Tuesday, December 22, 2020

எதிர்க்க எதிர்க்க தொடர்வது.

எதிர்க்க எதிர்க்க தொடர்வது.


உடலில் ஏதாவது வலி ஏற்படுகிறது என்றாலே

 ஏதோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்பதுதான் பொருள்.

மிதிவண்டி ஓடிக் கொண்டிருக்கும்போது,
 "கிரீச் கிரீச்" என்ற சப்தம் கேட்டால், சக்கர அச்சில் எண்ணெய் போட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் வலி ஏற்பட்டால் உடல் ஏதோ ஒரு மாற்றத்தை விரும்புகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நமது மூளைப் பகுதியில் வலி ஏற்பட்டால் நமது நரம்பு மண்டலத்தில் சரி செய்யப்பட வேண்டிய ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 
 
மூளை களைப்பு அடையும்போது தலைவலி ஏற்படும்.

இது நாம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்கான அறிகுறி.

தலைவலி மாத்திரை போட வேண்டும் என்பதற்கான அறிகுறி அல்ல.

சிலர் தலைவலி மாத்திரையை போட்டுக் கொண்டு வேலையை தொடர்வர். இது மூளைக்கு கேடு. 

ஒரு முறை உடல் வலியை நீக்க மருத்துவரிடம் சென்றபோது,
'
' நீங்கள் உடல் வலி நீங்க எவ்வளவு மருத்துவம் பார்த்தாலும், அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

 வலிக்கான காரணத்தை அறிந்து அதை.நீக்கினால் மட்டுமே வலி திரும்பாது.

வலி மட்டுமல்ல நாம் விரும்பாத எதுவும் நம் உடலில் ஏற்பட்டாலும் நாம் பதற்றம் அடையாமல,

அதன் காரணத்தை அறிந்து குணப்படுத்த முயல வேண்டும்.

வலியை உணரும் போது நோய் குணமாக தயாராகிறோம் என்று சொல்வார்கள்.

வலியே இல்லாத நோய் வந்தால் அது நம்மிடம் இருப்பது தெரியாமலேயே முற்றி வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆகவே வலி நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டுமே தவிர கவலையை அல்ல.

இது ஆன்மீகத்திற்கும் பொருந்தும்.

உள்ளத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத காது கேட்காத உணர்ச்சிகளை வெளிப்படுத்த சொற்கள் பயன்படுவது போல,

நமது ஆன்மா தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த நமது உடலை பயன்படுத்தி கொள்கிறது.

உடலில் ஏற்படும் வலி நமது உடல் தேவைகளை மட்டும் அல்ல ஆன்மீக தேவைகளையும் வெளிக்காட்டும்.

ஒரு அறிகுறி (Symptom) பல நோய்களைக் குறிப்பதாக இருக்கலாம்.

நோயாளியினுடைய மற்ற தன்மைகளை வைத்து காரணத்தை முடிவு செய்ய வேண்டும்.

இது ஆன்மீகத்துக்கும் பொருந்தும்.

துன்பங்கள் எல்லா மனிதர்களுக்கும், வெவ்வேறு உருவத்தில்.

ஆன்மீக வாழ்வில் முன்னேறியவனுக்குத் துன்பம் வந்தால்,

''ஆண்டவர் தன்னை நேசிப்பவர்களுக்கு தான் அதிக துன்பங்களை அனுப்புவார்.''

என்பதை உணர்ந்தவனானாகையால் துன்பங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவான்.

எப்படி இயேசு தான் பட்ட பாடுகளை உலகின் பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுத்தாரோ

 அதேபோல இவனும் தனக்கு வரும் துன்பங்களை உலகம் மனம் திரும்புவதற்காக ஒப்புக் கொடுப்பான். .

ஆன்மீக வாழ்வில் முன்னேற முயல்பவனுக்கு துன்பம் வந்தால்,

  தனது பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தேவையான அருள் வரங்களை கேட்டும் துன்பத்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுப்பான்.


மற்றவர்களுடைய ஆன்மீக நலனுக்காகவும் தன்னுடைய துன்பங்களை ஒப்புக்கொடுப்பான்.

 இவ்வாறு செய்யும் போது அவனது ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைவான்.

பாவங்களோடு போராடிக் கொண்டிருப்பவனுக்குத் துன்பங்கள் வந்தால்

பாவ சோதனைகளை எதிர்த்து . வெற்றிபெற வரம் வேண்டி

 இறைவனுக்கு தன் துன்பங்களை ஒப்புக் கொடுப்பான்.

ஆனால் பாவ நிலையை விட்டு வெளியேறாமல் 

அதாவது 

ஆன்மீக வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கு துன்பம் வந்தால் 

அவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள்.

துன்பங்களை அனுப்பியதற்காக இறைவனை குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.

உலகில் துன்பங்கள் இருப்பதால் இறைவனே இல்லை என்றுகூட சிலர் கூறிக் கொண்டிருப்பார்கள்.

 உண்மையிலேயே இறைவன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் புத்தியை பயன்படுத்துபவர்களாக இருந்தால் 

துன்ப நேரத்தில் இறைவனை நெருங்கி வருவார்கள்.

தங்களுக்கு வந்திருக்கும் துன்பங்கள் தாங்கள் மனம் திரும்ப இறைவனால் பயன்படுத்தப்படும் ஆயுதம் என்பதை உணர்வார்கள்.

மனம் திரும்பி பாவ மன்னிப்பு பெற்று ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள்.


புத்தியைப் பயன்படுத்தாதவர்களாக இருந்தால் முணுமுணுப்பிலேயே வாழ்நாளை கழித்து

வாழ்வின் பயனை அடையாமல் போவார்கள்.

மனித வாழ்வில் துன்பங்கள் தவிர்க்க முடியாதவை.

விஞ்ஞான அறிவின் மூலம் துன்பங்களை தவிர்த்து விடலாம் என்று எண்ணி செயல்பட்டவர்களால் உலகில் துன்பங்கள் அதிகரித்திருக்கின்றனவே தவிர குறையவில்லை.

அவர்களது முயற்சியினால் துன்பங்கள், ஒழியவில்லை, உருமாறியிருக்கின்றன.

நம்மால் தவிர்க்க முடியாத துன்பங்களை நமது ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்றவையாக மாற்றி பயன்பெற வேண்டும்.

எதிர்க்க எதிர்க்க குறையாதது வலி.

அதன் உடலியல் காரணத்தை காரணத்தை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து செயல்படுபவர்கள்

 வலியின் உருவத்தை மாற்றலாம், வலியை மாற்ற முடியாது.

அதன் ஆன்மீக காரணத்தை ஆன்மீக ரீதியாக ஆராய்ந்தால்

அது ஆன்மீக வளர்ச்சிக்குப் பயன்படும்.

இறைவனின் ஆசீர்வாதமாக பணத்தை பெற்றவர்கள் அதே பணத்தை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து ஆன்மீக நலனை பெறுவதைப் போல,


அவர் நமக்கு ஆசீர்வாதமாகத் தந்திருக்கும் வலியை  

அவருக்கே காணிக்கையாக ஒப்புக் கொடுத்தால்

 அதற்கு சன்மானமாக அபரிமிதமான அருள் வரங்களை தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்னை மரியாள் தனது மகனின் பாடுகளின் காரணமாக பெற்ற வியாகுலங்களை எல்லாம் 

நமது ஆன்மீக ஈடேற்றத்திற்காக அவருக்கே ஒப்புக்கொடுத்தாள்.

அதன் ஆன்மீக பலனை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நமக்கென்று சொந்தமாக எதுவும் கிடையாது.

நமது ஆன்மா அவர் படைத்தது.

நமது உடல் உலகில் நாம் பயன்படுத்துவதற்காக நமக்கு அவர் தந்த பரிசு.

 நமது பாவங்கள் மட்டும்தான் நாம் செய்தவை.

அவற்றுக்கு பரிகாரமாக தான் இறைவனுக்கு காணிக்கை ஒப்பு கொடுக்க வேண்டி இருக்கிறது.

ஒப்புக் கொடுப்பதற்கு நம்மையும் நமக்கு வரும் துன்பங்களையும் தவிர வேறு ஒன்றும் நம்மிடம் இல்லை.


ஆகவே நாம் செய்தவற்றிற்கு பரிகாரமாக நமக்கு கிடைத்தவற்றை ஒப்புக் கொடுப்போம்.

அதைத்தான் அவரும் விரும்புகிறார்.

   "தனது சிலுவையை சுமந்து கொண்டு வாழ்பவன் தான் எனக்கு சீடனாக இருக்க முடியும்" என்று இயேசுவே சொல்லி இருக்கிறார்.        

நாம் சுமப்பதற்கு வேண்டிய சிலுவையை அவரே தருகிறார்.

துன்பமும் அதை இறைவனுக்காக ஒப்புக்கொடுக்கும் நமது மனதும் சேர்ந்துதான் சிலுவை கிடைக்கிறது.     

இறைவனுக்காக ஒப்புக்கொடுக்கும் மனது துன்பம் மட்டுமே மிஞ்சும்.

 மின்சார இணைப்பு இல்லாவிட்டால் நமது வீட்டில் இருக்கும் T.V பயனற்றது.

இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கும் மனது நமக்கு இல்லாவிட்டால் நமது துன்பத்தால் யாருக்கும் ஆன்மீகப் பயன் ஒன்றுமில்லை. 

எவ்வளவு சிறிய துன்பமாக இருந்தாலும் அதை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கும் மனது நமக்கு இருந்தால்

 நாம் உண்மையிலேயே பாக்கியவான்கள். '

நாம் ஒப்புக் கொடுப்பதோ உடல் சம்பந்தமான வலி 

ஆனால் அது அதிசயமாக விதமாக மாறுவதோ ஆன்மீக சக்தியாக.

நிரந்தரமற்ற தற்காலிகமாக வலி நித்திய பேரின்பம் ஆக மாறுவது எவ்வளவு பெரிய பாக்கியம்!

ஒவ்வொரு முறை நாம் ஒப்புக் கொடுக்கும்போதும் தண்ணீர் திராட்சை ரசமாக மாறும் புதுமை நம்மில் நடக்கிறது,

கானாவூர் கல்யாணத்தில் இயேசு இருந்து அந்த புதுமையை செய்தது போல நமக்குள்ளும் இருந்து புதுமைகளை செய்துகொண்டே இருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் நாம் நமது துன்பத்தை இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்கும் போதும்

   அவரோடு அவரது சிலுவையை சுமந்துகொண்டு கல்வாரி மலைக்குப் பயணிக்கும் மாக்கியம் பெறுகிறோம்.

அவரோடு சிலுவையில் மரித்து,

 அவரைப்போலவே உயிர்த்து,

 அவருடனே விண்ணக வாழ்விற்குள் நுழைவோம்.

மாறாக துன்பத்தை முடிவுக்கு கொண்டுவர நாமாகவே முயன்று கொண்டேயிருந்தால்
நாம் மரணிக்கும் மட்டும் அது முடிவுக்கு வரப்போவதில்லை.

முடிவுக்கு வர மறுக்கும் துன்பத்தை முடிவில்லா இன்பத்திற்கு காரணியாக மாற்ற இறைவனால் மட்டுமே முடியும்
.
துன்பம் வரும்போது மகிழ்வோம், அதன் வழியே முடிவில்லா பேரின்பத்திற்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.



No comments:

Post a Comment