"என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவனே எனக்கு அன்புகாட்டுகிறவன்:"
(அரு. 14:21)
** ** ** ** ** ** ** ** ** **
உடலில் உயிர் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்?
உடல் தானாக அசைந்தால் அதற்கு உயிர் இருக்கிறது.
வெளியசைவு இல்லாவிட்டாலும் உள்ளசைவு இருக்கும்.
புகைந்து கொண்டிருந்தால் நெருப்பு இருக்கும்.
உயிரும், அசைவும்,
நெருப்பும், புகையும்
ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை.
ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று இல்லை.
லூர்து செல்வத்தை நோக்கி,
"நான் உன்னை நேசிக்கிறேன்" என்றான்.
செல்வம் "நன்றி" என்றான்.
லூர்தும் செல்வமும் ஒன்றாக உட்கார்ந்திருக்கிறார்கள்.
செல்வத்திற்கு நல்ல பசி.
லூர்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.
செல்வத்திடம் உணவு இல்லை.
ஆனால் லூர்து அவனோடு தன் உணவைப் பகிர்ந்து கொள்ளவில்லை.
செல்வம் லூர்துவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். .
லூர்து சாப்பிட்டுக்கொண்டே,
"நான் உன்னை நேசிக்கிறேன்" என்கிறான்.
செல்வம், "நீ ஒரு பொய்யன்."
அவன் சொல்வது உண்மை.
அன்பையும், பகிர்வையும் பிரிக்க முடியாது.
ஒன்று இல்லாவிட்டால் மற்றது இல்லை.
அன்புக்கும் பகிர்வுக்கும் அப்படி என்ன தொடர்பு?
நாம் இயேசுவின் சீடர்கள்.
அன்பை பற்றியும், பகிர்வைப் பற்றியும் இயேசு என்ன சொல்கிறார்?.
இயேசு நமக்கு இரண்டு கட்டளைகளை கொடுத்திருக்கிறார்
1. நாம் நமது முழு ஆன்மாவோடும்,
முழு மனத்தோடும்,
முழு வலிமையோடும்
இறைவனை அன்பு செய்ய வேண்டும்.
2. நம்மீது நாம் அன்பு காட்டுவதுபோல் அயலான்மீதும் அன்புகாட்டவேண்டும்."
இறைவன்பையும், பிறரன்பையும் பிரிக்க முடியாது.
இறைவனை நேசிக்கிறவன் மட்டும்தான் பிறரையும் நேசிப்பான்.
அன்பு இறைவனிடம் இருந்துதான் புறப்படுகிறது.
இறைவன் நம்மீது கொண்ட அன்பை எப்படி வெளிப்படுத்துகிறார்?
நம்மைப் படைத்ததின் மூலமும், நம்மோடு பகிர்ந்து கொண்டதின் மூலமும்
இறைவன் தனது அன்பை வெளிப்படுத்துகிறார்.
தனது அளவற்ற அன்பின் காரணமாக தன் அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒன்றுமில்லாமையில் இருந்து நம்மை படைத்தார்.
சுதந்தரம், அன்பு, இரக்கம், நீதி அறிவு, ஞானம் போன்ற தனது பண்புகளோடு தனது சாயலையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
அதேபோல்தான் நாம் நமது அயலானை நேசிக்கும் போது நம்மிடம் உள்ளதை அவனோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அயலானோடு தன்னிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளத் தெரியாதவன்
அயலானையும் நேசிக்கவில்லை ,
கடவுளையும் நேசிக்கவில்லை.
நமது பகிர்ந்துகொள்வதின் அடிப்படையில் தான், நாம் இறையரசுக்கு ஏற்றவர்களா என்பதை இயேசு தீர்மானிப்பார்.
இயேசுவே குறிப்பிடும் சில பகிர்தல்கள்:
பசிக்கிறவனோடு உணவைப் பகிர்தல்.
தாகமாய் இரக்கிறவனோடுத் தண்ணீரைப் பகிர்தல்.
அன்னியர்களோடு வரவேற்பைப் பகிர்தல்.
ஆடையின்றி இருப்பவர்களோடு உடையைப் பகிர்தல்.
நோயுற்றோடும், சிறையில் உள்ளோடும் ஆறுதலைப் பகிர்தல்.
இவை இயேசு கூறியவை.
உண்மையிலேயே பிறரன்பு உள்ளவன் தன்னிடம் உள்ளதை இல்லாரோடு பகிர்ந்து கொள்வான்.
இருந்தும் பகிர்ந்து கொள்ளாதவனிடம் உண்மையான அன்பு இல்லை.
கடவுளை நேசிக்க வேண்டும் என்பதும், கடவுள் பெயரால் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்பதும்,
' இறைவன் நமக்குத் தந்துள்ள அன்பின் கட்டளைகள்.
இந்த இரண்டு கட்டளைகளை நிறைவேற்றுபவன் மட்டும்தான் இறையன்பன்.
ஆகவே தான் இயேசு சொல்கிறார்:
"என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவனே எனக்கு அன்புகாட்டுகிறவன்:"
நாம் கிறிஸ்துவின் சீடர்கள்.
கிறிஸ்தவன் என்று நம்மை அழைத்துக் கொள்வதால் மட்டும் நம்மால் கிறிஸ்தவன் ஆகிவிட முடியாது.
கிறிஸ்துவின சிந்தனை, சொல், செயல் ஆகியவை நமது வாழ்வில் பிரதிபலித்தால் மட்டுமே நாம் கிறிஸ்துவின் சீடராக முடியும்.
சிந்தனை செயலாவது தான் வாழ்க்கை.
சிந்தனை நல்லதாக இருந்தால் வாழ்க்கையும் நல்லதாக இருக்கும்.
சிந்தனையில் கிறிஸ்து மட்டும் இருந்தால் நமது வாழ்க்கையும் கிறிஸ்தவ வாழ்க்கையாக இருக்கும்.
சிந்தனையில் இருக்கும்
கிறிஸ்து சொல்லில் மலர்ந்தால் நமது சொல் நற்செய்தியாகத்தான் இருக்கும்.
கிறிஸ்துவின் நற்செய்தி நமது வாழ்வில் மலரும் போது
நாம் கிறிஸ்துவை பிரதிபலிப்போம்.
நம்மை காண்பவர்கள் நம்மில் கிறிஸ்துவை காண்பார்கள்.
நமது வாழ்வே நற்செய்தியாக மாறிவிடும்.
தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே கிறிஸ்து புவிக்கு வந்தார்.
தந்தையின் சித்தமே கிறிஸ்துவில் நற்செய்தியாக மலர்ந்தது.
கிறிஸ்துவின் நற்செய்தி நமது வாழ்வாக மாறும் போது நாம் தந்தையின் சித்தத்தையே நிறைவேற்றுகிறோம்.
தந்தையின் சித்தமே நாம் முழுமையான அன்பு வாழ்வு வாழ வேண்டும் என்பதே.
அதாவது நமது சிந்தனையையும் சொல்லையும் செயலையும் அன்பு மட்டும்தான் இயக்க வேண்டும்.
அன்பு செய்ய வேண்டும் என்ற இறைவனின் சித்தம் தான் அவரது கட்டளையாக நமக்கு தரப் பட்டிருக்கிறது.
ஆகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றுபவன் மட்டும்தான் இறைவனை அன்பு செய்கிறான்.
இயேசுவை அன்பு செய்வோம்.
அவரது விருப்பப்படி, அதாவது, கட்டளைப்படி வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment