Sunday, May 31, 2020

''மீட்பு இனி வரும் என்ற நம்பிக்கையில் (hope) வாழ்கிறோம்." (உரோ 8:24)

''மீட்பு இனி வரும் என்ற நம்பிக்கையில் (hope) வாழ்கிறோம்."
உரோ. 8:24)
********************************
நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படையாக (foundation) இருப்பது

 விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் 
(Faith, Hope, Charity) 

என்னும் மூன்று தேவசம்பந்தமான புண்ணியங்கள். (Theological Virtues.)

இந்த மூன்று புண்ணியங்களும் 

நம்மை நேரடியாக சம்பந்தப் படுத்தும் 

இறைவன் சம்பந்தப்பட  புண்ணியங்கள்.

ஆகையால் 

 இவை தேவசம்பந்தமான புண்ணியங்கள் எனப்படுகின்றன.

கட்டடத்துக்கு அடிப்படை, (base) அடிப்படை. (foundation).

அந்த அடிப்படைக்கு அடிப்படை அதே அடிப்படைதான்.

கடவுள் ஆதி காரணர். அவருக்கு வேறு காரணம் இருக்க முடியாது.

தேவசம்பந்தமான புண்ணியங்களுக்கு கடவுள் தான் அடிப்படை.

அவை இறைவனிடமிருந்து புறப்பட்டு வந்து நம்மை அவரோடு கட்டிப் போடுகின்றன.

நாம் கடவுளை விசுவசிக்கிறோம்.

கடவுளை நம்புகிறோம்.

கடவுளை சிநேகிக்கிறோம்.

கடவுள் இயற்கையைப் படைத்தார். நமது உடல் இயற்கையைச் சார்ந்தது. 

ஆகவே இயற்கையை நம்மால் புரிந்து கொள்ள இயலும்.

ஆனால் கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்.

கடவுள் இருக்கிறார் என்பதை நமது புத்தியால் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அவரைப் பற்றிய உண்மைகளை அவரே வெளிப்படுத்தினால் அன்றி
நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.


எதுவுமே இல்லாத ஒரு அறையை நாம் பூட்டி விட்டு போய் விடுகிறோம்.

 அரை மணிநேரம் கழித்து வந்து அறையைத் திறந்து பார்த்தால் உள்ளே ஒரு மேஜை கிடக்கிறது.

 நமக்கு ஒன்று மட்டும் புரியும், அந்த மேஜையை யாரோ கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள், அவர்கள் கையில் அறைச் சாவியும் இருக்கிறது என்று.

ஆனால் அந்த ஆள் எப்படிப் பட்டவர் அவரே வந்து சொன்னால்தான் புரியும்.

கடவுளை பற்றியும் அப்படியேதான்.

 கடவுள் தான் எப்படிப்பட்டவர் என்று வெளிப்படுத்தினால் தான் அவரைப் பற்றி நமக்கு தெரியும்.

 கடவுள் நமது அன்னை திருச்சபை மூலமாகவும்,

 அவள் ஏற்றுக் கொண்டிருக்கிற பைபிள் மூலமாகவும்

 தன்னை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.

 நாம் கடவுளைப் பார்த்தது இல்லை.

 ஆனாலும் திருச்சபையையும் பைபிளையும் ஏற்று

 இறைவனை பற்றி அவர்கள் கூறுவதை விசுவசிக்கிறோம்.

 நமது விசுவாசத்திற்கு ஆதாரம் திருச்சபையும் பைபிளும் தான்.

விசுவாசம் இறைவன் நமக்கு தந்த இலவசப் பரிசு.

நாம் விசுவசிக்கும் கடவுளை உறுதியாக நம்புகிறோம்.

அவர் நமக்கு தந்திருக்கிற கட்டளைகள்படி நடந்தால்

 நாம் உறுதியாக ஒருநாள் அவரை விண்ணகத்தில் சந்தித்து, அவரோடு நித்திய காலமாக இணைவோம் என்று நம்புகிறோம்.

நமது நம்பிக்கை உறுதியானதாக இருக்க வேண்டும்.

நாம் விசுவசிக்கும், நம்பும் கடவுளை நமது முழு மனதோடு நேசிக்கின்றோம்.

இந்த மூன்று புண்ணியங்களின் அடிப்படையில்தான் 

நமது ஆன்மீக வாழ்க்கையும், மீட்பும் அடங்கி இருக்கிறது.

புனித சின்னப்பர் கூறுகிறார்,

"மீட்பு இனி வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்."
உரோ. 8:24) என்று.

நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலை பெற்று இறைவனோடு விண்ணகத்தில் இணைவதைத்தான் மீட்பு என்கிறோம்.

நாம்  மீட்புப் பெறுவோம் என்ற  உறுதியான நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் விசுவசிக்கும் கடவுள் உறுதியாக நம்மை மீட்பார் 
என்ற நம்பிக்கை நமது வாழ்வின் ஒவ்வஒவ்வொரு விநாடியும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை இருப்போர் என்ன நேர்ந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்வர்.


"என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள்."
(1 தெசெ. 5:18)

என்பது வேத வாக்கு


"என்ன நேர்ந்தாலும்" என்பதில் நமக்கு நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் அடங்கும்.

இன்பமோ, துன்பமோ,
இலாபமோ, நட்டமோ,
வெற்றியோ, தோல்வியோ,
வியாதியோ,  நலமோ,
வாழ்வோ, சாவோ

என்ன நேர்ந்தாலும்,

அது இறைவனின் பராமரிப்பினால்

நமது ஆன்மீக நலனுக்காக

இறைவனின் நித்திய திட்டப்படி, (According to the eternal plan of God)

நடக்கிறது.

இறைவனை நமது நல்ல தந்தை என்று ஏற்றுக்கொண்டால்,

 அவர் நமக்காக செய்பவை எல்லாம்  நல்லவையே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்,

 நல்லது நடந்தால் நன்றி கூற வேண்டாமா?

இறைவன் மீது விசுவாசம் மட்டுமல்ல 

நம்பிக்கையும் இருந்தால் தான் 

நமக்கு நேர்பவை எல்லாம் நல்லவை என்று ஏற்றுக் கொள்ள முடியும்,

மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும்.

பேருந்தில் ஏறும்போதே,

' Driver குடிகாரன் மாதிரி தெரியுது, நாம் வீட்டிற்குப் போய்ச் சேருவோமா?.
அல்லது போய்ச்சேருவோமா?'

என்று சந்தேகம் வந்தால் பேருந்தில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

ஒருவன் மருத்துவமனையில் 
treatment பெற்றுக்கொண்டு இருக்கிறான்.

 அவன் காதில் விழும்படி டாக்டர்

" நம்பிக்கை இல்லை"

 என்று கூறினார்.

 ஆனால் நோயாளி மகிழ்ச்சியாக இருந்தான். 

நண்பன் கேட்டான்,

" ஏண்டா, டாக்டர்
'நம்பிக்கை இல்லை'ன்னு சொல்லுகிறார். நீ சிரிச்சிக் கிட்டு இருக்கிற?"

"எனக்கு நம்பிக்கை இருக்கிறது."

"என்ன நம்பிக்கை?"

"இருந்தால் இவ்வுலகம், இறந்தால் மறுவுலகம்.

கடவுள் எங்கும் இருக்கிறார்.

எங்கிருந்தாலும் இறைவனோடுதான் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கடவுளை நினைக்கிறேன்.  மகிழ்ச்சியாக இருக்கிறேன்."

மகிழ்ச்சிக்கு இது போதாதா?

விவசாயி பையன். அவர் படிக்கவில்லை.  பையனைப் படிக்கவைத்து அரசாங்க வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆசையோடு பள்ளிக்கு அனுப்புகிறார்.

 அவன் S.S.L.C யில் fail  ஆகிவிட்டான்.

ஆனால் வருத்தப் படவே இல்லை.

அப்பா கேட்கிறார்,

"fail ஆகிவிட்டோமே என்ற கவலையே இல்லையா?
pass பண்ணாம எப்படி வேலைக்குப் போக முடியும்?"

" நான் நமது வயலில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான் கடவுளின் திட்டம் என்று நினைக்கிறேன்.

'எல்லாம் அவன் செயல்' என்று அடிக்கடி கூறுவீர்களே.

இதுவும் அவன் செயல்தான்."

இப்போது குரோனா பயம் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது,

 இறைவன் மேல் நம்பிக்கை இருந்தால் பயம் இருக்காது.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் 

என்ன நேர்ந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.


 எது நேர்ந்தாலும் நன்றியோடு இருப்பார்கள்.

 நாமும் இறைவனை நம்புவோம்.

 எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

நமது வாழ்வின் நோக்கம் மீட்பு மட்டும்தான்.

இவ்வுலகில் இறைவன் திட்டத்தால் நமக்கு நடைபெறும் எல்லா நிகழ்வுகளும் 

நம்மை மீட்பை நோக்கியே வழிநடத்துகின்றன.

இறைவனை மீறி எதுவும் நடக்காது.

என்ன நேர்ந்தாலும் நமக்கு மீட்பு உறுதி என்று நம்புவோம். மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

 













 

No comments:

Post a Comment