விக்கிரகத்துக்கும், சுரூபத்திற்கும் இடையே
வேறுபாடு தெரியாதவர்கள்.
** ** ** ** ** ** ** ** ** **
இறைவன் நமக்குப் புத்தியைக் கொடுத்திருப்பது சிந்திப்பதற்காகத்தான்.
பயன்படுத்துவோம்.
என்னிடம் தம்ளர் ஒன்று இருக்கிறது. அதைத் தண்ணீர் அருந்தவும் பயன்படுத்தலாம், மது அருந்தவும் பயன்படுத்தலாம். விஷம் அருந்தவும் பயன்படுத்தலாம்.
ஆனால் அது என்னிடம் இருக்கிறது என்பதற்காக விஷம் அருந்தப் போகிறேன் என்று எண்ணிவிடக்கூடாது.
நான் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்கும் போது, நான் விஷம் அருந்துவதாகக் கூறக் கூடாது.
என்னிடம் பணம் இருக்கிறது. அதை இல்லாத ஏழைக்குக் கொடுத்து புண்ணியமும் சம்பாதிக்கலாம், லஞ்சம் கொடுத்து பாவமும் செய்யலாம்.
பணம் ஒன்று தான். அதைப் பயன்படுத்துவதன் நோக்கம் தான் அதன் பயன்பாடு பாவமா, புண்ணியமா என்பதைத் தீர்மானிக்கும்.
நான் செய்வது பாவமா அல்லது புண்ணியமா என்பதைத் தீர்மானிப்பது என் செயல் அல்ல, செய்வதன் நோக்கம். (intention)
நான் ஒரு ஆசிரியர். வகுப்பில் ஒரு மாணவனை அடிக்கிறேன். அவனைத் திருத்தும் நோக்கத்தோடு அடித்தால் அது புண்ணியம். அவனைப் பழி வாங்கும் நோக்கத்தோடு அடித்தால் அது பாவம்.
பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரியான பல அறைகள் இருக்கலாம்.
ஒவ்வொன்றும் அததன் பயன்பாட்டிற்கு ஏற்றபடி பெயர் பெற்றிருக்கும்.
வகுப்பறை. Class Room.
நூலகம். library
Staff room.
அலுவலகம். office
வகுப்பறையை நூலகம் என்று அழைக்கக்கூடாது.
வீட்டில் புகைப்படங்கள் (photos) இருக்கின்றன.
நமது அல்லது நமக்கு வேண்டிவர்களது புகைப்படங்களை frame போட்டோ, Album களிலோ வைத்திருக்கிறோம்.
நமக்கு நன்கு தெரியும் புகைப்படங்களில் இருப்பது வெறும் உருவங்கள் தான், உயிருள்ள ஆட்கள் அல்ல என்று.
நமது படங்களை நாமே பார்த்து இரசிப்பதற்கோ, மற்றவர்களது படங்களை, குறிப்பாக நம்மை விட்டு மறைந்தவர்களது படங்களை அவர்களது ஞாபகார்த்தமாகவோ வைத்திருக்கிறோம்.
இப்படி வைத்திருப்பது பாவமோ, புண்ணியமோ இல்லை.
புனிதர்களுடைய படங்களும் நமது வீடுகளில் உள்ளன.
புனிதர்களுடைய படங்களை வெறும் அழகிற்காக வைத்திருப்பது இல்லை.
அவர்களை நோக்கி செபிக்கும் போது நமது மனக்கண் மூலம் அவர்களைப் பார்த்து செபிப்பதற்கு நமக்கு உதவியாக அவர்களது படங்களை ஊனக்கண் மூலம் பார்க்கிறோம்.
நாம் செபிப்பது படங்களை நோக்கி அல்ல, அவை குறிக்கும் புனிதர்களை நோக்கியே.
இதே நோக்கத்தில்தான் நமது கோவில்களிலும் புனிதர்களின் உருவங்களை வைத்திருக்கிறோம்.
புனிதர்களை மனக்கண் முன்பு கொண்டு வந்து செபிப்பதற்கு உதவியாக இருக்கும் உருவங்களை நாம் சுரூபங்கள் (statues ) என்கிறோம்.
சுரூபங்களைப் பார்த்து செபித்தாலும் அவற்றை நோக்கி செபிப்பதில்லை.
பார்ப்பது சுரூபங்களை,
நோக்குவது புனிதர்களை.
ஆனால் அஞ்ஞானிகள் (pagans) உருவங்களையே கடவுள் என எண்ணி ஆராதிக்கிறார்கள். ஆராதிக்கப்படும் உருவங்களே விக்கிரகங்கள் (Idols)
செபம் செய்ய, உதவியாக நாம் வைத்திருக்கும் உருவங்கள் சுரூபங்கள்.
அஞ்ஞானிகள் ஆராதிப்பதற்கென்றே வைத்திருக்கும் உருவங்கள்
விக்கிரகங்கள்.
ஒரு உருவம் தானாகவே விக்கிரகமாகவோ, சு௹பமாகவோ மாறுவதில்லை.
அது ஆராதிக்கப்பட்டால் விக்கிரகம்,
செபம் சொல்ல உதவியாக பயன்படுத்தப்பட்டால் அது சுரூபம்.
நாம் உருவத்தை சுரூபமாகத்தான் பயன்படுத்துகிறோம்.
சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு இந்த வேறுபாடு புரியும்.
இவ்வளவு சொன்ன பிறகும் ஒரு நண்பர் குறுக்கிடுகிறார்.
சுரூபங்களை செபம் சொல்ல உதவியாகப் பயன்படுத்தலாம் என்று பைபிளில் எங்கே இருக்கிறது?
இப்படி கேட்பவர்களை நினைத்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.
இவர்களுக்கு பைபிள் என்றால் என்ன என்றே தெரியவில்லை.
பைபிள் என்றால் என்ன?
இறை வார்த்தை.
இறைவன் உருவம் அற்ற தன்னை உருவம் உள்ள நமக்கு வெளிப்படுத்த (To reveal)
அவரிடம் இருந்து வந்த நாம் திரும்பவும் அவரையே அடைய நாம் கடைப் பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகளை நமக்குத் தெரியபடுத்த
.அவரே தரும் செய்தி. (divine message).
எண்ணங்களுக்கு உருவம் கிடையாது.
உருவம் இல்லாத எண்ணங்களை உருவம் உள்ள நம்மோடு எப்படிப் பகிர்ந்து கொள்கிறார்?
நாம் நமது எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தும் முறையையே அவரும் பயன்படுத்தினார்.
நமது மனதும் உருவம் அற்றது.
அதில் தோன்றும் எண்ணங்களும் உருவம் அற்றவை.
அவற்றை மற்றவர்களுக்கு எப்படி தெரியப் படுத்துகிறோம்?
உருவமற்ற நமது எண்ணங்களுக்கு முதலில் உருக் கொடுத்து அந்த உருவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
அந்த உருவம்தான் நாம் பயன்படுத்தும் மொழி.
அதை நமது வாயால் சொல்லலாம்,
காதால் கேட்கலாம்,
சப்தத்திற்கு உரு கொடுத்து எழுதப்பட்ட மொழியை வாசிக்கலாம்.
மொழியின் உதவி இன்றி நம்மால் உருவமற்ற நமது கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிக்க முடியாது.
இறைவனும் நாம் பயன்படுத்தும் இதே முறையைத்தான் கையாண்டார்.
இறைவன் பைபிள் எழுதியவர்களின் மனதுக்குத் தனது எண்ணங்களை மாற்றி (transter)
உருவம் அற்ற தனது எண்ணங்களுக்கு அவர்கள் மூலம் மொழி உருவம் கொடுத்தார்.
அதுதான் நாம் பயன்படுத்தும் பைபிள்.
அதாவது கடவுளின் உருவமற்ற எண்ணங்கள் உருப்பெற்று எழுதப்பட்டதுதான் பைபிள்.
நாம் கையில் வைத்திருக்கும் பைபிள் இறைச் செய்தியை தாங்கும் ஒரு புத்தக உருவம்.
மனிதர்களுக்கு நாம் கொடுக்கும் உருவத்தை
சுரூபங்கள் என்கிறோம்.
எண்ணங்களுக்கு நாம் கொடுக்கும் உருவத்தை மொழி என்கிறோம்.
'
இரண்டுமே உருவங்கள்தான்.
வார்த்தையாகிய இறை எண்ணம் மொழி உரு எடுத்து. பைபிள் ஆகியது.
உருவமே வேண்டாம் என்றால் எப்படி பைபிள் வாசிக்க முடியும்?
பைபிளுக்குள் நுழைவோம்.
ஆதியாகமத்தில் பைபிள் ஆசிரியர் அதை வாசிக்கும் உருவமுள்ள மனிதர்களுக்குப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார்.
முதலில் தன் மனதில் கடவுளுக்கு மனித உருவைக் கொடுத்து விட்டு, அதன் மூலமாகத்தான் இறைச் செய்தியைத் தருகிறார்.
"ஒளி உண்டாகுக என்று உரைத்தார். உரைக்கவே, ஒளி உண்டாயிற்று."
கடவுள் நினைத்தாலே போதும். நினைத்தது நடக்கும்.
உரைப்பது, அதாவது, சொல்லுவது மனித வாய்.
தொடத்தத்திலேயே கடவுளுக்கு மனு உரு கொடுத்து விட்டு, அப்படியே தொடர்கிறார்.
என்றார்,
ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்,
(நாட்கணக்கும், ஓய்வும் மனிதருக்கு உரியவை. கடவுள் நித்தியர். அவரால் ஓய்வு எடுக்க முடியாது.)
களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே,
அவனுடைய விலாவெலும்புகளில் ஒன்றை எடுத்து, அவ்வாறு எடுத்த இடத்தைச் சதையினால் மூடினார்.
இன்ப வனத்தில் உலாவிக் கொண்டிருந்த ஆண்டவராகிய கடவுளின்.
இப்படியே உருவம் உள்ளவர்கள் செய்வது போலவே கடவுளும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உருவம் இல்லாத சாத்தானுக்குக் கூட பாம்பின் உருவத்தைக் கொடுத்திருக்கிறார்.
இதெல்லாம் எதற்காக?
உருவம் உள்ள நமக்குப் புரிய வைப்பதற்காக.
"ஆண்டவரோ, ஒரு முட்செடியின் நடுவினின்று, நெருப்புக் கொழுந்து உருவத்தில் அவனுக்குக் காட்சியளித்தார்."
(யாத். 3:2)
"அவர்களுக்கு வழி காண்பிக்கத் தக்கதாக ஆண்டவர் பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் அவர்களுக்கு வழித்துணையாய் இருந்தார்.''
(யாத்.13: 21)
உருவங்கள் வைக்கக்கூடாது என்று வாதாடும் நம் நண்பர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மோயீசனுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக இறைவன்
நெருப்புக் கொழுந்து உருவத்தில் காட்சி கொடுத்தார்.
இஸ்ராயேல் மக்கள் எகிப்தை விட்டு பயணிக்கும் போது வழி காண்பிப்பதற்காக
பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் வழித்துணையாய் இருந்தார்.
இவ்வசனங்கள் நண்பர்கள் வாசிக்கும் பைபிளில் இல்லையோ?
அல்லது
Selective amnesia வா?
"2ஆண்டவராகிய நாமே உன் கடவுள்.
3 நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக
4மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.
5 அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்.
(யாத். 20:2-6)
தயவு செய்து இவ்வசனங்களைக் கூர்ந்து வாசிக்கவும்.
வாசித்து பின் பொருள் கொள்ளவும்.
"நான் மட்டும்தான் கடவுள்.
எனக்கு முன்பாக வேறே தேவர்கள் இல்லை.
என்னை மட்டுமே தொழ வேண்டும்.
எனக்குக் கொடுக்க வேண்டிய தொழுகையை விக்கிரகங்களுக்குக் கொடுக்கக் கூடாது."
என்பது தான் இதன் பொருள்.
அதாவது
கடவுளை மட்டுமே ஆராதிக்க வேண்டும்.
விக்கிரகங்களை ஆராதிக்கக்
கூடாது.
ஆராதிப்பதற்காகச் செய்யப்படும் உருவங்கள் மட்டுமே விக்கிரகங்கள்.
புனிதர்களை நோக்கி செபம் சொல்ல அவர்களை மனக்கண் நிறுத்த உதவியாக இருப்பதற்காக செய்யப்படும் உருவங்களுக்குப் பெயர் சுரூபங்கள்.
நாம் சுரூபங்களை ஆராதிப்பதில்லை.
இப்போது நண்பர்களுக்கு வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment