Monday, May 4, 2020

"கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்ற போது, தம்முடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றுமாறு முன்மாதிரி தந்து சென்றார்."(1 இரா. 2:21)

"கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்ற போது, தம்முடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றுமாறு முன்மாதிரி தந்து சென்றார்."
(1 இரா. 2:21)
**  **  **   ** ** **   ** ** ** ** **

தலைப்பிலுள்ள பைபிள் வசனம் நமக்கு இரண்டு செய்திகளை தெளிவாக தருகிறது

1.கிறிஸ்து நமக்காகத் துன்புற்றார்.

2.அவருடைய அடிச்சுவடுகளை நாம் பின்பற்ற வேண்டும்.

இறைமகன் மனிதனாகப் பிறந்ததே நமக்காகத்தான்.

அதுவும் நமக்காக துன்பப் படுவதற்காகத்தான்.

அதுவும் நமக்காக துன்பப் பட்டு சிலுவையில் அறையுண்டு மரிப்பதற்காகத்தான்.

சர்வ சதா காலமும் பேரின்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவன் எதற்காக நமக்காகத் துன்பப் பட வேண்டும்?

நாமே நமக்காகத். துன்பப்பட தயங்குகிறோம்.

ஊசி போட்டால்தான் காய்ச்சல் சுகமாகும் என்றால் டாக்டரிடம்,

" டாக்டர், டாக்டர், வலியில்லாமல் ஊசி போட முடியுமா?" என்று கேட்கிறோம்.

 நமக்காக நாமே ஒரு சிறு வலியை தாங்க பயப்படுகிறோம்.

நமக்காக ஏன் இறைவன் 
துன்பப்பட்டு மரிக்க வேண்டும்?

நம்மீது அவர் கொண்டுள்ள அளவில்லா அன்பினால் தானே?

நாம் ஏன் அவருக்காக துன்பப்பட  தயங்குகிறோம்? 

நமக்காக துன்பப்பட்டதால் அவருக்கு ஆதாயமும் ஒன்றும் இல்லை.

நமக்குதான் பாவமன்னிப்பும், மீட்பும்.

அவர் துன்பப் பட்டாலும் நமக்கு தான் ஆதாயம்.

 நாம் துன்பப் பட்டாலும் நமக்கு தான் ஆதாயம்.
 
ஆனாலும் துன்பப்பட தயங்குகிறோம்.

சில மாணவர்கள் படிக்காமலே பாஸ் பண்ண ஆசைப்படுவது போல 

நாமும் கஷ்டப்படாமலேயே  மோட்சத்திற்குப்  போக ஆசைப்படுகிறோம்.

 அது முடியாத காரியம்.

 துன்பம்தான், அதுவும், இறைவனுக்காகப் படும்  துன்பம் தான், நமக்கு மோட்ச பேரின்பத்தைத் தரும்.

2. நாம் கிறிஸ்துவுக்காகத் துன்பப்படும்போது     அவருடைய அடிச்சுவடுகளைப்  பின்பற்ற வேண்டும்.

நாம்

 கிறிஸ்துவுக்காக மட்டுமல்லாமல்,

 அவர் எந்த நோக்கத்திற்காக, எப்படி துன்பப்பட்டாரோ

 அந்த நோக்கத்திற்காக, அப்படியே

 துன்பப்பட வேண்டும்.

கிறிஸ்துவின் சிலுவைப் பாதையில் அவரது அடிச்சுவடு முதலில் பதிந்த இடம் பூங்காவனம.

தன்னுடன் அழைத்துச் சென்ற மூன்று சீடர்களையும் செபம் சொல்ல சொல்கிறார்.

அவரும் செபம் சொல்ல செல்கிறார்.

இயேசுவுக்காக நாம் படும் துன்பங்களும் செபத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும்.

சீடர்களைப் போல நாம் தூங்கி விடக்கூடாது.

இயேசு,

 "தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.

நமக்கு வரும் துன்பங்கள் நமது சக்திக்கு மீறியவை போல் தோன்றினால்

 அவற்றிலிருந்து விடுதலை அளிக்க நாம் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை,

 ஆனால் இயேசுவைப் போலவே, இறைவனிடம்

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்று இறைவன் சித்தத்திற்கு பணிந்து,

துன்பங்களை முழுமனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்த அடிச்சுவடு பதிந்தது யூதாஸ் அவரை  முத்தமிட்டுக் 
காட்டிக்கொடுத்த இடத்தில்.

தன்னைக் காட்டிக்கொடுத்த துரோகியை இயேசு, "நண்பனே"
 என்று அழைத்தார்.

அது வெறும் வாய்ச்சொல் அல்ல,

அன்பு பொங்கி வடியும் அவரது  உள்ளத்திலிருந்து வந்த சொல்.

தீமை செய்தவனுக்கு  நன்மை செய்த சொல்.

இயேசுவைப் பின்பற்றி நமக்கு  யாரால் துன்பம் வந்தாலும் அவர்களை நாம் நேசிக்க வேண்டும்.

இதனால் நமது துன்பத்தின் மதிப்பு (Value) இரட்டிப்பாகிறது,

நாம் துன்பத்தை ஏற்றுக் கொள்வதால் கிடைக்கும் மதிப்போடு 

பகைவனுக்கும் நன்மை செய்யும் போது கிடைக்கும் மதிப்பும் சேர்ந்து கொள்கிறது.

இயேசு அடுத்த அடிச்சுவட்டைப் பதிந்தது இராயப்பர் மால்குஸின் காதை வாளால் வெட்டிய இடம்.

இந்த இடத்தில் நின்று சிறிது தியானித்து நகர்வோம்.

மாலகுஸ் அவரை கொலை செய்ய ஆசைப்பட்ட   தலைமைக் குருவின் ஊழியன்.

அந்த நோக்கத்திற்காகவே அவரைக் கைது செய்ய வந்தவன்.

எதிரியின் காதை வெட்டியவர் அவரது பிரதான சீடர்.

ஆனால் இயேசு தனது சீடரைக் கடிந்து கொண்டதோடு 

மால்குஸின் வெட்டப்பட்ட காதை ஒட்டவைத்துக் குணமாக்கினார்.

இயேசுவைப் பின்பற்றி 

நாம் சாக வேண்டும் என்று ஆசைப்படுபர்களை வாழ வைப்போம்.

அவரது அடிச்சுவடுகளைத் தொடர்ந்து பின்பற்றினால் 

இயேசுவும் நாம் வாழ்வதற்காகவே சாவிற்குத் தன்னைக் கையளித்தார் என்பது புரியும்.

அடுத்த அடிச்சுவடு விசாரணை மன்றத்தில்.

விசாரணை மன்றத்தில்  அவமானப்
படுத்தப் பட்டார்.

உடல் ரத்தம் எல்லாம் வெளியேறி வடியும் அளவிற்கு கசையால்  அடிக்கப்பட்டார். 


தலையில் முள் முடி சூட்டப்பட்டு அடிக்கப் பட்டார். 

இறுதியாக மரணத் தீர்ப்பிடப் பட்டார்.

எல்லாம் நமக்காக.

நமது வாழ்வில் இந்த அளவிற்கு நாம் அடிபட்டு இருக்கவும் முடியாது.

 அவமானப்படுத்தப்பட்டு இருக்கவும் முடியாது.

 ரத்தம் சிந்தி இருக்கவும் முடியாது.

நமக்கு கிடைத்திருக்கும் அடிகளும் ,  அவமானங்களும் நாம் தாங்கக்கூடிய அளவிற்கு தான் இருந்திருக்கும். 

ஆனாலும் அவைகளை இயேசுவுகாக தாங்கிக் கொள்வதோடு

 அவர் என்ன நோக்கத்திற்காக தாங்கிக்கொண்டாரே  அந்த நோக்கத்திற்காக நாம் அவற்றை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நாம், மற்றும் மனுக்குலம் முழுவதும் செய்த அனைத்து பாவங்களுக்கும் 

பரிகாரமாக அவற்றை ஒப்பு கொடுக்கவேண்டும்.

சில சமயங்களில் நமது மேலதிகாரிகள் தங்களது அறியாமையால் மற்றவர்கள் செய்த குற்றத்திற்காக நம்மை தண்டித்திருக்கலாம்.

 மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக அந்த தண்டனையை நாம் ஏற்றுக் கொண்டிருந்தால் 

நாமும் இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றுகிறோம்.

 அதற்கான நமக்குரிய நித்திய சம்பாவனை விண்ணகத்தில் காத்துக் கொண்டிருக்கும். 

இயேசு நமக்காகச் சிலுவையை சுமந்து சென்ற அடிச்சுவடுகளை நாம் பின்பற்றிச் சென்றால்

 நமது வாழ்நாளில் சுமக்க நேரிடும் எந்த சிலுவையையும் 

 பொறுமையோடு தாங்கிக்கொள்ள சக்தி கிடைக்கும்.  

சிலுவையின் பாரத்தால்  எத்தனை முறை நாம் கீழே விழுந்தாலும் 

எழுந்து நடக்க வலு கிடைக்கும். 

இறுதி அடிச் சுவடாகிய சிலுவை மரணம் நமக்கு நிறைய பாடங்களைப் போதிக்கிறது

இயேசு, 

"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்ன சிறிய செபத்தில் 

அவர் உலகிற்கு வந்த மொத்த நோக்கமே  அடங்கி இருக்கிறது.

 அவர்  பாவிகளாகிய நம்மை மன்னிக்கவே  உலகிற்கு வந்து பாடுபட்டு மரித்தார்.

அவரது அடிச்சுவட்டில் நாம் நின்றால்   நம்மால் மற்றவர்களை மன்னிக்காமல் இருக்க முடியாது.

மன்னிக்கும் குணம் இருக்கும் இடத்தில் மற்ற எல்லா நற்குணங்களும் இருக்கும்.

நமது வாழ்நாளின் எந்த கட்டத்தில் மனம் திரும்பினாலும்

 நமக்கு விண்ணகம் உறுதி என்பதை 

அவர் நல்ல கள்ளனை மன்னித்து, 

 "இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய்"

என்று ஏற்றுக் கொண்டதே எண்பிக்கும். .

வாழ்நாள் முழுவதுமே திருடனாய் வாழ்ந்தவனையே ஒரே நொடியில்  விண்ணகத்தில் ஏற்றுக்கொண்ட இறைமகனின் அடிச்சுவட்டில் நாம் நின்றால்,

நமக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பண்பு தானாக வந்துவிடும்..

மரியாளைத் தாயாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் நமது நண்பர்கள் 

ஒரு நிமிடம் சிலுவை அடியில் நின்று 

இயேசுவின் முகத்தை அண்ணார்ந்து பார்த்து 

அவர் தன் தாயை நமது தாயாக தந்த நிகழ்வைப் பார்க்க வேண்டும்!

தாயை ஏற்றுக் கொள்ளாதவன் மகனையும் ஏற்றுக் கொள்ளாதவன் தான்.

தான் வந்த வேலையை முற்றிலும் நிறைவேற்றிய பின்,

 (எல்லாம் நிறைவேறிற்று)

தந்தையிடம்,  தன் ஆவியை ஒப்படைத்தார்.  

நமது சிலுவை வாழ்வின் இறுதி நாளில் 

நாம் முற்றிலும் இயேசுவின் அடிச்சுவட்டில் நடந்த முழுமையான உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும்.

அந்த அளவிற்கு இயேசுவை முற்றிலும் பின்பற்றி  வாழ்ந்திருக்க வேண்டும்.

நாம் பின்பற்றுமாறு இயேசு
தந்த முன்மாதிரிப்படி  

நமது சிலுவை வாழ்க்கை அமைந்தால் நமது இறுதிநாள் நமக்கு முழுமையான திருப்தியான உணர்வு தரும்.

நாமும் மனமுவந்து முழு திருப்தியோடு நமது ஆன்மாவை தந்தையின் கையில் ஒப்படைக்கலாம்.

இயேசுவின் அடிச்சுவட்டில் துன்புறுவோம்.

இறுதி அற்ற (நித்திய) காலம் அவரோடு இன்புறுவோம்.

லூர்து செல்வம்.

1 comment:

  1. இரண்டும் முத்தான சிந்தனைகள். நன்றி

    ReplyDelete