"நானே வழியும் உண்மையும் உயிரும்." (அரு. 14:6)
** ** ** ** ** ** ** ** ** **
ஆண்டவர் சீடர்களிடம் தான் தனது தந்தையின் இல்லத்திற்குப் போகப் போவதாக தெளிவாகச் சொல்லுகிறார்.
"நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்." என்றும் ஆண்டவர் சொல்கிறார்.
அப்படியானால் இயேசு அதைப்பற்றி ஏற்கனவே சீடர்களுக்குச் சொல்லியிருப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் சீடர்கள் ஆண்டவர் சொன்னதை எப்படி கவனித்தார்கள் என்று தெரியவில்லை.
நமது வகுப்பிலுள்ள மாணவர்களை போல்தான் இருந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
ஆண்டவர் சொன்னதைச் சீடர்கள் ஒழுங்காகக் கேட்டிருந்தால்
"உங்களுக்கு தெரியும்"
என்று சொன்னதை தோமையார் தெரியாது என்று சொல்லியிருக்க மாட்டார்.
"ஆண்டவரே, நீர் செல்லுமிடமே எங்களுக்குத் தெரியாதிருக்க, அங்கே போகும்வழி எப்படித்
தெரியும் ?"
இது தோமையார் கூறியது.
இவ்வளவுக்கும் இயேசு,
"திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்:'
என்று சொல்கிறார்.
ஆனாலும் தோமையார் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல்
கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார். .
ஆனால் அதற்காக ஆண்டவர் அவரைக் கடிந்து கொள்ளவில்லை.
இயேசு அவரிடம் :
"நானே வழியும் , உண்மையும், உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை.''
என்று கூறினார்.
இந்த பதிலில் இயேசு எங்கே போகப் போகிறார் என்பதற்கு தோமையாருக்கு விடை
கிடைத்துவிட்டது.
அதற்கான வழியும் தெரிந்துவிட்டது.
தோமையாருக்கு மட்டுமல்ல
நமக்கும் விண்ணகம் செல்வதற்கான வழி தெரிந்துவிட்டது.
தந்தையிடம் செல்வதற்கான,
அதாவது,
விண்ணகத்துக்கான வழி இயேசு மட்டுமே.
இயேசுவின் வழியாகத்தான் விண்ணகத்திற்குச் செல்ல முடியும்.
இதைச் சரியாகப் புரிந்துகொள்ள ஒரு ஒப்புமை.
நான் ஒரு முக்கியமான வேலைக்கு விண்ணப்பித்து உள்ளேன் என்று வைத்துக் கொள்ளவும்.
நேர்காணச் (Interview) சென்றிருந்த போது நேர்காண்பவர்,
என்னுடைய சான்றிதழ்களை வாங்கி பார்த்து விட்டு,
அதில் என் தந்தையின் பெயரையும் பார்த்துவிட்டு
என்னைப் பற்றி எதுவும் விசாரிக்காமல்
என் தந்தையை பற்றி மட்டும் விசாரித்துவிட்டு
"You are appointed" என்று கூறுகிறார்.
எனக்கு ஒரே ஆச்சரியம்.
அது எப்படி விண்ணப்பித்து இருக்கும் என்னுடைய தகுதியை பற்றி எதுவும் கேட்காமல்
தந்தையை பற்றி மட்டும் விசாரித்துவிட்டு
"You are appointed" என்று கூறினார்?
வீட்டிற்கு வந்து அப்பாவிடம் நடந்ததைச் சொன்னேன்.
என்னுடைய தகுதியைப் பற்றி ஏன் எதுவும் கேட்கவில்லை என்று கேட்டேன்.
அதற்கு அப்பா,
"Interview செய்தவரைப் பற்றி விசாரித்து விட்டு பிறகு சொல்லுகிறேன்" என்றார்.
மறுநாள் அப்பா,.
"நன்கு விசாரித்தேன். அவன் எனது நெருங்கிய நண்பன் என்று தெரிய வந்தது. என்னுடைய மகன் என்பதற்காக உனக்கு வேலை தந்திருக்கிறான்." என்றார்
எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
"அப்படியானால் என் தகுதியை கருதி வேலை தரவில்லையா?" என்று கேட்டேன்.
அதற்கு அப்பா,
"என்னுடைய மகன் என்பதால் தகுதி உள்ளவனாகத்தான் இருப்பான் என்ற கணிப்பில் உனக்கு வேலை தந்திருக்கிறான்." என்றார்.
மகனின் தகுதியை கருதி அல்ல, தந்தையைத் கருதியே வேலை கொடுத்திருக்கிறார்கள்.
அதுபோலவே நமது தகுதியை கருதி அல்ல நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்காகவே விண்ணகம் செல்ல நமக்கு அனுமதி கிடைக்கும்.
அதாவது இயேசுவின் வழியே விண்ணகம் செல்வோம்.
இயேசுவின் வழியே விண்ணகம் செல்ல வேண்டுமென்றால் நம்மை இயேசுவுக்குத் தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தந்தையின் சித்தத்தை எப்படி இயேசு நிறைவேற்றுகிறாரோ
அதேபோல் நாமும் இயேசுவின் சித்தத்தை நிறைவேற்றினால் அவர் வழியே தந்தையிடம் செல்ல
நமக்குத் தகுதி கிடைக்கும்.
இயேசுவின் சித்தத்தை நாம் நிறைவேற்றும்போது தந்தையின் சித்தத்தைத்தான் நிறைவேற்றுகிறோம்.
ஆகவேதான் ஒவ்வொரு நாளும் நாம் தந்தையை நோக்கி ஜெபிக்கும்போது,
"உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக."
எங்கு வேண்டுகிறோம்.
பிதாவின் சித்தமே மகனின் சித்தம். ஆகவே மகனின் சித்தத்தை நிறைவேற்று பவர்களுக்கு மட்டுமே மகன் வழி,
தங்கள் இஷ்டப்படி நடப்பவர்களுக்கு இயேசு வழி அல்ல.
இயேசுவின் வழியே செல்லாதவர்கள் தந்தையிடம் செல்ல முடியாது.
இயேசுவே நமது ஆன்மாவின் உயிர்.
நம்முடைய முதல் பெற்றோர் செய்த பாவத்தின் காரணமாக நாம் உற்பவிக்கும் போதே ஜென்ம பாவத்துடன் தான் உறபவிக்கிறோம்.
நாம் பிறக்கும்போது உடலளவில் உயிரோடு பிறந்தாலும்
ஜென்ம பாவத்தினால் நமது ஆன்மா உயிரற்று இருக்கிறது.
நாம் ஞானஸ்நானம் பெறும்போது நமது ஆன்மாவிற்கு ஊட்டப்படும் தேவ இஷ்ட பிரசாதம் என்னும் இறை அருள்தான்
ஆன்மாவிற்கு உயிர் அளிக்கிறது.
உயிர் பெற்ற ஆன்மா வளர்ச்சி அடைய தொடர்ந்து உயிருள்ளதாக இருக்க வேண்டும்.
உயிருள்ள உடல் வளர நாம் உணவு உண்பது போல
நமது ஆன்மாவும் உயிரோடு வாழ ஆன்மீக உணவு தேவை. இயேசு தன்னையே நமது ஆன்மாவிற்கு உணவாகத் தருகிறார்.
"நானே உயிர் தரும் உணவு."
(அரு. 6:35)
"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான்."
(அரு. 6:51)
நமக்கு உயிர் தரும் உணவு மட்டுமல்ல, நமது உயிரே அவர்தான்,
அவரின்றி நமக்கு நிலைவாழ்வு இல்லை.
அவரே நமது உயிராக இருப்பதினால் தான்
நாம் பாவம் செய்யும்போது அவரை விட்டு நாம் பிரிவதால் நமது ஆன்மாவும் உயிரை இழந்துவிடுகிறது.
நானே உண்மை.
(I am the truth)
நமது மொழியில் உள்ளதை உண்மை என்று கூறுவோம்.
உள்ளதை உள்ளபடியே பார்த்து உள்ளபடியே கூறுவதும் உண்மை.
ஆனால் மனித அனுபவத்தில் உண்மையிலேயே உண்மையை கண்டவர் யாரும் இலர்.
நேற்றைய உண்மை இன்றைய பொய்யாகியிருக்கிறது.
நேற்றைய விஞ்ஞான உண்மைகள் கூட இன்று பொய் ஆகி இருக்கின்றன.
ஒரு காலத்தில் சடப்பொருட்களின் கடைசி அலகு (unit) அணு என்று கருதப்பட்டது.
ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் அணுவையும் உடைத்து எலக்ட்ரான், புரோட்டான்ஸ், நியூட்ரான்ஸ் வரை வந்துவிட்டன.
சூரிய கிரகங்கள் ஒன்பது , அவற்றில் புளுட்டோ ஒன்பதாவது என்ற பழைய உண்மை இன்று பொய்யாகி விட்டது.
மனிதனின் விஞ்ஞான அறிவை விட பெரியது இப்பிரபஞ்சம்.
இயேசு மட்டுமே உள்ளதை உள்ளபடி காணக்கூடியவர்.
ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் அவர்.
"நானே உண்மை'' என்று அவரால் மட்டும் தான் கூற முடியும்.
உண்மையின் வழியாக, அதாவது இயேசுவின் வழியாக நோக்கினால் நமது
ஆன்மீகக் கண்களுக்கு உண்மை மட்டுமே தெரியும்.
இயேசுவின் வழியாக நோக்குவது எப்படி?
இயேசு நமக்குப் போதித்த நற்செய்தி வழியாக நோக்குவதே இயேசுவின் வழியாக நோக்குவது.
பைபிள் மூலம் நமக்கு தரப்பட்டிருக்கும் இறைவார்த்தையே இயேசுவின் நற்செய்தி.
இயேசு உண்மை. Jesus is truth.
உண்மையிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.
ஆகவே பைபிளின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.
உண்மையின் வழியே நோக்கினால்தான் நாம் தேடும் உண்மையை காணலாம்.
நமது வாழ்வின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் உண்மையின் வழியே தான் தீர்வு காணப்படவேண்டும்.
அதாவது இயேசுவின் நற்செய்தி வழியேதான் தீர்வு காணப்பட வேண்டும்.
அப்படி காணப்படும் தீர்வுதான் உண்மையாக தீர்வு.
உலகத்தின் கண்கள் மூலம் பார்த்தால் துன்பங்கள் துன்பங்களாக மட்டும்தான் தெரியும்.
ஆனால் இயேசுவின் மூலம் அவற்றைப் பார்த்தால் அவை நமக்கு இறைவனால் அருளப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள் (blessings) என்ற உண்மை தெரியும்.
"உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்."
என்ற இறை வார்த்தை வழியே
உலகின் பிரச்சனைகளை நோக்கினால் உலகில் போர்கள் நிகழுமா?
கணவன்-மனைவி பிரச்சனைகளாக இருந்தாலும் சரி,
பெற்றோர் பிள்ளைகள் பிரச்சனைகளாக இருந்தாலும் சரி,
ஆள்வோர் ஆளப்படுவோர் பிரச்சனைகளாக இருந்தாலும் சரி
உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பைபிள் வார்த்தைகளில் தீர்வுகள் உள்ளன.
உண்மை வழியே நோக்கி உண்மையை அறிவோம்.
வழியும், உயிரும், உண்மையும் மட்டுமல்ல, நமது நிலைவாழ்வும் இயேசுவே!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment