விசுவாசத்தின் பார்வையில கொரோனா.
(தொடர்ச்சி)
**********************************
நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆள்தான்.
ஒவ்வொருவருக்கும் ஒரு உடலும், ஒரு ஆன்மாவும் உள்ளன.
நமது உடல் ஆன்மா அல்ல.
நமது ஆன்மா உடல் அல்ல.
நமது உடல் மண்ணைச் சார்ந்தது.
ஆன்மா விண்ணைச் சார்ந்தது.
இப்படியாக நம்மிடம் இரண்டு அம்சங்கள் இருப்பதால்,
நமக்கு உள்ளே இரண்டு வகையான செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இரண்டு வகையான உணர்வுகள்,
இரண்டு வகையான பார்வைகள்,
இரண்டு வகையான ஆசைகள்,
இரண்டு வகையான நோக்கங்கள் etc. etc.
உடல் சிற்றின்பத்தை நோக்கி ஈர்க்கப்படும்.
ஆன்மா பேரின்பத்தை நோக்கி ஈர்க்கப்படும்.
இரண்டு அம்சங்களையும் படைத்து, இணைத்து வைத்தது கடவுள்தான்.
விண்ணக வாழ்வுக்காக மனிதனைப் படைத்ததால்
ஆன்மாவுக்குக் கட்டுப்பட்டு உடல் இயங்கவேண்டும் என்பது இறைவனின் திட்டம்.
அதாவது உடலின் செயல்பாடுகள், ஆன்மாவின் செயல்பாடுகளுடன் இணைந்து செல்லவேண்டும்.
பார்வையை எடுத்துக் கொள்வோம்.
நாம இயேசுவின் சீடர்கள்.
நம்முடைய விசுவாசத்தினால்தான் நாம் இயேசுவின் சீடர்கள் ஆனோம்.
நமது ஆன்மா இயக்கப்படுவது நமது விசுவாசத்தினால்.
ஆகவே நமது விண்ணகப் பயணத்தில் நமக்கு வழி காட்டவேண்டியது நமது விசுவாசப் பார்வை,
உடலைச் சார்ந்த உலகப் பார்வை அல்ல.
நம்மிடம் உள்ள இரண்டு பார்வைகளில் எந்தப் பார்வை யால் உலகை நோக்குகிறோமோ
அதற்குரிய தோற்றத்தை உலகம் தரும்.
விசுவாசக் கண்ணால் உலகை நோக்கும்போது,
உலகம் இறைவனின் அன்பைப் பிரதிபலிக்கும்.
அதாவது உலகில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் இறைவனின் அன்பினால் மட்டும் இயக்கப்படுகின்றது என்பது புரியும்.
செயல் எத்தகையது என்பதைப் பார்க்க மாட்டோம்,
அதில் வெளிப்படும் இறையன்பை மட்டும் பார்ப்போம்.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் இருவகைப் படுவர்,
ஒருவகை பள்ளிக்கூடத்தை முற்றிலும் நம்பி அனுப்பவர்,
அடுத்த வகை பிள்ளையை மட்டும் நம்பி அனுப்புவர்.
முதல் வகையைச் சேர்ந்த ஒரு பெற்றோரின் மகன்,
"அப்பா, இன்று வாத்தியார் அடி பின்னிட்டார் அப்பா, உள்ளங்கையைப் பாருங்கள்."
என்று சொன்னால்,
அவர் கையைப் பார்த்துவிட்டு,
"இதிலிருந்து நீ எவ்வளவு சேட்டை பண்ணியிருப்பாய் என்று தெரிகிறது. உன்னைத் திருத்துவதற்காகத்தான் ஆசிரியர் அடித்திருக்கிறார்,
திருந்தி நட." என்று மகனுக்குப் புத்தி சொல்லுவார்.
இரண்டாவது வகை அப்பாவிடம் இதே ஆவலாதி சென்றால்,
"கொஞ்சம் கூட மனதுல ஈரமில்லாதவர் போலிருக்கு. நான் நாளைக்குப் பள்ளிக்கு வந்து கேட்கிறேன்" என்று சொல்லுவார்.
முதல் வகை அப்பா பார்த்தது விசுவாசப் பார்வை.
இரண்டாம் வகை அப்பா பார்த்தது உலகப் பார்வை.
கடவுள் அளவற்ற அன்பு உள்ளவர்.
ஒரு பெரிய பணக்காரர்.
அவருக்கு ஒரே ஒரு மகன்.
அவன் சின்னப் பையன்.
அவன் விளையாடுவதற்காக நூற்றுக் கணக்காகப் பொம்மைகள் வாங்கிப்போட்டிருந்தார்.
அவனால் ஒரு நேரத்துக்கு ஒரு பொம்மையுடன்தான் விளையாட முடியும்.
ஆனாலும் மகன் மீது கொண்ட அன்பு காரணமாக நூற்றுக் கணக்காக வாங்கிப் போட்டிருந்தார்.
கடவுளுக்கு மனிதன் மீது எவ்வளவு அன்பு இருந்தால்
அவன் ரசிப்பதற்காக இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தைப் படைத்திருப்பார்!
ஆனாலும் மனிதன் அவரது அன்பைப் பற்றிக் கவலைப் படாமல்
அவருக்கு விரோதமாக பாவம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டு செயல்படுகிறான்.
ஆனாலும் அவர் அன்பில் கொஞ்சம் கூட குறையாதவராய் அவனை மீட்பதற்காக
மனிதனாய்ப் பிறந்து, தாங்கமுடியாத பாடுகளைப் பட்டு
சிலுவை மரத்தில் தன் உயிரையே பலியாகக் கொடுத்தார்.
ஆனாலும் மனிதரில் அநேகர் பாவம் செய்வதைக் குறைக்கவே யில்லை.
பழைய ஏற்பாட்டில் யூத மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பு காரணமாக
அவர்களைத் திருத்த அவர்கள் மீது துன்பங்களை அனுமதித்தார்.
இந்நாள் வரை மனித குலம் திருந்துவதாயில்லை.
நம்மீது கொண்ட அன்பினால்,
நாம் நித்திய பேரின்ப வாழ்விற்கு நம்மைத் தகுதி உள்ளவர்கள் ஆக்குவதற்காக
துன்பங்களை அனுமதித்துக் கொண்டிருக்கிறார்.
விசுவாசக் கண் கொண்டு பார்த்தால், துன்பங்களில் உள்ள இறையன்பை உணர்ந்து,
துன்பங்களின் நோக்கத்தையும் அறிந்து,
பாவங்களிலிருந்து மனந்திரும்பு வதோடு
எல்லா துன்பங்களையும் மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுப்போம்.
உலகையே புறட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனாவை
நமது விசுவாசக் கண்ணால்தான் பார்க்க வேண்டும்.
உலகம் எந்த அளவுக்கு மோசமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.
கொரோனாவை ஒழிக்க மனிதன் முயற்சி செய்வதில் தவறு ஒன்றுமில்லை,
ஏனென்றால் உலகில் வாழும் போது மகிழ்ச்சியோடு வாழ்வதையே இறைவன் விரும்பு கிறார்.
அதற்காகத்தான் இவ்வளவு அழகான உலகைப் படைத்திருக்கிறார்.
ஆனாலும் விசுவாச அடிப்படையில்
இவ்வுலக மகிழ்ச்சியைவிட
மறுவுலக பேரின்பமே முக்கியமானது.
மறுவுலக பேரின்பத்திற்காக இவ்வுலக மகிழ்ச்சியைத் தியாகம் செய்யலாம்.
ஆனால் மறுவுலக பேரின்பத்தைத் தியாகம் செய்து இவ்வுலகை அனுபவிப்பது அறிவீனம்.
ஆகவே உலக ரீதியாக கொரோனாவை ஒழிக்க முயலு முன்
உலக மக்கள் அனைவரும் தங்கள் பாவங்களுக்காக வருந்தி இறைவனிடம் திரும்ப வேண்டும்.
நம் முயற்சிக்கு இறைவனின் ஆசீரும் கிடைக்கும்.
கொரானாவும் ஒழிந்து விடும்.
நம்மைத் துன்பப் படுத்தி பார்க்க வேண்டும் என்று இறைவன் விரும்பவில்லை.
நம்மை நித்திய துன்பத்திற்குள் விழாதபடி காக்கவே
அவரே சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டார்.
நாம் நித்திய பேரின்பத்தை இறைவனோடு அனுபவிப்பதற்காக
முடியக்கூடிய இவ்வுலக துன்பத்தை ஏற்று இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்.
உலகைத் திருத்துவதற்காகத்தான் இறைவன் கொரோனாவை அனுமதித்திருக்கிறார்.
நாம் திருந்தி விட்டால் கொரோனா தானாகவே ஓடிவிடும்.
திருந்துவோம்.
1. ஆள்பவர்கள் திருந்த வேண்டும்.
வல்லரசுகள் உண்மையிலேயே தங்களிடம் எந்த வல்லமையும் இல்லை என்பதை உணர வேண்டும்.
தாங்கள் தயார் நிலையில் வைத்துள்ள அணு ஆயுதங்களால் மக்களை அழிக்க மட்டும் முடியும், காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து
ஆயுதங்களை அழித்துவிட்டு சமாதானத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
2. விண்வெளி வரை சென்று வர உதவிய விஞ்ஞானத்தால் மண்ணுலகில் மனிதனை ஒரு சிறு வைரசிலிருந்து கூட காப்பாற்ற முடியவில்லையே என்பதை உணர்ந்து
மெய்ஞானத்திற்கு எதிராக விஞ்ஞானம் போகாதபடி
விஞ்ஞானிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. இறைவனைத் தவிர வேறு எந்த சக்தியாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.
நம்மை இறைவன் கையில் ஒப்படைத்துவிட்டு நாம் பயமின்றி வாழ வேண்டும்.
இறைவன் எங்கும் இருக்கிறார்.
நாம் இருந்தாலும், இறந்தாலும் இறைவன் கையில்தான் இருப்போம் என்பதை உணர்ந்தால் பயம் நம்மை விட்டுப் போய்விடும்.
நாம் இவ்வுலகில் மறுவுலகை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்மோடு நமக்கு உதவியாக நம்மைப் படைத்த நமது சர்வ வல்லப தந்தையே வருகிறார். நாம் எதற்குப் பயப்பட வேண்டும்?
இறைவன் அன்பு என்றும் நம்மோடு இருக்கிறது.
இறைவன்பின் அரவணைப்பில் வாழ்கிறோம், வாழ்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment