Tuesday, May 5, 2020

"இதோ வருகிறேன்."

"இதோ வருகிறேன்."
**  **  **   ** ** **   ** ** ** ** **
முன்பெல்லாம் கோவிலுக்குச் சென்று திருப்பலியில் 
பங்கெடுத்துக் கொள்வோம்.

'சென்று வாருங்கள், பூசை முடிந்தது." என்று சாமியார் சொன்னதோடு அன்றைய பூசை முடிந்துவிடும்.

ஆனால் இப்போது youtube ல் தான் ' பார்க்க வேண்டி இருக்கிறது. 
'
அதிலும் ஒரு நன்மை இருக்கிறது. 

கோவிலுக்கு சென்றால் 

ஒரு பூசை மட்டும்தான்,

அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் தான் பார்க்க முடியும்.

ஆனால் youtube ல் நினைத்த நேரத்தில்,

 நினைத்த கோவிலுக்குச் சென்று, 

நினைத்த சாமியார் வைத்த பூசையை,

எப்போது வேண்டுமானாலும்,

 எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.

எத்தனை பிரசங்கங்கள் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம்.

ஒரு சாமியாருடைய பிரசங்கம் கேட்பதற்கு நன்றாக இருந்தால்

 பல முறை மாறி மாறி  கேட்டுக்கொள்ளலாம்.

கோவிலில் சாமியார் வைக்கிற பிரசங்கத்தை, 

"சாமி, பிரசங்கம் நல்லா இருக்கு.

 திரும்பவும் வையுங்க, சாமி"ன்னு கேட்க முடியுமா?


youtube ல் எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்.


 கொரோனாவுக்கு நன்றி!

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

செவ்வாய்க்கிழமை பூசையின் பிரசங்கத்தின் போது 
Rev. Fr.Albert (அருங்கொடை இல்லம், திருச்சி) சொன்ன ஒரு ஜோக் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

காரணம் அதில் வரும் ஒரு வாக்கியம் எனது ஆன்மீக சிந்தனைக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.

புதிதாக பட்டம் பெற்ற ஒரு சாமியார்,

 சொந்த   ஊர்ல முதல் பூசை.

 முதல் பிரசங்கம்.

கோவிலில் நல்ல கூட்டம்.

அந்த ஊர்ச்  சாமியார் அல்லவா!

அவரது பாட்டிக்கு பேரனுடைய பிரசங்கத்தை கேட்கணும்னு  ரொம்ப ஆசை.

முதல் வரிசையில் வந்து உட்கார்ந்துட்டாங்க.

சொந்த ஊர்ல வைக்கிற முதல் பிரசங்கமாக இருந்ததினால சாமியார் பிரசங்கத்துக்கு ரொம்ப நன்றாக தயாரித்திருந்தார்.

பிரசங்கம் வைக்க சாமியார்
பீடத்தின் முன்னால் வந்து நின்றுகொண்டார். 

பாட்டி அவருக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு சாமியின் வாயை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

 சாமியாருக்கு கூட்டத்தைப் பார்த்தவுடன் தயாரித்தது எல்லாம் மறந்து விட்டது.

எப்படியும் ஆரம்பிக்க வேண்டுமே!

"இதோ வருகிறேன்."

அடுத்த வார்த்தை வரவில்லை.

"இதோ வருகிறேன்."

ஊஹூம்! ஒன்றும் வரவில்லை.

சாமியாருக்கு வியர்த்துக் கொட்டியது.

மயக்கம் வருவது போலிருந்தது.

"இதோ வருகிறேன்."

மயக்கம் வந்துவிட்டது. அப்படியே சாய்ந்து விட்டார் முன்னால் அமர்ந்திருந்த பாட்டியின்  மடிமீது.

சிறுவனாய் இருந்தபோது அந்த பாட்டியின் மடியில விளையாடியவர்தான்.

இப்போ நிலைமை வேறு.

"யாராவது கொஞ்சம் தண்ணி கொண்டார்களேன்" பாட்டி கூச்சல் போட ஒரு பையன் தண்ணீர் கொண்டுவந்தான்.

பாட்டி பேரன் முகத்தில் தண்ணீரைத் தெளித்தார்.

சாமியார் மயக்கம் தெளிந்து எழுந்தார்.


  '"மன்னிச்சிடுங்க பாட்டி.

 மயங்கி விழுந்திட்டேன்."

 "அட போங்க சாமி. 

நீங்கதான் 

இதோ வாரேன்,
 இதோ வாரேன், இதோ வாரேன்னு 

 ஒன்னுக்கு மூணு தடவ சொல்லிட்டுதான் விழுந்தீங்க. 

 நான்தான் கிழவி,

  கவனிக்காம இருந்துட்டேன்,

 நீங்க என்ன பண்ணுவீங்க?"

நான் கொஞ்ச நேரம் சிரித்தேன்.

Father "இதோ வருகிறேன்." 
என்ற வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டார்.


''இப்படித்தாங்க ஆண்டவரும் 
"இதோ வருகிறேன்." என்று சொல்லிக்கொண்டே பலமுறை நம்மிடம் வருகிறார்.

 நாம்தான் அந்த பாட்டியைப் போல

 அவர் சொல்வதையே கவனிப்பதே இல்லை.

என்றார்.

உண்மைதான்.

நமது விண்ணக பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே நம் ஆண்டவர் நம்முடனே பயணிக்கிறார்.

 அது நமக்கு விசுவாச அடிப்படையில் தெரியும்.

 ஆனாலும் நாம் நமக்கு துணையாக, உதவியாளராக, ஆலோசகராக, மீட்பராக நம்மோடு வரும் அவரைக் கவனிப்பதே இல்லை.

கவனிக்காமல் இருந்துவிட்டு எப்போதாவது பிரச்சனை இருந்தால்,

"ஆண்டவரே கருணைக் கண்கொண்டு என்னைப் பாரும், தயவுகூர்ந்து பாரும்,"

என்று கெஞ்சுவோம்.

"மகனே, 24 மணி நேரமும் உன்னோடு தான் இருக்கிறேன்.

 உனது விசுவாசம் என்ன ஆயிற்று?

 நீ இமை மூடினாலும் நான் சதா விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்."

என்று இறைவன் நமது உள்ளத்தில் கூறுவதையாவது நாம் கேட்க வேண்டும்.

இயேசுவின் சீடர்களோடு ஒப்பிட்டால் நாம் பரவாயில்லை போல
 தோன்றுகிறது. 

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

நாம் குருக்களைப் போல மூன்று ஆண்டுகள் தேவ சாஸ்திரம் படிக்கவில்லை.

நமக்குத் தெரிந்த தேவ சாஸ்திரப் புத்தகம் சின்ன குறிப்பிடம் மட்டும் தான்.

நமக்கு தெரியும் இறைவன் எங்கும் இருக்கிறார் என்று.

அறிவுபூர்வமாக தெரிந்ததை இதயப்பூர்வமாக உணர மறந்து விடுகிறோம்.

அவ்வளவுதான்.

ஆனால் இயேசுவின் சீடர்கள் மூன்று ஆண்டுகள் அவரோடு இருந்து அவரையே படித்தவர்கள்.

 அவர் கடவுள் என்று அவர்களுக்கு தெரியும்.

"நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" (மத்.16:16)
என்று இயேசுவிடமே அறிக்கையிட்டவர் புனித இராயப்பர்,

 கடவுள் எங்கும் நிறைந்தவர் என்ற அடிப்படை உண்மை அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது.

ஏனெனில் அவர்களுக்கு ஆசானாக இருந்தவர்  கடவுளே. 

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.".
(அரு. 6:68)

என்று அறிக்கை இட்டவரும் இராயப்பர்தான்

முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் இயேசுவிடம் தான் இருக்கின்றன என்று அறிக்கை இட்டவர்,

இயேசு மரித்த மூன்றாவது நாள் உயிர்ப்பதாகச்  சொன்ன வார்த்தையை எப்படி மறந்தார்?

மறக்காது இருந்திருந்தால் அவர் ஏன் வெற்றுக் கல்லறைக்கு ஓட வேண்டும்?

இயேசு கட்டாயம் தம்மைப் பார்க்க வருவார் என்று நம்பி காத்திருந்திருக்க வேண்டியதுதானே?

சரி அதுதான் போகட்டும்.

 இயேசு கடவுள்.

 கடவுள் எங்கும் இருக்கிறார் எந்த அடிப்படை உண்மையும் அவருக்கு தெரியும்தானே.

தெரிந்தவர் மாதிரியா நடந்துகொண்டார்!

இயேசு உயிர்ப்பார் என்று தெரிந்திருந்தும் ஏன் இரண்டு சீடர்கள் டமாஸ்கஸ் நகருக்கு  சென்றார்கள்? 

அவர்களுடனே சென்ற ஆண்டவரை  அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியலையே!

சரி, இப்போ நம்ம கதைக்கு வருவோம்.

நமது விண்ணகப் பயணம் ஆன்மிக பயணம்.

உலகில் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, நாம் செல்லக்கூடிய பயணத்தை போன்றது அல்ல இது.

இது நமது ஆன்மாவின் பயணமாகையால் வெளி உலகிற்கு தெரியாது.

பயணத்தை தொடங்கி வைத்த இறைவன் நம்மைத் தனியாக விடுவதில்லை.

 இவ்வுலகில் பயணம் முடிந்து விண்ணுலகை அடையுமட்டும் நம்முடனே வருகிறார்.

விண்ணுலகை அடைந்த பின் இறைவனோடு நிரந்தரமாக தங்கி விடுவோம்.

பயணத்தின்போது நம்மோடு வரும் இறைவன் 

நம்மோடு பேசுகிறார்,

 நாம் பேசுவதைக் கேட்கிறார்,

 நமக்கு ஆலோசனைகள் நல்குகிறார்,

நமக்கு உற்சாகம் ஊட்டுகிறார்,

ஆன்மீக உணவு அளிக்கிறார்,

நம்மை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்.

நாம் ஏதாவது உதவிக்காக ஆண்டவரை அழைக்கும்போது, 

"மகனே, இதோ நான் உன்னோடுதான் வருகிறேன். கவலைப்படாமல் பயணத்தை தொடர்ந்து செய்" என்கிறார்.

இறைவனுக்கும் நமக்கும் உள்ள இந்த பயண நட்புறவு

 விசுவாசம் உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.

 வெறுமனே உடலளவில் வாழ்பவர்களுக்கு இது புரியாது.

இறைவன் நம்மோடு எப்படி பேசுகிறார்?

1. உள்ளுணர்வுகள் வழியாக.
    (Inspirations)
  
நாம் அமைதியில் மனதை ஒருநிலைப்படுத்தி

 இறைவனை தியானிக்கும்போது,

 அவர் நமது மனதில் அவரது ஆலோசனைகளை

 உள்ளுணர்வுகளின் மூலம் தெரிவிக்கிறார்.

2.பைபிள் வெறும் புத்தகம் அல்ல,

 அது இறை வார்த்தை.

 நாம் பைபிள் வாசிக்கும்போது அவரது வார்த்தைகளைத் தான் வாசிக்கிறோம்.

அந்த வார்த்தைகள் வழியாக இறைவன் நமக்கு ஆலோசனைகள் நல்கி வழி நடத்துகிறார்.

நமது வாழ்விற்கான இறைவனது ஆலோசனைகளைப் பெறும் நோக்கத்துடன்தான் பைபிள் வாசிக்க வேண்டும்.

வெறும் அறிவைப் பெறும் நோக்கத்தோடு வாசிப்பவர்களுக்கு

 பைபிள் அறிவு கிடைக்கும்
ஆலோசனை கிடைக்காது.

சாத்தானுக்கு நம்மைவிட அதிகமான பைபிள் அறிவு உண்டு.

ஆகவே, சில சமயங்களில் அது பைபிள் வசனங்களைக் கொண்டே நம்மை சோதிக்கும்.

இயேசுவையே அது அப்படித்தான் சோதித்தது.

 அன்றன்றைக்கு வாசிக்கும்படி தாய்த் திருச்சபை நமக்கு குறிப்பிட்டு தந்துள்ள பைபிள வசனங்களை வாசித்து

 அதை அன்று நடைமுறைப் படுத்த வேண்டும்.

வசனம் வாழ்வாக மாற வேண்டும்.

3. திருப்பலியின் போது பிரசங்கத்தின் மூலமாக இறைவன் நம்மோடு பேசுகிறார்.

பிரசங்கம் வைப்பது குருவாக இருக்கலாம், ஆனால் பேசுவது  இறைவன்.

Speaker வழியாக சப்தம் வருகிறது. Speaker ஆ பேசுகிறது?

குருவானவர் வாய் வழியாக வார்த்தைகள் வரலாம்.  ஆனால் பேசுவது இயேசு.

4. பைபிள் வாசிக்கும்போது பேசும். 

பிரசங்கம் திருப்பலியின் போதுதான் கிடைக்கும்.

24 மணி நேரமும் தியானம் செய்து கொண்டிருக்கவோ, பைபிள் வாசிக்கவோ, பிரசங்கம் கேட்கவோ முடியாது.

அப்படியானால் ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருக்கும் இறைவன் ஒவ்வொரு வினாடியும் நம்மோடு எப்படிப் பேசுகிறார்?

சூழ்நிலை மூலமாக பேசுகிறார்.

நாம் எந்த பெற்றோருக்கு,

 எந்த குடும்பத்தில்,

 எந்த ஊரில்,

 எந்த நாட்டில் பிறக்க வேண்டும்

 என்று தீர்மானிப்பவர் இறைவன்.

பிறந்தபின் எங்கே வாழவேண்டும் என்று தீர்மானிப்பவரும் இறைவன் தான்.

சிலர் பிறந்த ஊரில் வாழ்கின்றார்கள். 

சிலர் பிறந்த உரை விட்டு விட்டு

வேறு ஊருக்கோ,  

அல்லது வேறு நாட்டுக்கோ சென்று வாழ்கிறார்கள்.

எங்கு வாழ்ந்தாலும் அது அவர்களது  வாழ்க்கையின்   சூழ்நிலையே.

ஒவ்வொருவருக்கும் சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பவர் இறைவனே.

அந்தந்த சூழ்நிலையில் உள்ள இயற்கை பொருள்கள் மூலமாகவோ, மனிதர்கள் மூலமாகவோ இறைவன் பேசுகிறார்.

உதாரணத்திற்கு,

நான் விபசாயக் குடும்பத்தில் பிறந்தவன். கிறிஸ்தவக் குடும்பம். கிறிஸ்தவத்தில் வளர்ந்தேன்.

விபசாயக் குடும்பத்தில் பிறந்த நான் ஏன் விபசாயியாக ஏன் வளரவில்லை?

என் தந்தையையும், தம்பியையும் ஈர்த்த (attract) வயல் 

என்னை பார்த்து

''நான் உனக்கு லாயக்கில்லை, பள்ளிக்குப் போ" என்று சொல்வது போலிருந்தது.

என் தம்பி வயலுக்குப் போனதும், நான் படிக்கப் போனதும், அண்ணாச்சி குருமடத்திற்குப் போனதும் இறைவனின் வழி நடத்துதல்.

ஒவ்வொருவர் வாழ்விலும் இறைவன் சூழ்நிலை மூலமாக வெவ்வேறு அழைத்தல்களைச் செய்கிறார்.

அவரவர் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

ஒரு ஊருக்குப் புறப்பட்டு நிற்கிறோம். பஸ்ஸே கிடைக்கவில்லை. அங்கே அப்போது போவது இறைவன் சித்தம் இல்லை என்பதைப் பரிநது கொள்ள வேண்டும்.


ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறோம்.  அது நமக்கு கிடைக்கவில்லை.

 அதுவே இறைவன் சித்தம்  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Flight க்கு Ticket கிடைக்கவில்ல. இருக்கும் இடத்தில் கூட கொஞ்ச நாள் இரு என்பது இறைவன் சித்தம்.

பொதுவாகக் காணப்படும் கொரோனா இறைவன் சித்தப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமான மாற்றத்தைச் செய்து கொண்டிருக்கும். 

இறைவன் மீது நாம் கொண்டுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் நோக்கினால் இது  புரியும்.

இறைவன் எப்போதும் நம்மோடு தான் வருகிறார்.
என்ன நடந்தாலும் அவர் சித்தப்படி தான் நடக்கும்.

கவலையை ஒழிப்போம்.

கடல் அலைகளுக்கு மத்தியிலும் நம்மைக் கரை சேர்ப்பவர் அவர்தான்.

லூர்து செல்வம்.




No comments:

Post a Comment