, "கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே."
(1 திமோத்.2:5)
** ** ** ** ** ** ** ** ** **
மனிதர்களிலேயே ஒரு இயல்பு உண்டு.
யார் மேலேயாவது குற்றம் சாட்ட வேண்டுமென்றால்
அவர் எப்போதாவது எந்த சூழ்நிலையிலாவது சொன்ன வார்த்தைகளை
மற்றொரு சூழ்நிலையில் அவர் மேலேயே சாட்டுவது வழக்கம்.
ஒரு பையன் இரவு 11 மணிக்கு அவனுடைய செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான்.
அவனது அப்பா.
"ஏலே, மணி 11. தூங்குகிற நேரம்.
இப்போ என்ன விளையாட்டு?
படு'' என்றார்.
மறுவாரம் Annual Exam.
இரவு 11 மணி.
பையன் படுக்கப் போனான்.
அப்பா, "நாளைத் தேர்வு. கூடக் கொஞ்ச நேரம் படித்தால் என்ன?"
"போன வாரம் நீங்கதான் சொன்னீங்க '11 மணி படுக்கிற நேர முன்னு.
அது தான் படுக்கப் போறேன் ."
"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே."
இது புனித சின்னப்பர் திமோத்தேயுக்கு எழுதிய கடிதத்தில் சொன்னது.
மனிதன் செய்த பாவத்தினால்
இறைவனோடு அவனுக்கு இருந்த இணைப்பு அறுந்துவிட்டது.
பாவ நிலையில் இறைவனோடு மனிதன் தொடர்பு கொள்ள முடியாது.
இழந்த தொடர்பை மீட்டுத் தருவதற்காக
இறைமகன் இயேசு மனிதன் ஆகி
பாவத்திற்கு பரிகாரம் செய்து பாவிகளை மீட்டார்.
மீட்பிற்குப்பின் மனிதனால் இறைவனோடு தொடர்பு கொள்ள முடிந்தது.
இறைவனோடு கொண்டிருந்த இணைப்பை இழந்த நமக்கு அதை மறுபடி மீட்டுக் கொடுத்தவர் இறைமகன் இயேசுவே. இயேசு மட்டுமே,
இயேசு ஒருவர்தான் நமது மீட்பர் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக சின்னப்பர் இவ்வார்த்தைகளை கூறுகிறார்.
அதனால்தான் முந்திய வசனத்தில்
"எல்லா மனிதரும் மீட்புப்பெற
வேண்டும் என்பதே அவரது விருப்பம்.''
என்றும்,
அடுத்த வசனத்தில்
"இவர் அனைவரின் மீட்புக்கு ஈடாகத் தம்மையே கையளித்தார்."
என்றும் கூறுகிறார்.
இதில் மிக முக்கியமான இறை உண்மை ஒன்று அடங்கியிருக்கிறது.
இயேசு யார்?
கடவுள்.
பாவம் செய்தவன் மனிதன்.
ஆகவே மனிதன்தான் தன்னுடைய பாவத்திற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஆனால் அளவில்லாத இறைவனுக்கு விரோதமாக அளவுள்ள மனிதனால் போதிய அளவு பரிகாரம் செய்ய இயலாது.
மேலும் பாவ நிலையில் உள்ள ஒருவன் செய்யும். செயலுக்கு இறைவன் முன்னால் எந்த பலனும் இல்லை.
ஆகவேதான் கடவுள் மனிதனாக பிறந்து மனித சுபாவத்தில் பரிகாரம் செய்தார்.
பரிகாரம் யாருக்கு?
இறைவனுக்கு.
பரிகாரம் செய்தவர்?
இறைவன்.
நம்மைப் படைத்த ஒரே காரணத்திற்காக
நாம் செய்த பாவங்களை,
பாவமே செய்ய முடியாத கடவுள்
தன்மேல் சுமந்துகொண்டு,
நாம் செய்ய வேண்டிய பாவப் பரிகாரத்தை அவரே செய்தார்.
தேவ சுபாவத்தில் பரிகாரம் செய்ய முடியாததால்
மனிதனாக பிறந்து பரிகாரம் செய்தார்.
இதனால் அவர்ருடைய அளவில்லா அன்பு வெளிப்படுகிறது.
இயேசு ஒருவரே மீட்பர்.
இன்னும் கொஞ்சம் புரியும் படியாக சொல்கிறேன்.
ஒரு ஒப்புமை.
தன் முதலாளியை நோகச் செய்துவிட்டான் ஒரு வேலையாள்.
அவனால் அவரிடம் சென்று அவர் முகத்தில் விளிக்க முடியவில்லை.
அப்பொழுது மத்தியஸ்தர் ஒருவர் வந்து முதலாளியிடம் வேலையாளுக்காகப் பரிந்து பேசுகிறார்.
அந்த வேலையாள் தன் குற்றத்திற்குப் பரிகாரம் செய்தால் மட்டுமே தன்னோடு தொடர்புகொள்ள முடியும் என்று முதலாளி சொல்லிவிடுகிறார்.
என்ன பரிகாரம் என்று மத்தியஸ்தர் கேட்கிறார்.
முதலாளி வேலையாள் செய்யவேண்டிய பரிகாரத்தை சொல்லுகிறார்.
மத்தியஸ்தர்,
" இது கொஞ்சம் கடினம். வேலையாளால் செய்ய முடியாது, அவனுக்குப் பதில் நானே பரிகாரத்தைச் செய்துவிடுகிறேன், தயவு கூர்ந்து வேலையாளை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லுகிறார்.
முதலாளியும் சம்மதிக்கிறார்.
மத்தியஸ்தர் பரிகாரத்தைச் செய்து முடிக்கிறார்.
முதலாளியும் வேலையாளை ஏற்றுக்கொள்கிறார்.
வேலையாளைப் பொறுத்த மட்டில் மத்தியஸ்தர்தான் முதலாளியோடான அவனது உறவை மீட்டுக் கொடுத்த மீட்பர்.
இதில் அதிசயம் என்னவென்றால் அந்த மத்தியஸ்தர் முதலாளியின் சொந்த மகன்.
இது ஒப்புமை மட்டுமே.
இதேபோல்தான் தமது பாவத்தால் இறைவனோடு நமக்குள்ள உறவை இழந்து விட்டோம்.
இழந்த உறவை மீட்டுக் கொடுத்தவர்
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
அவர் மட்டுமே நமது மீட்பர்.
இப்பொழுது பிரச்சினை என்னவென்றால்
நம்மைவிட்டு பிரிந்துசென்ற சகோதரர்கள்
புனித சின்னப்பர் சொன்ன வார்த்தைகளை
தங்களது தவறான கொள்கையை நிரூபிக்க
தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் கூறுகிறார்கள்,
" தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. "
1 தீமோத்தேயு 2:5
இப்படி வசனம் இருக்க நமக்கு ஏன் பல மத்தியஸ்தர்கள்?"
இப்போது நன்கு கவனியுங்கள்.
இயேசு ஒருவரே நமது மத்தியஸ்தர், மீட்பர், இரட்சகர்.
இதுதான் நமது ஆழமான விசுவாசம்.
இதில் எந்த காலத்திலும் மாற்றம் ஏற்பட்டதே இல்லை.
இறைமகன் ஒருவரே, அவர்தான் நம்மை மீட்டார்.
இப்போது பிரச்சனை, நாம் சொல்லாத ஒன்றை சொல்வதாகச் சொல்லிக்கொண்டு நம் மேல் குற்றம் காட்டுகிறார்களே, அதுதான் எப்படி என்று தெரியவில்லை.
நாம் எந்தக் காலத்திலும் தேவமாதா நம்மை இரட்சித்தாள் என்று சொல்லவில்லை.
ஆனால், அவள் இரட்சகரின் தாய்.
நம்மை இரட்சித்தவர் கடவுள்.
கடவுள்தான் அவளது வயிற்றில் மனிதனாக உற்பவித்துப் பிறந்தார்.
மனு உரு எடுத்துப் பிறந்தது இரண்டாம் ஆளாகிய இறைமகன், கடவுள் .
ஆகவே கன்னி மரியாள் கடவுளின் தாய்.
இது நமது மறுக்கமுடியாத மாற்றமுடியாத, ஆழமான விசுவாசம்.
மாதா நமது தாய்.
நாம் அவரது மக்கள்.
இயேசு, தனது தந்தையை,
"எங்கள் தந்தாய்'
என்று அழைக்க
நமக்கு முழு உரிமை கொடுத்திருக்கிறார்.
ஆகவே அவரது தந்தை நமக்கும் தந்தை,
அந்த உறவில் இயேசு நமது சகோதரர்.
நமது அம்மா நமது சகோதரரிடம் நமக்காக பரிந்து பேச நாம் அவளிடம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?
இதைச் சொன்ன உடனே நமது சகோதரர்கள் குதித்துக் கொண்டு வருவார்கள்.
" இதற்கு பைபிளில் என்ன ஆதாரம் இருக்கிறது?"
இருக்கிறது,
ஒழுங்காக செப உணர்வோடு பைபிள் வாசிப்பவர்களுக்கு மட்டும் இது தெரியும், புரியும்.
அநேகர் பைபிளை rule book ஆக மட்டும் பார்க்கிறார்கள்.
நாம் அதை prayer book ஆகவும் பயன்படுத்துகிறோம்.
திருப்பலி திருச்சபையின் அதிகாரபூர்வமான செபம்,
(official prayer)
கூர்ந்து கவனித்தால் இந்த செபத்தின் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி பைபிள் வாசகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பைபிள் வாசகங்களை நாம் செப உணர்வோடு கேட்கிறோம்.
அதே உணர்வோடு இப்போது கானாவூருக்கு போவோம்.
அங்கே நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு மாதா கடவுளோடு சென்றிருக்கிறாள்.
புரியவில்லை?
இயேசு கடவுள் தானே!
நாமும் உடனிருந்து இயேசுவையும் மாதாவையும் கூர்ந்து கவனிப்போம்,
திருமணவீட்டில் ரசத்திற்கு பற்றாக்குறை ஆகிவிட்டது.
இயேசு கடவுள்.
கடவுளுக்கு யாரும் சொல்லாமலே எல்லாம் தெரியும்.
ஆகவே நிச்சயமாக திருமண வீட்டில் ரசம் பற்றாக்குறை ஆகிவிட்டது என்று அவருக்கு தெரியும்.
அவர் கடவுளாகையால் அந்த விஷயம் நித்திய காலத்திலிருந்தே தெரியும்.
தெரிந்தும் அவர் கவனிக்காதது மாதிரி இருக்கிறார். காரணமாக.
மாதாவுக்கு தன் மகன் கடவுள் என்பதும் தெரியும்,
அவரால் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும் என்பதும் தெரியும்.
ரசம் தீர்ந்து விட்டதைக் கவனித்த மரியாள் தன் மகனை நோக்கி,
"இரசம் தீர்ந்துவிட்டது" என்று மட்டும் சொல்கிறாள்.
"ரசம் ஏற்பாடு செய்யுங்கள்" என்று அவர் கூறவில்லை.
எல்லாம் அறிந்த இயேசுவுக்கு அம்மாவின் மனம் தெரியாதா?
ஆனால் அவரது பதிலை பாருங்கள்:
"அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை"
ஆனால் அம்மாவுக்கு மகன் குணம் தெரியும்.
நசரேத்தூரில் எத்தனை தடவை இயேசுவை வேலை ஏவியிருப்பாள்?
லூக்காஸ் இயேசுவின் நாசரேத்தூர் வாழ்க்கையின் சாரத்தை இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார்:
"அவர்களுக்குப் பணிந்திருந்தார்" (லூக்.2.51)
இயேசு மாதா சொல்லை தட்டியதே இல்லை.
இதை நான் சொல்லவில்லை நற்செய்தியாளரே சொல்லுகிறார்!
மாதா இயேசுவிடம் அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல்,
பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றாள்.
"எனது நேரம் இன்னும் வரவில்லை" என்று கூறிய இயேசு தண்ணீரை ரசமாக மாற்றிய புதுமையை செய்கிறார்.
"எனது நேரம் இன்னும் வரவில்லை" என்று இயேசு கூறியது அதை கவனித்துக் கொண்டிருக்கும் நமக்காகத்தான்.
எப்படி?
இயேசு நம்மைப் பார்த்து,
"மக்களே,
நேரம் வராவிட்டாலும் அம்மா சொன்னால் கட்டாயம் கீழ்ப்படிவேன். தாய் சொல்லுக்கு மறு சொல் இல்லை."
என்று கூறுவது கேட்கவில்லை!
எனக்குக் கேட்கிறது.
தாயையும் மகனையும் பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு இது கேட்காது!
அதே இபேசு இன்றும் இருக்கிறார், அவரது அம்மாவும் இன்றும் இருக்கிறார்.
இருவரும் விண்ணகத்தில் ஆன்ம சரீரதத்தோடு இன்றும் இருக்கிறார்கள்,
என்றும் இருப்பார்கள்,
இன்னும் அம்மா அம்மாதான், மகன் மகன்தான்.
கொஞ்சம் விசுவாசக் கண்ணோடு தாயையும் மகனையும் நோக்குங்கள்:
நித்திய காலமும் ஒருவரை ஒருவர் சும்மா பார்த்துக் கொண்டுதான் இருப்பார்களா?
நிச்சயமாக நமது தாய் நமது சகோதரரிடம் நமக்காக, நமது பிரச்சனைகளுக்காக
பரிந்து பேசிக் கொண்டிருப்பாள்.
விசுவாசம் அற்றவர்களுக்கு இது புரியாது.
பைபிள் இதை நேரடியாக சொல்ல வேண்டுமா?
நமக்கு இறைவன் புத்தியைக் கொடுத்திருப்பது சிந்திப்பதற்காகதத்தானே?
ஆங்கிலத்தில்
infer என்று ஒரு வார்த்தை இருக்கிறது
அதன் பொருள்:
deduce or conclude (information) from evidence and reasoning rather than from explicit statements.
ஒருவரது செயலை பார்த்தால் போதும்,
அவர் ஏதும் சொல்லாமலேயே
அவரது தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.
கானாவூரில் மாதாவின் செயலையும் இயேசுவின் செயலையும் பார்த்தோம்.
இயேசு தாய் சொல்லை தட்ட மாட்டார் என்று புரிந்து கொண்டோம்.
கடவுள் மாறாதவர்.
இயேசு கடவுள்,
ஆகவே மாற மாட்டார்.
இது Logic. புத்தி உண்மை அறிய பயன்படுத்தும் ஆயுதம்.
மாதா அம்மா என்றால்
இயேசு மட்டுமல்ல அனைத்து புனிதர்களும் நமது சகோதரர்கள் தான்.
நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தினர்.
. 'புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்."
இது நமது விசுவாச பிரமாணம்.
இதன்படி
விண்ணகம்
உத்தரிக்கிற ஸ்தலம்
உலகம்
இந்த மூன்று இடங்களிலும் உள்ள விசுவாசிகள் எல்லோரும் ஒரே குடும்பத்தினர்.
ஒருவருக்கொருவர் உதவி செய்ய கூடியவர்கள்.
விண்ணக வாசிகளுக்கு நமது உதவி தேவை இல்லை.
அவர்களுடைய உதவி நமக்குத் தேவை.
உத்தரிக்கிற ஆன்மாக்கள் தங்களுக்குத் தாங்களே உதவ முடியாது.
விண்ணக வாசிகளும், நாமும் செபத்தின் மூலம் அவர்களுக்கு உதவலாம்.
உதவ வேண்டும்.
அவர்கள் நமக்கு உதவலாம்.
நாம் அவர்களுக்காகவும் செபிக்கலாம், அவர்களை நோக்கியும் செபிக்கலாம்,
இது நமது விசுவாசம்.
நமது பிரிந்துபோன சகோதரர்களுக்கு ஒரு வார்த்தை.
இயேசு ஒருவரே மீட்பர்,
புனிதர்கள் நமக்காக பரிந்து பேசக்கூடியவர்கள்.
புனித சின்னப்பருடைய வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்.
இயேசு மட்டுமே நமது மீட்பர் என்ற மறை உண்மையை மட்டுமே இது கூறுகிறது மாதாவை பற்றியோ, பிற புனிதர்கள் பற்றியோ இது எதுவும் கூறவில்லை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment