"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்"
(மத்.8:17)
**********************************
"மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று, சமாதானமாய்ப் போ."
(மாற்கு, 5:34)
"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்"
(மாற்கு.10:52)
"எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று"
(லூக்.17:19)
இயேசு தம்மிடம் நோய் நீங்கி குணம் பெற வந்தவர்களை தனது வல்லமையால் குணப்படுத்தி விட்டு,
"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று"
என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
குணப்படுத்தியவர் இயேசு. ஆனால், ஏன் 'விசுவாசம் குணமாக்கிற்று' என்கிறார்?
நமது ஒவ்வொரு செயலிலும் காரண, காரிய அடிப்படையில் பல படிகள், குறைந்தது இரண்டு, இருக்கும்.
ஒரு விபசாயி நிலத்தில் பயிர் செய்து, பலனை விட்டுக்குக் கொண்டு வர வேண்டுமானால்,
முதலில் விபசாயம் செய்ய ஆசை இருக்க வேண்டும்.
அடுத்து விபசாய நிலத்திற்குச் செல்ல வேண்டும்.
அடுத்து நிலத்தில் வேலை செய்து விளைய வைக்க வேண்டும்.
அடுத்து விளைச்சலை வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.
இப்படிகளில் ஒன்று குறைந்தாலும் பலன் வீட்டிற்கு வராது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நான்கு படிகளில் அடிப்படையானது விபசாயம்
செய்ய இருக்கும் ஆசை.
விருப்பம் இல்லாதவனை எந்த வேலையையும் செய்ய வைக்க முடியாது.
நமது ஆன்மீக வாழ்வின் அடிப்படை
சர்வ வல்லப கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று விசுவசிப்பது தான்.
கடவுள் விசுவாசம் இல்லாதவர்களால் மிருக வாழ்வு மட்டும் தான் வாழ முடியும்.
நமது உடல் எல்லா வகையிலும் மிருகம்தான். அந்த மிருகத்தோடு ஆன்மா இணையும் போதுதான்
நாம் மனிதன் ஆகிறோம்.
Man is a rational animal.
மனிதன் பகுத்தறிவு உள்ள மிருகம்.
பகுத்தறிவு ஆன்மாவைச் சேர்ந்தது.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கள் தங்கள் உடல் சம்பந்தப்பட்ட வசதிகளுக்காக மட்டும் வாழ்வார் கள்.
உண்ணுதல், உடுத்தல், உறங்குதல் சம்பந்தப்பட்ட காரியங்களை வசதியாகச் செய்வதற்கு வேண்டியவற்றைப் பெறுவதற்கே தங்கள் ஆன்மாவிற்கு உரிய பகுத்தறிவைப் பயன்படுத்துவார் கள்.
ஆன்மீக காரியங்களுக்கு தங்கள் ஆன்மாவைப் பயன்படுத்தாத வர்கள் வாழ்வது மிருக வாழ்க்கைதான்.
இயேசு மனித உரு எடுத்தது நமது ஆன்மாவை இரட்சிக்க.
பாவம் செய்தது ஆன்மா, உடல் அல்ல.
உடலை ஆன்மா பயன்படுத்துகிறது, அவ்வளவுதான்.
எய்தவன் இருக்க அம்பை நோகலாமா?
பாவம் செய்த ஆன்மா இரட்சிக்கப்பட வேண்டும்.
இரட்சிப்பின் முதற்படி இரட்சகரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏற்றுக் கொள்வது தான் விசுவாசம்.
விசுவாசம் இல்லாதவனால் இரட்சிக்கப்பட முடியாது.
ஆகவேதான் இயேசு தான் செய்த ஒவ்வொரு குணமளித்தலுக்கும் விசுவாசம் காரணம் என்று அழுத்திக் கூறுகிறார்.
விசுவாசத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்குப் புரிய வைக்க விரும்புகிறார்.
தான் விண்ணகம் எய்து முன் தன் சீடர்களிடம் இயேசு
கூறினார்:
"விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்,"
(மாற்கு.16:16)
விசுவாசம்,
ஞானஸ்நானம்.
மீட்பு.
தாயின் வயிற்றில் ஜென்ம பாவத்தோடு தான் கருத்தரித்தோம்.
நாம் கருத்தரித்ததின் இறுதி நோக்கம் (ultimate aim) விண்ணக வாழ்வு.
ஆனால் அதற்கு இடைஞ்சலாக இருந்தது ஜென்மப் பாவம்.
பாவத்திலிருந்து விடுதலை பெறுவது தான் மீட்பு.
மீட்பு பெற,
அதாவது
பாவத்திலிருந்து விடுதலை பெற,
வேண்டியத ஞானஸ்நானம்.
ஞானஸ்நானம் பெற,
வேண்டியது விசுவாசம்.
நாம் சிறு குழந்தையாய் இருந்த போது நமக்கு விசுவாசம் என்றால் என்ன என்று தெரியாது.
ஆகவே நமது பெயரால் நமது பெற்றோரும், ஞானப்பெற்றோரும் விசுவாச அறிக்கை செய்தார்கள்.
சிலர் கேட்கலாம்,
"நாம் விசுவாசம் பெற்ற பிற்பாடு தானே ஞானஸ்தானம் பெறவேண்டும்,
பெற்றோர் விசுவாச அறிக்கை செய்தால் அது நமக்கு எப்படி ஏற்றதாகும்" என்று.
ஆனால் அப்படிக் கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.
சென்மப் பாவம்
முதல் பெற்றோரிடமிருந்து,
நமது பெற்றோர் வழியாகத்தான் நமக்குள் வந்தது.
நாம் விசுவாசத்தைப் பெற்ற பின்பு தான் ஞானஸ்தானம் பெறுவதாக இருந்தால் அதற்கு வெகு காலம் ஆகும்.
ஆகவேதான்
யார் மூலமாக நமக்குள் பாவம் வந்ததோ அந்தப் பெற்றோரும்,
நமது ஞான வாழ்விற்குப் பொறுப்பேற்கும் ஞானப் பெற்றோரும்
நமது சார்பாக விசுவாச அறிக்கை செய்கிறார்கள்.
நமக்கு உரிய வயது வரும்போது நாமே சுயமாக விசுவாச அறிக்கை செய்கிறோம்.
விசுவாசம் தான் நமது ஞான வாழ்வின் அடிப்படை,
ஆகவே நாம் நமது விசுவாசத்தை அடிக்கடி உறுதிப்படுத்தி,
ஞான வாழ்வின் அடிப்படையை உறுதிப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அதன்மேல் கட்டப்படும் ஞான வாழ்வாகிய கட்டடம் பலமாக இருக்கும்.
விசுவாசத்திலிருந்து பிறப்பதுதான் அன்பும் நம்பிக்கையும்.
நம்மை படைத்த கடவுளை விசுவசிக்கும் நாம்
அவரை நமது சிந்தனையாலும், சொல்லாலும், செய்யாலும் அன்பு செய்தால்
விண்ணகம் செல்வது உறுதி என்று நம்ப வேண்டும்.
விசுவதித்து, அன்பு செய்து வாழ்ந்தால்
விசுவாசத்தாலும், அன்பாலும் பெற்ற மீட்பின் பயனை அனுபவிக்க நித்தியத்துக்கும் இறைவனோடு இணைவோம்.
விசுவாசம் என்ற விதையோடு.
அன்பு என்ற நீர் சேரும் போது,
நற்செயல்கள் என்ற கனிகள் தரும்
ஞான வாழ்வு என்ற மரம் வளரும்.
அன்பு மயமான இறைவன் தன் அன்பின் காரணமாகவே,
நம்மையும், நாம் வாழும் உலகத்தையும் படைத்தார் என்றும்,
அவரது அன்பை மறந்து
நாம் செய்த பாவங்களுக்குப்
பரிகாரம் செய்து நம்மை மீட்கவே
மனிதனாய்ப் பிறந்து பாடுகள் பட்டு
சிலுவையில் தன்னையே பலியாக்கினார் என்றும் உறுதியாக விசுவசிக்கிறோம்.
நமது விசுவாசம் உண்மையானால்,
இறைவனது செயல்கள் அனைத்தையும்
விசுவாசம் என்ற கண்ணால்தான் மட்டுமே நோக்க வேண்டும்.
இப்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா விசுவாசத்தின் பார்வையில் எப்படி இருக்கிறது?
இறைவனின் செயல் எதுவும் அவரது அன்புக்கு விரோதமாக இருக்க முடியாது.
God cannot do anything not in keeping with His Love.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment