"உலகம் உங்களை வெறுக்கிறதென்றால், உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்."
(அரு.15:18)
 **  **  **   ** ** **   ** ** ** **
"உலகம் என்னை வெறுத்தது,
உங்களையும் வெறுக்கும்.''
இயேசு.
இயேசு அன்பு மயமானவர்.
சர்வவல்லவரான அவரால் செய்யவே முடியாத ஒன்று அன்பு செய்யாமல் இருப்பது.
ஒளி எப்படி இருட்டாக இருக்க முடியாதோ,
வெண்மை எப்படி கருமையாக இருக்க முடியாதோ,
அதேபோல்தான்
அனபால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
அன்பின் ஒரு விசேசமான குணம் என்னவென்றால் அது தன்னை வெறுப்பவர்களையும் அன்பு செய்யும்.
கதை ஒன்று உண்டு:
ஒரு முனிவரும் அவரது சீடரும் ஒரு குளத்தின் கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
கரை வழியே சென்று கொண்டிருந்த தேள் ஒன்று குளத்திற்குள் விழுந்துவிட்டது.
முனிவர் அதைப் பார்த்தார்.
குனிந்து தேளை எடுத்து வெளியே விட்டார்.
தேள் அவரைக் கொட்டிவிட்டு நடந்து சென்றது.
திரும்பவும் கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்து விட்டது.
திரும்பவும் முனிவர் 
குனிந்து தேளை எடுத்து வெளியே விட்டார்.
திரும்பவும் தேள் அவரைக் கொட்டிவிட்டு நடந்து சென்றது.
திரும்பவும் முனிவர் 
குனிந்து தேளை எடுத்து வெளியே விட்டார்.
திரும்பவும் தேள் அவரைக் கொட்டிவிட்டு நடந்து சென்றது.
இப்படி விழுவதும், எடுத்து வெளியே விடுவதும், கொட்டுவதுமாக பல முறை நடந்ததைப் பார்த்த சீடனுக்கு முனிவர் மேல் கோபம் வந்தது.
"ஐயா, எடுத்துவிடும் போதெல்லாம் கொட்டுகிறதே, அதற்கு ஏன் உதவி செய்கிறீர்கள்?"
"கொட்டுவது அதன் சுபாவம், உதவி செய்வது என் சுபாவம்.
அது எத்தனை முறை என்னைக் கொட்டினாலும்,
என்னால் உதவி செய்யாமல் இருக்க முடியாது."
யார் தங்கள் சுபாவத்தை மாற்றிக் கொண்டாலும்
 கடவுளால்  தன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவே முடியாது.
 அவர் தன்னையே அன்பு செய்கிறார்.
 நம்மையும் அன்பு செய்கிறார்.
 நல்லவர்களையும் அன்பு செய்கிறார்.
 கெட்டவர்களையும் அன்பு செய்கிறார்.
அவரை அன்பு  செய்பவர்களையும் அன்பு செய்கிறார்.
 அவரை வெறுப்பவர்களையும் அன்பு செய்கிறார்.
 கடவுள் மாறாதவர்.
 அவருடைய எந்த பண்பும் மாறாது. 
ஆகவே அவர்  அவரால் படைக்கப்பட்ட அனைவரையும், 
சாத்தான் உட்பட,  
அன்பு செய்கிறார்.
 அந்த அன்பு நித்திய காலமும் மாறாது.
ஆங்காரம் (pride) என்னும் தலையான பாவத்தினால் தன்னையே கடவுளிடமிருந்து பிரித்துக் கொண்ட சாத்தானும், அதன் சகாக்களும் தங்களைப் படைத்த கடவுளையே வெறுக்கின்றன.
இறைவன்  தனது நேசத்தை பகிர்ந்து கொள்வதற்கென்றே படைத்த மனிதர்களையும் சாத்தான் தன்னுடைய பொய் வார்த்தைகளால் பாவத்தில் வீழ்த்திவிட்டது.
 அதோடு அவர்களை தன் கையில் போட்டுக்கொண்டு தன்னையும், அவர்களையும் படைத்த இறைவனை வெறுக்கும்படி தூண்டியது.
இறைவனையும், ஆன்மீக வாழ்வையும் மறந்து விட்டு சாத்தானின் பொய் வாக்குகளை நம்பி வாழும் மாந்தர்களையே நாம் உலகம் என்கிறோம்.
இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது
 அவரை நம்பாமல்
 அவருக்கு மரணத் தீர்வை இட்டது இந்த உலகம்தான்.
இந்த உலகையும் மீட்கவே இயேசு மனிதன் ஆனார்.
 ஆனால்  உலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
தான் நற்செய்தி  அறிவித்தபோது தன்னை  ஏற்றுக்கொள்ளாத உலகம்
 தன்னை வெறுத்தது போல தனது சீடர்களையும் வெறுக்கும் 
என்று இயேசுவுக்கு தெரியும்.
ஆகவே இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
"நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியுங்கள்.
உலகம் என்னை வெறுத்தது போல உங்களையும் வெறுக்கும்.
 உலகம் தன்னை  சார்ந்தவர்களை நேசிக்கும்:
 நீங்களோ உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல:
 நீங்கள் என்னால் தேர்ந்தெடுக்கப்  பட்டவர்கள்.
ஆதலால் தான் உலகம் உங்களை வெறுக்கும், 
என்னைத் துன்புறுத்திய உலகம், உங்களையும் துன்புறுத்தும்."
உலகத்தால் துன்பம் வரும் போது பயந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பின் வருவதை இயேசு முன்பே கூறிவிடுகிறார்.
இயேசு கூறியது போலவே உலகம் அவர்களை வெறுத்தது மட்டுமல்ல 
அவரது நற்செய்தியை அறிவித்த ஒரே காரணத்திற்காக அவர்களைக் கொன்று போட்டது.
ஆனாலும் வேத சாட்சிகளின் ரத்தம் திருச்சபையின் வித்து என்ற கூற்றை எண்பிக்கும் விதமாக
திருச்சபை வேகமாக வளர்ந்தது.
நாமும் இயேசுவின் சீடர்கள் தான். ஆகவே அவர் அவர்களுக்குச் சொன்னது நமக்கும் பொருந்தும்.
நாம் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
இயேசுவைச் சார்ந்தவர்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் உலகின் அநேகப் பகுதிகளில் கிறிஸ்தவர்கள்,
கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே துன்புறுத்தப் படுகிறார்கள்.
மதசார்பற்ற நாடு என்று அழைக்கப் படுகின்ற நமது நாட்டில் கூட 
நம்மை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட ஒரு இயக்கம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
இயேசு அவர்களையும் நேசிக்கிறார்.
ஏனெனில் அவர்களும் அவரது பிள்ளைகள்தானே.
நம்மை வெறுப்பது அவர்கள் சுபாவம் என்றால்,
அவர்களை நேசிப்பது நமது சுபாவமாக இருக்க வேண்டும்.
வெளிப்படையாக இயேசுவை அவர்களுக்கு அறிவிக்க நமக்கு வெளிப்படையாகவே அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆனால் நாம் அதைப் பற்றி பயப்படவோ, கவலைப்படவோ தேவை இல்லை.
துணிச்சலோடு இயேசுவின் நற்செய்தியை அறியாதவர்கள் அனைவருக்கும் அறிவிப்போம்.
வார்த்தையால் மட்டுமல்ல நமது வாழ்வாலும் இயேசுவை அறிவிப்போம்.
நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்க வேண்டும் என்ற இயேசுவின் போதனையைப் அப்படியே பின்பற்றி,
 அவர்களை நேசிப்போம்.
நமக்குக் கேடு செய்பவர்களுக்கு நன்மை செய்வோம்.
அவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
"அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!"
என்ற தமிழ் மொழிப்படி, அடைப்பு தானாகவே நீங்கும்.
இயேசுவை மறுப்பவர்கள் நம்மை வெறுப்பது பற்றி கூட நமக்கு கவலை இல்லை.
ஆனால் இயேசுவை ஏற்றுக் கொள்பவர்களே  
நம்மை விக்கிரக ஆராதனைக் காரர்கள் என்றும், 
அந்தி கிறிஸ்துக்கள் என்றும் 
அழைப்பதுதான் கொஞ்சம் கவலையை தருகிறது.
அவர்களையும் நேசிப்போம்.
அவர்களுக்காக இயேசுவிடம் வேண்டிக்கொள்வோம்.
அவர்களுக்கு உண்மையை புரிய வைப்போம்.
சுருபங்களுக்கும், விக்கிரகங்களுக்கு உள்ள வித்தியாசத்தைத் தெரிய வைப்போம். 
இதையும் அன்பின் வழியே செய்வோம்.
வெறுப்பினால் எதையும் சாதிக்க முடியாது.
ஆனால் இறுதி வெற்றி அன்பிற்கே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment