"ஆகவே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்."
(மத். 7:24)
****** ****** ****** .*****
சத்துள்ள உணவை உண்பதால் மட்டும் உடலில் சக்தி வந்து விடாது.
சிலர் உடலில் அதிக சக்தி வேண்டுமென்பதற்காக நிறைய சாப்பிடுவார்கள்.
சாப்பிட்டுவிட்டு,
"ஐயோ! வயிறு வலிக்கிறதே!"
என்று கத்துவார்கள்.
அதிகம் சாப்பிடுவதால் மட்டும் உடலில் சக்தி வந்து விடாது.
சாப்பிட்ட உணவு சீரணிக்க வேண்டும்.
சத்து இரத்தத்தோடு கலந்து, உடல் எங்கும் பயணித்து, எல்லா உறுப்புக்களாலும் கிரகித்துக் கொள்ளப்பட வேண்டும்.
சீரணமான உணவு தான் உடலுக்கு சக்தியையும், வளர்ச்சியையும் கொடுக்கும்.
சீரணமாகாத உணவு வலியைத்தான் கொடுக்கும்.
ஆன்மாவுக்கு உணவு இறைவார்த்தை.
இறைவார்த்தையை வாசிக்கும்போதோ, கேட்கும் போதோ அதை நாம் உண்கிறோம்.
இறைவார்த்தை உடலைச் சேர்ந்த வாய் வழியாகவோ, காதுவழியாகவோ நமது மூளையை அடைகிறது.
அதோடு நின்று விட்டால், நாம் வாசித்த அல்லது கேட்ட இறைவார்த்தையால் நமக்கு எந்த பயனும் இல்லை.
மூளையில் தேக்கிவைக்கப்படும் விசயங்கள் நமது அறிவை (Knowledge) வளர்க்கும்.
வெறும் அறிவினால் ஆன்மாவிற்கு எந்தப் பயனும் இல்லை.
உடலைச் சார்ந்த மூளை வழியாக இறைவார்த்தை நமது ஆன்மாவை அடைய வேண்டும்.
அடைந்தால் மட்டும் போதாது உள்ளே நுழைந்து அதை இயக்க வேண்டும்.
இறைவார்த்தையைக் கொண்டு ஆன்மா நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் இயக்க வேண்டும்.
அதாவது வார்த்தையானவர் நமது வாழ்வோடு இரண்டறக் கலக்க வேண்டும்.
அதாவது வார்த்தையானவர்
நமது வாழ்வோடு ஒன்றிக்க வேண்டும்.
உணவோடு உப்போ, உறைப்போ, கசப்போ, இனிப்போ கலந்தால்
உணவே உப்பாகவும், உறைப்பாகவும், கசப்பாகவும், இனிப்பாகவும் மாறிவிடுவது போல,
நம்மில் நாமல்ல. வார்த்தையானவரே வாழ வேண்டும்.
வார்த்தையானவர் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றினார்.
பரிசுத்த தமதிரித்துவத்தில் தந்தையும், மகனும், பரிசுத்த ஆவியும் ஒரே கடவுளாகையால்,
தந்தைக்கும், மகனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் ஒரே சித்தம்தான்.
வார்த்தையானவர் நம்மோடு ஒன்றிக்கும் போது நாமும் தந்தையின் சித்தத்தைத்தான் நிறைவேற்றுவோம்.
வானகத் தந்தையின் விருப்பப்படி
நடந்தால் உறுதியாக விண்ணகத்திற்குள் நுழைவோம்.
இயேசு சொல்கிறார்,
"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."
(மத். 7:21)
வாயினால் மட்டும் ஆண்டவரைக் கூப்பிட்டுப் பயனில்லை.
ஆண்டவர் சொற்படி நடந்தால்தான் அழைத்ததனால்
பயன் ஏற்படும்.
வானகத்திலுள்ள அவரது தந்தையின் விருப்பப்படி நடந்தால்தான் ஆண்டவரை அழைத்ததன் பயனை அடையலாம்.
வானகத்திலுள்ள அவரது தந்தையின் விருப்பம்
அவர் நம் உள்ளத்தில் பதித்திருக்கிற பத்து கட்டளைகள் மூலமாவும்,
திருச்சபையின் போதனைகள் மூலமாகவும் நமக்குத் தெரிவிக்கப் படுகிறது.
பைபிள்?
பைபிள் திருச்சபையின் போதனைக்குள் அடங்கும்.
கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளை ஏற்றுக் கொள்பவன்,
திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பைபிளையும் ஏற்றுக் கொள்கிறான்.
திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பைபிளில் 73 புத்தகங்கள் உள்ளன.
73 புத்தகங்களும் சேர்ந்து ஒரே புத்தகம்தான்.
ஒரு புத்தகத்தை எடுத்து அதில் சில தாள்களைக் கிழித்துப் போட்டு விட்டால் அதை முழுப் புத்தகம் என்று சொல்ல முடியுமா?
நம்மோடு இருந்த சிலர் பைபிளில் உள்ள 73 புத்தகங்களில் ஏழு புத்தகங்களை கிழித்துப் போட்டுவிட்டு 66 புத்தகங்களோடு வெளியேறிட்டனர்.
73 புத்தகங்களை உள்ளடக்கிய பைபிள் ஒரு முழு புத்தகம்.
அப்படியானால் அவர்கள் கொண்டு சென்றது முழு பைபிள் அல்ல.
திருச்சபையில் போதனையில் பைபிள் முழுவதும் அடங்கியிருக்கிறது.
அதாவது திருச்சபையில் போதனையில் இயேசுவின் போதனை, அதாவது, பிதாவின் சித்தம் முழுவதும் அடங்கியிருக்கிறது.
இயேசு நிறுவியது திருச்சபையை மட்டும் தான்.
பைபிள் மட்டும் போதுமென்பவர்கள்
(அவர்கள் வைத்திருப்பது முழு பைபிள் அல்ல)
பிதாவின் முழுச் சித்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
திருச்சபையின் முழு போதனையையும் ஏற்றுக் கொள்பவர்களும்
முழுப் போதனைப்படி, முழுமையாக நடக்க வேண்டும்.
'திருச்சபையின் போதனைகளில் எனக்கு இஸ்டப்பட்டவைகளை மட்டும்' அனுசரிப்பேன் என்று சொல்வது,
"கார் ஓட்டும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களோ அவற்றில் எனக்குப் பிடித்தமானதை மட்டும் செய்வேன், பிடித்தமில்லாதவற்றைச் செய்ய மாட்டேன்" என்று சொல்வது போலிருக்கிறது.
Brake ஐ மட்டும் தொடாமல் வேகமாக ஓட்டினால் எப்படி இருக்கும்?
"பாவசங்கீர்த்தனம் செய்தாயா?"
"பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று பைபிளில் எங்கு இருக்கிறது?"
"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு. 20:23)
என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே!"
"அது சாமிமாருக்கு.
மக்கள் 'பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்' என்று ஆண்டவர் சொன்னாரா?"
"ஞாயிற்றுக்கிழமை பூசைக்குக் கட்டாயம் போகணும்னு கூட ஆண்டவர் சொல்லவில்லை."
"அதைத் திருச்சபை சொல்லியிருக்கே."
"அதே திருச்சபைதான் தம்பி
'வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்' என்று சொல்கிறது."
டிசம்பர் 25ம் தேதிதான் கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டுமென்று பைபிளில் இருக்கா?.
கோவிலில்தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்று
பைபிளில் இருக்கா?
திவ்ய நற்கருணையை கையில்தான் வாங்கி உண்ண வேண்டும் என்று
பைபிளில் இருக்கா?
இப்படி ஏறுக்கு மாறா கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம்.
திருச்சபையைத் தாயாக ஏற்றுக் கொள்பவன் இப்படிக் கேள்வி கேட்கமாட்டான்.
நாம் திருச்சபையைத் தாயாக ஏற்றுக் கொள்கிறோம்.
தாயின் சொற்படி நடப்பது நமது கடமை.
பைபிள் வாசிக்க வேண்டும், வாசித்தபடி வாழவேண்டும் என்பதும் திருச்சபையின் போதனைதான்.
ஒவ்வொரு திருப்பலியின் போதும் வாசிக்கப்படும் வாசகங்களும், அவற்றை விளக்கும் பிரசங்கமும் இதற்குச் சான்று.
இறைவார்த்தையை பைபிள் மூலம் அறிந்தாலும், குருவானவருடைய பிரசங்கத்தின் மூலம் அறிந்தாலும்
அது தந்தையின் சித்தம் என்பதை உணர்ந்து அதன்படி வாழவேண்டும்.
திருப்பலியின்போது நாம் கேட்கும் வார்த்தையும்,
தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டு நாம் உண்ணும் வார்த்தையானவரும்
,நமது வாழ்க்கையாக மாறும்போதுதான் தந்தையின் சித்தம் நிறைவேறுகிறது.
ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றான்.
அவர் அவனைப் பரிசோதித்து விட்டு,
மருந்தை எழுதிக் கொடுத்து
"இதைத் தினமும் காலை உணவுக்குப் பின் சாப்பிடுங்கள்.
நான்கு நாள் கழித்து வாருங்கள்."
என்றார்.
நான்கு நாள் கழித்து
மருத்துவரிடம் வந்தான்.
அவனைப் பரிசோதித்துப் பார்த்ததில் ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை.
"நான் சொன்னபடி சாப்பிட்டீர்களா?"
"ஆமா டாக்டர்."
"எந்தக கடையில் மருந்து வாங்கினீர்கள்?"
"மருந்து ஒன்றும் வாங்கவில்லை. நீங்கள் சொன்னபடி நீங்கள் தந்த தாளை நான்காய்க் கிழித்து நான்கு நாட்களும் சாப்பிட்டேன்."
"!!!!!!!!!!!!!"
நாமும் அநேக சமயங்களில் பைபிளின் பேப்பர்களைத்தான்
கிழிக்கிறோம். வார்த்தையை உள்வாங்குவதில்லை.
உள்வாங்காத வார்த்தை எப்படி வாழ்வாக மாறும்?
ஒரு திருப்பலிக்கும் அடுத்த
திருப்பலிக்கும் இடைப்பட்ட காலத்தில்
நமது ஆன்மீக வாழ்வில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால்
திருப்பலியின்போது நாம் செய்த மன்றாட்டுக்களால் எந்தப் பயனும் இல்லை.
பிதாவின் சித்தம் மகனின் சித்தம்.
மகனின் சித்தம் அவருடைய திருச்சபையின் சித்தம்.
திருச்சபையின் சித்தத்தை நாம் நிறைவேற்றும் போது, பிதாவின் சித்தத்தையே நிறைவேற்றுகிறோம்.
திருச்சபை நமது தாய்.
தாய் சொற்படி நடப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment