"ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்: மடிந்துபோகிறோம்"
(மத்.8:25)
************************************
இயேசுவும், சீடர்களும். படகில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
கடலில் மாபெரும் கொந்தளிப்பு ஏற்படுகிறது.
படகுக்குமேல் அலைகள் எழுகின்றன.
'
.
இயேசு தூங்கிக்கொண்டிருக்கிறார்.
.
நாம் நற்செய்தி வாசிக்கும்போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளை வெறும் நிகழ்ச்சிகளாக வாசிக்கக் கூடாது.
அவை நமக்குத் தரும் செய்திகளாகத்தான் (Messages)
வாசிக்க வேண்டும்.
நமது வாழ்வில் பாவத்தை மட்டுமே நாம் திட்டமிட்டு செய்கிறோம்.
மற்ற எல்லா நிகழ்வுகளுமே இறைவனின் நித்திய கால திட்டத்தின்படியே (Eternal plan of God) நடக்கின்றன.
மனிதன் தன் சுய சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவம் செய்கிறான்.
இறைவன் மனிதனைப் பாவத்திலிருந்து மீட்கவும்,
அவனை விண்ணகப் பாதையில் வழிநடத்தவும்
அவனது மற்ற நிகழ்வுகளை அவரே திட்டமிடுகிறார்.
அவரது சர்வ ஞானத்தின் காரணமாக,
மனிதன் அவனது
சுதந்திரத்தை எப்போதெல்லாம் தவறாகப் பயன்படுத்துவான்
என அவருக்கு நித்திய காலமாகத் தெரியுமாகையால்,
அவனைத் திருத்துவதற்கான திட்டங்களையும் நித்திய காலமாகவே வகுக்கிறார்.
இயேசுவின் உலக வாழ்க்கையின்போது நடந்த ஒவ்வொரு நிகழ்வும் அவரது திட்டப்படியே நடந்தன.
அவர் சாப்பிடவும், தச்சுவேலை பார்க்கவும், தூங்கவும், புதுமைகள் செய்து வியாதிகளை குணமாக்கவும் மனிதனாகப் பிறக்கவில்லை.
அவர் பிறந்ததின் ஒரே நோக்கம் மனிதனைப் பாவத்திலிருந்து மீட்பது மட்டும்.
நம்மைப் பாவத்திலிருந்து மீட்கவே அவர் நற்செய்தியை அறிவித்தார், பாடுபட்டு சிலுவையில் மரித்தார்.
அவரது வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் ஒரு நற்செய்தியைச் சொல்லும்.
அவர் புதுமைகள் செய்து வியாதிகளைக் குணமாக்கியதும் மக்களது விசுவாசத்தை வளர்க்கத்தான்.
"எளிய மனத்தோர் பேறு பெற்றோர்." என்ற நற்செய்தியை நமக்கு வாழ்ந்து காண்பிக்கத்தானே
இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.
வாழ்வின் இறுதியில் அடக்கம் செய்யப்பட சொந்தத் கல்லறை கூட இல்லையே!
இயேசு சீடர்களோடு படகில் வரும்போது தூங்குகிறார்.
அவரது தூக்கம் சீடர்களுக்கும், நமக்கும் தரும் நற்செய்தி என்ன?
"குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம்?"
என்ற ஒரு வாக்கியம் இரண்டு செய்திகளைத் தருகிறது.
1. ஆழ்ந்த விசுவாசம்.
2. பயம் இல்லாமை.
இயேசுவின் சீடர்களாய் இருக்க வேண்டுமென்றால் ஆழ்ந்த விசுவாசம் வேண்டும்.
இயேசு கடவுள் என்று உறுதியாக விசுவசிக்க வேண்டும்.
"அங்கிருந்தவர்கள் வியந்து, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யார் ?" என்றனர்."
இயேசு சொந்தமாக படகு வைத்திருந்திருக்க மாட்டார்.
இராயப்பரும், அருளப்பரும் தங்கள் படகுகளை விட்டு விட்டுதான் இயேசுவைப் பின்பற்றினர்.
அப்படியானால் படகு ஏதாவது ஒரு படகோட்டிக்குச் சொந்தமாய்
இருந்திருக்க வேண்டும்.
'சீடர்கள்' என்று குறிப்பிடாமல்
'அங்கிருந்தவர்கள்' என்று குறிப்பிடப் பட்டிருப்பதால்
இயேசுவோடும், சீடர்களோடும் மற்றவர்களும் வந்திருக்க வேண்டும்.
சீடர்களுக்கு இயேசு கடவுள் என்பது தெரியும்.
ஆகவே அவரை 'ஆண்டவரே' என்று அழைத்தார்கள்.
அங்கிருந்தவர்கள் வியந்து, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே,
இவர் யார்?" என்றனர்."
"இவர் யார்?" என்று வியந்ததிலிருந்து அவர்களிடம் விசுவாசம் இல்லை என்பது தெரிகிறது.
சீடர்களுக்கு விசுவாசம் இருந்தது. ஆனால் குறைவாக
இருந்தது.
"குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம்?"
என்று இயேசு சீடர்களிடம் மட்டுமல்ல,
நம்மிடமும் கேட்கிறார்.
படகில் இயேசு கடவுள் என்பதை அறிந்திருந்த சீடர்களும்,
"இவர் யார்?" என்ற கேட்ட
மற்றவர்களும் இருந்தார்கள்.
சீடர்களிடம் விசுவாசம் இருந்தும் குறைவாக இருந்ததால் விசுவாசம் இல்லாதவர்களைப் போல பயந்தார்கள்.
குறைவாகவாவது விசுவாசம்
இருந்ததால்தான்,
"ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்:" என்று கத்தினார்கள்.
இயேசு அவர்களுடைய அற்ப விசுவாசத்தைக் கடிந்து கொண்டார்.
இன்று நமது நிலையும் சீடர்களின் நிலையைப் போலிருக்கிறது.
நம்மிடமும் விசுவாசம் இருக்கிறது, ஆனால் போதிய அளவு இல்லை.
நம்மோடு விசுவாசம் இல்லாத பிற மக்களும் இருக்கிறார்கள்.
இன்றைய காலக் கட்டத்தில் அன்றைக்கு கடல் கொந்தளித்தது போலவே
உலகமும் பிரச்சனைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இக்கொந்தளிப்பில் விசுவாசம் உள்ள நாமும்,
விசுவாசம் அற்றவர்களும்
ஒரே மாதிரி எதிர்வினை (Reaction) ஆற்றுகிறோமா?
நாம் விசுவாசம் உள்ளவர்களாக எதிர்வினை ஆற்றுகிறோமா?
ஒரு குழந்தை தன் தாயின் இடுப்பில் இருந்து கொண்டு போகிறது.
இன்னொரு குழந்தை தனியே போகிறது.
எதிரே ஒரு நாய் வருகிறது.
இரண்டு குழந்தைகளின் எதிர் வினையும் எப்படி இருக்கும?
தனியே போகும் குழந்தை பயந்து கூப்பாடு போடும்.
தாயின் மடியிலுள்ள குழந்தை பயப்படாது, தாயை இறுகப் பற்றிக் கொள்ளும்.
விசுவாசம் உள்ள நாம் என்ன செய்கிறோம?
என்ன பிரச்சனையாக இருந்தாலும்
அதிலிருந்து விடுதலை பெற நமக்கு உரிமை இருக்கிறது.
தீர்வு காண என்ன முயற்சி எடுத்தாலும்,
இறைவன் நம்மோடு இருந்து நமக்கு உதவுவார் என்ற
ஆழமான விசுவாசத்தோடு அவரிடம் செபிக்க வேண்டும்.
தீர்வு எதுவாக இருந்தாலும் இறைவன் சித்தத்தை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
என்ன நேர்ந்தாலும் நன்றி கூறும் அளவிற்கு நமது மனது பக்குவப் பட்டிருக்க வேண்டும்.
இயேசு நமது பிரச்சனையை கட்டாயம் நமக்குச் சாதகமாகவே தீர்த்து வைப்பார்.
"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்."
என்று ஒரு பாடல் வரி உண்டு.
நம்பிக்கையோடு செபித்தால்,
என்ன நடந்தாலும் நல்லதுதான் என்று ஏற்றுக்கொள்வோம்.
படகில் இயேசு தூங்கியதிலிருந்து நாம் இன்னொரு பாடமும் கற்றுக் கொள்ள வேண்டும்.
இயேசு தூங்குவதற்காகப் படகில் ஏறவில்லை.
அவர் கடவுள்.
சீடர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காகவே அவரே கடலைக் கொந்தளிக்கச் செய்திருக்க வேண்டும்.
(அவனன்றி அணுவும் அசையாது, காற்று மட்டும் அசையுமா?)
அதற்காகவே அவர் தூங்கியிருக்க வேண்டும்.
காற்று வீசாமலும்,
அவர் தூங்காமலும் இருந்திருந்தால் சீடர்கள் ஏதாவது பேசிக்கொண்டு
இருந்திருப்பார்கள்.
தூக்கத்தின் காரணமாகவும், காற்றின் காரணமாகவும்தான்
அவர்கள் இயேசுவை நோக்கி செபித்தார்கள், விசுவாசம் பற்றியும் கற்றுக் கொண்டார்கள்.
"நான் உங்களோடு வரும்போது நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்?
நான் சர்வவல்லப கடவுள் என்ற விசுவாசம் இருந்தால்
உங்களுக்குப் பயம் வருமா?
என் மீது முழுமையான விசுவாசம் வையுங்கள் .
உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது."
என்றும்,
இன்னும் அதிகமாகவே அவர்களுக்குப் அறிவுரை கூறியிருப்பார்.
இது ஒரு செயல் முறைப் போதனை.
நமது வாழ்விலும் கூட, நம்மை அவரை நோக்கி ஈர்ப்பதற்காகவே,
நமது வாழ்வில் அவர் பிரச்சனைகளை அனுமதித்து விட்டு
அவர் கவனியாதது மாதிரி இருப்பார்.
நாம் அவரை உதவிக்கு அழைப்போம்.
அழைக்கும்போதுகூட, நம்மை கவனியாதது மாதிரி இருப்பார்,
ஆனால் கவனித்துக் கொண்டு தான் இருப்பார்.
இது நம்மை விடாமல் செபிக்க வைப்பதற்காகவும்,
அவரின்றி நம்மால் எதையும் செய்ய முடியாது என்பதை நாம் உணரும்படியாகத்தான்.
நாம் முதலில் ஆழமான விசுவாசம் வேண்டி செபிக்க வேண்டும்.
நமது விசுவாசத்தை அவர் ஆழப்படுத்துவார்.
ஆழமான விசுவாசத்தோடு செபிக்கும்போது
நாம் கேட்டது கிடைக்கும்.
ஆக, இந்த படகு நிகழ்விலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள்:
1. நமக்கு ஆழமான விசுவாசம் வேண்டும்.
2. இடை விடாது செபிக்க வேண்டும்.
3. எப்போதும் கடவுள் நம்மோடு இருப்பதால், பிரச்சனைகளைக் கண்டு பயப்படக்கூடாது.
4. என்ன நடந்தாலும கடவுள் திட்டப்படி நமது நன்மைக்காகவே நடக்கும்.
விசுவசிப்போம்,
வெற்றி பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment