"இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்"
(லூக். 18:38)
_______________________________
இயேசுவை ஏன் தாவீதின் குமாரன் என்று அழைக்கிறோம்?
தாவீதின் வம்சத்தில் பிறந்தார் என்பது உண்மைதான்.
தாவீது ஒரு அரசர், ஆகவே இயேசு அரச குடும்பத்தில் பிறந்தார் என்பது உண்மைதான்.
தாவீது இஸ்ரயேல் மக்களின் இவ்வுலக அரசர்.
ஆனால் அரச குடும்பத்தில் பிறந்த இயேசு இஸ்ரேல் மக்களின் இவ்வுலக அரசர் அல்ல.
இயேசு பிறந்தபோது இஸ்ரயேல் மக்கள் ரோமை சாம்ராட்சியத்தால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
இயேசு அவர்களை ரோமை சாம்ராட்சியத்திலிருந்து உலக ரீதியாக மீட்க எதுவும் செய்யவில்லை.
"நீ யூதரின் அரசனோ?" என்று பிலாத்து வினவும்போது,
இயேசு மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்"
(லூக்.23:3)
"என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று:
(அரு. 18:36)
என்றுதான் சொன்னார்.
ஆக அரச குடும்பத்திலிருந்து பிறந்தது இந்த உலகை ஆள்வதற்கு அல்ல.
(ஏற்கனவே இந்த உலகம் அவருடையதுதான். ஏனெனில் அவர்தான் இதை படைத்தவர்.)
அப்படியானால் இயேசு,
"தாவீதின் மைந்தன்" என்று இயேசு அழைக்கப்படுவதில் ஏதாவது உட்பொருள் இருக்குமோ?
இதைத் தியானிக்கும் போது என் மனதில் பட்டதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இயேசு உலகில் மனிதனாய்ப் பிறந்ததின் நோக்கத்தை இரண்டு கண்ணோக்குகளில் (points of view)பார்க்கலாம்.
இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான்.
1.பாவிகளை மனந்திருப்ப.
2.மனிதரைப் பாவத்திலிருந்து மீட்டு பரிசுத்தராய் மாற்ற.
1.இறைமகனாகிய (Son of God) இயேசுவுக்குத் தன்னை மனு மகன் (Son of Man) என்று அழைத்துக் கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன்.
"மனுமகன் பாடுகள் பல படவும்......." (லூக்.9:22)
"இழந்துபோனதைத் தேடி மீட்கவே
மனுமகன் வந்துள்ளார்"
(லூக்.19:10)
அவர் விருப்பப்பட்டு தானே மனிதனாய்ப் பிறந்தார்.
"மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்"
(லூக்.5:32)
நமது முதல் பெற்றோர் பாவம் செய்ததால், மனுக்குலம் முழுவதும் பாவத்தின் பிடியில் விழுந்தது.
மனிதர்கள் எல்லாருமே மீட்கப் பட வேண்டிய பாவிகள்.
பாவிகளை மீட்கவே பாவ வலைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் மனுகுலத்தில் மனிதனாகப் பிறக்கிறார்.
பாவிகளை மனம் திருப்ப இறைமகன் மனு மகனாக பிறக்கவிருப்பதற்கு முன் அடையாளமாக
அவர் தாவீதின் வம்சத்தில் பிறக்க நித்திய காலமாக திட்டமிடுகிறார்.
தாவீது இறைவனால் இஸ்ரயேலரின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
ஆனால் அவர் உரியாவின் மனைவியோடு விபச்சாரம் செய்து மகாப் பெரிய பாவத்தைக் கட்டிக் கொண்டார்.
ஆனால் நாத்தான் தீர்க்கத்தரிசி மூலம் இறைவன் அவரது தவற்றைச் சுட்டிக் காண்பித்தபோது,
தான் செய்த பெரிய பாவத்திற்காக மிகவும் மனம் வருந்தி அழுது
இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்.
இறைவன் அவரை மன்னித்தார்.
இறை மகன் மனிதனாய்ப் பிறப்பதற்கு
மிகப் பெரிய பாவம் செய்து மனம் திரும்பிய தாவீதின் வம்சத்தைத் தேர்ந்தெடுத்தார்.
தான் பிறந்தது பாவிகளை மனம் திருப்புவதற்காகத்தான் என்பதற்கு
முன் அடையாளமாக இதை செய்தார்.
மிகப்பெரிய பாவம் செய்த பாவிகள்
பைபிளை வாசிக்க நேர்ந்தால்
இறைவன் இவ்வளவு பெரிய பாவியை இரக்கத்தோடு மன்னித்திருக்கும் போது
நம்மையும் கட்டாயம் மன்னிப்பார் என்ற நம்பிக்கையோடு இறைவனை நோக்கி
பாவத்துக்கான மனஸ்தாபத்தோடு திரும்பி வருவர்.
அப்படிப் பட்டவர்களுக் காகத்தான் இயேசு தாவீதின் வம்சத்தில் பிறந்தார்.
தாவீதின் மைந்தன் என்று அழைக்கப்படுவதை அவர் தடுக்கவில்லை.
"இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்"
என்று வழியோரக் குருடன் கெஞ்சிய போது, இரங்கி அவனைக் குணப்படுத்தினார்.
இயேசு மனம் திரும்பும் பாவிகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார்.
பாவியாகிய சக்கேயுவின் வீட்டுக்குத் தங்குவதற்காகப் போகிறார்.
மற்றவர்களின் முணு முணுப்பைப் பற்றி கவலைபட வில்லை.
சக்கேயு மனம் திரும்புகிறான்.
மனம் திரும்பிய ஒரு பாவியின் வம்சத்தில் பிறக்க திட்டமிட்டது
தான் பாவிகளையே தேடி வந்து இருப்பதை வெளியே காண்பிப்பதற்காகதான்.
எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் அவனையும் நேசிக்கிறார்.
அவன் மனம் திரும்புவதையே விரும்புகிறார்.
2.அவர் பரிசுத்தர்.
அவர் பாவிகளை நேசிப்பதே அவர்களைப் பரிசுத்த மானவர்களாக மாற்றுவதற்காகத் தான்.
மனித சுபாவம் எடுக்கும் முன்பே
தான் எந்த பணிக்காக வந்தாரோ
அந்த பணியை ஆரம்பித்து விட்டார் இயேசு.
அதாவது மனிதர்களை
பரிசுத்தமானவர்களாக மாற்ற வந்த இயேசு
அவரை பெறப்போகும் தாயை
அவள் உற்பவிக்கும்போதே ஜென்ம பாவம் இல்லாமல் பரிசுத்தமானவளாகப் படைத்தார்.
இயேசு தன்னைக் கருத்தரிக்கும் பெண் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக,
மீட்பிற்காக தான் படவிருக்கும் பாடுகளின் பலனை முன்கூட்டியே அவளுக்கு அளிக்கிறார்.
அதன் பலனாய் மரியாள் பாவ மாசின்றி உற்பவிக்கிறாள்.
நம்மை பாவத்தில் விழுந்த பின்பு மீட்ட இயேசு
தன் தாயை
இறைவனின் தாய் என்பதால்
விசேசித்த விதமாக அவளை பாவத்தில் விழாமல் மீட்டார்.
ஆகவேதான் அவளை நாம் "அருள் நிறைந்த மரியே"
என்கிறோம்.
"இயேசுவே, நீர் பரிசுத்தர்.
ஆனால் பாவிகளை அளவு கடந்து நேசிக்கிறீர்.
பாவிகள் மனம் திரும்ப வேண்டும் என்று ஆசிக்கிறீர்.
அந்த ஆசையை வெளிப்படையாகக் காட்டவே,
பாவியாக இருந்து மனம் திரும்பிய தாவீதின் வம்சத்தில் பிறந்தீர்.
தாவீதை மனம் திருப்பியது போல எங்களையும் மனம்
திருப்பும்.
இயேசுவே, தாவீதின் வம்சத்தில் பிறந்தவரே. எங்கள் மீது இரக்கமாக இரும்.
இயேசுவே, பாவ மாசு அண்டாத, அருள் நிறைந்த மரியாளின் மைந்தனே,
எங்கள் பாவங்களை மன்னித்து, எங்களைப் பரிசுத்தர்களாக மாற்றும்.
ஆமென்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment