Monday, June 1, 2020

"செசாருடையதைச் செசாருக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" (மாற்கு.12:17)



"செசாருடையதைச் செசாருக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" 
(மாற்கு.12:17)
*********************************

இயேசுவிடம் சில பரிசேயரும், ஏரோதியரும்

"செசாருக்கு வரி கொடுப்பது முறையா?"

என்று கேட்டபோது,

அவர்,

"செசாருடையதைச் செசாருக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" 
என்றார்.

கேள்வி கேட்டவர்கள் பதிலைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்கவில்லை,

இயேசுவைப்  'பேச்சில் சிக்கவைக்கும்படி' கேட்டார்கள்.

"முறையா?" என்ற கேள்விக்கு 

முறை என்றோ, 

முறை இல்லை என்றோ

அவர் பதில் கூறுவார் என்று எதிர்பார்த்தார்கள்.

இயேசுவோ

"செசாருக்கு உடையதை செசாருக்குக் கொடுங்கள்".

"கடவுளுக்கு உடையதைக் கடவுளுக்குக் கொடுங்கள்"
என்று கூறினார்.

   பதிலில் உள்ள முக்கியமான வார்த்தை (Keyword)

'உடையதை'.

யூதர்கள் செசாரின் அடிமைத்தனத்தில் இருந்தார்கள். மெசியா வந்து அடிமைத் தனத்திலிருந்து அவர்களை மீட்பார் என்பது அவர்கள் நம்பிக்கை.
 
வரி கொடுப்பது முறை என்று சொன்னால் அவர் அடிமைத் தனத்தை ஆதரிக்கிறார் என்று அர்த்தம். தங்களது விரோதி என்று குற்றம் சாட்டலாம்.

முறை அல்ல என்று சொன்னால் செசாரை எதிர்க்கிறார் என்று அர்த்தம்.

செசாருக்கு விரோதி என்று குற்றம் சாட்டலாம்.

இயேசுவோ

"செசாருக்கு   உடையதை (உரியதை)ச்  செசாருக்குக் கொடுங்கள்" என்றார்.

இதில் உரிமை இல்லாததைக் கொடுக்க வேண்டாம் என்ற பொருளும் இருக்கிறது.

ஆகவே இயேசுவை எந்த வகையிலும் குற்றம் சாட்ட முடியாது.

அவர்கள் கேளாத ஒன்றையும் சொன்னார்.

அவர் எதற்காக வந்திருக்கிறாரோ அதைச் சொன்னார்.

அவர்  அறிவிக்க வந்திருக்கிற நற்செய்தியையும் சொன்னார்.

கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுக்க வேண்டும்.

இதை அவர்கள் கேட்கவில்லை.

கிடைக்கிற சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர் காரியவாதி. (Practical person.)

அவரைப் பிடிக்க வழிதேடியவர்கள் 

அவரை அவரது பேச்சில் சிக்கவைக்க அனுப்பியவர்களிடமும்,

"கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுக்க வேண்டும்." என்றார்.

 தன் நற்செய்தி முழுமையும் மொத்தமாக ஒரே வாக்கியத்தில் கொடுத்துவிட்டார்.

மனுக்குலத்தை இறைவன் படைத்தார்.

 ஆகவே அது முற்றிலும் இறைவனுக்கே உரியது.

 ஆனால் அது தான் செய்த பாவத்தினால் தன்னைத் தானே கடவுளிடமிருந்து  பிரித்து

 சாத்தானிடம் ஒப்படைத்து விட்டது.

 இயேசு அந்த மனுக்குலத்தை மீட்டு

 அதற்கு முற்றிலும்   உரிமையுடைய இறைவனிடமே கொடுக்க மனிதன் ஆனார்.

 இதுவே இயேசு கொண்டுவந்த நற்செய்திப் பணியின் சாராம்சம்.

 கடவுளுக்கு உரிய நம்மை

பாவத்திலிருந்து மீட்டு கடவுளிடமே  ஒப்படைத்ததால் இயேசுவே நமது மீட்பர்.

இதை வேறு விதமாகவும் சொல்லலாம்.

கடவுளாகிய இயேசு தன்னை விட்டு சாத்தானிடம் அகப்பட்ட மனுகுலத்தை தனது உயிரைக் கொடுத்து மீட்டார்.

பரிசேயர்  இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை.

 ஆனால் நாம் அவரது சீடர்கள்.

 சீடர்கள்  குருவின்  வார்த்தைகளை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் நற்செய்தியை வாசிக்கிறோம்.

 நாம் வாசிக்க மட்டும் செய்கிறோமா 

அல்லது 

ஏற்றுக்கொள்ளவும் செய்கிறோமா என்பது அன்றைய நாளின் 

 நமது  நடவடிக்கைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

 நாம் கடவுளுக்கு உரியவர்கள்.

 ஆகவே நம்மை முழுவதும்,

 நமது சிந்தனை, சொல், செயல் முழுவதையும் கடவுளுக்கே கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

 இந்த உலகம் கடவுளுக்கு உரியதே.

கடவுளுக்கு உரியதை கடவுளிடமே கொடுப்பதுதான் முறை.

ஆகவே ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் முதல் வேலையாக

 நாம் வாழும் இந்த உலகையும்,

 அதில் நாம் செய்யும் செயல்கள் அத்தனையையும்,

 கடவுளுக்கே ஒப்புக் கொடுக்க வேண்டும்.

 ஆகவே நாம் இந்த உலகில்  செய்கின்ற   செயல்கள்  எல்லாம் கடவுளுக்கே உரியன.

  நம்மையும் நாம் வாழும் இவ்வுலகையும்  ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்ந்தால்

 நாம் கடவுளுக்காகவே வாழ்கிறோம்.

 அப்படி வாழாவிட்டால் நற்செய்தியை வாசித்தும் பயனில்லை.

கடவுளுக்கு உரியதைக் கொடுக்க வேண்டும்,

சரி,

கடவுளுக்கு கொடுக்கக் கூடாதது எதுவும் இருக்கிறதோ?

"நீ நன்மை செய்தால் உனக்கு வெகுமதி கிடைக்கும்: தீமை செய்தால் உடனே பாவம் உன் வாயிலில் வந்து பதுங்கி நிற்குமன்றோ?"
(ஆதி. 4:7)

காயீன் பாவநிலையில் கடவுளுக்குக் கொடுத்த காணிக்கையை கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லை.

"நன்மை செய்தால் வெகுமதி கிடைக்கும். தீமை செய்தால்
 பாவம் வரும்."

பாவநிலையில் நாம் கடவுளோடு உள்ள உறவை இழந்து விடுகிறோம்.

ஒரு அறையில் Switch போட்ட வுடன் விளக்கு எரிகிறது.

மற்றொரு அறையில் Switch போட்டவுடன் விளக்கு எரியவில்லை.

நமக்குத் தெரியும் மின்வயர் இடையில் Connection விட்டிருந்தால் விளக்கு எரியாது.

அதேபோல்தான் நாம் செய்யும் பாவம் நமக்கும், கடவுளுக்கும் இடையே உள்ள Connecton ஐ வெட்டி  விடுகிறது.

நாம் செய்வது எதுவும் இறைவனிடம் சென்று சேராது.

அவருக்கு உரியதை நம்மால் அவரிடம் கொடுக்க முடியாது.

பாவம் கடவுளுக்கு எதிரான செயல்.

நாம் செய்த பாவம்தானே இறைமகன் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாக இருந்தது!

ஆகவே, நாம் பாவ நிலையில் இருக்கக் கூடாது.

தேவ இஸ்டப்பிரசாத நிலையில் இருக்க வேண்டும்.

பாவம் செய்ய நேர்ந்தால். பாவசங்கீர்த்தனம் மூலம் பாவத்திற்கு இறைவனின் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இங்கே நான் குறிப்பிடுவது சாவான பாவம்.

அற்பப் பாவம் Connection ஐ வெட்டாது. ஆனால் உறவின் நெருக்கத்தைக் குறைக்கும்.

ஆகவே அற்பப் பாவங்கள் இருந்தாலும் அவற்றுக்காக மனஸ்தாபப்பட்டு, மன்னிப்பும் பெற்றுக் கொண்டால் இறைவனோடு நமது உறவு நெருக்கம் ஆகும்.

நாம் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கும் நமது செயல்கள் அதிகமான அருளையும், விண்ணுலகில் அதிக வெகுமதியையும் பெற்றுத் தரும்.

நாம் அழியக் கூடிய பூமியில் பிறந்ததே  அழியாத வாழ்வை சம்பாதிக்கத்தான்.

இறைவனுக்கு மட்டுமே உரிய நம்மை முழுவதையும் அவருக்கே கொடுப்போம்.

அவரில் நிலை வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment