Sunday, May 24, 2020

God's Love Letter.

God's love letter.
**  **  **   ** ** **   ** ** ** **
அன்பே வடிவான திரியேக தேவனுக்கு,

என்றும் உங்கள் நினைவாகவே இருக்கும் அன்பு மக்கள் அன்பென்னும் மை தொட்டு ஆசை ஆசையாய் எழுதும் அன்புக் கடிதம்,

முதலில் உமது திருப்பாதங்களுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்!

உமது அன்பு மடல் கிடைக்கப் பெற்றோம்.

உமது எல்லா பிள்ளைகள் கையிலும் உமது மடல் இருக்கிறது.

எல்லோருமே  அதை ஆசையோடு வாசிக்கிறோம்.

காலையில் எழுந்ததுமே உமது அன்புக் கடிதத்துக்கு ஆசை முத்தம் கொடுத்து விட்டு, திறந்து வாசிக்கிறோம்.

இதில் விநோதம் என்ன என்றால், உமது கோடிக்கணக்கான, பிள்ளைகளுள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாசிக்கிறார்கள்.

சிலர் தினம் ஒரு பக்கமாக வாசிக்கிறார்கள்,

சிலர் தினம் ஒரு அதிகாரமாக வாசிக்கிறார்கள்.

சிலர் ஒரு வசனமாக வாசிக்கிறார்கள். அவர்கள் உமது கடிதத்தை எடுக்கிறார்கள். கண்ணை மூடிக் கொண்டு அதைத் திறந்து கண்ணில் பட்ட வசனத்தை வாசித்துவிட்டு முடி விடுவார்கள். வேடிக்கையாக இல்லை?

பலர் உமது பெயரால் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் தாய்த் திருச்சபை தந்த குறிப்புகளின்படி வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

பைபிள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி விட்டது.

வாசிப்பதில் ஒன்றும் குறைவில்லை,

ஆனால், அன்புத் தந்தையே,

வாசித்து விட்டு,

 நீங்கள் என்ன நோக்கத்திற்காக அன்புக் கடித்தத்தை எழுதினீர்களோ

 அதை  நிறைவேற்றாமல், அதற்கு எதிர்மாறாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தந்தையே, நீங்கள் அன்பே உருவானவர். நீங்கள் எழுதியிருப்பது அன்பை மட்டும் தாங்கி வந்திருக்கும் உன்னதமான அன்புக் கடிதம்.
 (Love Letter)

நீங்கள் கடிதத்தை எழுதியிருப்பதே , 

ஒருவரை ஒருவர் அன்பு செய்து, 

சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தானே!

ஆனால் உமது மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

 அன்பின் பெயரால் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

உமது கடிதத்தை கையில் வைத்துக்கொண்டே ஒருவர் குடுமியை ஒருவர் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

"உங்களுக்குச் சமாதானம் உண்டாகக்கடவது"

என்ற உங்கள் கடித  அறிவுரையை வாசித்துவிட்டு சமாதானத்துக்கு சமாதி கட்டிவிட்டார்கள்!

'எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக.'

என்ற இயேசுவின் வார்த்தைகளை வாசித்துவிட்டு,

 ஆயிரக்கணக்கான பிரிவுகளாய் பிரிந்து கிடக்கிறார்கள்.

 கேட்டால் உமது  கடிதப்படியே வாழ்கிறோம் என்று கூறுகிறார்கள். 

" தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"

என்ற இயேசுவின் வார்த்தைகளை வாசித்தும்

  எல்லோரும் ஒன்றாக இல்லையே!

இயேசுவை ஏற்றுக்கொள்வார்களாம்.

 ஆனால் அவரது பிரதிநிதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்.

 அவரது பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவரை ஏற்றுக் கொள்ளாததற்குச் சமம் தானே!

இயேசுவே,

. "என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று இராயப்பரிடம்"  கூறினீர்களே,
 பிரிந்துபோன ஆடுகளை மேய்ப்பது யார்?

 அவை ஆயனில்லா ஆடுகளாக ஆங்காங்கே அலைவதால் ஓநாய்களுக்கு இறையாகி விடுகின்றனவே!

அவர்கள் மேல் பாவமாக இருக்கிறது.

 ஒரே மந்தைக்குள் வந்தால்தானே தொலைந்துபோன ஆடுகளுக்கு பாதுகாப்பு.

 தேவனே, உங்களது அன்பு நிறைந்த கடிதத்தை வாசித்துவிட்டு

 அதில் அன்பு இருக்கிறது என்பதை தெரிந்தும் 

அதை எடுத்துக் கொள்ளாமல்

 அன்பே இல்லாதவர்கள் போல 

மந்தையை விட்டு விட்டு 

திக்குத் திக்காய் உங்கள் ஆடுகள் பிரிந்து போவதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியும்.

 ஆனாலும் எங்களுடைய மனதைத் திறந்து உங்களோடு பேச வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது, தந்தையே.

தந்தையே, உங்களது கடிதத்தின் மூலமாகத்தான் உங்களைப்பற்றி எங்களுக்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

படைக்கப்படும் முன் நாங்கள் ஒன்றும் இல்லாமல் இருந்தவர்கள், உங்களைப் பற்றி எங்களுக்கு எதுவும்  தெரியாது.

படைக்கப்பட்ட பின்னும் நீங்கள் எங்களுக்குப் பரிசாக அளித்திருந்த புத்தியைக் கொண்டு

 எங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று மட்டும் தெரியும்.

 எங்கள் புத்தி சொன்னது,

 "காரணம் இல்லாமல் காரியம் இல்லை.

படைப்பவர் இல்லாமல் படைப்பு இல்லை."

உங்களது கடிதத்தை வாசித்த பின்புதான் 

அது தந்த செய்தியிலிருந்துதான் நீங்கள் திரியேக தேவன் என்றும்,

அன்பு மயமானவர் என்றும்,

 உங்களது அளவுகடந்த அன்பின் காரணமாகவே அன்பு செய்வதற்கென்றே எங்களை படைத்தீர் என்றும்,

  உங்களை அன்பு செய்வது மட்டுமே எங்களது பணி என்றும் தெரிந்து கொண்டோம்.

அதுமட்டுமல்ல

  நாங்கள் சரியாக பயன்படுத்த      நீங்கள் தந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி உங்களுக்கு விரோதமாக பாவங்கள் செய்தோம் என்றும்,

 எங்களது பாவத்திற்கு பரிகாரமாக இயேசுவே எங்களுக்காக மனிதனாகப் பிறந்து  

எங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே சிலுவை மரத்தில் பலிகொடுத்து

 எங்களை இரட்சித்தார் என்பதையும் அறிந்து கொண்டோம்.

இவ்வளவும் தெரிந்துகொண்ட பின்பும் 

ஒற்றுமையுடனும் அன்புடனும் பணி செய்து வாழ வேண்டும் என்று நீங்கள் படைத்த நாங்கள்

உங்களது பெயரைச் சொல்லிக்கொண்டே

 ஒற்றுமையும்  அன்பும் இன்றி பிரிந்து கிடக்கிறோம் என்றால்

அதற்கு முக்கிய காரணம் உங்கள் கடிதம் மூலமாக நீங்கள் தந்த செய்தியை (message) எங்கள் இஸ்டத்துக்குப் புரிந்து கொண்டதுதான்.

கடிதத்தை எழுத மனிதர்களையே கருவியாகப் பயன்படுத்தி யுள்ளீர்கள்.

அவர்கள் நாங்கள் பேசும் மொழியிலேயே 

நீங்கள் அவர்களுக்கு உள்ளுணர்வுகள் (inspirations) மூலமாக அளித்த செய்திகைகளை எழுதியுள்ளார்கள்.

செய்தி உங்களுடையது, ஆகவே தெய்வீகமானது.

மொழி மனிதனுடையது.  

Message is divine.
Language is human.

தந்தையே, நீங்களே உங்களைப் பற்றி உங்களது அன்பு கடிதத்தின் மூலமாக வெளிப்படுத்தி இருந்தாலும்

 அளவு கடந்த உங்களை அளவுள்ள எங்களால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது.

 மேலும் எங்களுடைய மொழி எங்களுடைய லெளகீக அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்காக நாங்கள் உருவாக்கியது.

 அதைக் கொண்டு தங்களது தெய்வீக செய்திகளைத்
தந்திருப்பதால் 

தாங்கள் தரும் செய்தியை நாங்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமோ

அப்படிப் புரிந்து கொள்ள

 அதை விளக்க தங்களால் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பு இருந்தால் மட்டுமே முடியும்.

 அப்படி பட்ட அமைப்புதான்
தங்களது அன்பு மகனால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபை.

அவர் நற்செய்தியை அறிவிக்க நியமித்த சீடர்களும்

 அவர்களுடைய வாரிசுகளும்  இன்றைய வரை தங்கள் கடமையை ஒழுங்காகத்தான் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஆனால்,தங்களுடைய கடிதத்தை எல்லோரும் வாசித்து பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு 

நிறைய  பிரதிகள் எடுத்து ஆளுக்கொரு பிரதி கொடுத்திருக்கிறார்கள்.

ஆகவே எல்லோரும் கடிதத்தை வாசிக்கிறார்கள்.

இப்பொழுது நான் சொல்லப் போகும் கருத்தை, ஆண்டவரே, உங்களிடம் மட்டும் தான் சொல்கிறேன். மற்றவர்கள் நான் சொல்வது சரி இல்லை என்றுதான் சொல்வார்கள். 

நான் சொல்லப்போவது தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.  

இன்று நிறைய பேர் வழிதவறி போவதற்கு இன்றைய மொழிபெயர்ப்புகளும்

 ஆளுக்கொரு கடிதம் இருப்பதும் தான் காரணம்.

 மொழிபெயர்ப்புகளால் மூல நூலின் கருத்துக்களை அப்படியே மாறாமல் தர இயலாது.

  ஆளுக்கொரு பைபிள் வைத்திருப்பது ஆளுக்கொரு கத்தி வைத்திருப்பதற்குச் சமம்.

பயன்படுத்த தெரியாதவன் கையில் கத்தி இருந்தால் என்ன ஆகும் என்று சொல்லத் தேவை இல்லை.

பயன்படுத்தத் தெரியாதவன் கையில் உங்கள் கடிதம் (பைபிள்) இருந்தாலும் ஆபத்துதான்.

பைபிள் வாசிப்பதற்கு எழுதப்படிக்க தெரிந்தால் மட்டும் போதாது.

 வசனங்களுக்கு உரிய பொருள் கொடுக்கத் தெரிய வேண்டும்.

 குருக்கள் பல ஆண்டுகள் விவிலிய பயிற்சி பெற்றபின்புதான் 

 போதிப்பதற்கு உரிய தகுதி பெற்று பட்டமும் பெறுகின்றார்கள்.

ஆனால் சாதாரண மக்கள்  ஒரு பயிற்சியும் பெறாமல் எடுத்த எடுப்பில் பைபிளை எடுத்து வாசித்தால் அவர்கள் வசனங்களுக்கு பொருள் கூற மாட்டார்கள், வார்த்தைகளுக்குப் பொருள் கூறுவார்கள்.

ஒருவன் திருப்பலிக்கு வராமல் இருப்பதற்கு பைபிள் வசனத்தை காரணம் காட்டுகிறான்!

'உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் நமக்கு விருப்பமே இல்லை."
(ஆமோஸ் 5:21)

"வழிபாட்டுக் கூட்டங்களில்  விருப்பமே இல்லை என்று ஆண்டவரே கூறுகிறார்.

ஆண்டவருக்கு விருப்பம் இல்லாத இடங்களுக்கு நான் வர மாட்டேன்." என்கிறான்!

தாங்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களது கடிதத்தையே ஆதாரமாகக் காட்டும் ஆசாமிகள் கையில் அது இருந்து என்ன பயன்?

ஆண்டவரே, எழுத வாசிக்க தெரியாதவன் கூட
கோவிலுக்கு ஒழுங்காக வந்து

 சாமியார் வாசிப்பதையும்,

  அவர் கூறும் விளக்கத்தையும் கேட்டு நல்ல கிறிஸ்தவனாக வாழ்வான்

அரைகுறைகளின் கையில் இருக்கும் உங்கள் கடிதம் படும் பாடு இருக்கிறதே!  

(தொடரும் )

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment