Wednesday, June 3, 2020

"காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மாற்கு 12:43)

"காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
 (மாற்கு 12:43)
********************************

நாமே நமக்குச் சொந்தமில்லை.

இறைவன் நம்மைப் படைக்கு முன் நாமே இல்லை.

இல்லாதிருந்த நம்மைப் படைத்த கடவுளுக்குத்தான் நாம் முழுவதும் சொந்தம்.

நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்துப் பொருள்களும்

 நமது உடல் உட்பட 

நம்மைப் படைத்த கடவுளுக்கே சொந்தம்.

நமது வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் சொந்தமில்லாததைச் சொந்தம் பாராட்டுவதும்,

சொந்தக்காரர் அதைக் கேட்கும்போதோ, 
கேட்காமலே எடுக்கும்போதோ
நாம் வருத்தப்படுவதுதான்.

யோபுவைப்போல,

"ஆண்டவர் அளித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார்: ஆண்டவரின் திருப்பெயர் வாழ்த்தப்பெறுக!"
(யோபு.1:21)

புனித சின்னப்பரை போல,

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்." (1 தெசெ.5:18)

என்ற மனப் பக்குவத்துடன் இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சிக்குக் குறையே இருக்காது,

இயேசு ஆலயத்தில் காணிக்கைப் பெட்டிகளுக்கு எதிரே அமர்ந்து, 

மக்கள் அவற்றினுள் காசு போடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

 பணக்காரார் பலர் அதிகம் போட்டார்கள்.

ஏழைக் கைம்பெண் ஒருத்தி வந்து   இரண்டு  செப்புக் காசுகள் போட்டாள்.


இயேசு சீடர்களிடம்,

"காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள்."
என்றார்.

கோவிலில் காணிக்கை போடுவதிலும், ஏழைகளுக்கு கொடுத்து உதவுவதிலும் 

மனிதனுடைய கணக்கு வேறு, கடவுளுடைய கணக்கு வேறு.

மனிதன் தொகையை வைத்து கணக்கிடுகிறான்.

கடவுள் மனதை வைத்துத் தீர்மானிக்கிறார்.

பங்குக் குரு கோவில் கட்டட நிதிக்கு நன்கொடை வசூலிக்கிறார்.

கோடிக் கணக்கில் வருமானம் வரும் தொழில் அதிபர். ஒருவர் 10,000 ரூபாய் கொடுக்கிறார்.

தினக்கூலிக்கு வேலைக்குப் போகும் ஒருவன் 300 ரூபாய் கொடுக்கிறான்.

10,000 ரூபாய் கொடுத்தவன் பெயர் கோவில் சுவரில் எல்லோரும் பார்க்கும் இடத்தில் பொறிக்கப் பட்டிருக்கும்.

300 ரூபாய் கொடுத்தவன் பெயர் நன்கொடை வரவு செலவு கணக்கு நோட்டில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும்.

பத்தாயிரம் ரூபாயை மனிதன் வாசிப்பான்.

முந்நூறு ரூபாயை கடவுள் மனதில் வைத்திருப்பார்.
அவன் அன்றைய வருமானத்தையே முழுவதும் கொடுத்து விட்டான்.

எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியம் அல்ல.

 என்ன மனப் பக்குவத்தோடு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

தனக்குப் போகத் தானம் கொடுப்பவன் கடவுளைவிட  தன்னையே அதிகம்  நம்புகிறான்.

ஏனெனில் முழுவதையும் கொடுத்துவிட்டால் நாளைக்கு நமக்கு வேண்டியதைக் கடவுள்  தருவாரோ மாட்டாரோ,

நாம்தான் நம்மையே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவன் நினைக்கிறான். 

  தன்னிடம் உள்ளதை முழுவதும் கொடுப்பவன் தன்னைவிட இறைவனை அதிகம் நம்புபவன். 

 அன்றன்றுள்ள அப்பத்தை இறைவன் அன்றன்றைக்கு  தருவார் என்று நம்புகிறான்.

நமது தினசரி கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லும்போது அந்த நம்பிக்கையைத்தானே வெளிப்படுத்துகிறோம்.

 நமது நம்பிக்கையை வெறும் வார்த்தையால் வெளிப்படுத்தினால் போதாது.

 முழு மனதுடன் வெளிப்படுத்த வேண்டும்.

 தன் பிள்ளைகளை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று நம் தந்தைக்கு நம்மை விட நன்றாகவே தெரியும்.

இறைவன் தன்னை முழுவதும் நமக்குத் தந்திருக்கிறார்.

நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கடவுள் முழுமையாக இருக்கிறார்.

 நம்மை ஒவ்வொரு வினாடியும் முழுமையாகக்
 கவனிக்கிறார்.

நாம் அவருடைய முழு பாதுகாப்பில் இருக்கிறோம்.

அவரை முழுமையாகப் பயன்படுத்தும் நாம் 

நம்மை முழுமையாக அவருக்கு கொடுக்கிறோமா?

ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும், ஒவ்வொரு வினாடியும் நம்மை கவனித்து பாதுகாத்து வரும் நம் கடவுளுக்கு

 நாம் நம்மை முழுமையாக கொடுக்கிறோமா?

யாரோ கேட்கும் கேள்வி காதில் விழுகிறது.

" 24 மணி நேரமும் செபம்  செய்துகொண்டே இருக்க வேண்டுமா?"

 "ஆம், 24 மணி நேரமும் நாம் செபித்துக் கொண்டிருக்க வேண்டும். இறைவன் அதைத்தான் விரும்புகிறார்."

" அது எப்படி 24 மணி நேரமும் செபிக்க முடியும்?"

 "வெகு எளிது. 

செபம் என்றால் என்ன?

 இறைவனோடு ஒன்றித்து இருத்தல். 

இறைவனுக்காக ஒவ்வொரு வினாடியும் செயல்படுதல்."

"24 மணி நேரமும் இறைவனுக்காக செயல்பட முடியுமா?"

 "முடியும். காலையில் எழுந்தவுடன்,

" இறைவா, இன்றைய நாளில்

 நான் நினைக்கும் நினைவுகள் 

சொல்லும் வார்த்தைகள் 

 செய்யும் செயல்கள் அத்தனையும் உமக்கு ஒப்புக்கொள்கிறேன்." 

என்று ஒப்புக்கொடுத்து அந்த நாளை ஆரம்பித்தால்

 நாள் முழுவதும் செபம்தான்,

 நமது ஒவ்வொரு செயலும் மூச்சு உட்பட செபமாக மாறிவிடுகிறது.

நம்மில் பலர் நினைக்கிறோம்,

 வார்த்தைகளைக் கொண்டு  செபிப்பது தான் செபம் என்று.

இறைவனுக்காக வாழ்வதுதான் செபம்.

இறைவனது பிள்ளைகளுக்காக வாழ்வது இறைவனுக்காக வாழ்வதுதான்.

 நாமும் இறைவனது பிள்ளைகள்தான்.

நம்மை நாம் கவனித்துக் கொள்ளும் போதும் இறைவனது பிள்ளைகளைத் தான் கவனிக்கிறோம்.

தன்னை நேசிக்காதவனால் பிறரை நேசிக்க முடியாது.

 ஆகவேதான் இயேசு சொன்னார்,

" உன்னை நீ நேசிப்பது போல உன் அயலானையும் நேசி."

நாம் உண்பதும் செபம், பிறருக்கு உணவு கொடுப்பதும் செபம்.

நாம் வாழ்வதும் செபம்,
பிறரை வாழ வைப்பதும் செபம்.

அன்னை மரியாளை
 முன் மாதிரிகையாக எடுத்துக் கொள்வோம்.

அவள் வாழ்ந்தாள், இயேசுவுக்காக.

அன்னைத் தெரசாள் வாழ்ந்தாள், நோயாளிகளுக்காகவும், ஏழை களுக்காகவும்.

குழந்தை பெற்றெடுத்த தாய் நன்றாகச் சாப்பிடுகிறாள், தன் பிள்ளைக்கு நிறைய பால். கிடைக்க வேண்டுமென்பதற்காக.

ஆசிரியர் நிறைய. படிக்கிறார், மாணவர்களுக்குப் போதிப்பதற்காக.

விபசாயி கஸ்டப்பட்டு விளைய வைக்கிறான், உலகோருக்கு உணவு கொடுப்பதற்காக.

பங்குக் குருவானவர் நம்மிடையே உழைக்கிறார், நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்வதற்காக.

 இரண்டு  செப்புக் காசுகளைக் காணிக்கையாகப்  போட்ட ஏழைக் கைம்பெண் பற்றி
இயேசு சொல்கிறார்:

"இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும்,

 தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்"

1.அவள் ஒரு கைம்பெண். கணவன் இல்லாததால் ஆதரவு அற்றவள்.


2. அவள் வறுமையால் வாடும் ஒரு ஏழை.

3. கையில் இருந்ததை எல்லாம் போட்டு விட்டதால் பிழைப்புக்காக அவளிடம் ஏதும் இல்லை.

இந்தச் சூழ் நிலையிலும் அவளைக் காணிக்கை போட வைத்தது எது?

திடீரென்று அபிரகாம் நினைவுக்கு வருகிறார்.

யார் மூலமாக அபிரகாமுக்கு ஒரு பெரிய சந்ததியைக் கொடுக்க கடவுள் வாக்களித்தாரோ அதே மகனை தனக்குப் பலியிடச் சொல்லுகிறார்.

அபிரகாமும் கொஞ்சம் கூட தயங்காமல் அவனைப் பலியிட அழைத்துச் செல்லுகிறார்.

அவரை அப்படிச் செய்யத் தூண்டியது எது?

கடவுள் மேல் இருந்த அசைக்க முடியாத விசுவாசம்.

கடவுள் தன் வாக்குறுதியை மீற மாட்டார் என்ற அசைக்க முடியாத விசுவாசம்!

அதே விசுவாசம்தான் இந்த ஏழைக் கைம்பெண்ணுக்கு இருந்திருக்க வேண்டும்.

அவள் காணிக்கை போட்டது கடவுளுக்கு.

1. உலகில்  ஆதரவு இல்லாத அவளுக்கு  அவளைப் படைத்த இறைவன்தான் ஆதரவு   என்ற  அசைக்க முடியாத விசுவாசம்
இருந்திருக்க வேண்டும்!

2. இவ்வுலகைப் பொறுத்த மட்டில் அவள் ஏழையாக இருக்கலாம். ஆனால் விசுவாசத்தைப் பொறுத்த மட்டில் சர்வ வல்லப கடவுளின் மகள்.

3. இறைவன் அன்றன்றைய உணவை தன் பிள்ளைகளுக்கு அன்றன்று தவறாது கொடுக்கும் நல்ல தந்தை.

நமக்குப் போதிய விசுவாசம் இல்லாததால்தான் 

நம்மிடம் இருப்பதை தேவைப்படுவோருக்கு கொடுத்து விட்டால்  நமது உபயோகத்திற்கு எதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறோம்.

அந்த பயம் தான் நம்மை கொடுக்க விடாமல் தடுக்கிறது.

 இறைவன் மேல் விசுவாசம் இருந்தால் 

ஏழைக்கு கொடுப்பது இறைவனுக்கு கொடுப்பது
 என்று நம்புவோம்.

பிள்ளையிடம் இருப்பதை தந்தை வாங்கிக்கொண்டு 
அவனைப் பட்டினி போடுவாரா?

தந்தை மேல் விசுவாசம் கொள்ளுவோம்.

தன்னை விசுவசிப்பவனை இறைவன் எக்காரணம் கொண்டும் கைவிட மாட்டார்.

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment