Wednesday, June 17, 2020

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."(மத். 6:1)

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத். 6:1)
********************************
"அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக."
(மத். 5:16)

நமது செயல்கள் கடவுளின் முன் ஏற்புடையனவா என்று தீர்மானிப்பது

செயல்கள் அல்ல, அவற்றை நாம் செய்வதன் நோக்கமே (Intention)

என்பதைத்தான் மேற்குறிப்பிட்டுள்ள இறை வார்த்தைகள் விளக்குகின்றன.

மனிதர் பார்க்க வேண்டும் என்ற ஒரே  நோக்கத்திற்காக நற்செயல்களைச் செய்யக் கூடாது.

சுய விளம்பரத்திற்காகச் செய்யப்படும் எந்தச் செயலும் கடவுளுக்கு ஏற்புடையது அல்ல.

வானகத்  தந்தையை மகிமைப்படுத்துவதற்காக, நற்செயல்களை மனிதர்முன் செய்ய வேண்டும்.

கடவுளின் மகிமைக்காகச் செய்யப்படும் செயல்கள் மட்டுமே அவருக்கு ஏற்புடையவை.

 "என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மத்.10:42)

ஒரு சிறுவனுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தாலும்,

இயேசுவின் சீடன் என்பதற்காக,

அவரது மகிமைக்காகவே கொடுக்க வேண்டும்.

அப்படிக் கொடுத்தால்தான் விண்ணகத்தில் சன்மானம் உண்டு.

ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க.

ரொம்ப நல்ல பாட்டி.

எல்லோருக்கும் உதவி செய்வாங்க.

ஆனால் தான் செய்யும் உதவிகளுக்காக தன்னைப் பற்றியே பெருமையாகப் பேசிக் கொள்ளுவாங்க.

தன்னைப் புகழ்பவர்களுக்கு அதிகமாக உதவி செய்வாங்க.

ஒரு நாள் அவங்க இறந்து விண்ணகத்துக்குப் போனாங்க.

விண்ணக வாசலில இராயப்பர் கையில சாவிகளோடு உட்கார்ந்திருந்தார்.

"பாட்டி கொஞ்சம் நில்லுங்க."

"இராயப்பரே, ஏதாவது உதவி வேண்டுமா?"

"கேட்டதற்கு நன்றி. இங்கு உங்க உதவி யாருக்கும் தேவைப்படாது. ஆனால் பூலோகத்தில் நீங்க செய்த உதவிகட்கு இங்கு சன்மானம் உண்டு."

"அப்படியா? நான் பூலோகத்தில நிறைய உதவிகள் செய்திருக்கேன். எனக்குள்ள சன்மானங்கள் எல்லாம் எங்கே
இருக்கு?"

இராயப்பர் பாட்டி முன்னால ஒரு பானையை வைத்தார்.

"இராயப்பரே, இந்தப் பானையா எனக்குள்ள பரிசு?
பூமியில என்னுடைய வீட்ல நிறைய பானைகள் இருக்கே."

"பாட்டி, இனிமே பூமியில் உள்ளது உங்க வீடு இல்ல. மோட்சம்தான் உங்க வீடு."

"அது தெரியுது.  நான் எத்தனையோ பானைகள வேண்டியவங்களுக்கு உதவியா கொடுத்திருக்கேன்.

எனக்கு வேறு எதையாவது பரிசாகக் கொடுக்கக் கூடாதா?"

"அவசரப் படாதீங்க பாட்டி. இந்தப் பானை உங்களுக்கு இல்ல.

இதுக்குள்ள இருக்கிற ரோஜாப் பூக்கள எண்ணி, அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி உங்களுக்கு சன்மானம் தரப்படும்."

"புரியல."

"பாட்டி, இதுக்குப் பெயர் சன்மானப் பானை.  நீங்க பூமியில் செய்கிற ஒவ்வொரு உதவியும் ரோஜாப் பூவாக மாறி, இந்த பானைக்குள்ள வந்து விழுந்திருக்கும்.

அந்த பூக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி உங்களுக்கு இங்கே சன்மானம். புரியுதா?"

"நல்லாவே புரியுது. நிச்சயமா  எனக்கு பெரிய சன்மானமா கிடைக்கும். நான் பூமியில இருக்கும்போது இலட்சக் கணக்கா உதவிகள் செய்திருக்கேன்.

நான் ஒண்ணாங் கிளாஸ் படிக்கும்போதே எத்தனை சிலேட்டுக் குச்சி கொடுத்திருக்கேன் தெரியுமா?"

"அதெல்லாம் இப்போ பானையத் திறந்தா தெரியும்.''

"அப்போ உடனே பானையைத் திறங்க."

இராயப்பர் பானையைத் திறந்தார்.

பானை empty. உள்ளே ஒரு பூக்கூட இல்லை.

"இராயப்பரே, என்ன இது. நீங்க சொன்னபடி உள்ள இலட்சக்கணக்கா பூக்கள் இருக்கணுமே. உள்ளே ஒரு இதழ் கூட இல்லையே!"

பாட்டி அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு பானை பறந்து வந்து அருகில் அமர்ந்தது.

"பாட்டி, கொஞ்சம் பொறுங்க.

நீங்க பூமியில் செய்கிற ஒவ்வொரு உதவியும் பூவா பறந்து வந்து இந்த பானைக்குள்ள விழும்.

நீங்க அந்த உதவியை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தால் ஒரு பூ இரண்டாக மாறும்.

ஆனால் நீங்களே தற்பெருமை பாராட்டினா அந்த பூ பறந்து வந்து இந்த பானைக்குள்ள
விழுந்து விடும்.

ஆனால் அதற்கு சன்மானம் எதுவும் கிடையாது."

இராயப்பர் அடுத்த பானையைத் திறந்தார். பானை நிறைய பூக்கள்!

என்ன பயன்!

"பாட்டி, மோட்சத்துக்குள்ள போங்க. உங்களிடம் பாவம் இல்லை. ஆகையினால் அதற்குரிய பேரின்பம் உண்டு.

ஆனால் நீங்க செய்த உதவிகளுக்கு சன்மானம் எதுவும் இல்லை."

"பங்குச் சாமி அப்போவே சொன்னாரு, 'ஆண்டவருக்காக வாழுங்கள்' என்று.

நான்தான் புத்தி கெட்டுப் போனேன்.

மோட்சமாவது கிடைச்சுதே, ஆண்டவருக்கு நன்றி."

சொல்லிக்கொண்டே பாட்டி மோட்சத்திற்குள் நுழைந்தார்.

எல்லா பெற்றோரும்  தாங்கள் பெற்ற பிள்ளைகளை வளர்க்கிறார்கள்.

தங்கள் பிள்ளைகள் என்பதற்காக வளர்த்தால், அது சாதாரண உலகச் (Worldly) செயல்.

(குருவி கூட தன் குஞ்சுகளை வளர்க்கிறது.)

ஆனால் தாங்கள் வளர்ப்பதற்காக இறைவன் தந்த பிள்ளைகள் என்பதற்காக,

இறைவனுக்காக அவர்களை வளர்த்தால் அது ஆன்மீகச் (spiritual) செயல்.

இறைவனுக்காக வளர்த்தால் அவர்களை இறை பக்தியில் வளர்ப்போம்.

அவர்களது ஆன்மீகக் காரியங்களில் அக்கரை காட்டுவோம்.

இறையன்பில் வளரும் பிள்ளைகளுக்குதான் பெற்றோர் மீது உண்மையான அன்பு இருக்கும.

உத்தியோகம் பார்ப்பவர்களைப் பார்த்து,

"ஏன் வேலை பார்க்கிறீர்கள்?" என்று கேட்டால்

அவர்களிடமிருந்து வரும் பதில்,

"சம்பளத்திற்கு."

"எதற்குச் சம்பளம்?"

"குடும்பத்தைக் காப்பாற்ற."

உலக ரீதியான பதில்களில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால் வெறுமனே சம்பளம் வாங்கினாலும், குடும்பத்தைக் காப்பாற்றினாலும் ஆன்மீக ரீதியாக எந்த பயனும் இல்லை.

அதாவது நமது சம்பளமும் நமது குடும்பமும் நமக்கு நிலை வாழ்வைப் பெற்றுத் தரப்போவது இல்லை.

ஆனால் நமது நோக்கத்தை ஆன்மீகமாக மாற்றினால்

அவை நமக்கு நிலை வாழ்வைப் பெற்றுத் தரும்.

நமது நோக்கம் உலக வாழ்வை ஒட்டியதாக இருந்தால்

அதன் பயனும் இவ்வுலக வாழ்க்கையோடு முடிந்து விடும்.

ஆனால் நமது நோக்கம் இறைவனுக்காக இருந்தால்

  நமக்குக் கிடைக்கும் பயன் நித்தியமானதாக இருக்கும்.

ஏனெனில் நாம் யாருக்காக செய்கிறோமோ அவர் நித்தியர்.

ஆகவே நாம் பார்க்கும் வேலையையும்,.
நாம் வாங்கும் சம்பளத்தையும்,

  நமது குடும்பத்தையும் இறைவனுக்கே

ஒப்புக்கொடுத்து அதற்காக வாழ்ந்தால்,

வேலையைச் செய்வோம்,

சம்பளமும் வரும்,

  குடும்பமும் வளரும்

நிலைவாழ்வும் கிடைக்கும்.

நாம் இறைவனுக்காகச் செய்வதில் அவருக்கு எந்தவித பயனும் இல்லை.

முழு பயனும் நமக்கே கிடைக்கும்.

கரும்பும் கொடுத்து அதைத் தின்ன கூலியும் கொடுத்தால்

அதை வேண்டாம் என்று சொல்வது அறியாமை.

வாழ்வோம் ஒவ்வொரு விநாடியும் ஆண்டவருக்காக.

இணைவோம் அவரோடு நித்தியமாக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment