"என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்."
(அரு.14:14)
** ** ** ** ** ** ** ** ** **
(தொடர்ச்சி)
."இன்றைக்கு என் கேள்விக்குப் பதில் வருமா அல்லது கதை வருமா?"
"நேற்று சொன்னது கதை அல்ல, பதிலுக்கு உள்ள முன்னுரைதான்.
நீங்கள் பைபிள் மட்டும் போதும் என்கிறீர்கள்.
நாங்கள் பைபிள் மட்டும் போதாது.
கிறிஸ்துவின் போதனைகளை நடை முறைப் படுத்திய பாரம்பரியமும் வேண்டும் என்கிறோம்.
மாதா பக்தியின் வேர் பைபிளில் இருக்கிறது.
அதன் வளர்ச்சி பாரம்பரியத்தில் இருக்கிறது.
இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நேற்று இரண்டையும் பற்றி பார்த்தோம்.
இயேசுவின் தாய், நமது தாய்.
தாயின் மீது அன்பு இருக்கவேண்டும் என்று யாரும் கட்டளை போடத் தேவை இல்லை.
அது இயல்பானது,
'
இயேசுவை நேசிப்பவர்கள் அவரைப் பெற்ற அன்னையை நேசிக்காமல் இருக்க முடியாது.
மரியாள் நமது அன்னை, அதாவது திருச்சபையின் அன்னை.
திருச்சபை எங்கே இருக்கிறது?
"புனிதர்களின் சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்."
இது விசுவாசப் பிரமாணம்.
பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களும்,
மரித்து விண்ணகம் எய்திய, உத்தரிக்கிற கிறிஸ்தவர்களும் சேர்ந்து ஒரே குடும்பத்தினர்.
எல்லோரும் சேர்ந்து கிறிஸ்துவின் ஞான சரீரத்தை (Mystical Body of Christ) சேர்ந்தவர்கள்.
கிறிஸ்து நமது தலை.
திருச்சபையின் எல்லா உறுப்பினர்களும் கிறிஸ்துவின் ஞான உடலின் உறுப்புக்கள்.
நமது உடல் உறுப்புகளில் தன்மையைப் பற்றி முதலில் பார்ப்போம்.
எல்லா உறுப்புகளும் நலமாக இருந்தால் தலை மகிழ்ச்சி அடையும்.
ஒரு உறுப்புக்கு ஒரு பிரச்சனை என்றால் எல்லா உறுப்புகளும் உதவிக்கு வரும்.
காலில் ஒரு பிரச்சனை என்றால் அதற்கு உதவ தலை, கண், கைகள் எல்லாம் உதவிக்கு வரும்.
அப்படியேதான் கிறிஸ்துவின் ஞான உடலின் உறுப்புக்களும்.
விண்ணகத்திலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலும் உள்ள திருச்சபையினருக்கு
உலகில் வாழும் திருச்சபையினர் மீது உண்மையாகவே அக்கரை உண்டு.
நமக்காக கடவுளிடம் வேண்டும்படி நாம் அவர்களிடம் கேட்கலாம்.
அவர்களும் நமக்காக கடவுளிடம் வேண்டுவார்கள்.
அவர்களுடைய மன்றாட்டைக் கடவுள் கேட்பார்.
உத்தரிக்கிற ஆன்மாக்கள் தங்களுக்காக வேண்ட முடியாது. நமக்காக வேண்டலாம்.
விண்ணகக் கிறிஸ்தவர்களும்
மண்ணகக் கிறிஸ்தவர்களும் செபத்தில் அதாவது உரையாடலில் இணைவது
எல்லோரும் விண்ணகத் தந்தையின் மக்கள், ஒரே குடும்பத்தினர் என்பதை நமக்கு உணர்த்துகிறது. .
இதனால் நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பு குடும்ப அன்பாக மலர்கிறது.
விண்ணில் வாழும் அனைவரும்,
திருச்சபையால் புனிதர் பட்டம் பெறாதவர்கள் கூட
புனிதர்கள்தான்.
புனிதர்களுக்கு நமது உதவி தேவை இல்லை.
ஆனால் நமக்கு அவர்கள் உதவி தேவைப்படுகிறது.
புனிதர் மீது நாம் கொள்ளும் பக்தி, அவர்களிடம் உதவி கேட்பதற்கு மட்டுமல்ல, அவர்கள் போல வாழவும் நமக்கு உதவ வேண்டும்.
எல்லாப் புனிதர்களிலும் மிகப்பெரிய புனிதை நமது விண்ணக அன்னைதான்.
மற்ற எல்லா புனிதர்களும் உலகில் வாழும் போது மாதா பத்தியில் சிறந்து விளங்கியவர்கள்தான்.
இறைமகன் இயேசு நம் அன்னையை நேசித்த அளவுக்கு வேறு யாராலும் நேசித்திருக்க முடியாது.
மரியன்னையை நேசிக்கும் நாம் அவளைப் போலவே அர்ப்பண வாழ்வு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
புனிதர்கள் வழியே தன்னிடம் வருவதை இறைவனே விரும்புகிறார், ஏனெனில் இது நமது குடும்ப உறவை வளர்க்கிறது.
இறைவன் இதை விரும்புகிறார் என்பதற்கு பைபிளில் என்ன ஆதாரம் இருக்கிறது என்று நீங்கள் கேட்க தேவையில்லை.
ஏனெனில் திருச்சபையின் பாரம்பரியம் மாதா பக்தியையும், புனிதர்கள் பக்தியையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
எந்த அடிப்படையில் மாதா பக்தியை திருச்சபை பாரம்பரியம் ஏற்றுக் கொள்கிறது என்று நீங்கள் கேட்க தேவை இல்லை.
ஏனெனில் புனித இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக நியமித்த ஆண்டவர் அவருக்குக் கொடுத்த வாக்குறுதி,
''மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்.
உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.
வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன்.
எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ
அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.
எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" (மத். 16:18, 19)
இந்த வாக்குறுதியின் மூலம் திருச்சபையின் தலைவருக்கு ஆண்டவர் திருச்சபையின் மீது சர்வ அதிகாரம் கொடுத்துள்ளார்.
மேலும்,
பாப்பரசர் சகல கிறிஸ்தவர்களுக்கும் தாம் ஆயரும் ஆசிரியருமாய் இருக்கிற தன்மையில்,
விசுவாசத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் அடுத்த காரியங்களில்
பாரம்பரிய போதனைகளுக்கு முரண்படாமல்,
ஒரு சத்தியத்தை முழு திருச்சபையும் ஏற்று கடைப்பிடிக்க வேண்டும் என்று
தனது மேலான முழு அப்போஸ்தலிக்க. அதிகாரத்தைக் கொண்டு போதிக்கையில் தவறமாட்டார்.
"நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா."
என்ற இவேசுவின் வாக்குறுதி இதை உறுதிப் படுத்துகிறது."
"இப்போ ஒன்று புரிகிறது.
மாதா பக்தியும், புனிதர்கள் பக்தியும் ஆதித் திருச்சபையின் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது.
அதன் அடிப்படையில் திருச்சபை அதை ஏற்றுக் கொண்டுள்ளது.
திருச்சபை ஏற்றுக்கொண்டுள்ளது என்றால் இயேசுவும் ஏற்றுக் கொண்டார் என்றுதான் பொருள்.
ஆகவே மாதாவிடமும், மற்ற புனிதர்களிடமும் வேண்டுவது இயேசுவுக்கு பிடித்தமான செயல்."
"இப்போது மரியாள் நமது தாய் என்றும்
அவள் மூலமாக இயேசுவிடம் செல்லலாம் என்றும்
ஏற்றுக் கொள்கிறீர்களா?"
"ஏற்றுக்கொள்கிறேன்."
"இயேசுவுக்கு நன்றி."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment