Virtue stands in the middle.
** ** ** ** ** ** ** ** ** **
நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஒரு WhatsApp message தான் இந்த கட்டுரையைத் தூண்டியது.
அவருடைய message ன் ஒரு பகுதி:
"அச்சிலையை தொட்டு வணங்கி மாலை போட்டு கும்பம் வைத்துஆரத்தி எடுத்து, சப்பரம் தூக்கி உப்பு பன்னீர் மிளகு வாங்கி வைத்து இன்னும் சொல்ல போனால் கோயில் முன் கொடிமரம் வைத்து அதில் வீடு வேணுமானால் பூட்டு கட்டி, கல்யாணம் நடக்க வேண்டுமானால் தாலி கயிறு கட்டி, குழந்தை வேண்டுமானால் தோட்டில் கட்டி அந்த கொடி மரத்தை மூன்று சுத்து சுத்தி வந்து வணக்கம் செலுத்த கூடிய அளவுக்கு வந்துவிட்டது..இதுதான் சாத்தானின் வஞ்சக செயல்.
வாழை பழத்தில் ஊசி ஏறினால் போல் யாருக்குமே தெரியாமல்...எல்லாம் கடவுளுக்கே என்ற பெயரில் கடவுளின் வேத வார்த்தையை விட்டு விலக வைப்பது."
நண்பர் எழுதியதை அப்படியே தந்துள்ளேன். ஒரு வார்த்தை கூட கூட்டவும் இல்லை. குறைக்கவும் இல்லை.
இப் பழக்கங்கள் நம்மவர் இடையே இருக்கின்றனவா?
இருப்பதை இல்லை என்று கூற முடியாது.
இவை சரியா? தவறா?
பதிலை ஒரே வார்த்தையில் கூற இயலாது.
என்னுடைய நண்பன் ஒருவன்
பொது இடத்தில், நிறைய மக்கள் கூடி இருந்த இடத்தில்
தன்னுடைய மனைவியை
கட்டிப்பிடித்து முத்தமிட்டு விட்டான்.
மக்கள் ஒவ்வொருவர் முகத்திலும் வெவ்வேறு reaction காணப்பட்டது.
நான் அவனிடம்,
"ஏண்டா இப்படி செய்த." என்று கேட்டேன்.
அதற்கு அவன்
'என் மனைவியை, நான் கட்டிப்பிடித்து, முத்தமிட்டதில் என்ன தவறு இருக்கிறது?"
என்றான்.
நான் சொன்னேன்
" நீ முத்தமிட்டதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் முத்தமிட்ட இடம்தான் தவறு."
என்றேன்.
நான் பொது இடத்தைக் குறிப்பிட்டேன்.
அவன் குசும்பன்.
"ஆமா. நான் கன்னத்தில் முத்தமிட்டு விட்டேன். உதட்டில் இட்டிருக்க வேண்டும்."
என்றான்.
அவன் செய்தது தவறு இல்லை. செய்த இடம் தவறு.
சில கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல முடியாது.
ஆர்வக்கோளாறு காரணமாக சில நல்ல செயல்களைத் தவறாக செய்து விடுகின்றோம்.
நாம் வாழ்வது தமிழ்நாடு.
தமிழ்நாட்டிற்கென்றே
உரிய சில பண்பாட்டு பழக்க வழக்கங்கள் உண்டு.
அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
சமய சார்புடைய பழக்கங்கள்.
சமூக சார்புடைய பழக்கங்கள்.
சாப்பிடுவது சமூக சார்புடைய பழக்கம்.
சமய விழாக்களின் போது, அவரவர்களுடைய கோவில்களில் வைத்து, சாப்பிடுவதால் அது சமய சார்புடைய பழக்கம் ஆகிவிடாது.
ஒருவர் ஒரு சமயத்திலிருந்து இன்னொரு சமயத்துக்கு மாறும்போது
பழைய சமயப் பழக்கங்களை விட்டுவிட்டு வருவார்.
ஆனால் சமூக சார்புடைய, சமய சார்பற்ற, பழக்கங்களை உடன் கொண்டு வருவார்.
அதில் தவறு ஏதும் இல்லை.
உதாரணத்திற்கு, முடி நன்கு வளர வேண்டும் என்பதற்காக சிறு பிள்ளைகளுக்கு மொட்டை போடுவார்கள்.
அதை ஒரு விழாவாகக் கூட விருந்து வைத்து கொண்டாடுவார்கள்.
இது ஒரு சமூக விழா.
நாம் உண்ணும் உணவை ஆசிர்வதிக்கும்படி இறைவனை வேண்டி, அதை அவருக்கு ஒப்புக் கொடுப்பது போல,
இந்த சமூக விழாவை நமது கோயிலில் வைத்துக் கொண்டாடி
அதை இறைவனுக்கு ஒப்புக் கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை.
"பிற மதத்தவர் கொண்டாடும் சமூக விழாவை நாம் கொண்டாடலாமா?" என்று கேட்பதில் பொருளில்லை.
அதேபோல் தான் தாலி கட்டுவது தமிழர் பண்பாடு,
மோதிரம் மாற்றிக் கொள்வது மேல் நாட்டவர் பண்பாடு.
இரண்டுமே சரிதான்.
ஒன்றை மட்டும் நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எதைச் செய்தாலும்
இறைவனுக்காக,
இறைவனை மையப்படுத்தி,
இறைவனது கட்டளைகளுக்கு விரோதமில்லாமல்
செய்ய வேண்டும்.
அப்படி செய்வதால் சாதாரண செயல் கூட
இறைவனுக்கு ஏற்ற செயலாக மாறி விடுகிறது.
முழந்தாள் படியிடுவது தன்னிலே ஒரு சாதாரண செயல்.
அதையே இறை வழிபாட்டின் போது செய்தால் அது இறை வழிபாடாக மாறிவிடுகிறது.
நண்பர் தன் WhatsApp செய்தியில் குறிப்பிட்டிருந்த
"கோயில் முன் கொடிமரம் வைத்து
அதில் வீடு வேணுமானால் பூட்டு கட்டி,
கல்யாணம் நடக்க வேண்டுமானால் தாலி கயிறு கட்டி,
குழந்தை வேண்டுமானால் தோட்டில் கட்டி"
எதுவுமே சமயம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல.
ஒவ்வொன்றும் ஒரு சமூக விருப்பத்தை குறிக்கிறது.
"வீடு வேணுமானால் பூட்டு கட்டி,"
இதில் ஒருவர் தனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் என்று ஆசைப் படுகிறார்.
ஆசையில் தவறு ஒன்றும் இல்லை.
தன் ஆசை நிறைவேற இறைவனின் உதவி வேண்டும் என்று ஆசைப் படுகிறார்.
இது சரியான ஆசை.
இந்த ஆசை நிறைவேற இறைவனிடம் மன்றாட வேண்டும்.
கர்த்தர் கற்பித்த செபத்தில் விண்ணப்பதிற்கான பகுதி ஒன்று இருக்கிறது.
அதில் ஆண்டவர் உணவைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் நமக்குத் தேவையான எதையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
"ஒரு புது வீடு கட்ட ஆசையா இருக்கிறது, தந்தையே. அதற்கு தயவுகூர்ந்து உதவி செய்யுங்கள்."
சேர்த்துக் கொள்ளலாம்.
மனிதனுக்கு கண்ணால் பார்கக ஆன்மா இருப்பது போல, வெளித்தோற்றமுள்ள உடலும் இருக்கிறது.
மனதில் உள்ள எண்ணத்தை காணப்படக்கூடிய பொருளாக காட்டுவது மனித இயல்பு.
ஒரு பெரியவரைப் பார்க்கும்போது நமது மரியாதையைப் புன்முறுவல் மூலமும், கரம் கூப்புவதின் காண்பிக்கிறோமல்லவா?
கோவிலில்
முழந்தாள் படியிடுதல்,
குனிந்து வாயால் தரையை முத்தமிடுதல்,
சிரம் சாய்த்தல்,
இருகரம் கூப்புதல்,
இரு கரங்களையும் உயர்த்துதல்
போன்ற பலவித வெளி
அடையாளங்களால்
நமது இறைவழிபாட்டை வெளிப்படையாகச் செய்கிறோம் அல்லவா?
"இறைவனுக்குத் தான் நமது உள்ளம் தெரியுமே,
இந்த வெளிச் செயல்கள் எதற்கு?"
என்று யாராவது கேட்டால்
நாம் என்ன பதில் சொல்வோமோ
அதே பதிலை தான்
"வீடு வேணுமானால் பூட்டு கட்டிப்." போடுபவரும் சொல்லுவார்.
ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அதைச் செய்வதாக அவர் சொன்னால் அவர் சொல்வது சரி.
அந்த நிபந்தனையை அவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர் சொல்வது தவறு.
எந்த நிபந்தனை?
"எதைச் செய்தாலும்
இறைவனுக்காக,
இறைவனை மையப்படுத்தி,
இறைவனது கட்டளைகளுக்கு விரோதமில்லாமல்
செய்ய வேண்டும்."
இந்த நிபந்தனைப்படி எதை செய்தாலும் சரியே.
இந்த நிபந்தனைப்படி பாவம் செய்ய முடியாது.
'Ama et fac quod vis."
"Love and do what you will."
Ama, Love, நேசி (இறைவனை)
இது நிபந்தனை.
'fac quod vis,
do what you will,
இஸ்டப்படி நட.
இது செயல்.
இறைவனை உண்மையில் நேசிப்பவன் விரும்புவது இறைவனின் விருப்பமாகத் தான் இருக்கும்.
ஆகவே அவன் விரும்புவதை செய்யும்போது,
இறைவனின் விருப்பத்தை தான் செய்கிறான்.
நண்பர் அவர்கள் கொடிமரத்தில் கட்டி தொங்கவிடுவாகச் சொல்லும்
எல்லாம்.
"முழுக்க முழுக்க இறையன்பை மையப்படுத்தி, இறையன்பிற்காகச்" செய்தால் சரி.
இறைவனை மையப்படுத்தி கேட்பவன்
அது நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும்
"இறைவா நீங்கள் என்ன செய்தாலும் நான் நன்றியோடு ஏற்றுக்கொள்கிறேன்."
என்ற மனநிலையில் இருப்பான்.
ஆனால், தன் விருப்பத்தையே மையப்படுத்தி, இறைவனை ஓரங்கட்டி விட்டால் அது குருட்டு நம்பிக்கையைச் சார்ந்த செயலாகிவிடும்.
இறைவனை வெறும் சொல்லளவில் வைத்துக் கொண்டு தன் விரும்பத்தை மையமாக வைத்துக் கொண்டு விரும்பினால்,
விரும்புவது நடைபெறாத போது, இறைவனையும் விட்டுவிடுவான்.
ஆகவேதான் நாம் எலலைகளில் (extremes) நமது மனதை இழக்காமல், நடுவே (middle) மனதை வைக்க வேண்டும்.
அதாவது இறைவனை மையப்படுத்த வேண்டும்.
இறைவனை மையப்படுத்தாமல் விரும்புவன்
ஒன்று, தன் விருப்பம் நிறைவேறும்போது அளவுக்கு மீறிய இன்பத்தில் துள்ளுவான்.
அல்லது,
தன் விருப்பம் நிறைவேறா விட்டால் அளவுக்கு மீறிய துன்பத்தில் தொலைந்துபோவான்.
இறைவனை மையப்படுத்தி விரும்புவன்
எப்போதும் நிதானத்தோடும், மகிழ்ச்சியோடும், நன்றி உணர்வோடும் இருப்பான்.
நண்பர் மேலும்
" சாத்தான்...யாருக்குமே தெரியாமல்...எல்லாம் கடவுளுக்கே என்ற பெயரில் கடவுளின் வேத வார்த்தையை விட்டு விலக வைப்பது."
என்று குறிப்பிட்டிருந்தார்.
வெறும் சொல்லளவில் மட்டும் இறைவனை வைத்துக் கொண்டு
இந்த காரியங்களை செய்பவர்களை
சாத்தான் தன் வசப்படுத்தும்.
ஆனால் இறைவனை மையப்படுத்தி
இறைவனுக்குள் இருந்துகொண்டு
அவர் விரும்பத்திற்கு மாறுபாடு இல்லாமல்
அவருக்காகவே என்ன செய்தாலும்
சாத்தானால் நம்மை நெருங்க முடியாது.
இறைவனை மையப்படுத்தி ஏழைக்கு உதவினால் விண்ணகத்தில் நமக்கு சம்பாவனை காத்திருக்கும்,
நம்மை மையப்படுத்தி ஏழைக்கு உதவினால் சம்பாவனை இவ்வுலகோடு முடிந்துவிடும்.
வெறும் கடமைக்காக மட்டும் கோவிலுக்குப் போய் என்ன பயன்?
நற்கருணையை ஏதோ பண்டத்தை வாங்குவது போல வாங்கி வாயில் போட்டு விழுங்கினால் என்ன பயன்?
சுவர் அருகே அமர்ந்திருப்பவர் சுவரைப் பார்த்து "சமாதானம்" சொன்னால் என்ன பயன்?
இறைவனுக்காக செய்யும் காரியங்களுக்கு மட்டும் தான் பலன் உண்டு.
ஆகவே,
இறைவனை உள்ளத்தில் இருத்தி விருப்பப்படி வாழ்வோம்.
இறைவன் நமது உள்ளத்தில் இருக்கும் போது,
அவர் விருப்பம் தான் நமது விருப்பம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment