சீடராவோம், சீடராக்குவோம்.
...................................................
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்".
இது ஒரு தமிழ் மொழி.
"பகிர்ந்துண்டால் பசி தீரும்."
இது ஒரு பழமொழி.
நாம் நம்மை நேசிப்பதுபோல பிறரையும் நேசித்தால் மேற்கூறப்பட்ட இரண்டு மொழிகளும் நமமில் உண்மை யாகும்.
இரண்டுமே இறைவனின் பண்பை நமக்குப் புரியும் வகையில் எடுத்துரைக்கின்றன.
இறைவன் தனது சாயலாக நம்மைப் படைத்தார்.
நாம் எப்போதெல்லாம் நமக்கு உரியதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோமோ,
அப்போதெல்லாம் நாம் இறைவனின் சாயலாய் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாகக் காண்பிக்கின்றோம்.
இறைவன் அன்பு நிறைந்தவர்.
அவர் தனது அன்பாகிய பண்பை அவருடைய படைப்பாகிய நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
இறைவன் சுதந்திரமாக செயல்படக்கூடியவர்.
தம் சுதந்திரத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
அவர் தனது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நல்லதை மட்டும் செய்தார்.
நாமோ நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவம் செய்தோம்.
இதை உணர்ந்த பிறகாவது நம்முடைய பாவத்திற்கு மன்னிப்பு பெற்று, தொடர்ந்து நம் சுதந்திரத்தை இறைவனிடம் அர்ப்பணிப்போம்.
அவரது சித்தப்படி வாழ்வோம்.
அவரை, அவரது அன்பை, அவரது நன்மை தனத்தை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து ஆனந்தம் அடைவோம்.
இயேசு விண்ணகம் எய்துமுன் தனது சீடர்களை உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கப் பணித்தார்.
அவர்கள் அறிவித்த நற்செய்தியைத் தான் இன்று நமது வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் இறைவனை நேசிப்பது உண்மையானால்
அவரது கட்டளைப்படி நமது அயலானையும் நேசிப்பதும் உண்மையானால்
நாம் பெற்ற நற்செய்தியை நமது அயலானோடும் பகிர்ந்து கொள்வோம்.
ஏனெனில், நாம் நேசிப்பவர்களோடு நமக்கு கிடைத்த நல்லவை எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வது இறைவனிடமிருந்து நாம் பெற்ற நற்பண்பு.
இயேசுவின் நற்செய்தியை பெற்றவுடனேயே நாம் அவருடைய சீடர்கள் ஆகிவிட்டோம்.
.நற்செய்தியைப் பெற்ற ஒவ்வொரு சீடனும்
நற்செய்தியை அறிவித்து சீடர்களை உருவாக்குவதைப் பணியாகக் கொண்டு செயல்பட்டால்
சில ஆண்டுகளில் உலகோர் அனைவரும் இயேசுவின் சீடர்களாக மாறி விடுவார்கள்.
இயேசு நற்செய்தியை அறிவிக்க ஆரம்பிது 2000 ஆண்டுகள் கழித்தும் இன்னும் உலகோர் அனைவரும் அவரது சீடர்களாக மாறவில்லை என்றால்
நாம் நமது சீடத்துவ பணியை ஒழுங்காகச் செய்யவில்லை என்றுதான் அர்த்தம்.
நம்மில் அநேகர்
"நற்செய்திப் பணியைச் செய்யத்தான் முழு நேரப் பணியாளர்களாக குருக்களும், ஆயர்களும் இருக்கிறார்களே,
உலகக்காரியங்களைக் கவனித்துக் கொண்டு, நமது ஆன்மாவைக் கவனிப்பதே பெரும்பாடாக இருக்கிறதே,
மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நேரம் எங்கே இருக்கிறது" என்று கேட்பது காதில் விழுகிறது.
ஆனால் நற்செய்திப் பணி நமது வாழ்வோடு வாழ்வாக கலந்தது.
நமது வாழ்வே நற்செய்திப் பணிதான்.
அதாவது நாம் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தால் அது நற்செய்திப் பணி.
எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழாவிட்டால் நாம் நற்செய்திக்கு எதிர்ப்பணி ஆற்றுகிறோம்.
ஒரு அடிப்படை உண்மையை உணர்ந்தால்
நாம் ஒன்று நற்செய்தியைப் பரப்புகிறோம்,
அல்லது
அதற்கு எதிராகச் செயல் படுகிறோம்,
நடுநிலையாக இருக்க முடியாது என்பது புரியும்.
நாம் சீடராக வாழ்ந்தாலே சீடர்களை உருவாக்கிக் கொண்டு தான் இருக்கிறோம்.
சீடராக வாழாவிட்டால் வாழ்பவர்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நமது முகத்தில் ஒரு வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டு வந்தால்
அதன் மணத்தை நாம் மட்டுமல்ல நம் அருகில் வருவோரும் அனுபவிப்பர்.
நம் மேல் ஒரு அசிங்கம் இருந்தால் அதன் துர்மணம் நம் அருகில் வருவோரையும் மூக்கைப் பொத்த வைத்துவிடும்.
நாம் சமூகப் பிராணி என்பதை நினைத்துக் கொண்டால் இது புரியும்.
நாம் எப்படி இயேசுவின் சீடனாகவும், சீடர்களை ஆக்குபவர்களாகவும் வாழ்வது?
நமது சிந்தனை, சொல், செயல் (இந்த மூன்றும் இணைந்ததுதான் வாழ்க்கை) மூன்றாலும் சீடர்களாக வாழ்வோம்.
சீடத்துவ வாழ்வின் அடிப்படை (Foundation) சிந்தனை.
சிந்தனை என்ற அடிப்படை மேல்தான் சீடத்துவம் என்ற கட்டடத்தைக் கட்டவேண்டும்.
சிந்தனை மனதின் வேலை.
" நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம்"
என்ற விண்ணுலக வாழ்த்தின் அடிப்படையில்
நல்ல மனது உள்ளவர்களிடம் சமாதானம் குடியிருக்கும்,
இறைமகன் இயேசு நமது விண்ணக தந்தைக்கும் நமக்கும் இடையில் சமாதான உறவை ஏற்படுத்ததான் உலகிற்கு வந்தார்.
சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பும் போது,
நீங்கள் வீட்டுக்குள் போகும்போது, " உங்களுக்குச் சமாதானம் " என்று வாழ்த்துங்கள்."
(மத்.10:12 )
என்று கட்டளையிட்டார்.
இயேசு பாடுபடுவதற்கு முந்திய நாள் தனது சீடர்களிடம்:
"சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்: என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன்:"
(அரு. 14:27)
இயேசுவின் நற்செய்தியை முழுவதும்
'அன்பின் அடிப்படையில் பிறந்த சமாதானம்'
என்று சொல்லிவிடலாம்.
நன்மனது-- சுத்தமான மனது.
நமது மனது சுத்தமானதாக இருந்தால் அங்கு அன்பும் சமாதானமும் இருக்கும்.
அதாவது அன்புக்கும் சமாதானத்திற்கும் உரிய
இறைமகன் இயேசு அங்கு குடியிருப்பார்.
நமது சிந்தனைகள் அதாவது எண்ணங்கள் எல்லாம் இயேசுவை சுற்றியே இருக்கும்.
உள்ளத்தின் நிறைவில் இருந்துதான் வாய் பேசும்.
ஆகவே நமது பேச்சுக்கள் இயேசுவைச் சுற்றியும், அவரது பண்புகளாகிய அன்பு சமாதானம் ஆகியவற்றைச் சுற்றியும்தான் இருக்கும்.
உள்ளத்தில் இயேசு இருக்கும்போது
நமது எண்ணங்களும், அவற்றிலிருந்து புறப்படும் சொற்களும் கிறிஸ்தவ விழுமியங்கள் படிதான் (Christian values) இருக்கும்.
அதாவது நாம் மற்றவர்களுக்கு நமது சொற்களால் இயேசுவைக் கொடுத்துக் கொண்டே யிருப்போம்.
நமது சிந்தனையும் சொல்லும் இயேசுவைப் பற்றியதாக இருந்தால்
நமது செயலும் இயேசுவைப் பற்றியதாகவே இருக்கும்.
நமது சிந்தனையும் சொல்லும் இயேசுவை மற்றவர்களுக்குக் கொடுத்தால்
நமது செயலும் அவரை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
நமது செயல்கள் யாவும் இயேசுவைச் சார்ந்தவையாகத்தான் இருக்கும்.
அன்பு, இரக்கம், பொறுமை, மன்னிப்பு, பிறர் உதவி
போன்ற இயேசுவைச் சார்ந்த பண்புகளெல்லாம் நமது செயல்களாக வெளிப்படும்.
கிறிஸ்துவே நமது வாழ்வை இயக்குவதை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
நமது வாழ்வு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரிகையாக இருக்கும்.
நமது முன்மாதிரிகையான வாழ்வால் நாம் இயேசுவை மற்றவர்களுக்கு அளிக்கும்போது நாம் அவருடைய சீடர்களாக செயல்படுகிறோம்.
மற்றவர்கள் நம் வாழ்வைப் பின்பற்றி வாழும்போது அவர்களை சீடர்களாக ஆக்குகிறோம்.
நமது மனது நன்மனதிற்கு எதிர் மனதாக இருந்தால், நமது சொல், செயல் ஆகிய வாழ்வும் எதிர்த்திசையில் பயணித்து,
நம்மைப் பார்ப்பவர்களையும் கெடுத்துவிடும்.
நாம் ஆண்டவரை நோக்கிப் போனாலும் ஒரு group நம்மோடு வரும்.
நாம் ஆண்டவரை விட்டுப்
போனாலும் ஒரு group நம்மோடு வரும்.
நமது திருச்சபையின் அனுபவமே இதற்கு ஆதாரம்.
தாய்த் திருச்சபையை விட்டுத் தனிக்குடித்தனம் போனவர்கள் எல்லோருமே group group பாகத்தான் போயிருக்கிறார்கள்.
group group பாகப் போனவர்களும் அப்படியே பிரிந்து எண்ணற்ற group களாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள்.
நாம் நமது சீடத்துவ வாழ்வால் பிரிந்து சென்றவர்களை நம்மை நோக்கி ஈர்க்க (attract) வேண்டும்.
இயேசுவை அறியாதவர்களையும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும்
இயேசுவின் சீடர்களாக மாற்ற வேண்டும்.
இயேசு சர்வ வல்லபர்.
"உண்டாகுக" என்ற ஒரே சொல்லால் உலகத்தைப் படைத்தவர்.
"மாறுக" என்ற ஒரே சொல்லால் எல்லோரையும் மாற்றவில்லை.
தன் சர்வ வல்லமையால் அல்ல,
தன் நாவன்மையால் அல்ல,
தன் அன்பினால்,
தன் இரக்கத்தினால்,
தன் மன்னிக்கும் சுபாவத்தால்,
தன் உயிரையும் கொடுத்து பாவிகளாகிய நம்மை தம் பிள்ளைகளாக மாற்றினார்.
நமக்கு அவரது சாயலைக் கொடுத்திருக்கிறார்.
நாமும் அவரைப்போலவே
நம் அன்பினால்,
நம் இரக்கத்தினால்,
நம் மன்னிக்கும் சுபாவத்தால்,
நமது உயிரை தியாகம் செய்தாவது
பிரிந்து போனவர்களை மட்டுமல்ல
அவரை அறியாதவர்களையும்
அவரிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று ஆசிக்கிறார்.
அவரைப்போலவே நாமும் செயல்படுவது நமக்கு எவ்வளவு பெரிய பாக்கியம்!
இயேசுவின் ஆசைப்படி
சீடர்களாய்
நாமும் மாறுவோம்,
மற்றவர்களையும் மாற்றுவோம்!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment