"அன்று முதல் பானையின் மாவு செலவழிந்ததும் இல்லை: கலயத்தின் எண்ணெய் குறைந்ததுமில்லை."
(1 அரசர். 17:16)
*********************************
இறைவார்த்தை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக, ஒரு குறிப்பிட்ட பொருளில் எழுதப்பட்டிருக்கலாம்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த யூதமக்களுக்கு
அறிவுரை கூறும்பொருட்டும்,
தவறு செய்யும் போது
எச்சரிக்கும் பொருட்டும்,
அவர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த மெசியா பற்றி முன்னறிவிக்கும் பொருட்டும்,
இறைவனின்
தீர்க்கத்தரிசிகளால் எழுதப் பட்டது பழைய ஏற்பாடு.
ஆனாலும் இறைவார்த்தை அவர்களுக்கு மட்டும் உரியது அல்ல.
இறைவார்த்தை நித்தியமானது, ஏனெனில் அதற்கு உரியவர் நித்திய மானவர்.
இறைவன் உலகத்தை ஆதாம், ஏவாளுக்காக மட்டும் படைக்கவில்லை.
அவர்களுடைய சந்ததியார் அனைவருக்காகவும்தான் படைத்தார்.
பழைய ஏற்பாட்டு மக்களுக்குக் கொடுத்த அறிவுரைகள் நமக்கும் பொருந்தும்.
சீனாய் மலையில் இறைவன் கொடுத்த கட்டளைகள் யூதர்களுக்கு மட்டுமா?
அவரால் படைக்கப்பட்ட அனைவருக்கும்தான்.
ஆகவே பழைய ஏற்பாட்டு வசனங்களை இறைவன் நம்மோடு பேசும் வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளலாம்.
இறைவசனங்களை நமது ஞான வாழ்வுக்கு வழி காட்டுபவையாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் நம் இஸ்டத்திற்கு பொருளைத் திரித்துவிடக்கூடாது.
(Should not twist the meaning)
"அன்று முதல் பானையின் மாவு செலவழிந்ததும் இல்லை: கலயத்தின் எண்ணெய் குறைந்ததுமில்லை."
இது பழைய ஏற்பாட்டில் உள்ள வசனம்.
எலியா ஆண்டவரின் அறிவுறுத்துதலின்படி ஒரு விதவைப் பெண்ணிடம்,
அவருக்குக் கொஞ்சம் அப்பம் கேட்கிறார்.
அவள் தன்னிடம் மாவும், எண்ணெயும் மிகக் குறைவாக இருப்பதாகவும்,
அவளுக்கும் அவள் மகனுக்கும் ஒரு நேரத்துக்கு மட்டும்தான் போதுமானதாக இருப்பதாகவும் கூறினாள்.
அப்போது எலியா அவளைப் பார்த்து,
"அஞ்சாதே: போய், நீ சொன்னபடியே செய். எனினும் முதலில் அதில் ஒரு சிறிய அப்பம் சுட்டு எனக்குக் கொண்டு வா.
பிறகு உனக்கும் உன் மகனுக்கும் அப்பம் தயார் செய்யலாம்.
14 ஏனென்றால், "ஆண்டவர் நிலத்தில் மழை பொழியச் செய்யும் வரை
உன் பானையின் மாவு செலவழிந்து போவதுமில்லை:
கலயத்தின் எண்ணெய் குறைந்து போவதுமில்லை"
என்று இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறார்" என்றார்.
அவள் போய் எலியாசின் சொற்படி செய்தாள்.
அவரும் உண்டார்: அவளும் அவள் வீட்டாரும் உண்டனர்.
அன்று முதல் பானையின் மாவு செலவழிந்ததும் இல்லை: கலயத்தின் எண்ணெய் குறைந்ததுமில்லை."
(1 அரசர். 17:13,14)
எலியா ஆண்டவர் சொற்படி நடந்தார்.
ஏழை விதவை ஆண்டவர் வார்த்தைகளை விசுவசித்தாள்.
ஆண்டவர் தன்னை நம்பியவர்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை.
ஆண்டவர் மாறாதவர்.
தன்னை நம்பியவர்களுக்கு ஒருபோதும் ஒரு குறையும் வைக்கமாட்டார்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
அவரை விசுவசித்து, நம்பி, நேசித்து அவர் சொற்படி நடக்க வேண்டியதுதான்.
இறைவார்த்தையைப் பாராமல் படித்தால் மட்டும் போதாது,
இறைவனை விசுவசிக்க வேண்டும், நம்ப வேண்டும், நேசிக்க வேண்டும்.
அதன் பின்தான் மற்றதெல்லாம்.
விதையே போடாமல் இன்னும் ஒன்றும் முளைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டிருக்கக் கூடாது.
இயேசு தந்தையை நோக்கி செபம் சொல்ல நமக்குக் கற்றுத் தந்தபோது
"அன்றன்றுள்ள அப்பம் எங்களுக்கு இன்று தாரும்" என்று தான் கேட்கச் சொன்னார்.
"வாழ்நாள் முழுவதுக்குமான அப்பத்தை இன்றே தந்துவிடும்"
என்று கேட்கச் சொல்லவில்லை.
நமக்குக் கிடைப்பவை எல்லாம் கடவுளுடைய அருளால்தான் கிடைக்கின்றன.
உண்மையில் நம்மிடம் உள்ள எந்த பொருளுக்கும்,
நமது உடல், ஆன்மா உட்பட,
நாம் உரிமை கொண்டாட முடியாது.
அவை நமது பயன்பாட்டிற்காக மட்டுமே நமக்குத் தரப்பட்டுள்ளன.
நம்மிடம் உள்ள எந்தப் பொருளையும் எப்போது வேண்டுமானாலும் கடவுள் எடுத்துக் கொள்ளலாம்.
"அவர் தந்தார். அவர் எடுத்துக் கொண்டார். இது வரைப் பயன்படுத்தத் தந்தமைக்கு நன்றி"
என்று மட்டும் நாம் கூறலாம்.
இயேசு, "நீ உன்னை நேசிப்பதுபோல உன் அயலானையும் நேசி" என்று கூறும்போதே, அதில்
"நீ உன்னிடம் உள்ள பொருளை நீ பயன் படுத்துவது போலவே உன் அயலானுக்குத் தேவைப் படும்போது அவனுக்குக் கொடுத்து உதவு"
என்ற அறிவுரையும் அடங்கியிருக்கிறது
நாம் நம்மிடம் உள்ளதைத் தேவைப்படுவோருடன் பகிர்ந்து கொள்ளும்போது
நமது வருங்கால உபயோகத்திற்கு இல்லாமற் போய்விடுமோ என்று பயப்பட வேண்டாம்.
உண்மையான விசுவாச அடிப்படையில்
நாம் இறைவனின் பெயரால் யாருக்கு உதவி செய்தாலும்
இறைவன் நமது நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும்
நம்மைக் கவனித்துக் கொள்வார்.
நாம் பொதுவாக உலக ரீதியாகவே சிந்திக்கிறோம்.
இன்று Savings ல் போட்டு. வைப்பதுதான் எதிர்காலத்திற்கு உதவும் என்று நம்புகிறோம்.
உலக ரீதியில் இதை நோக்கினால் தவறு ஏதும் தெரியாது.
சிறுசேமிப்பில் தவறு ஏதும் இல்லை.
அதில் நமது அயலானையும் சேர்த்துக் கொள்வோம்.
தேவைப்படுவோர் list ல் நாம் இருந்தால் இது புரியும்.
எலியாவுக்கு உதவிய ஏழை விதவை எலியாவுக்கு என்ன செய்தாளோ,
அதையே நமது அயலானுக்கும் செய்வோம்.
அயலானுக்கு உதவுவதற்கு நம்மிடம் எவ்வளவு பொருள் இருக்கிறது என்பது முக்கியம் அல்ல,
நம்மிடம் எவ்வளவு மனம் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்பது பழமொழி.
"எனக்கு வரும் வருமானம் எனக்கே போதவில்லை, இதில் மற்றவர்கட்கு எப்படிக் கொடுக்க முடியும்?"
என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
ஆடம்பரமாக வாழ்பவர்களுக்கு எவ்வளவு வந்தாலும் போதாது.
திட்டமிட்டே ஏழ்மையில் பிறந்த இயேசு பாலனின் விழாவைக் கொண்டாட
இலட்சக் கணக்காக செலவழிப்பவர்களை இன்று இயேசு பார்த்தால்,
"பிறக்கக்கூட இடமில்லாமல மாட்டுத் தொழுவத்தில் பிறந்திருக்கிறேன்.
படுக்கக்கூட இடமில்லாமல தீவனத்தொட்டியில் படுத்திருக்கிறேன்.
வேறு வழியில்லாமல் ஒரு பழைய துணியால் அம்மா
என்னைப் போர்த்தி யிருக்காங்க.
நான் மார்கழி குளிர் தாங்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்.
இலட்சக் கணக்கான செலவில் ஆடம்பரமாக உடை உடுத்தி என்னைக் கேலி செய்ய வந்திருக்கிறீர்களா?
போய் இந்த உடைகளை உடுக்கத் துணி இல்லாத ஏழைகளிடம் கொடுத்துவிட்டு
சாதரண உடை அணிந்து என்னைப் பார்க்க வாருங்கள்."
என்றுதான் சொல்லியிருப்பார்.
ஏழைகளுக்கு உதவும்போது இயேசுவுக்குதான் உதவுகிறோம்.
கடவுள் தன் பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நாம் நம்மிடம் உள்ளதை இறைவனுக்காக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாவிட்டால்,
நாம் பைபிளை வாசித்தும் பயனில்லை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment