ஆண்டுகள் வருகின்றன, போகின்றன, போன ஆண்டுகள் திரும்ப வருவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் நமது வயது ஏறிக்கொண்டே போகிறது,
ஆனால் வாழ்நாளின் அளவு இறங்கிக் கொண்டே வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே தேய்கிறோம்.
ஒவ்வொரு வினாடியும் எதிர்த் திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறோம், வளர்ச்சியை நோக்கியும் தேய்மானத்தை நோக்கியும்.
எப்படி?
மனிதன் என்றாலே ஒரே நேரத்தில் இரண்டு வாழ்க்கைகள் வாழ்ந்து கொண்டிருப்பவன் என்பது தான் பொருள்.
இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர் திசையை நோக்கி நகரும் வாழ்க்கைகள்.
ஆவியாகிய நமது ஆன்மா நித்தியத்தை நோக்கி பயணிக்கிறது. ஏனெனில் ஆன்மா அழியாது,
சடப் பொருளாகிய நமது உடல் முடிவை நோக்கி பயணிக்கிறது, ஏனெனில் அது அழியக் கூடியது.
நமது Money purse ல் பணம் இருக்கிறது.
நமக்கு பணம் முக்கியமா?
purse முக்கியமா?
நமது உடலில் ஆன்மா இருக்கிறது.
நமக்கு ஆன்மா முக்கியமா?
உடல் முக்கியமா?
உலக காரியங்களில் உடனுக்குடன் முடிவெடுக்கும் நாம் ஆன்மீக காரியங்களில் முடிவெடுக்க தயங்குகிறோம். ஏன்?
பணத்துக்காகத்தான் purse,
purse க்காக பணமல்ல.
ஆன்மாவுக்காகத்தான் உடல், உடலுக்காக ஆன்மா அல்ல.
ஆன்மா நித்திய வாழ்வை நோக்கி பயணிப்பதற்காகத்தான் உடல் அதன் முடிவை நோக்கி பயணிக்க வேண்டும்.
முடிவை நோக்கி பயணிக்கும் உடலை குஷிப்படுத்துவதற்காக ஆன்மா தனது நிலை வாழ்வை இழந்து விடக்கூடாது.
வேத சாட்சிகள் இறைவனோடு நித்திய காலம் வாழ்வதற்காக தங்கள் உடலைப் பலியாக்கத் தயங்கவில்லை.
நாமும் நமது ஆன்மா இறை அருளில் வளர்வதற்காக நமது உடலை தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
வியாபாரிகள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் தங்கள் வியாபாரத்தில் அவர்கள் பெற்ற லாப நட்ட கணக்குகளைப் பார்ப்பார்கள்.
லாபம் ஏற்பட்டிருந்தால் அதன் அளவை அதிகரிக்க அடுத்த ஆண்டு என்ன செய்யலாம் என்று இந்த ஆண்டின் இறுதியிலேயே முடிவெடுப்பார்கள்.
நட்டம் ஏற்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிந்து, நட்டத்தை விட்டு வெளியேறி, லாபத்தை அடைவதற்கான திட்டங்களை வகுப்பார்கள்.
புத்தாண்டில் தங்களது திட்டங்களை செயல்படுத்துவார்கள்.
ஆன்மிகவாதிகளாகிய நாம் இந்த ஆண்டில் நமது ஆன்மீக வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் பற்றி மன ஆய்வு செய்ய வேண்டும்.
ஏற்ற இறக்கங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து புத்தாண்டில் நமது ஆன்மீக வளர்ச்சிக்காக திட்டங்களை தீட்ட வேண்டும்.
தீட்டிய திட்டங்களை புத்தாண்டில் செயல்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கத்திலும் புத்தாண்டு தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
ஆண்டவர் கூறிய உவமை ஒன்றில், தந்தை மகனை நோக்கி,
"மகனே, இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலைசெய் " என்று சொல்ல,
அவனும்,
" இதோ! போகிறேன், ஐயா " என்றான்.
ஆனால் போகவில்லை.
நாமும் புத்தாண்டில் தீர்மானம் செய்துவிட்டு,
அதை நிறைவேற்றாவிட்டால்,
"போகிறேன்" என்று சொல்லிவிட்டு போகாத மகனுக்கு சமமாவோம்.
"இந்த புத்தாண்டிற்கு என்ன தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள்?"
"இனிமேல் புத்தாண்டு தீர்மானமே எடுப்பதில்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறேன்."
"ஹலோ! என்ன ஆச்சு உங்களுக்கு?"
"ஒண்ணும் ஆகல. நல்லா இருக்கேன். இனிமேதான் நல்ல இருப்பேன்."
"இல்லை. Something wrong. புத்தாண்டு தீர்மானமே எடுப்பதில்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறேன்னு சொல்கிறீர்கள்."
''புத்தாண்டு தீர்மானம் என் விஷயத்துல failure ஆகிப்போச்சு.
ஆகையினால் இப்போ "புதிய நாள் தீர்மானம்" எடுத்திருக்கிறேன்."
"அப்படின்னா?"
"புத்தாண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் வரும்.
புதிய நாள் தினம் வருமே.
இனி என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான்.
தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக அன்றைய நற்செய்தி வாசகத்தை வாசிக்க வேண்டும்.
அதிலிருந்து ஒரு செய்தியை தேர்ந்தெடுத்து அதை அன்றைக்கு வாழ வேண்டும்.
இரவு படுக்கப் போகும் முன் அன்றைய செய்தி வாழ்வு பற்றி ஒரு சிறிய பரிசோதனை செய்ய வேண்டும்.
அடுத்த நாள் புதிய நாள், புதிய செய்தி, புதிய வாழ்வு.
ஆண்டின் ஒவ்வொரு நாளும் புதிய நாளாகவும்
ஒவ்வொரு நாளும் புதிய அனுபவமாகவும் இருக்கும்."
"இந்த தீர்மானத்தை எப்போது எடுத்தாய்?"
"டிசம்பர் 31. இது புத்தாண்டு தீர்மானம் அல்ல. பழைய ஆண்டு தீர்மானம்!"
ஒவ்வொரு நாளையும் நாம் ஆரம்பிக்கும் போது மனதில் வைத்திருக்க வேண்டியது:
நாம் இன்று வாழப்போவது உலகில் தான், ஆனால் உலகிற்காக அல்ல.
இறைவனுக்காக வாழும்போது வாழ்க்கையின் பொருளே மாறி விடுகிறது.
ஒருவன் கடைக்குச் சென்று தனக்காக ஒரு சட்டையை வாங்குகிறான்.
அடுத்து தனது மனைவியை சந்தோஷப் படுத்துவதற்காக ஒரு சேலையை தேர்வு செய்து வாங்குகிறான்.
அவனிடம் இருப்பது ஒரே மனசு தான்.
ஆனால் அவன் சட்டையை வாங்கும்போது மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கும்
சேலையை வாங்கும்போது மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கும்
பாரதூர வித்தியாசம் இருக்கிறது.
சட்டையில் துணி மட்டும்தான் தெரியும், ஆனால் சேலையில் அவனுடைய மனைவியின் முகம் தெரியும்,
இது அனுபவப்பட்டவர்களுக்கு மட்டும் புரியும்.
தனக்காக வாழ்வதைவிட
இறைவனுக்காக வாழ்வது
எவ்வளவு இனிமையானது என்று
வாழ்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
இறைவனுக்காக வாழ்வோம்.
இறையாசீர் பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment