"நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால், விரும்பியதெல்லாம் கேளுங்கள், உங்களுக்கு அருளப்படும்.''
(அரு. 15:7)
** ** ** ** ** ** ** ** ** **
பைபிள் வாசிக்கும் நம்மில் சிலருக்கு ஒரு இயல்பு உண்டு.
வாசிக்கும்போது தங்களுக்கு பிரியமான வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு
அதன் அடிப்படையில் தங்கள் செபங்களையும், வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வது.
உதாரணத்துக்கு,
"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்."
''விரும்பியதெல்லாம் கேளுங்கள், உங்களுக்கு அருளப்படும்.''
இந்த வசனங்களை அப்படியே எடுத்துக்கொண்டு தங்கள் செபத்தை எல்லாம் கேட்பதற்கு என்றே பயன்படுத்திக் கொள்வார்கள்.
தங்கள் இஷ்டப்படி கேட்டுவிட்டு ஆண்டவர் தரவில்லையே என்று புலம்புவார்கள்.
ஒரு பையனுக்கு காய்ச்சல். டாக்டர் வந்தார். ஊசி போட்டார்.
பெற்றோரிடம்,
" காய்ச்சல் குணமாகும் வரை
பையனுக்கு திட உணவு கொடுக்க வேண்டாம். திரவ உணவு மட்டும் கொடுங்கள்" என்று சொல்லி விட்டு போய்விட்டார்.
பெற்றோர் டாக்டரின் முழுக் கூற்றையும் கவனிக்காமல்
பையனுக்கு வாழ் நாள் முழுதும் திரவ உணவு மட்டும் கொடுத்து வந்தால் எப்படி இருக்கும்?
ஆண்டவர்
"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்:"
என்று கூறிவிட்டு,
"தன் மகன் அப்பம் கேட்டால் ஒருவன் கல்லைக் கொடுப்பானா ?
அல்லது அவன் மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா ?"
என்றும் கூறுகிறார்.
அப்பம், மீன் ஆகியவை சாப்பிட கூறிய பொருள்கள்.
மகன் தந்தையிடம் அவற்றைக் கேட்டால் அவை மகனுக்குப் பயன் தருபவையாய் இருப்பதால் கொடுப்பார்.
கடவுள் நமது நல்ல தந்தை.
நாம் நமது விண்ணக பயணத்தில் நமக்கு பயன்படக்கூடிய எந்தப் பொருளை கேட்டாலும் கட்டாயம் கொடுப்பார்.
நமக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை எத்தனை முறை கேட்டாலும் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவர் நம்முடைய நலன் கருதும் நல்ல தந்தை.
"வானகத்திலுள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நன்மை செய்வார்!"
என்கிறார் இயேசு.
ஆகவே நம் விண்ணகத் தந்தை நன்மையை, நன்மையை மட்டும் அதிகமதிகமாய் செய்வார்.
ஒரு மாணவன் படித்தால் மட்டும் வெற்றி பெற முடியாது.
படிக்கவேண்டியதைப் படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
அதேபோல்தான்,
கேட்க வேண்டியதைக் கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.
தேட வேண்டியதைத் தேடினால் கட்டாயம் கண்டுபிடிப்போம்.
தட்ட வேண்டிய கதவை தட்டினால் அது திறக்கும்.
"நீங்கள் என்னுள்ளும்
என் வார்த்தைகள் உங்களுள்ளும்
நிலைத்திருந்தால்,
விரும்பியதெல்லாம் கேளுங்கள்,
உங்களுக்கு அருளப்படும்.''
நாம் உலகத்தில் வாழ்கிறோம்.
ஆனால் உலகினுள் வாழக் கூடாது.
ஏனெனில் நாம் உலகில் வாழ்ந்தாலும், உலகை சார்ந்தவர்கள் அல்ல.
நாம் உலக காரியங்களுள் மூழ்கி விட்டால், நம்மால் அவற்றை விட்டு வெளியே வர இயலாது.
உலகம் பார்ப்பதற்கு அழகாகத் தோன்றலாம்.
ஆனால் அது ஒரு முட்புதர்.
அதற்குள் விழுந்த விதை முளைத்தாலும் வளர முடியாது.
நாம் வியாபாரப் பொருட்கள் அல்ல. கடவுள் நம்மை உலகத்திற்கு விற்பதற்காகப் படைக்கவில்லை.
கடவுள் நம்மைத் தனது பிள்ளைகளாகத்தான் படைத்தார்.
நாம் அவருக்குள்தான் வாழ வேண்டும்.
ஆகவே நாம் யாரை சார்ந்து இருக்கிறோமோ அவருக்குள் நாம் நுழைந்து அங்கேயே நிரந்தரமாக தங்கி விட வேண்டும்.
அவருக்குள் நிலைத்திருந்தால் அவர் பேசும் வார்த்தைகள் மட்டுமே நமக்குக் கேட்கும்.
அவரது வார்த்தைகள் நமது தலைக்குள் ஏறி, இதயத்திற்குள் இறங்கும்.
நமது அறிவு, மனம், இருதயம் அவருடைய வார்த்தைகளால் நிறைந்திருக்கும்.
நம்முடைய எண்ணங்களும், விருப்பங்களும் இறை. வார்த்தைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படும்.
அதாவது நாம் இறைவனைச் சார்ந்தவனவற்றை மட்டுமே விரும்புவோம்.
உலகைச் சார்ந்த ஆசைகள் எதுவும் நமக்குத் தோன்றாது.
புனிதர்கள் சதா கடவுளையே தியானித்துக் கொண்டு இருந்ததால்
அவர்களுக்கு உலக ஆசைகள் ஏற்படவில்லை.
இறைவனுக்காக வாழ்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள்.
புனித சவேரியார் கீழ்த்திசை நாடுகளில் எல்லாம் பயணம் செய்தார்.
பணம் சம்பாதிக்கவா அல்லது புகழைத் தேடியா?
இல்லை.
நற்செய்தியை உலகெங்கும் அறிவிப்பது மட்டுமே அவரது ஒரே ஆசையாக இருந்தது.
"மனிதன் உலகமெல்லாம் ஆதாய மாக்கிக் கொண்டாலும், அவனது ஆன்மாவை இழந்தால் அவனுக்கு என்ன பயன்?"
என்ற இறைவார்த்தை அவருக்குள் இருந்தது.
அதுதான் அவரை உலகெங்கும் சுற்றவைத்தது.
நாம் இயேசுவுக்குள்ளும் ,
அவரது வார்த்தைகள் நமக்குள்ளும்.
நிலைத்திருந்தால்,
நாம் விரும்புவதெல்லாம் இயேசுவைச் சார்ந்தவைகளாக மட்டுமே இருக்கும்.
அவற்றை மட்டுமே இறைவனிடம் கேட்போம்.
அவை நமக்கு உறுதியாக
அருளப்படும்.
சிலர் கேட்கலாம்,
இறைவார்த்தைகளால் நிறைந்திருப்பவர்கட்கு
சாப்பிட ஆசை வராதா?
தூங்க ஆசை வராதா?
காரில் பயணிக்க ஆசை வராதா?
நாம் உலகில் வாழ்வது உலகை நமது ஆன்மீக காரியங்களுக்காக பயன்படுத்துவதற்காகத்தான்.
நமது உடலே உலகைச் சார்ந்த சடப் பொருள் தானே!
ஆன்மீக காரியங்களில் பயன்படுத்தப் படுவதற்காகத்தான் அது ஆன்மாவிற்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
பசித்தோருக்கு உணவிடுவது புண்ணியம்.
பசிக்க உடல் வேண்டுமே!
ஆடை இல்லாதோருக்கு ஆடை கொடுப்பது புண்ணியம்.
ஆடை அணிய உடல் வேண்டுமே!
பாடம் படிக்க பள்ளிக்குச் சைக்கிளில் போகிறோம்.
சைக்கிளில் போவதற்காக ,
பள்ளிக்குப் போகவில்லை.
உலகில் வாழ்வது இறைவனைத் தேட.
இறைவனைத் தேடுவது உலகில் வாழ அல்ல!
சாப்பிட வேண்டும் அப்போதுதான் இறைவனுக்காக உழைக்க முடியும்.
தூங்க வேண்டும் அப்போதுதான் இறைவனுக்காக களைப்பு இல்லாமல் உழைக்க முடியும்.
எதில் பயணித்தாலும் பயணிப்பது இறைப்பணிக்கே!
கப்பலில் பயணம் செய்வதற்காகவா புனித அருளானந்தர் தமிழ்நாட்டுக்கு வந்தார்?
எதற்காக எது என்று புரியாமல் வாழ்வதால் தான் நம்மிடையே குழப்பங்கள் நிலவுகின்றன.
பணம் பணிக்காக என்பதை அறியாமல்
பணத்திற்காக பணி செய்வதால்தான் நாட்டில் லஞ்சம் ஊழல் பெருகிவிட்டது.
உண்பது வயிற்றுக்காகவா,
வயிறு உண்பதற்காகவா என்பது புரியாததால் தான் நமக்கு பல நோய்கள் வருகின்றன!
நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவை எல்லாம்
இறை வார்த்தைகளால் மட்டும் நிறைந்திருந்தால்
நமது விருப்பங்கள் எல்லாம் இறைவனை சார்ந்ததாக இருக்கும்.
விரும்பியதெல்லாம் நமக்கு அருளப்படும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment