Tuesday, December 15, 2020

"ஆயினும் கடவுளுடைய அரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்."(லூக் 7:28)

 


"ஆயினும் கடவுளுடைய அரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்."
(லூக் 7:28)



இயேசுவுக்கு    அருளப்பரைப் பற்றி நன்கு தெரியும். 

அருளப்பருக்கு இயேசுவைப் பற்றி நன்கு தெரியும். 

இது நமக்கும் நன்கு தெரியும். 

ஆனால் அருளப்பர் இயேசுவுக்கு ஆள் அனுப்பி,

"வரப்போகிறவர் நீர்தாமோ? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?"

என்று கேட்க சொல்கிறார்.

ஆட்களும் இயேசுவிடம் வந்து கேட்கிறார்கள்.

இயேசு அவர்களிடம்,

"நீங்கள் போய்க் கண்டதையும் கேட்டதையும் அருளப்பருக்கு அறிவியுங்கள்: 

குருடர் பார்க்கின்றனர், 
முடவர் நடக்கின்றனர், தொழுநோயாளர்  குணமடைகின்றனர், 
செவிடர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது."

என்று சொல்லி அனுப்புகிறார்.

ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த இருவர் 

ஒருவரை ஒருவர் விசாரிக்கும்படி 

ஆள் அனுப்புகிறார்கள் என்றால் அது அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக அல்ல.

விசாரிக்கும்படி அனுப்பப்பட்டவர்கள் இருவரையும் பற்றி நன்கு அறிந்து கொள்வதற்காகத்தான்.

அனுப்பப்பட்டவர்கள் அருளப்பரின் சீடர்கள்.

அவர்களுக்கு அருளப்பரைப்பற்றி நன்கு தெரியும்.

அவர்கள் நிரந்தரமாக   தன்னிடம் தங்க முடியாது என்பதையும்,

இயேசுதான் அவர்களுக்கு நிரந்தரம்  என்பதையும் அவர்கள்
 புரிந்து கொள்ள வேண்டும் என்று   அருளப்பர் விரும்பினார்.


ஆகவே இயேசுவை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனது சீடர்களை அவரிடம் அருளப்பர் அனுப்பினார்.

தன்னை பற்றி அருளப்பருக்குத் தெரியும் என்று இயேசுவுக்கு தெரியும்.


தான் யார் என்று தன்னிடம் வந்தவர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவே இயேசு அவர்களிடம்:

"நீங்கள் போய்க் கண்டதையும் கேட்டதையும் அருளப்பருக்கு அறிவியுங்கள்: 

குருடர் பார்க்கின்றனர், 
முடவர் நடக்கின்றனர், தொழுநோயாளர்  குணமடைகின்றனர், 
செவிடர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது."

என்று சொன்னார்.

"வரப்போகிறவர் வந்து விட்டார். அவர் நானே"  என்று பொருள்பட இயேசு சொன்னார்.

அருளப்பரின் நோக்கமே தனது சீடர்கள் இயேசுவின் சீடர்களாக மாறவேண்டும் என்பதுதான்.

இயேசு அருளப்பரை  
இறைவாக்கினருக்கும் மேலானவர் என்றும்,

தனது வழியை ஆயத்தம் செய்ய வந்தவர் என்றும்,

பெண்களிடம் பிறந்தவர்களுள்   அருளப்பருக்கு மேலானவர் யாருமில்லை என்றும்

பெருமையாக பேசிவிட்டு அடுத்து அவர் சொன்ன வாக்கியம் நமது கவனிப்பிற்கு உரியது.

"ஆயினும் கடவுளுடைய அரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்."

இறை அரசுக்குள்  நுழைய தாழ்ச்சி (humility) எவ்வளவு அவசியம் என்பதை இயேசு அடிக்கடி வலியுறுத்தி கூறுவார்.

தாழ்ச்சியின்   மகத்துவத்தை வலியுறுத்த இந்த சந்தர்ப்பத்தை இயேசு பயன்படுத்திக் கொள்கிறார்.

இயேசு பெண்ணின் வயிற்றிலிருந்துதான் பிறந்தார்.

அவரே அருளப்பரை  ''பெண்களிடம் பிறந்தவர்களுள் அருளப்பருக்கு மேலானவர் யாருமில்லை."

என்று தன்னை விடவே உயர்த்தி பேசிவிட்டு அடுத்து,

"ஆயினும் கடவுளுடைய அரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்."

என்று சொல்வது

 நாம் எந்த அளவிற்கு ஆன்மீக வாழ்வில் தாழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துவதற்காகத் தான்.

லூசிபெரை சாத்தானாக்கியது எது?

தற்பெருமை ( Pride)

அன்னை மரியாளை விண்ணுலக மண்ணுலக அரசியாக்கியது எது?

தாழ்ச்சி (humility)

விண்ணையும் மண்ணையும் படைத்த படைத்த எல்லாம் வல்ல கடவுளின் தாயாகும் பாக்கியம் கிடைத்த உடனே அவள் சொன்னது,

"இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்."

சமூகத்தில் மிகத் தாழ்ந்த நிலை அடிமையாக இருப்பதுதான்.

அடிமை நிலைக்கு தன்னை தாழ்த்தி கொள்ளக்கூடிய குணம் இருந்ததால்தான் அவள் இறைவனின் அன்னையாகும் பாக்கியம் பெற்றாள்.

கடவுளுடைய அரசில் மிகச் சிறியவளாக தன்னை தாழ்த்திக் கொண்டதால்தான் விண்ணக , மண்ணக அரசியானாள். 

தாழ்ச்சி புண்ணியங்களின் அரசி என்று கருதப்படுகிறது.

Humility is the queen of all the virtues.

இறைமகன் தன்னைத்தானே தாழ்த்தி மனிதனாகப் பிறந்தார்.

தான் இறக்கும் போது இரண்டு திருடர்களுக்கு மத்தியில் சிலுவையில் அறையப்பட்டு   மரிக்க சித்தமானார்.

வெளிநாட்டிலிருந்து அவரை அறியாத ஒருவன் அந்நேரம் அந்த வழியே செல்ல நேர்ந்தால் அவரைப்பற்றி என்ன நினைத்திருப்பான்?

மூவரையுமே திருடர்கள் என்றுதான் நினைத்திருப்பான்.

அத்தகைய அவமானத்தோடு மரிக்க வேண்டும் என்பதையே தனது சித்தமாக இயேசு கொண்டிருந்தார்.

அவரது பாடுகளும் சரி, மரணமும் சரி அவராகவே தேர்ந்து கொண்டவை.

கடைசி இரவு உணவின்போது ஒரு அடிமையைப்போல் தனது சீடர்களின் பாதங்களைக் கழுவினார்.

இயேசுவின் பொது வாழ்வின் போது எப்போதும் அவரை சுற்றியே இருந்தவர்கள் இரண்டு வகையினர்:

1.தங்களை நோயாளிகள் என்று ஏற்றுக்கொண்டு  குணம் பெற அவரிடம் வந்தவர்கள்.

தாழ்ச்சியுடன் தங்களைப்  பாவிகள் என்று  ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பு பெற அவரிடம் வந்தவர்கள்.

நோயாளிகள் குணம் பெற்றார்கள்,
 பாவிகள் மன்னிப்பு பெற்றார்கள்.

2.தங்களைப் பற்றி   தாங்களே பெருமையாக நினைத்துக்கொண்டு

 அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கவும் 

அவரை கொலை செய்யவும் வழி தேடிக் கொண்டிருந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் வல்லுநர்கள்.

கடைசியில் அவரை கொலை செய்தவர்களும் இவர்கள்தான்.

நாம் எந்தப் பக்கம்?

நாம் தாழ்ச்சியுடன் பாவிகள் பக்கம் நிற்போம்.

இயேசு உலகிற்கு வந்ததே நம்மைத் தேடித்தான்.

நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.


நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துவோம்.

பாவங்களை அறிக்கையிடுவோம்,

மன்னிப்பு கேட்போம்.

மன்னிப்புப்  பெறுவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment