ஞானம் இல்லாத அறிவு ஆபத்தானது.
*********************************
இறைவன் இயற்கையை முதலில் படைத்துவிட்டு இறுதியில் அதை ஆள்வதற்காக மனிதனைப் படைத்தார்.
"அவன் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், மிருகங்களையும், பூமி முழுவதையும், பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும் ஆளக்கடவன் என்றார்." (ஆதி. 1:26)
மனிதனைத் தவிர அனைத்து உயிர் வாழ்வனவும் தங்களது உள்ளுணர்வினால் (Instinct) இயங்குபவை.
அவற்றை ஆளப் படைக்கப்பட்ட மனிதனுக்கு மட்டும் 'புத்தியை'க் (intellect) கொடுத்திருந்தார்.
புத்திக்கு மட்டும்தான் சிந்திக்கத் தெரியும்.
புத்தியிலிருந்து பிறந்தது அறிவு. (Knowledge)
வாழ மட்டும் பிறந்தவை பிராணிகள்.
வாழவும்,
தன்னையும், உலகையும் ஆளவும் பிறந்தவன் மனிதன்.
வாழ மட்டும் பிறந்த பிராணிகள், அவை எப்படி வாழ வேண்டும் இறைவன் படைத்தாரோ அப்படியே, கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல்
வாழ்ந்தன, வாழ்கின்றன, வாழும்.
ஆனால்
மனிதன் இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரமாகிய புத்தியையும், அதன் மூலம் பெற்ற அறிவையும்
சரியாகப் படுத்தாததால் அவனது வாழ்க்கையும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை.
இறைவன் கொடுத்த புத்தியைக் கொண்டு
ஆள்வதற்காக தன் வசம் ஒப்படைக்கப்பட்ட இயற்கையைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறான்.
அந்த அறிவைக் கொண்டு அவன் இயற்கையை ஆளவில்லை, அழித்துக் கொண்டிருக்கிறான்.
இயற்கையை அழித்து தான் வாழ்வதாக நினைத்துக் கொண்டு
தன்னையும் அழித்துக் கொண்டிருக்கிறான்.
புத்தி இருந்தும், அறிவு இருந்தும் அவற்றின் உதவியால் மனிதன் அழிவுப்பாதையில் செல்லக் காரணம் என்ன?
இறைவன் அவனுக்கு பரிசாக அளித்த மற்றொரு வரத்தை அவன் பயன்படுத்தாததுதான் காரணம்.
கார் ஓட்டுபவன் பிரேக்கை மட்டும் பயன்படுத்தாமல் ஓட்டினால் என்ன ஆகும்?
அறிவை சரியாகப் பயன்படுத்த இறைவன் கொடுத்த வரம் 'ஞானம்'. (Wisdom)
தன்னிடம் உள்ள அறிவை பயனுள்ள முறையில் எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்த ஒருவருக்கு கிடைத்துள்ள வரமே ஞானம்.
கத்தி வெட்டுவதற்கு பயன்படும் என்று தெரிந்து கொள்வது அறிவு.
அதை கொண்டு எதை வெட்ட வேண்டும், எப்படி வெட்ட வேண்டும், எப்போது வெட்ட வேண்டும், எப்படி பயனுள்ள முறையில் வெட்ட வேண்டும்,
எப்படி எப்படி வெட்டினால் என்ன என்ன விளைவு ஏற்படும்
என்றெல்லாம் தெரியவைப்பது ஞானம்.
ஞானம் உள்ளவன் குறைந்த அறிவைக்கொண்டு நிறைய சாதிப்பான்.
ஞானத்தின அளவிற்கு ஏற்ப, சாதனையின அளவும் இருக்கும்.
ஆனால் ஞானமே இல்லாதவனிடம்
எவ்வளவு அறிவு இருந்தாலும் அவனது சாதிப்பில்
ஆக்கத்தை விட அழிவே அதிகம் இருக்கும்.
பரிசுத்த ஆவியின் முக்கியமான வரம் ஞானம்.
ஆவியின் வரங்கள் ஏழில் முதலில் வருவது ஞானம்.
ஞானம் இல்லாதவனிடம் புத்தியும், அறிவும் இருந்தும் பயன் இல்லை.
கத்தி பயன் உள்ள பொருள்தான். அது இல்லாமல் உணவு தயாரிக்க முடியாது. ஆனால் அதைப் பயன்படுத்தத் தெரியாதவன் கையில் அது அகப்பட்டால்?
காய்கறி வெட்டுவதாக நினைத்துக் கொண்டு அவன் விரலை வெட்டிக் கொள்வான்.
துப்பாக்கி பிடிக்கத் தெரியாதவன் கையில் அதைக் கொடுத்தால்,
அதை மாற்றிப் பிடித்துக் கொண்டு
எதிராளியைச் சுடுவதாக நினைத்துக் கொண்டு தன்னையே சுட்டுக் கொள்வான்.
நமது ஆன்மீக வாழ்வில் இறைவார்த்தையை அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் அதை ஞானத்தோடு அறிந்து கொள்வது.
பைபிள் அறிவு நமக்கு மீட்பைத் தராது.
அறிந்ததின் பொருள் அறிய ஞானம் வேண்டும்.
பொருள் தெரிந்தால் மட்டும் போதாது, அதன்படி நடக்க வேண்டும்,
அதற்கும் போதிய ஞானம் வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில்
பைபிளுக்கு விரோதமாக நடப்பவர்களுள் அநேகம்பேர்
பைபிள் அறிவை நிறைய பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.
ஒரு கணக்குக்கு ஒரு விடை தான் இருக்க முடியும்.
ஒரு வசனத்திற்கு ஆயிரக்கணக்கானோர் ஆயிரக்கணக்கான எதிர் எதிர் விளக்கங்கள் கொடுப்பதால் தான்
ஒரே கிறிஸ்துவை ஆயிரக் கணக்கான எதிர்த்திசைகளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
திவ்ய நற்கருணையில் இயேசு தனது ஆன்ம சரீரத்தோடு உண்மையிலேயே இருக்கிறார் (really present)
என்னும் உண்மையை நிரூபிக்க நாம் காட்டும் அதே வசனத்தைத்தான்
அதை மறுப்பவர்களும் காட்டி இஸ்டம் போல் விளக்கம் கொடுக்கிறார்கள்.
இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக இயேசு நியமித்தார் என்பதை விளக்கும் வசனத்திற்கு
எதிர்மாறான விளக்கம். கொடுக்க ஆயிரம்பேர்
வருகிறார்கள்.
ஒரு நண்பர் சொல்கிறார்:
"மண்ணுலகில் ஒருவரையும் தந்தையென்று (father) கூறவேண்டாம். ஏனெனில், விண்ணுலகிலுள்ளவர் ஒருவரே உங்கள் தந்தை."
(மத்.23:9)
என்று பைபிள் சொல்கிறதே, நீங்கள் உங்கள் பங்குச்சாமியாரை எப்படி father என்று கூப்பிடலாம்?"
இப்படி எல்லாம் கேட்கக்
காரணம்? ஞானம் இன்மை.
ஆளுக்கொரு பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு,
அன்பையும், சமாதானத்தையும் போதித்த அதே கிறிஸ்துவின் பெயரால்
ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் என்ன அருத்தம்?
அவர்கள் ஞானத்தோடு பைபிள் வாசிக்கவில்லை என்று அர்த்தம்.
தீர்வை நாளில் நமக்கு
இயேசு பைபிளில் Written Test வைத்து மதிப்பெண் அடிப்படையில் தீர்ப்பிடமாட்டார்.
எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட விண்ணை நோக்கி நடை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஏனெனில் அவா்கள் அன்பை வாழ்ந்திருப்பார்கள்.
அறிவைப் பெற புத்தி இருந்தால் போதும்,
அறிவை வாழ ஞானம் வேண்டும்.
பைபிள் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டது.
பரிசுத்த ஆவியின் பெயரைச் சொல்லிக்கொண்டே
பைபிளுக்கு எதிரெதிர் பொருள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், பிரிந்து சென்றோர்.
"ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விக்கிறான். மதிகெட்ட மனிதன் தன் தாயை இகழ்கிறான்."
(பழமொழி.15:20)
இயேசு நிறுவிய தாய்த் திருச்சபையை விட்டு பிரிந்து சென்றவர்கள் சிந்திக்கவும்.
தாய்த் திருச்சபையின் வழி
நடத்துதலின்படி,
ஞானத்தோடு இறைவார்த்தையை வாசிப்போம்.
ஞானத்தோடு இறைவார்த்தையை வாழ்வோம்.
நிலைவாழ்வு பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment