"யாரென்று அறியாமலே நீங்கள் வழிபடும் தெய்வத்தையே உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்."
(அப்.17:23)
** ** ** ** ** ** ** ** ** **
நான் போதனா முறைக் கல்வி (B.Ed.) பயின்று கொண்டிருந்த காலத்தில் எங்களுடைய ஆசிரியர் சொன்ன அறிவுரை :
"முதல் முதல் வகுப்பிற்குள் நுழையும்போது
மாணவர்களின் குறைகளைச் சுட்டிக் காண்பிக்காமல்
அவர்களைப் பற்றி கொஞ்சம் பெருமையாக பேசிவிட்டு,
அப்புறம் பாடத்தை ஆரம்பித்தால் மாணவர்கள் நன்கு கவனிப்பார்கள்"
புனித சின்னப்பர் மிக சிறந்த, திறமையுள்ள ஆசிரியர் என்பது ஏதென்ஸ் நகர மக்களிடையே இயேசுவைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததிலிருந்தே தெரிகிறது.
ஏத்தென்ஸ் நகரில்
சிலைகள் நிறைந்து இருப்பதைக் கண்டு, அவர் உள்ளத்தில் சீற்றம் பொங்கியது.
"ஏத்தென்ஸ் நகரத்தாரும் அங்கு வாழும் அந்நியர்களும் புதுப்புதுச் செய்திகளைச் சொல்வதிலும் கேட்பதிலும் மட்டுமே காலம் கழித்து வந்தனர்." (அப். 17:21)
(Now all the Athenians, and arriving visitors, were occupying themselves with nothing other than speaking or hearing various new ideas.)
ஆனால், சின்னப்பர் அரையொபாகு மன்றத்தில் பேசும்போது அவர்களின் குறைகளை சுட்டி காண்பிக்காமல்,
"ஏத்தென்ஸ் நகரப்பெருமக்களே, நீங்கள் எவ்வகையிலும் மிக்க மதப்பற்றுள்ளவர்கள் என்று தெரிகிறது."
என்று ஆரம்பிக்கிறார்.
தொடர்ந்து,
"நீங்கள் வழிபடுபவற்றைச் சுற்றிப்பார்த்து" வருகையில்
"நாம் அறியாத தெய்வத்திற்கு" (TO THE UNKNOWN GOD.) என்று எழுதியிருந்த பீடம் ஒன்றையும் கண்டேன்.
சரி, யாரென்று அறியாமலே நீங்கள் வழிபடும் தெய்வத்தையே உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்."
என்று கூறிவிட்டு தன் போதனையை ஆரம்பிக்கிறார்.
அன்றைய போதனையின் முடிவில்,
"ஒரு சிலர் விசுவாசங்கொண்டு அவருடன் சேர்ந்துகொண்டனர்.
அவர்களில் அரையொப்பாகு சங்கத்தின் உறுப்பினராகிய தியொனீசியூஸ் ஒருவர்.
மற்றும் தாமரி என்பவளும், வேறு சிலரும் இருந்தனர்."
(34)
அவர் இறந்தோரின் உயிர்ப்பைப் பற்றி பேசும்போது ஒரு சிலர் ஏளனம் செய்தாலும்,
சிலர், "இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும் கேட்போம், என்றனர்."
ஆரம்பத்திலேயே சின்னப்பர் மன்றத்தாரிடம்,
"தெய்வத்தை உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்." என்றார்.
நாம் வழக்கமாக, பேசும்போது,
ஒரு நபரைப் பற்றி பேசுவோம். கேட்பவரும் அவரைப் பற்றி தெரிந்து கொள்வார்.
ஒரு ஆளைப் பற்றி அறிவிப்பதற்கும்
ஒரு ஆளை அறிவிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
எனக்கு நேருவைப் பற்றி கொஞ்சம் தெரியும்.
ஆனால் நேருவை கொஞ்சம் கூட தெரியாது.
ஏனெனில் அவரைப் பற்றி வரலாற்றில் படித்திருக்கிறேன்
ஆனால் அவரோடு நேரடி பழக்கம் கிடையாது.
இப்போது ஒரு கேள்வி.
நாம் தினமும் நற்செய்தி வாசிக்கிறோம்.
ஆகவே இயேசுவைப் பற்றி நமக்கு நிறைய தெரியும்.
ஆனால் நமக்கு இயேசுவைத் தெரியுமா?
இயேசுவைப் பற்றி படிக்கப்படிக்க அவரைப் பற்றிய அறிவு (Knowledge) வளரும்.
சாத்தானுக்கு இயேசுவைப்பற்றி நம்மைவிட அதிகமாக தெரியும்.
நமது விண்ணக பயணத்தில் இயேசுவை பற்றி அறிவது துவக்க நிலை தான். (Starting point)
இயேசுவை அறிவதுதான் விண்ணக பயணம்.
துவக்க நிலையிலேயே நின்று விட்டால் பயணம் எப்படி தொடரும்?
இயேசுவை பற்றி அறிந்த நாம் அவருடனேயே கைகோர்த்து நடக்க ஆரம்பிக்க வேண்டும்.
அவரோடு நடப்பது எப்படி?
நமது வாழ்க்கையால்.
நமது உள்ளத்தில் வாழும் எண்ணங்கள் தான் நமது முழு வாழ்விலும் பிரதிபலிக்கின்றன.
நமது உள்ளத்தில் இயேசு வாழ்ந்தால் நமது வாழ்விலும் இயேசு வாழ்வார்.
இயேசுவை வாழ்வதைத்தான்
புனித சின்னப்பர்,
"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே"
என்றார்.
உள்ளத்தில் இயேசு வாழ்வது எப்படி?
இயேசுவைப் பற்றிய அறிவு நமது புத்தியில் இருக்கிறது.
அறிவில் உள்ள இயேசுவை நமது உள்ளத்திற்குக் கொண்டு வந்து அவரைத் தியானிக்க வேண்டும்.
அவரது வாழ்வைத் தியானிக்க வேண்டும்.
நமது தியானத்தின் தன்மைக்கு ஏற்ப இயேசு அவரது பண்புகளோடு நமது உள்ளத்தில் கலந்து விடுகிறார்.
இயேசுவின் பிறப்பை பற்றித் தியானிப்பதாக வைத்துக் கொள்வோம்.
எங்கும் நிறைந்த சர்வவல்லப கடவுள், ஒரு மாடடைக் குடிலில் பலவீனமுள்ள மனிதனாகப் பிறந்திருக்கிறார், நமக்காக.
பலவீனராகிய நம்மை மீட்பதற்காக சர்வ வல்லபர் பலகீன உரு எடுக்கிறார்.
இதை ஆழ்ந்து தியானிக்கும் போது இயேசுவின் அளவு கடந்த அன்பு, அவருடைய தாழ்ச்சி, ஏழ்மை, எளிமை போன்ற அவரது பண்புகள் நம் உள்ளத்திற்குள் இறங்கும்.
திரும்ப திரும்ப தியானிக்க, தியானிக்க
தியானத்தின் ஆழம் அதிகமாகும்.
இயேசுவும், அவரது பண்புகளும் நமது உள்ளத்தை நிறப்பும்போது எதிர்மாறான பண்புகள் இடம் கிடைக்காமல் மறைந்து விடும்.
நமது உள்ளத்தால் இயக்கப்படும் நமது வாழ்க்கை இயேசுவாலும், அவரது அவரது பண்புகளாலும் இயக்கப்படும்.
நமது வாழ்வும்
அன்பு, தாழ்ச்சி, ஏழ்மை, எளிமை ஆகிய பண்புகளால் ஆனதாக இருக்கும்.
இப்போது இயேசு பாலன் நமமில் வாழ்வார்.
கிறிஸ்துவின் பிறப்பை ஆழமாகத் தியானிப்பவர்கள்
உண்மையிலேயே எல்லோரையும் அன்புசெய்வார்கள்,
தற்பெருமை கொள்ளமாட்டார்கள்.
ஏழ்மையை நேசிப்பார்கள்,
எளிமையாக வாழ்வார்கள்,
கிறிஸ்மஸ் விழாவிற்கு ஆடம்பரமாக ஆடை அணிய மாட்டார்கள்,
தங்களுக்கு புதிய dress எடுக்காமல்
இல்லாதவர்களுக்கு எடுத்துக் கொடுப்பார்கள்,
தங்கள் உணவை எளிமையாக வைத்துக் கொண்டு,
ஏழைகளுக்கு உணவு கொடுப்பார்கள்,
ஆண்டு முழுவதும் வரும் விழாக்களை
(வீட்டு விழாவாக இருந்தாலும் சரி, ஆலய விழாவாக இருந்தாலும் சரி,)
எளிமையாகக் கொண்டாடுவார்கள்.
கோவில் கட்ட கோடிக் கணக்கில் செலவிட மாட்டார்கள்.
இவ்வாறே,
இறை மகன் மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தது,
பொதுவாழ்வில் அவர் அறிவித்த நற்செய்தி
பாவிகள் மீது அவர் காட்டிய இரக்கம்,
சென்ற இடமெல்லாம் நன்மைகள் செய்தது,
அவரது பாடுகள்,
மரணம்,
உயிர்ப்பு
போன்ற இயேசுவின் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும்,
அதாவது அவரது வாழ்க்கை முழுவதுமே தியானித்தோம் .என்றால் நமது வாழ்க்கை முழுவதுமே இயேசுவின் வாழ்க்கைபோல் ஆகிவிடும்.
தினமும் செபமாலை சொல்கிறோம்.
செபமாலை சொல்கிறோம் என்றாலே இயேசுவின் வாழ்க்கையைத் தியானிக்கிறோம் என்றுதான் பொருள்.
நாம் செபமாலை சொல்லுகிறோம் என்றால் இயேசுவை வாழ்கிறோம் என்றுதான் பொருள்.
ஆனாலும் எத்தனை பேருடைய வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கையாக மாறி இருக்கிறது?
நமது வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கையாக மாறி இருக்கிறதா?
நாம் ஏழ்மையை நேசிக்க வேண்டும்.
எளிமையாக வாழவேண்டும்
பெற்றவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
தாழ்ச்சியாய் இருக்க வேண்டும்.
சென்றவிடமெல்லாம் நன்மை செய்ய வேண்டும்.
தேவைப்படுபவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் உதவ வேண்டும்.
துன்பங்களையும்
அவமானங்களையும்
.
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இயேசுவுக்காகவும்,
அயலானுக்காகவும் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
இப்படி நாம் வாழ்ந்தால் இயேசு நம்மில் வாழ்கிறார்.
இல்லாவிட்டால் நாம் மட்டும்தான் வாழ்கிறோம்.
விசுவாசம் மட்டும் நம்மை கிறிஸ்தவன் ஆக்காது.
கிறிஸ்துவாக வாழ்ந்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.
கிறிஸ்துவாக வாழ்வோம் இவ்வுலகில்,
கிறிஸ்துவுடன் வாழ்வோம் மறுவுலகில்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment