"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்."
(மத்.16:25)
-------------------------------------------------------
வாழ்வில் இருவகை உண்டு:
நிலையற்ற வாழ்வு.
நிலை வாழ்வு.
நிலையற்ற வாழ்வு இவ்வுலகைச் சேர்ந்தது.
நிலை வாழ்வு மறுவுலகைச் சேர்ந்தது.
இவ்வுலகில் வாழ்கின்ற அத்தனை மனிதர்களும் நிலையற்ற வாழ்வு உள்ளவர்கள்தான்.
பிறந்தவர்கள் அத்தனை பேரும் இறப்பது உறுதி.
விண்ணக வாழ்வை அடைந்தவர்களுக்கு இறப்பே இல்லை.
இயேசு சொல்கிறார்:
"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான்."
உயிர் இருக்கும் நிலைக்குதான் வாழ்வு என்று பெயர்.
உலகில் இருக்கும்வரை நாம் உயிரோடு வாழவே விரும்புகிறோம்.
நாம் உயிர் வாழ்வதற்காக ,
அதாவது,
இவ்வுலகின் நிலையற்ற வாழ்வை வாழ்வதற்காக
நமது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறோம்.
இப்போது கேள்வி,
நிலையற்ற வாழ்வை வாழ்வதற்காக
அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறோம் என்றால்,
நிலை வாழ்வை வாழ்வதற்காக நாம் எப்படி இருக்க வேண்டும்?
"இயேசு அவரிடம் கூறியதாவது: "நானே வழியும் உண்மையும் உயிரும்." (அரு. 14:6)
நாம் இயேசுவின் சீடர்கள்.
நம்மைப் பொறுத்தமட்டில், இயேசுவே நமது உயிர். இயேசு தான் நமது வாழ்வு.
Jesus is our life.
நமது ஆன்மீகத்தில்
இயேசு நம்மோடு இருக்கும்போது,
நாம் வாழ்கிறோம்.
இயேசுவை இழக்கும்போது இறக்கிறோம்.
பாவம் செய்யும்போது நாம் இயேசுவை இழக்கிறோம்,
நிலை வாழ்விற்கான தகுதியையும் இழக்கிறோம்.
பாவத்தோடு உலகில் வாழ்பவர்கள் நடை பிணங்கள்,
ஏனெனில் அவர்களிடம் உயிராகிய இயேசு இல்லை.
பாவம் இல்லாதவர்களிடம் அவர்களின் உயிராகிய இயேசு இருக்கிறார்,
அவர்கள் நிலை வாழ்விற்குத் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான்."
யாராவது நம்மிடம் வந்து,
"உனக்கு வேண்டியது நீ பார்க்கும் உத்தியோகமா அல்லது உயிரா?
இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்."
என்று சொன்னால்,
நாம் என்ன பதில் சொல்லுவோம்?
"உயிர் போனாலும் பரவாயில்லை, உத்தியோகம்தான் முக்கியம்" என்று சொல்வோமா?
அல்லது,
"எனக்கு உயிர் இருந்தால் போதும்." என்று சொல்வோமா?
நமக்குத் தெரியும், உயிரில்லாதவர்களால் உத்தியோகம் பார்க்க முடியாது என்று.
ஆகவே நாம் உயிரைத்தான் தேர்ந்தெடுப்போம்.
"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்."
இப்போ இயேசு நம்மிடம் கூறுகிறார்:
"நான் நிலை வாழ்வு.
நீ உலகில் வாழ்ந்து கொண்டிருப்பது நிலையற்ற வாழ்வு.
நான் உன்னோடு இருந்தால் உனக்கு நிலை வாழ்வு கிடைக்கும்.
நான் உன்னோடு இல்லாவிட்டால் நித்திய மரணம் (நரகம்) கிடைக்கும்.
நீ பாவம் இல்லாமல் இருக்கும் போது நான் உன்னிடம் இருப்பேன்.
நீ பாவம் செய்தால் என்னை இழப்பாய்.
உனக்கு நான் வேண்டுமா? பாவம் வேண்டுமா?"
"ஆண்டவரே, நீர்தான் வேண்டும்."
"எனது அடுத்த கேள்வி:
என்னை நீ மறுதலித்தால் நீ இவ்வுலகில் வாழலாம்.
என்னை ஏற்றுக்கொண்டால் உன்னைக் கொன்று போடுவார்கள்.
என்னை ஏற்றுக் கொள்வாயா?
மறுதலிப்பாயா?
திரும்பவும் சொல்கிறேன்,
என்னை மறுதலித்தால்தான் இவ்வுலகில் உயிர் வாழலாம்.
இப்போ சொல்
என்னை ஏற்றுக் கொள்வாயா?
மறுதலிப்பாயா?"
இப்போ நாம் சொல்ல வேண்டிய பதில்:
"ஆண்டவரே, நீரே எங்கள் நிலை வாழ்வு.
எங்களுக்கு வேண்டியது அழியாத நிலைவாழ்வு,
நீர்தான் வேண்டும்.
உமக்காக நிலையற்ற வாழ்வை இழக்கத் தயார்.
நிலையற்ற வாழ்வுக்காக
நிலை வாழ்வை இழக்க மாட்டோம்.
நிலையற்ற வாழ்வைக் காத்துக்கொள்ள அல்ல,
நிலைவாழ்வைப் பெறவே விரும்புகிறேன்.
எக்காரணம் முன்னிட்டும் உம்மை இழக்க மாட்டேன்.
உம்பொருட்டு என் உயிரை இழக்கத் தயார்.
எனக்குத் தெரியும்
உமக்காக இவ்வுலக வாழ்வை இழப்பவன்
மறுவுலகில் நிலைவாழ்வைக் கண்டடைவான்."
நாம் வயலில் நெல் நாற்று நட்டு, உரமிட்டு , நீர்ப் பாய்ச்சி வளர்க்கிறோம்.
எதற்காக?
அது வயலிலேயே எப்போதும் வளர்ந்து கொண்டிருப்பதற்காகவா?
இல்லை.
அது கதிர் விட்டு,
கதிர் விளைந்தவுடன் அறுவடை செய்து,
நெல்லை வீட்டிற்குக் கொண்டு செல்கிறோம்.
அதற்காகவே நாற்று நடுகிறோம்.
நெல்லை வீட்டிற்குக் கொண்டு செல்லும்போது
வைக்கோலை வயலிலேயே விட்டுச் செல்லுகிறோம்.
அதேபோல்தான், இயேசு வயலாகிய இவ்வுலகில் நாற்றாகிய நம்மை நட்டு, தன் அருளாகிய நீரும், உரமும் இட்டு வளர்க்கிறார்.
அருள் பெற்று முதிர்ச்சி அடைந்த கதிராகிய நம் ஆன்மாவை அறுவடை செய்து விண்ணக நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்.
வைக்கோல் ஆகிய உடல் பூமியிலேயே விட்டுச் செல்லப் படுகிறது.
உலக முடிவில் உயிர்ப்பின்போது உடலும் ஆன்மீக உடலாக (spiritual body) மாறி,
ஆன்மாவோடு இணைந்து விண்ணக வாழ்வில் பங்கேற்கிறது.
ஆக,
நாம் இரயிலில் ஏறுவது இரயிலிலேயே இருப்பதற்காக அல்ல, நம் வீட்டிற்குச் செல்வதற்காக.
நாம் நிலையற்ற வாழ்விற்குள் நுழைந்தது, நிலை வாழ்விற்குள் செல்வதற்காகத்தான்.
நாம் இவ்வுலக வாழ்வே சதம் என்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சென்னையில் இரயில் ஏறி தென்காசிக்கு வந்து கொண்டிருக்கிறோம்.
Train தென்காசிக்கு வந்தவுடனே ஊருக்கு வந்த மகிழ்ச்சியோடு இரயிலை விட்டு இறங்குவோமா?
அல்லது,
"ஐயெய்யோ! ஊருக்கு வந்துவிட்டோமே" என்று கூப்பாடு போட்டு அழுவோமா?
நம்மில் அநேகர் விண்ணக வாயிலை நெருங்கும் போது அதைத்தானே செய்கிறோம்.
ஒரு மகன் தந்தையின் மரணச் செய்தியை இவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்:
"எங்கள் அன்புள்ள தந்தை........ துன்பங்கள் நிறைந்த இவ்வுலகை விட்டு விட்டு
பேரின்ப நிலையை அடைந்து விட்டார்
என்ற செய்தியை
மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்."
இது எப்படி இருக்கிறது தெரியுமா?
"கடலுக்குள் விழுந்துவிட்ட என் மகன் உயிரோடு கரை சேர்ந்து விட்டான் என்ற செய்தியைக் கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன"
சிரிப்பு வரவில்லை?
வெளியூருக்கு குடும்பத்தோடு Tour போயிருக்கிறோம்.
பல ஊர்களுக்குச் செல்கிறோம்.
ஊர்களைப் பார்த்து இரசிக்கும்போதே, ஆங்காங்கு புதுப்பொருட்கள் வாங்குகிறோம்.
எதற்காக?
நமது வீட்டை அலங்கரிப்பதற்காக, வீட்டில் நாம் பயன்படுத்த.
விண்ணகம் நமது வீடு. இவ்வுலம் Tourist centre. .
நமக்கு வேண்டிய, விண்வீட்டில் பயன்படுத்த ஆன்மீகப் பொருட்கள் நிறைய இங்கே கிடைக்கின்றன.
நாம் அவற்றை வாங்குகிறோமா?
பலர் அவற்றை வாங்கி, விண்ணகத்துக்கு அனுப்பி விடுகிறார்கள்.
பூமியில் வாங்கிய நமது விண்ணகக் செல்வங்களை நாம் அங்கு கொண்டு செல்வதற்காகத்தான்
நம்மோடு காவல் தூதர்களை இறைவன் அனுப்பியிருக்கிறார்.
நாம் வாங்கி அனுப்புகிறோமா?
கேட்கலாம்,
செல்வங்கள் எங்கே இருக்கின்றன,
அவற்றை வாங்க நம்மிடம் பணம் எங்கே இருக்கிறது என்று.
நமது ஆண்டவராகிய இயேசு நமக்கு வேண்டிய விண்ணகச் செல்வங்களைத் தயாரிப்பதற்காக,
மனிதனாகி பாடுகள் பல பட்டு,
சிலுவையில் மரணம் அடைந்து,
தனது பாடுகள் மற்றும் மரணத்தின் மூலமாக
நிறைய ஆன்மீகச் செல்வங்களைத் தயாரித்து வைத்திருக்கிறார்.
அவற்றைப் பெற நாம் செலுத்த வேண்டிய பணம்
தேவத் திரவிய அனுமானங்கள், செபம்,
துன்பங்கள்.
நாம் தேவத் திரவிய அனுமானங்களைப் பெறுவதின் மூலமும்,
துன்பங்களை இயேசுவுக்காகப்
பொறுமையுடன் ஏற்று, அவற்றை அவருக்கே ஒப்புக் கொடுப்பதன் மூலமும்
செபிப்பதன் மூலமும்
நாம் நிறைய விண்ணகச் செல்வங்களைப்
பெற்று
விண்ணகத்தில் சேமிக்க வேண்டும்.
விண்ணகம் சென்றபின் அவற்றை நிரந்தரமாக அனுபவிக்கலாம்.
நாம் தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுகிறோம்.
ஞானஸ்நானம் பெற்று விண்ணகப் பயணத்திற்குள் நுழைந்து விட்டோம்.
(கிறிஸ்தவர்களாக மாறிவிட்டோம்.)
இயேசு தன் பாடுகளால் தயாரித்து வைத்திருக்கும் பாவமன்னிப்பைப் பெற பாவசங்கீர்த்தனம் செய்கிறோமா?
தகுதியான முறையில் திருப்பலி கண்டு, திருவிருந்தில் கலந்து கொள்கிறோமா?
செபத்திற்கும், தியானத்திற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்?
துன்பங்களைக் கண்டு ஏன் பயப்படுகிறோம்?
நமக்காக இயேசு துன்பப்பட்டார் என்று நமக்குத் தெரியும்.
அவருக்காகத் துன்பப்படும்போது தானே அவருடைய உண்மையான சீடர்கள் ஆகிறோம்!
"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது"
(லூக். 14:27)
இயேசுவுக்காக நமக்கு வரும் சிலுவையைப் பொறுமையுடன் சுமந்து,
அவருக்கே ஒப்புக் கொடுத்துக் கொண்டே அவர் பின்னாலேயே சென்று,
அவரோடே விண்ணகம் செல்வோம்.
நாம் சிலுவையைச் சுமந்ததற்கான பரிசு நமக்காகக் காத்திருக்கும்.
நிலையற்ற துன்பத்தின் மூலம் நிலைவாழ்வைச் சம்பாதித்துக் கொள்வோம்.
இயேசுவுக்காக நிலையற்ற உயிரை இழந்து,
நிலை வாழ்வாகிய இயேசுவை ஈட்டிக் கொள்வோம்.
கொரோனாவைக் கண்டு பயப்பட வேண்டாம்
அதை நிலைவாழ்வின் வாயிலாகக் கூட இயேசு மாற்றுவார்.
உறுதியாக நம்புவோம்,
விண்ணகம் நமக்கே!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment