Saturday, June 20, 2020

"பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்."(லூக்.2:51)

"பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்."
(லூக்.2:51)
********************************

மூன்று நாட்கள் தன்னைத் தேடி அலைந்து,

மூன்றாம் நாள் ஆலயத்தில் கண்டுபிடித்த அன்னையையும், வளர்ப்புத் தந்தையும் பார்த்து

இயேசு,  " ஏன் என்னைத் தேடினீர்கள்?

என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்க வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.

இப்படிக் கூறிய இயேசு அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்.

இங்கு ஒரு முக்கிய உண்மையை நாம் தியானிக்க வேண்டும்.

" ஏன் என்னைத் தேடினீர்கள்?" என்று கேட்டவர்,

"நீங்கள் போய் வாருங்கள், என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கிறேன்."

என்று சொல்லவில்லை.

மாறாக உடனே அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார்.

இந்த வசனத்தை வாசிக்கும் போது எனக்கு கானாவூர்  திருமணம் ஞாபகத்துக்கு வருகிறது.

கானாவூர் திருமணத்தின்போது,

"இரசம் தீர்ந்துவிட்டது" என்று சொன்ன தன் தாயிடம்

,"அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்று சொன்னாலும்,

மாதா பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று சொன்னவுடன்,

இயேசு பணியாட்களிடம் "இச்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார்.

"எனது நேரம் இன்னும் வரவில்லை" என்று சொன்னவர்,

தாயின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு,

தண்ணீரை இரசமாக்கிக் கொடுக்கிறார்.

"ஏன் என்னைத் தேடினீர்கள்?"
என்று சொன்னவர் மாதாவுடன் புறப்பட்டுப் போகிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இயேசு எந்த குழ்நிலையிலும் தாயின் சொல்லைத் தட்ட மாட்டார்.

மாதாவை சாதாரணப் பெண் என்று கூவிக்கொண்டு திரிபவர்கள் கொஞ்சம் உட்கார்ந்து பைபிளை வாசியுங்கள்.

வாசித்தபின் கொஞ்சம் யோசியுங்கள்.

ஆலயத்திலிருந்து இயேசு மாதாவுடனும், சூசையப்பருடனும் ஏன் சென்றார்?

அவர்களுக்குப் பணிந்து வாழ்வதற்கு.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

ஆலயத்தில் நற்செய்தியை அறிவிப்பது எப்படி தந்தையின் சித்தமோ,

அதேபோல தாய்க்கும், வளர்த்த தந்தைக்குப் பணிந்து வாழ்வதும்  தந்தையின் சித்தம் தான்.

30 ஆண்டுகள் தாய் சொல் தட்டாமல் வாழ்ந்துவிட்டு,

3 ஆண்டுகள் மட்டும் பொது வாழ்வில் ஈடுபட்டார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

33 ஆண்டுகளும் இயேசு நற்செய்திப் பணி ஆற்றியிருக்கிறார் என்று தெரிகிறது.

பெற்றோருக்கும்,

நம்மை வழி நடத்தும் பெரியவர்களுக்கும்

கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற நற்செய்தியை
30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வாழ்ந்து போதித்தார்.

இதன் மூலம் நாம் கற்கும் பாடம்:

1. நாமும் நற்செய்தியை வாயினால் மட்டுமல்ல, வாழ்ந்தும் போதிப்போம்.

நமது வாழ்நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நற்செய்தியை அறிவிப்பதாக இருக்க வேண்டும்.

குருவானவர் கோவிலில் பிரசங்கம் மூலம் பேசி நற்செய்தி அறிவிக்கிறார்.

நாம் பிரசங்கத்தை அமைதியாக அமர்ந்து கூர்ந்து கவனிப்பதே நற்செய்தி அறிவிப்புதான்.

2. இயேசு இராயப்பரைப் பார்த்து, "என் ஆடுகளை மேய்" என்றார்.

மேய்ப்பன் ஆடுகளை மேய்க்கும் போது ஆடுகள் என்ன செய்ய வேண்டும்?

மேய்ப்பனுடைய வழிகாட்டுதல் படி மேய வேண்டும்.

இன்றுள்ள பெரிய பிரச்சனை ஆடுகள் மேய்ப்பனையே மேய்க்க ஆசைப்படுவது தான்.

தாய்த் திருச்சபையை விட்டு பிரிந்து சென்றவர்கள்,

"இராயப்பா, ஆண்டவர் உம்மை மேய்க்கச் சொல்ல வில்லை.

பைபிள் வைத்திருப்பவர்களை  மேய்க்கச் சொல்லி விட்டார்.

நாங்களே ஆடுகளை மேய்த்துக் கொள்வோம்.

உமது தலைமை தேவை இல்லை."

என்று கூறிவிட்டு, ஆடுகளை அவர்கள் 'மேய்ந்து' கொண்டிருக்கிறார்கள்!

ஆண்டவர் நமக்குக் கற்பிக்கும் பாடம்,

"நான் என் தாய்க்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தது உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே.

நான் என் தாய்க்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தது போல

நீங்கள் நான் உங்களுக்குத் தந்த அன்னைத் திருச்சபைக்குக் கீழ்ப்படிந்து வாழுங்கள்.

நான் என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே பூமிக்கு  வந்தேன்.

என் தந்தையின் சித்தப்படி

நான் நிருவிய திருச்சபையின் சித்தத்தை நிறைவேற்றுபவர்கள் என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள்."

இயேசு அறிவித்த மிக முக்கிய நற்செய்தி கீழ்ப்படிதல்தான்.

கீழ்ப்படிதல் இல்லா விட்டால் மற்ற நற்செய்திகள் நம் காதில் விழாது.

கீழ்ப்படியாமை உலகில் பாவத்தைப் புகுத்தியது.

கீழ்ப்படிதல் பாவத்திருந்து மீட்பைத் தந்தது. 

இறைமகன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து மனிதன் ஆகி நம்மை மீட்டார்.

இறைமகனுக்கு கீழ்ப்படிந்தால் தான் நமக்கு மீட்பு.

இறைமகன் நிறுவிய ஒரே திருச்சபைக்குக் கீழ்ப்படியும் போது

, இறைமகனுக்குக் கீழ்ப்படிகிறோம்.

இறைமகனுக்குக் கீழ்ப்படியும்போது இறைத் தந்தைக்குக் கீழ்ப்படிகிறோம்.

இறைவன் தந்த பத்துக் கட்டளைகளில் நான்காவது கட்டளை:

"பிதாவையும், மாதாவையும் சங்கித்திருப்பாயாக."

முதல் மூன்று கட்டளைகளும்
கடவுளோடு நேரடித் தொடர்பு உடையவை.

அயலானோடு தொடர்புடைய ஏழு கட்டளைகளில் முதன்மையானது

நமக்கும் நமது பெற்றோருக்குமான உறவைப் பற்றியது.

நமது பெற்றோரை மதித்து, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

இதிலிருந்து கீழ்ப்படிதலுக்கு கடவுள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நமக்கு முன் மாதிரிகையாகத்தான் இயேசு திருக்குடும்பத்தில் கீழ்ப்படிந்து நடந்தார்.

நமது திருச்சபை ஒரு குடும்பம். நாம் எல்லோரும்  அதன் உறுப்பினர்கள்.

நமது குடும்பத்தை நேசிக்கவும்,

அதை வழி நடத்தும் இயேசுவின் பிரதிநிதிகளுக்கு கீழ்ப்படியவும்

எல்லோருக்கும் கடமை இருக்கிறது.

ஆயர்கள் பாப்பரசருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

குருக்கள் தங்களது ஆயர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

விசுவாசிகள் தங்களை வழி நடத்தும் பங்குக் குருவுக்கு
கீழ்ப்படிய வேண்டும்.

கீழ்ப்படிய மறுப்பவர்கள் லூசிபெரைப் பின்பற்றுகிறார்கள்.

கீழ்ப்படிபவர்கள் இயேசுவைப் பின்பற்றுகிறார்கள்.

நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை நினைவில் வைத்துச் செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment