"திருச்சபை அமைதியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, பரிசத்த ஆவியின் ஆறுதல் நிரம்பப் பெற்று வளர்ச்சியடைந்து வந்தது."
(அப்.9:31)
** ** ** ** ** ** ** ** ** ** **
யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய நாடுகளில் திருச்சபை வளர்ச்சி அடைந்ததற்கு என்னென்ன காரணங்கள் என்பதை
தலைப்பில் காணப்படும் வசனம் சுருக்கமாக விளக்குகிறது.
சமாதானம் (Peace)
இறையச்சம் (Fear of God)
பரிசுத்த ஆவியின் ஆறுதல்
(consolation of the Holy Spirit.),
சமாதானம் (Peace)
இறைமகன் இயேசு சமாதானத்தின் தேவன்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளங்களுக்கு இடையே சுமூகமான உறவு நிலவுகிறது என்றால்
அவர்கள் சமாதானமாக இருக்கிறார்கள் என்று கூறுவோம்.
இறைவன் நமது முதல் பெற்றோரை படைத்தபோது அவருக்கும், அவர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இருந்தது.
அதாவது அவர்களுக்கு இடையே சமாதானம் நிலவியது.
ஆனால் நமது பெற்றோர் தாங்கள் செய்த பாவத்தினால் இறைவனோடு கொண்டிருந்த சமாதான உறவை முறித்துக் கொண்டார்கள்.
முறிந்து போன சமாதானம் திரும்ப வேண்டுமென்றால் மனிதர் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும்.
இறைமகனே மனிதனாகப் பிறந்து தனது பாடுகள் மற்றும் மரணத்தின் மூலம் அப்பரிகாரத்தைச் செய்து நமக்கும் அவருக்கும் இடையே சமாதான உறவை ஏற்படுத்தினார்.
கிறிஸ்தவம் என்றாலே சமாதானம் என்பதே பொருள்.
மற்றவர்களோடு சமாதானமாக இருக்க முடியாதவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்கள்.
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் சமாதானம் கட்டாயம் இருக்கும்.
ஆதித்திருச்சபையில் உள்ளவர்களிடம் உண்மையான அன்பு இருந்ததால் தான்
அவர்களால் சொந்த உடைமைகளைக்கூட பொது உடைமையாக்கி பகிர்ந்து உண்டு வாழ முடிந்தது.
பிற்காலத்தில் பலர் உண்மையான திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றமைக்குக் காரணமும் உண்மையான அன்பு வற்றிப் போட்விட்டதுதான். .
இன்றும் கூட கிறிஸ்துவின் பெயரால் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களிடம் உண்மையான கிறிஸ்தவ அன்பு இருக்க முடியாது.
பைபிள் வசனங்களைத் தினமும் வாசித்தால் மட்டும் போது,
உண்மையான அன்புடன் சமாதானமாய் வாழ்வோம்.
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் குணமும் கட்டாயம் இருக்கும்.
அன்பு, மன்னிக்கும் குணம், சமாதானம் ஆகியவற்றை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது.
இறையச்சம் (Fear of God)
இறைவன் அன்பு மயமானவர்.
நமக்கும் இறைவன் மட்டில் முழுமையான அன்பு இருக்க வேண்டும்.
அதோடு பயமும் இருக்க வேண்டும்.
முதலாளியின் மட்டில் அடிமைக்கு இருக்கவேண்டிய பயம் அல்ல.
தந்தையின் மட்டில் பிள்ளைக்கு இருக்க வேண்டிய பயம்.
தந்தையின் மனதை நோகச் செய்து, அன்பை காயப்படுத்தி விடுவோமோ என்ற பயம்.
அன்பு கலந்த பயம்.
பயபக்தி.
பயபக்தி உள்ளவர்கள் கட்டளையை மீற மாட்டார்கள்.
ஏனெனில் கட்டளைகளை மீறுவது இறைவன் நம் மீது கொண்ட அன்பை காயப்படுத்துவதற்குச் சமம் என்பதை அறிந்திருப்பார்கள்.
எல்லோரும் பயபக்தியுடன் வாழ்ந்தால் பாவங்கள் நம்மிடம் எழுவதற்கு வாய்ப்பே இல்லை.
ஆதித் திருச்சபையினர் பயபக்தியுடன் வாழ்ந்தார்கள்.
ஆகவே திருச்சபை வேகமாக வளர்ந்தது.
நம்மிடையே இன்று பாவங்கள் மலிந்திருப்பதற்குக் காரணம் நம்மிடம் பயம் இல்லாதது தான்.
நாம் பாவம் இல்லாதவர்களாய் இருந்தால்தான்
நம்மால் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களிடையே பரப்ப முடியும்.
பயபக்தியுடன் வாழ்ந்து திருச்சபையை வளர்ப்போம்.
பரிசுத்த ஆவியின் ஆறுதல்
(consolation of the Holy Spirit.)
உலகம் முழுவதும் சென்று நற்செய்தியை அறிவிக்கும் பணியைத் தன்னுடைய சீடர்களுக்கு கொடுத்துவிட்டு இயேசு விண்ணகம் எய்தினார்.
அவர்கள் ஒரு அறையில் தங்கி ஜெபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
பரிசுத்த ஆவியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
பொதுவாக இயேசுவின் சீடர்கள் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள் என்று இயேசுவின் பாடுகளின்போது
அவர்கள் நடந்துகொண்ட விதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் பரிசுத்த ஆவி அவர்கள் மீது இறங்கியபோது அவர்கள் பயம் அவர்களைவிட்டு முற்றிலும் நீங்கியது.
ஆறுதலும், ஞானமும், தைரியமும் மிகவும் பெற்று
பயமே இல்லாமல் உற்சாகத்துடன் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.
பரிசுத்த ஆவி கொடுத்த தைரியத்தில்தான் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.
கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான்
கிறிஸ்தவம் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் வேகமாக பரவியது.
இன்றும் அதே பரிசுத்த ஆவி தான் நம்மோடு இருக்கிறார்.
நாம் ஞானஸ்நானம் பெற்றபோது நமது பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து ஆறுதல் தந்தவர் அவரே.
நாம் உறுதிப்பூசுதல் பெற்றபோது நமது ஆன்மாவைத் திடப்படுத்தி பாவத்தில் விழாதபடி நம்மைக் காத்துக்கொண்டு வருபவரும் அவரே.
பரிசுத்த ஆவியோடு ஒத்துழைக்காதவர்கள் மட்டுமே பாவத்தில் விழுகிறார்கள்.
நாம் பாவத்தில் விழுந்து விட்டாலும் அதிலிருந்து எழுந்துவர நம்மை தூண்டுவதோடு
அதற்காக அருள் வரங்களை மிகுதியாகத் தருகிறார்.
எல்லா வரமும் நிரம்பித் ததும்பும் பரிசுத்த ஆவி
நமது உள்ளத்தில் இறங்கி வரும்போது
நமக்கு
ஞானம், புத்தி, விமரிசை,
அறிவு, திடம், பக்தி, தெய்வ பயம்
ஆகிய வரங்களை அபரிமிதமாகத் தந்து, நம்மை ஆசீர்வதிக்கிறார்.
நமக்குச் சந்தேகங்கள் வரும்பொழுது புத்திக்கு தெளிவை கொடுக்கிறார்.
துன்பங்கள் வரும்போது நமக்கு வரவிருக்கும் நித்திய பேரின்பத்தை நினைவுபடுத்தி நமக்கு ஆறுதல் அளிக்கிறார்.
அவர் அன்பின் தேவன்.
ஆறுதலின் தேவன்.
பாவ நோயிலிருந்து நமது ஆன்மாவிற்கு சுகம் அளிக்கும் தேவன்.
நாம் எதற்காகப் பரிசுத்த ஆவியைத் தேடுகிறேம்?
"சுகமளிக்கும் ஆவிக்குரிய கூட்டங்களுக்குச்" செல்பவர்கள்
தங்களது உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக வேண்டும் என்ற நோக்கத்துடனே செல்கிறார்கள்.
பாவத்தைப் பற்றியும் பரிசுத்தத்தனத்தைப் பற்றியும் கவலைப்படுவதே இல்லை.
அக்கூட்டங்களுக்குச் செல்லும் ஆட்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது
உலகம் மனம் திரும்பி விட்டது போல் தோன்றும்.
ஆனால் உற்று நோக்கினால் ஒன்று புரியும்.
அவர்கள் பரிசுத்த ஆவியைத் தேடியல்ல
தங்கள் உடல் நலத்தையே தேடிச் செல்கிறார்கள்.
இன்றைய நாளில்,
கொரோனாவிற்குப் பயப்படுபவர்களில் எத்தனை பேர் பாவத்தைப் பார்த்து பயப்படுகிறார்கள்?
ஆதித்திருச்சபை வேகமாக வளர்ந்ததுபோல நாம் ஒவ்வொருவரும் ஆன்மீகத்தில் வரவேண்டும்.
அப்படி வளர நம்மிடம் இருக்க வேண்டியது,
அன்பு, (Love)
சமாதானம் (Peace)
இறையச்சம் (Fear of God)
பரிசுத்த ஆவியின் ஆறுதல்
(consolation of the Holy Spirit.)
ஆகியவை தான்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment