் சரணடைதல் என்றால் என்ன?
நம்மை இயக்குகின்ற முழுப்பொறுப்பையும் அவரிடம் விட்டுவிடுதல்.
சரணடைந்தபின் நமது ஒவ்வொரு அசைவும் இறைவன் கையில் தான் இருக்கும்.
இறைவனது விருப்பம்தான் நமது விருப்பம்.
இறைவனது விருப்பங்களை செயல் படுத்துவது மட்டுமே நமது பணி.
இறைவனது விருப்பங்கள் உள் தூண்டுதல்கள் (Inspirations) மூலமாகவும்,
பைபிள் மூலமாகவும்,
தாய்த் திருச்சபை மூலமாகவும் நமக்கு தெரிவிக்கப்படும்.
இதனால் சாத்தானின் சோதனைகளோ, தாக்குதல்களோ குறையும் என்று சொல்லவில்லை.
அனால் அதனால் நம்மை வெற்றி கொள்ள இயலாது.
ஏனெனில் நமக்காக போராடுபவர் நம்மை படைத்த சர்வ வல்லப கடவுள்.
கடவுளிடம் சரண் அடைந்த வர்களுக்குத் துன்பங்கள் வராது என்று கூற முடியாது.
வரும். கட்டாயம் வரும். சிலுவைகள் வந்தால்தான் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை நிரூபிக்க முடியும்.
நடந்து முடியப் போகிற 2020ஆம் ஆண்டில் நமது அனுபவங்களே அதற்கு எடுத்துக்காட்டு.
நமது அனுபவத்தில் இவ்வளவு கடினமான ஆண்டை நாம் சந்தித்திருக்கவே முடியாது.
கொரோனாவின் வருகையினால் நாம் சந்திக்க நேர்ந்த நோய் நொடிகள், மரணங்கள், தனிமை, கோவிலுக்குப் போகமுடியாமை, தேவத் திரவிய அனுமானங்களைப் பெறமுடியாமை, etc. etc.
இவை எல்லாம் நம்மைப் படைத்து பராமரித்து வரும் இறைவனால் அனுமதிக்கப் பட்டவைதான்.
இறைவனிடம் சரணடையாதவர்களுக்கு இவை வெறும் துன்பங்கள்.
சரண் அடைந்தவர்களுக்கு இவை விண்ணக மகிமைக்கு வழியான சிலுவைகள்.
"சிலுவை வழி மகிமை" என்பதுதான் இயேசு தனது இவ்வுலக வாழ்க்கையின் மூலம் நமக்கு தந்த போதனை.
"பாடுகள் --> மரணம் --> உயிர்ப்பு
--> விண்ணகம்"
"பாடுகள் --> மகிமை."
இறைவனிடம் சரண் அடைந்தவர்களுக்கு மட்டுமே இவ்வுண்மை புரியும்..
திருவருகைக் காலத்தில் இயேசு மார்கழிக்குளிரில் நடுங்கிக் கொண்டே பிறந்த பெத்லகேம் மாடடைக் குடில் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இயேசு பாலனுக்கு நாம் அளிக்க வேண்டிய பிறந்த நாள் பரிசு நாம் அவரிடம் சரணாகதி அடைவது தான்.
இந்த ஆண்டு முழுவதுமே இறைவனால் அனுமதிக்கப் பட்ட கஷ்டங்கள் வழியேதான் நடந்து கொண்டிருக்கிறோம்.
இந்த கஷ்டங்கள் எல்லாம் கிறிஸ்துமஸோடு முடிவுக்கு வருமா தொடருமா என்று நமக்கு தெரியாது.
ஆனால் எல்லா கஷ்டங்களையும் எப்படி நித்திய பேரின்ப வீட்டுக்கு வழியாக மாற்றுவது என்பது விசுவாசத்தின் அடிப்படையில் நமக்கு தெரியும்.
நாம் படுகின்ற, படவிருக்கின்ற கஷ்டங்களை எல்லாம்
கஷ்டப்படுவதற்காகவே பிறக்கப் போகிற இயேசு பாலனிடம் ஒப்படைப்போம்.
அவருடனே பாடுகள் வழியே நடந்து,
அவருடனே விண்ணக நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.
அங்கு சிலுவைகள் துன்பத்தின் அடையாளமாக இல்லாமல், நித்திய பேரின்பத்தின் அடையாளமாக இருக்கும்.
பேரின்ப வாழ்வு அடைய
இயேசுவிடம் சரணடைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment