"நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்."
(அரு. 15:4)
** ** ** ** ** ** ** ** ** **
ஆழ்ந்து சிந்தித்தால் கடவுள் நம்மை அவருடைய சாயலாகப் படைத்ததின் அர்த்தமும், நோக்கமும் புரியும்.
தாயைப் போல் பிள்ளை என்பது தமிழ் மொழி.
குழந்தையின் முகத்தைப் பார்த்தே அதன் தாய், தந்தை யார் என்று யூகிப்பது நமது இயல்பு.
"நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக:"
( ஆதி. 1:26)
கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார்.
தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார்.
(ஆதி 1:27)
உலகின் மற்றப் பொருட்களை "உண்டாகுக" என்ற ஒரே சொல்லால் படைத்த இறைவன்,
மனிதனை "படைப்போமாக"
என்று திட்டமிட்டு, அப்புறம்
"படைத்தார்".
நோக்கத்திற்காகவே திட்டமிடுவோம்.
இறைவனின் நோக்கம் எதுவாக இருக்கிருக்கும்?
1. பைபிள் வசனத்தை வாசித்த உடனே புரிந்து கொள்ளலாம் நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்று.
2. வெறுமனே சாயலாக என்று கூறவில்லை.
'தெய்வச் சாயலாகவே' என்று பைபிள் கூறுகிறது.
இயேசு இறைத்தந்தை நித்தியமாக பெற்ற பிள்ளை.
(begotten Son)
நாம் தந்தையால் படைக்கப்பட்டு மக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்.
(adopted Children)
தந்தையிடம் பிறந்த மகன் கடவுள். தந்தையும் மகனும் பரிசுத்த ஆவியுடன் ஒரே கடவுள்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நமக்குத்
தெய்வச் சாயலைத் தந்திருக்கிறார் என்றால் தந்தையின் அன்பும் (Love) தாராளத்தன்மையும்
(generosity) எவ்வளவு பெரியது!
கடவுள்தன்மையால் அவருக்கு முற்றிலும் உரிய விண்ணகத்துக்கு
நம்மை வாரிசுகள் ஆக்குவதற்காகவே நமக்கு தெய்வச் சாயலைத் தந்திருக்கிறார்.
அதாவது நாமும் விண்ணகத்திற்கு சென்று இறைவனோடு நிரந்தரமாக வாழ வேண்டும்
என்ற நோக்கத்துடன் தான் நமக்கு அவருடைய சாயலைப் தந்திருக்கிறார்.
3.நாம் எப்படி வாழவேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுப்பதற்காகத் தான் நமக்கு அவருடைய சாயலைத் தந்திருக்கிறார்
இயேசு
"நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார்.
நான் சொல்வதை நம்பாவிடில், செயல்களின் பொருட்டேனும் நம்புங்கள்."
என்று கூறினார்.
"நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார்."
என்று கூறியதன் மூலம் பரிசுத்த தம திரித்துவத்தின் ரகசியத்தை நமக்கு வெளிப்படுத்தினார். (Revealed)
"நான் என் தந்தையினுள்ளும்,
நீங்கள் என்னுள்ளும்,
நான் உங்களுள்ளும் இருப்பதை
நீங்கள் அந்நாளில் அறிந்துகொள்வீர்கள்."
இவை இயேசு சீடர்களிடம் கூறிய வார்த்தைகள்.
இயேசு தந்தையினுள் இருப்பது இறைத்தன்மை.
தந்தை கடவுள்,
மகன் கடவுள்,
இருவரும் பரிசுத்த ஆவியோடு ஒரே கடவுள்.
மூன்று ஆட்களும் ஒருவர் ஒருவருக்குள் இருக்கிறார்கள்.
இது இறைத்தன்மை.
இயேசு கடவுள்.
அவருடைய சீடர்கள் கடவுளின் சாயலை உடையவர்கள்.
நாமும் கடவுளின் சாயலை உடையவர்கள் தான்.
அது மட்டுமல்ல நாமும் சீடர்களாக வாழ வேண்டியவர்கள்.
இயேசு சீடர்களைப் பார்த்து கூறிய வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.
இயேசு நம்மைப் பார்த்து,
"நீங்கள் என்னுள்ளும்,
நான் உங்களுள்ளும் இருப்பதை"
என்று கூறும்போது
நாம் கிறிஸ்தவர் என்ற பெயருக்கு பொருத்தமாக வாழ வேண்டும்,
அதாவது கிறிஸ்துவின் சாயலை உடையவர்கள் என்பதை மனதில் கொண்டு
அந்த சாயலுக்கு எந்தவித பழுதும் ஏற்பட்டுவிடாமல் பார்த்து வாழ வேண்டும் என்று இயேசு நமக்கு கற்பிக்கிறார்.
நாம் நமது பிள்ளைகளை பார்த்து,
"எனது பெயருக்கு களங்கம் வந்துவிடாமல் நடந்துகொள்"
என்று புத்திமதி சொல்வது போல இயேசுவும் சொல்லுகிறார்.
4.இன்னும் ஒரு படி மேலே போய் இயேசு நம்மிடம்,
"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
என்று கூறுகிறார்.
நிறைவு (perfection) இறைவனுக்கு மட்டுமே உரியது.
நாமோ மனிதர்கள்.
குறை உள்ளவர்கள்.
குறையுள்ள நம்மைப் பார்த்து,
" தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக இருங்கள்" என்று இயேசு சொல்லும்போது,
நாம் அவரால் படைக்கப் பட்டவர்களாக இருந்தாலும் நம்மைத் தனது பிள்ளைகளாகவே கருதி அறிவுரை கூறுகிறார்.
தந்தையை role model ஆக வைத்து வாழச்சொல்கிறார்.
குறைவுள்ள நாம் நிறைவை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
ஒரு பெரிய பாத்திரம் நிறைய பால் இருந்தது.
ஒரு சிறிய தம்ளரில் தண்ணீர் இருந்தது.
நான் தண்ணீரை நோக்கி,
"உன்னால் பாலாக முடியுமா?" என்று கேட்டேன்.
"முடியுமே" என்றது.
"எங்கே? ஆகு பார்ப்போம்." என்றேன்.
தண்ணீர் தன்னையே பாலுக்குள் ஊற்றிக் கொண்டது!
அதே technique ஐ நாமும் பின்பற்ற வேண்டியது தான்!
Let us live in union with God.
"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே."
புனித சின்னப்வருடைய வார்த்தைகளை நமது ஆக்கிக் கொள்வோம்.
கிறிஸ்து தந்தையோடு ஒரே கடவுள்.
ஆகவே கிறிஸ்து நம்மில் வாழும்போது தந்தையும் நம்மோடு வாழ்கிறார்.
"நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்.''
இயேசு நம்மில் நிலைத்திருப்பதுபோல
நாமும் அவரில் நிலைத்திருக்க வேண்டும்.
இயேசு நம்மோடு நிலைத்து இருக்கிறார், அதாவது, எப்போதும் இருக்கிறார்.
நாம் நமது வீட்டில் தானே எப்போதும் இருப்போம்!
வேறு எங்கு சென்றாலும் அங்கு உள்ள வேலையை முடித்துவிட்டு நமது வீட்டிற்கு திரும்புவோம்.
உறவினர் வீடாக இருந்தாலும் சரி,
நண்பர்களது வீடாக இருந்தாலும் சரி,
எப்போதும் இருக்க மாட்டோம். நமது வீடு மட்டுமே நமக்கு நிரந்தரம்.
நமது உள்ளத்தில் இயேசு நிலைத்து இருக்கிறார் என்றால்
இயேசுவே நமது உள்ளமாகிய இல்லத்திற்கு உரியவர்.
நமது உள்ளம் என்று நாம் சொல்லும்போது
நாம் நம் உள்ளத்தில் வாழும் இயேசுவிற்கு உரியவர்கள் அதாவது, பிள்ளைகள்.
ஓய்வு எடுப்பதற்காக இயேசு நம் உள்ளத்தில் குடி இருக்கவில்லை
நம்மை அன்பு செய்யவும், பராமரிக்கவும், வழி நடத்தவும், ஆலோசனைகள் நல்கவும்,
தவறுகள் செய்யும்போது திருத்தவும் நம் உள்ளத்தில் இருக்கிறார்.
நமக்கென்று ஒரு உள்ளம் இருப்பதுபோல
இயேசுவுக்கென்றும் ஒரு உள்ளம் இருக்கிறது.
அவர் நம் உள்ளத்தில் நிரந்தரமாக இருப்பது போல,
நாமும் அவரது உள்ளத்தில் நிரந்தரமாக இடம் பிடிக்க வேண்டும்.
அவரை அன்பு செய்யவும், அவர் சொல்வதைக் கேட்கவும்,
அவர்வழி நடக்கவும், அவரை ஆராதிக்கவும், அவர் செய்யும் நன்மைகளுக்கு நன்றி செலுத்தவும் அவரது உள்ளத்தில் நாம் வாழ வேண்டும்.
அவர் நம்முள்ளும், நாம் அவருள்ளும் நிரந்தரமாக வாழவேண்டும்.
இதுதான் இயேசுவோடு இணைந்த வாழ்க்கை.
இத்தகைய வாழ்க்கையை வாழத்தான் நாம் உலகில் வாழ்கிறோம்.
நமது இந்த வாழ்வு விண்ணுலகிலும் தொடரும்.
இயேசு நம்மில் நிலைத்திருப்பதுபோல
நாமும் அவரில் நிலைத்திருந்தால்
நமக்கு நிலை வாழ்வு உறுதி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment