"ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" (மத்.8:2)
***********************************
நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதற்கு தொழு நோயாளியின் செபம் ஒரு உதாரணம்.
கானாவூர் திருமணத்தின்போது மாதாவின் செபத்தை ஒட்டி இருக்கிறது தொழு நோயாளியின் செபம்.
மாதா இயேசுவை நோக்கி,
"இரசம் தீர்ந்துவிட்டது"
என்று மட்டும் சொன்னாள்.
தன் மகன் சர்வ வல்லப கடவுள் என்று அவரைக் கருத்தரிக்கு முன்பே அவளுக்குத் தெரியும்.
"இரசம் ஏற்பாடு செய்யுங்கள்" என்று மகனிடம் சொல்லவில்லை.
அதேபோல தொழுநோயாளியும்
"ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்"
என்று மட்டும் சொன்னான்.
"குணமாக்கும்" என்று சொல்லவே யில்லை.
இயேசு செய்வார் என்று உறுதியாக நம்புமளவிற்கு ஆழமான விசுவாசம்!
இயேசு மாதாவிடம்,
" எனது நேரம் இன்னும் வரவில்லை" என்று சொன்னாலும்,
தாயின் விருப்பப்படியே
ஒரு புதுமை செய்து இரசம் தயாரித்துக் கொடுக்கிறார்.
தொழு நோயாளியைப் பார்த்து
''விரும்புகிறேன், குணமாகு"
என்கிறார்.
அவனும் குணமானான்.
மாதாவும், தொழுநோயாளியும் தாங்கள் இருக்கிற சூழ்நிலையை மட்டும் இயேசுவிடம் சொன்னார்கள்.
அவர்களுடைய தேவை என்ன என்று இயேசுவுக்கு நித்திய காலமாகவே தெரியும்.
ஆகவேதான் அவர்கள் "செய்யுங்கள்" என்று கேட்காமலேயே இயேசு உதவி செய்கிறார்.
நமது விருப்பத்தை நாம் வெளிப்படையாகச் சொல்லாதிருக்கும் போதே,
அதை நிறைவேற்றி வைக்கிற சர்வ வல்லப கடவுள் இயேசு.
"நீங்கள் கேட்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையானது இன்னது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்."
(மத். 6:8)
"ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.
உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.
ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:
இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
( மத். 6:31 - 33)
இயேசு கற்றுத் தந்த செபத்தில் நமக்கு வேண்டியதைக் கேட்க,
"எங்கள் அன்றன்றுள்ள அப்பம் இன்று தாரும்" என்ற ஒரு விண்ணப்பத்தை மட்டும் சொல்லி யிருக்கிறார்.
மற்றவெல்லாம் இறைப் புகழ்ச்சிக்காவும், நமது ஆன்ம நலனுக்காவும் உடையவை.
ஆனால் நாம் நாமாகவே சொல்லும் செபம் முழுவதிலும்
நமது விண்ணப்பங்கள் மட்டும் இருக்கும்.
நமது நேர்ச்சை, திருத் தலப் பயணங்கள், மன்றாட்டுக்கள் எல்லாவற்றிலும்,
நமது பிறருதவி செயல்களில் கூட,
இறைவனைப் பற்றியும், நமது ஆன்மாவைப் பற்றியும் கவலைப் படமாட்டோம்.
நமது தேவைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுவோம்.
"ஆண்டவரே, நான் வேளாங்கண்ணிக்கு வருடா வருடம் திருப்பயணம் செய்கிறேன். எனக்கு ஒரு ஆண் குழந்தையைத் தாரும்."
"ஆண்டவரே, நான் உவரிக்குச் சென்று 13 பேருக்குச் சாப்பாடு போடுகிறேன். என் நோயைக் குணமாக்கும்"
யாராவது,
"ஆண்டவரே, நான் தினமும் திருப்பலிக்குச் சென்று, திருவிருந்தை அருந்துகிறேன்,
என்னைப் பாவத்திலிருந்து காப்பாற்றும், என்னிடம் அன்பை வளரைச் செய்யும்" என்று நேர்ச்சை வைக்கிறோமா?
"நான் உமக்கேற்ற பிள்ளையாய் வளர உதவியருளும்" என வேண்டி,
நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்தாலே
நமக்கு என்ன தேவையோ,
அதை பெல்லாம் நாம் கேளாமலேயே இயேசு தருவார்.
கடவுள் எதையெல்லாம் நமக்குத் தரவில்லையோ
அவை எல்லாம் நமக்குத் தேவை இல்லை என்று அர்த்தம்.
பிறருக்கு உதவ வேண்டும் என்ற ஆசை இருந்தாலே
உதவுவதற்கு என்னவெல்லாம் தேவையே அதை எல்லாம் ஆண்டவர் தருவார்.
அன்னை மரியாளிடம் ஆழ்ந்த விசுவாசம் இருந்தது.
ஒரு கன்னியில் வயிற்றிலிருந்து மெசியா பிறப்பார் என்று மரியாளுக்குத் தெரியும், அவள் வேதாகமம் கற்றவள்.
ஆனால் தன்னிடம் மெசியா பிறப்பதற்காக கன்னியாய் இருக்க வார்த்தைப்பாடு
கொடுக்கவில்லை.
அப்படிக் கொடுத்திருந்தால் கபிரியேல் சம்மனசு மங்கள வார்த்தை சொன்னபோது,
அவ்வார்த்தையைக் அவள் கேட்டுக் கலங்கி,
'இவ்வாழ்த்து எத்தகையதோ' என்று எண்ணி யிருக்க மாட்டாள்.
"இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே"
என்று சொல்லியிருக்க மாட்டாள்.
ஆனால் இது இறைவனின் திட்டம் என அறிந்தவுடனேயே,
"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்றாள்.
இது மரியாளின் ஆழ்ந்த விசுவாசத்தையும், இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதில் அவளுக்கு இருந்த ஆர்வத்தையுமே காட்டுகிறது.
நமது மாதா பக்தி அவளுடைய திருத்தலங்களுக்குச் சென்று வருவதிலும்,
அவளிடம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதிலும்
அடங்கி இருக்க வில்லை.
மாதாவின் ஆழ்ந்த விசுவாசத்தையும், இறைச் சித்தத்தை நிறைவேற்ற வேண்டிய ஆர்வத்தையும்
நமதாக்கித் கொள்வதிலேயே அடங்கியிருக்கிறது.
குழந்தை வரம் கேட்பதற்கும்,
வேலை கிடைப்பதற்கும்,
சம்பள உயர்வுக்கும்,
நோய் குணமாவதற்கும்
இன்னும் நமக்கு வேண்டிய உதவிகளுக்குமாகவே மாதாவைத் தேடுகிறோம்.
புனித அந்தோனியார் இறையறிவில் வல்லுநர், ஆழ்ந்த விசுவாசமுள்ள புனிதர்.
ஆகையினால்தான் அவரால் எண்ணற்ற புதுமைகள் செய்ய முடிந்தது.
இறையறியை வேண்டியும், புனித வாழ்விற்கு உதவ வேண்டியும் யாரும் அந்தோனியாரைத் தேடுவதில்லை.
காணாமற்போன பொருட்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்கும்,
பேய் விரட்டுவதற்கும்தானே தேடுகிறோம்!
அதற்கும் அவர் உதவி செய்கிறார்.
ஆன்மீக உதவியைத் தேடிப் போவோர் சிலரே.
இயேசு புதுமைகள் செய்யும்போது பின்தொடர்ந்த கூட்டம்
அவரது சிலுவையடியில் இல்லையே!
"கேளுங்கள் கொடுக்கப்படும்"
என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
அவரது அருளைக் கேட்போம்,
நமக்கு 'வேண்டிய' எல்லாவற்றையும் அருள்வார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment