Friday, May 8, 2020

''நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"(அரு.13:20)




''நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"
(அரு.13:20)
**  **  **   ** ** **   ** ** ** ** 

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு. 3:17)

இவை இறைமகனின் வார்த்தைகள்.

தந்தையாகிய இறைவன் தன் ஒரே மகனை நம்மை மீட்பதற்காக உலகிற்கு அனுப்பினார்.

மகனை ஏற்றுக்கொள்பவர்கள் மீட்பு அடைவார்கள்.

ஏற்றுக்கொள்பவர்கள் என்றால்

 அவரது நற்செய்தியைக் கேட்டு, அறிந்து, விசுவசித்து, அதன்படி வாழ்பவர்கள்.

விண்ணகத்திலிருந்து இறங்கி மண்ணகம்  வந்த இறைமகன் 

மீட்பின் நற்செய்தியை அறிவித்து 

மானிடர் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு, சிலுவை மரத்தில் தன்னையே பலியாக்கி, மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.

உயிர்த்த நாற்பதாவது நாள் விண்ணகம் எய்தினார்.

அவர் பூமியில் மனிதனாக வாழ்ந்தது 33 ஆண்டுகள் மட்டுமே.

அதிலும் நற்செய்தி அறிவித்தது 3 ஆண்டுகள் மட்டுமே.

அதிலும் யூதர்கள் வாழ்ந்த கலிலேயா பகுதியை ஒட்டியே இயேசு நற்செய்தியை அறிவித்தார்.

ஆனால் அவர் உலகிற்கு வந்தது உலகெங்கும் எல்லா மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கவே.

உலக மக்கள் அனைவரும் மீட்புப் பெற வேண்டும்.

உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கவே 12 சீடர்களைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

அவர்களிடம்   இயேசு தான் பாடுபடுவதற்கு முந்திய இரவில்,

''நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:  

 என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்."   

என்று கூறினார்.

இது இயேசு 'நமக்குத்' தரும் நற்செய்தி.

இதில் இயேசு சீடர்களைப் பார்த்து 'உங்களை' என்று கூறவில்லை.

 மாறாக நம்மைப் பார்த்து,

"நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன்..."

என்கிறார்.

அவர் சீடர்களை நற்செய்தி அறிவிக்க  அனுப்பி விட்டு விண்ணகம் சென்றுவிடுவார்.

சீடர்களும் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்துவிட்டு 

அவர்களுக்கு காலம் வந்ததும் அவர்களும் இறந்து விண்ணகம் சென்றுவிடுவார்கள்.

 உலகம் முடியுமட்டும் சீடர்களின் வாரிசுகள் தொடர்ந்து சீடர்கள் ஆற்றிய பணியைச் செய்து கொண்டிருப்பார்கள்.

நம்மிடையே நற்செய்திப் பணி ஆற்றிக் கொண்டிருக்கும் பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் யாவரும் இயேசுவால் அனுப்பப் பட்டவர்களே.

அவர்களை நாம் ஏற்றுக் கொள்ளும் போது  நாம் இயேசுவை ஏற்றுக் கொள்கிறோம்.

ஏற்றுக்கொள்ளுதல் என்றால்,
நற்செய்தியை ஏற்று  அதன்படி வாழ்வது.

நாம் நமது ஞானத் தந்தையர் நமக்கு அளிக்கும்  நற்செய்தியைக் காதால் கேட்கிறோம்.

தலைக்குள்ளும் ஏற்றிக் கொள்கிறோம். 

ஆனால் இதயத்துக்குக்
 கொண்டு வந்திருக்கிறோமா?

நற்செய்தியை 
வாழ்வாக்குகிறோமா?

நாம் உண்ட உணவு ஜீரணமாகி அதன் சத்து உடலோடு கலக்காவிட்டால் நாம் உணவு உண்டு பயன் இல்லை.

அதுபோல்தான் நாம் கேட்கும் நற்செய்தி நமது வாழ்வை இயேசுவுக்கு ஏற்ற படி மாற்றாவிட்டால் நாம் நற்செய்தியை கேட்டும் பயனில்லை.

வீட்டுக்கொரு பைபிள் என்ற நிலை மாறி ஆளுக்கொரு பைபிள் என்ற  நிலை வந்துவிட்டது.

எல்லோர் கையிலும் இப்போது பைபிள்  இருக்கிறது,

 
அநேகருக்கு அது கையில்தான் இருக்கிறது.

பைபிள் இறைவாக்கு,

 அது கையை விட்டு நமது வாழ்வுக்குள் வரவேண்டும்.

வராவிட்டால் அது கையில் இருந்தும்  பயன் இல்லை.


"நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன்"

என்று இயேசு சொல்வதில் வேறொரு பொருளும் இருக்கிறது.

"நான் அனுப்புகிறவனை" என்று இயேசு சொல்லும்போது,

 யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

 ஆகவே, அவர் யாரை வேண்டுமானாலும் நம்மிடம்  நற்செய்தியை அறிவிக்க அனுப்பலாம். 

பணிக் குருத்துவத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் அல்லாமல் 

பொது குருத்துவத்தைச் சேர்ந்தவர்களைக் கூட அனுப்பலாம்.

 நம்மோடு அவர்கள்  பகிர்ந்து கொள்வது இயேசுவின் நற்செய்தி என்பதை நாம் புரிந்து கொண்டால்

 அவர்களையும் நாம் ஏற்றுக்கொண்டு இயேசுவின் நற்செய்திப் படி வாழ கடமைப்பட்டிருக்கிறோம்.

பணியோ, தனியோ, நாமும் குருத்துவத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

இயேசுவை விசுவசிக்கும் எல்லோருக்கும் அவரை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த கடமை உண்டு.

பகிர்ந்துண்டு வாழ்வது தானே நமது பண்பாடு,

 உணவை மட்டுமல்ல, உண்மையையும் பகிர்ந்து கொள்ள நமக்கு உரிமையும் கடமையும் உண்டு.

"பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்."

என்ற இயேசுவின் கூற்றில் 'பசி' என்பது ஆன்மாவின் பசியாகக் கூட இருக்கலாம்   அல்லவா?

விசுவாசம் தானே ஆன்மீக பசிக்கு உணவு?

உயிரும் அதுதான்.

 உணவும் அதுதான்.

 வாழ்வும் அதுதான்.

பகிர்ந்துண்டு உண்பது,
ஆன்மீக உணவை பகிர்ந்து உண்பது  என்றும் பொருள் படலாமே?

ஆன்மீக உணவாகிய விசுவாசத்தை நாம் மற்றவர்களோடு பகிர பகிர நம்மிடம் அதன் அளவு அதிகரித்துக்கொண்டே வரும்.

எடுத்து கொடுக்கக் கொடுக்க அதன் ஆழம் அதிகம் ஆகும்.

இயேசு சீடர்களுக்குக் கொடுத்த விசுவாசத்தை அவர்கள் அவர்களுடைய வாரிசுகளுக்குக் கொடுத்தார்கள்.

 வாரிசுகள் (பணிக் குருத்துவத்தினர்) நமக்குத் தருகின்றார்கள்.

 நமக்குக் கிடைத்த விசுவாசத்தை மற்றவர்களுக்கும் கொடுப்போம்.

வார்த்தையால் மட்டுமல்ல நம்முடைய வாழ்வாலும் கொடுப்போம்.

நம்முடைய விசுவாச வாழ்க்கையைப் பார்க்கிற மற்றவர்களுக்கு

 நம்முடைய விசுவாசத்தில்  வாழ அவர்களுக்கும் ஆசை வர வேண்டும்.

நம்முடைய நற்செயல்களில் வளரும் விசுவாசமே உயிருள்ள விசுவாசம்.

விசுவாசம் நமக்கு இறைவன் தந்த இலவசப் பரிசு,


 இலவசமாகப் பெற்றுக் கொண்டோம், 

இலவசமாகக் கொடுப்போம்.

 கொடுக்கத் கொடுக்க குறையாத செல்வம் விசுவாசம்.

 அள்ள அள்ள
 அழியாத செல்வம் விசுவாசம்.
விசுவாசச் செல்வத்தைக்  கொடுப்போம்,

மோட்ச பாக்கியத்தைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment