Saturday, June 13, 2020

உண்மையான கிறிஸ்தவஆன்மீகம் (genuine Christian Spirituality) எப்படி இருக்கும்?

உண்மையான கிறிஸ்தவ
ஆன்மீகம் (genuine Christian Spirituality) எப்படி இருக்கும்?
*********************************

ஆன்மீக வாழ்வு என்றாலே ஆன்மாவை சார்ந்த வாழ்வு என்பது புரிகிறது.

இது ஆன்மாவிற்காக வாழும் வாழ்வு,

அதாவது நமது ஆன்மா எந்த நோக்கத்தோடு படைக்கப் பட்டதோ,

 அந்த நோக்கத்திற்காக  நாம் வாழும்  வாழ்வு.

ஆன்மா படைக்கப்பட்டது நமது உடலுக்கோ,  உலகத்திற்கோ    சேவை செய்வதற்காக அல்ல.

இறைவன் ஒருவருக்கு பணி செய்வதே ஆன்மீக வாழ்வின் நோக்கம்.

இறைமகன் இயேசுவால் மீட்கப்பட்டு அவரது  வழிநடத்துதலின்படி செயல்பட்டுக் 'கொண்டிருப்பதால் நமது ஆன்மீகம் கிறிஸ்தவ ஆன்மீகம். 

நமது ஆன்மீகம் கிறிஸ்தவ ஆன்மீகத்தைப் போல தோற்றம் அளித்தால் மட்டும் போதாது

 உண்மையான கிறிஸ்தவ ஆன்மீகமாக இருக்க வேண்டும்.

 மாணவர்கள் ஒரு பள்ளியின் சீருடை அணிந்திருப்பதால் மாணவர்கள் போல தோற்றம் அளிப்பார்கள். 

ஆனால் தோற்றம் மட்டும் அவர்களை மாணவர்கள் ஆக்கிவிட முடியாது.

 அவர்கள் மாணவர்கள் செய்ய வேண்டிய கடமையை சீராக செய்தால்  மட்டும் உண்மையான மாணவர்கள் ஆவார்கள்.

 அதுபோல ஞானஸ்நானம் பெற்று, ஞாயிற்றுக் கிழமைகளில்

 கோவிலுக்குச் சென்று வருதால் மட்டும்  கிறிஸ்தவர்களாக முடியாது.

ஆன்மாவில் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள்.

 உண்மையான கிறிஸ்தவ
ஆன்மீகம் (genuine Christian Spirituality) எப்படி இருக்கும்?

1.உண்மையான விசுவாசம்.

உண்மையான விசுவாசம்தான் கிறிஸ்தவ ஆன்மீகத்தின் அடிப்படை.

விசுவாசம் விசுவாசப் பிரமாணத்தைச் சப்தமாகச் சொல்லுவதில் அடங்கியிருக்கவில்லை.

விசுவாச சத்தியங்களை வாழும்போது தான் நம்முடைய விசுவாசத்தின் அளவு நமக்கு தெரியும்.

ஒரு உதாரணத்தை எடுத்துத் கொள்வோம்:

' "பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்." .

ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லும் போதெல்லாம் இந்த
 விசுவாசப் பிரமாணத்தைச் சப்தமாக சொல்லுகிறோம்.


இதனால் கடவுளை
 நமது விண்ணகத் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம்.
 
அவர் சர்வவல்லவர் என்றும்
ஏற்றுக் கொள்கிறோம்.

 இந்த ஏற்பு வாயில் வார்த்தையாக மட்டும் இருக்கிறதா?

அல்லது வாழ்க்கையாகவும் இருக்கிறதா? 


ஒரு சாதாரண மனிதக் குழந்தை தாயின் கையில் இருக்கும்போது எதற்கும் அஞ்சுவதில்லை.

நாம் சர்வ வல்லப   கடவுளின் கையில் இருக்கிறோம் என்று தெரிந்தும்

 நாம் எத்தனை முறை என்ன பிரச்சனை வந்தாலும் பயந்து சாகிறோம்?

நமது தந்தை என்ன செய்தாலும் நமது நன்மைக்காகத்தான் செய்கிறார் என்று விசுவசித்தும்,

  நடப்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?

"நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்."

இறந்தபின் இறைவனோடு நிலைவாழ்வு நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று நாம் விசுவசித்தால் 

ஏன் இறக்க பபயப்படுகிறோம்?  

நம்முடைய விசுவாசம் உதட்டளவில்தான் இருக்கிறது, வாழ்வாக  இல்லை.

 விசுவாசம் வாழ்வாக மாறினால்தான் நமது ஆன்மீக வாழ்வு உண்மையான ஆன்மீக வாழ்வாக இருக்கும்.


விசுவாசம் இறைவனின் பராமரிப்பிலும் கட்டளைகளிலும் நம்பிக்கை கொள்ள செய்யும்.
-
உண்மையான கிறிஸ்தவ ஆன்மிகத்தின் ஆரம்பமும் வழிநடத்துவதும் விசுவாசம் தான்.

 நம்மிடம் உண்மையான விசுவாசம்  இருந்தால்

இறைவனின் பரமரிப்பில் நமக்கு இருக்கும் நம்பிக்கை

 எதிர்காலத்தின் மட்டில் நம்மிடம் உள்ள பயத்தை எல்லாம் அகற்றிவிடும்.

நமது ஆன்மீகப் பயணத்தை விசுவாசம் தந்த தன்னம்பிக்கையோடு தொடர்வோம்.

2. உண்மையான கிறிஸ்தவம் தூய்மையான இதயத்தில் ஆரம்பிக்கிறது.

 இதயம் அன்பின் இருப்பிடம், அதாவது நமது மீட்பராகிய இயேசுவின் இருப்பிடம்.

இயேசு  தூயவர், ஆகவே அவர் வாழும் நமது இருதயமும் தூய்மையின் இருப்பிடமாக இருக்க வேண்டும்.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்." (மத். 5:8)

பாவம் இல்லாத இதயம் தூய இதயம்.

ஆனாலும் நமது ஆன்மீக வாழ்வு தூய்மையான இதயத்தோடு நின்று விட கூடாது.

இதயத்தை தூய்மைப் படுத்துவதோடு நின்றுவிடுவது

 விவசாயி நிலத்தை பண்படுத்துவதோடு நின்றுவிடுவதற்குச்  சமம்.

 பண்படுத்தப்பட்ட நிலத்தில் பயிர் செய்யவேண்டும்.

 பயிர் செய்யாவிட்டால் பண்படுத்தியதால் மட்டும் விவசாயிக்கு என்ன ஆதாயம்?

அன்பு இரக்கம் (mercy) உள்ளது.

இரக்கம் இறை மகனையே பூமிக்கு இழுத்து வந்தது.

இரக்கத்தைச் செயலில் காட்டவே இறைமகன் மனிதன் ஆனார்.

நாம் அவரது சீடர்கள்.

  நமது இரக்கமும் செயல் வடிவம் பெற வேண்டும்.

இதயத்தில் உள்ள அன்பு இரக்கச் செயல்களாக (deeds of mercy) வெளிப்படும் போது தான் 

நாம் இயேசுவின் சீடர்களாகச் செயல்படுகிறோம்.

  இயேசு ஒரு செயல்வீரர்.

 போதனையாளர் மட்டுமல்ல, சாதனையாளர்.

 நாமும் கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள் என்றால்  

அவரை போலவே
நமது அன்பை இரக்கச் செயல்களாக மாற்ற வேண்டும்,

"எங்கள் வீட்டில் மின்சாரம் இருக்கிறது, ஆனால் bulb எரியாது, T.V. ஓடாது, fan சுற்றாது, மோட்டார் ஓடாது" என்றால் எப்படி?

மின்சாரம் இருந்தும்
பயனில்லை.

இரக்கச் செயல்கள் இல்லாத ஆன்மீகம்

பயன்படுத்தப்படாத மின்சாரம்,

 பயிரிடப் படாத நிலம். 

உள்ளத்தில் விசுவாசம் இருக்கலாம். நிறைய பைபிள் அறிவும் இருக்கலாம். தியானம், செபம் இருக்கலாம்.

ஆனால் செயல் இல்லாத ஆன்மிகம் உயிரில்லாத உடல்.

 எந்த அளவிற்கு நமது ஆன்மா இரக்கச் செயல்களில் ஈடுபடுகிறதோ அந்த அளவிற்கு நமது ஆன்மீகம் உண்மையான கிறிஸ்தவ ஆன்மீகமாக இருக்கும். 

பசித்தோருக்கு உணவு கொடுத்தல்,

உடை அற்றோருக்கு உடை கொடுத்தல்,

 நோயாளிகளைச் சந்தித்தல்,

 தேவைப் படுவோருக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுதல்,

அழுவோருக்கு ஆறுதல் கூறுதல்

இவை  நாம் செய்யக்கூடிய இரக்கச் செயல்களில் சில.



 3. நமது ஆன்மீகத்திற்கு உயிர் கொடுப்பது கடவுளின் அருள்.

இயேசுவின் அருளால்  உந்தப்பட்டு நடை போடும் ஆனமீகமே உண்மையான  கிறிஸ்தவ ஆன்மீகம்.

இருட்டான இடத்தில் ஒளி 
பரவும்போதுதான் எந்த எந்த பொருள் எங்கெங்கு  இருக்கிறது என்பது  நமக்குத் தெரியவரும்.

ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான என்னென்ன ஆற்றல்கள் நமது இதயத்தில் இருக்கின்றன என்பதை இயேசுவின் அருள் தான் நமக்கு தெரியவைக்கும்.

அந்த ஆற்றல்களுக்கு உயிர் கொடுத்து செயல்பட வைப்பதும் இறையருள்தான்.

இறைவனுடைய அருள்தான் பாவ வாழ்க்கையிலிருந்து

 கிறிஸ்துவின் போதனையின் அடிப்படையிலான வாழ்க்கையைப் பிரித்து காட்டுகிறது.

 எப்படி வாழ்வது கிறிஸ்துவுக்கு  ஏற்ற வாழ்வு என்பதை நமக்கு புரியவைக்கிறது.

இறையருள் நம்மை நமது ஆன்மீக தூக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறது.

பாவ வாழ்க்கையின்போது நாம் பின்பற்றிய விழுமியங்கள் (values) வெறுமை ஆனவை, (empty) வீணானவை (Vain)
 பொருளற்றவை (meaningless) என்பதை புரியவைக்கிறது.


அறிவைத் தேடுவதும்,
 உணவை தேடுவதும்,
வசதியான வாழ்க்கையை தேடுவதும்,

 தன்னிலேயே கெட்டவை அல்ல.

 அறிவு இல்லாமலும், உணவு இல்லாமலும், வசதி இல்லாமலும் யாராலும் வாழ முடியாது.

ஆனால் இறை அன்பையும் புண்ணிய வாழ்வையும் தியாகம் செய்துவிட்டு 

இவற்றின் பின்னால் சென்றால்

அதாவது, இறைவனை ஒதுக்கி விட்டு
அறிவுக்காகவும், உணவுக்காகவும், வசதிக்காகவும் மட்டும் வாழ ஆரம்பித்தால்

இவை கடவுளின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

அதாவது  இவைகள் கடவுளுக்குப் பதிலாக நாம் ஆராதிக்கும் விக்கிரகங்களாக மாறிவிடுகின்றன.

நாம் கிறிஸ்துவில் வாழாதபடி நம் கைகளில் விலங்கு மாட்டி  விடுகின்றன.

 நாம் கிறிஸ்துவிடம் போகாதபடி  நம்மை தங்களோடு சங்கிலிகளால்  கட்டிப்போட்டு விடுகின்றன.

 ஆகவே எந்த உலகம் சம்பந்தப்பட்ட பொருளையும்

 இயேசுவுக்காக, 

இயேசுவின் மகிமைக்காக,

 நற்செய்தியைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தினால் 

அவை நமது நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவியாய் இருக்கின்றன.

வெறும் உலக இன்பத்திற்காகப் பயன்படுத்தினால்  அவை 
ஆன்மீக வாழ்வுக்கு எதிரானவை.

If we use material things for the glory of God, our spirituality is genuine.


But, if we use them at the expense of God, we have no spirituality.

வாழ்வாக மாறும் விசுவாசம்,

நமது அயலானுக்கு நாம் செய்யும் இரக்கச் செயல்கள், நம்மை வழிநடத்தும் இறை அருள் ஆகியவையே நமது ஆன்மீகத்தை உண்மையான கிறிஸ்தவ ஆன்மீகமாக மாற்றுகின்றன.

லூர்து செல்வம். 



No comments:

Post a Comment