Monday, June 22, 2020

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."(அரு.3:17)

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
(அரு.3:17)
*********************************
"நான் சொல்வதை ஒருவன் கேட்டபின் அதன்படி நடவாவிடில், அவனுக்குத் தீர்ப்பிடுவது நானல்லேன்: 

ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்."
(அரு.12:47)


ஒரு நாள், ஆசிரியர்கள் வழக்கமாகச் சொல்லுவதுபோல், நான் மாணவர்களைப் பார்த்து,

"எலே, நாளைக்கு மனப்பாடம் படியாம வாரவனக் கொன்னுப்புடுவேன்"னு சொன்னேன்.

மறுநாள் ஒரு பையனுடைய அப்பா வகுப்புக்கு வந்து என்னிடம்,

"ஏன் சார், நாங்க எங்க பிள்ளைகளை உங்களிடம் அனுப்புவது பாடம் படிப்பதற்கா அல்லது கொல்லப் படுவதற்கா?

"கொன்னுப்புடுவேன்"னு சொன்னீங்களாமே?"
என்றார்.


நான் உடனே பையனை அருகில் அழைத்து,

"ஏண்டா, என்றைக்காவது உன்னுடைய அப்பா நான் சொன்னது மாதிரி சொல்லியிருக்காரா?"

பையன் அப்பா முகத்தைப் பார்த்தான்.

"ஹலோ, சார், நானும் சொல்லியிருக்கேன்,
இதை விடக் கடுமையான வார்த்தைகளைக் கூட
சொல்லியிருக்கேன்.

ஏன்னா, நான் அவனுடைய அப்பா.

நான் அவன் மேல உண்மையான அன்பு உள்ளவன். அவனைத் திருத்துவதற்காகச் சொல்லியிருப்பேன். அதுவும் அன்பினால்தான் சொல்லியிருப்பேன்."

"எனக்கு மாணவர்கள் மேல் அன்பு இல்லையா ? 

திருத்துவதற்காகத்தானே பையன எங்கிட்ட அனுப்பியிருக்கீங்க! 


ஆசிரியர்கள் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது

 பிள்ளைகளைத் திருத்துவதற்காகத்தான் என்பது 
பெற்றோராகிய உங்களுக்கு ஏன் புரியவில்லை?

'ஆசு இரியர்' என்றாலே குற்றங்களை உறித்து எடுப்பவர் என்று தான் பொருள்.

உறிக்கும்போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.

என் மேல நம்பிக்கை இருந்தா பையன வகுப்பில விட்டுவிட்டுப் போங்க.

 இல்லாவிட்டால் H.Mம்மிடம் சொல்லி விட்டு

பையன வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க."

"Sorry சார். பையனைப் பார்த்துக்கிடுங்க."
போய்விட்டார்.


யாருடைய சொல்லுக்கும்  சொன்னவருடைய குணத்திலிருந்துதான்   பொருளைக் காணவேண்டும். 

இயேசுவின் வார்த்தைகளுக்கு  உள்ள பொருளை அவரது மட்டற்ற அன்பின்  மூலமாகத் தான் பார்க்க வேண்டும்.

அவர் அன்புமயமானவர் மட்டுமல்ல, அவர்தான் அன்பு.

Jesus is love.

எப்படி ஒளியிடம் இருட்டு இருக்க முடியாதோ,

அதேபோல,

இயேசுவிடம் அன்புக்கு ஒத்து வராத எந்தக் குணமும் இருக்க முடியாது.

அவருடைய மட்டற்ற அன்பு தான் நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாகப் பிறக்கச் செய்தது.

தந்தை மகனை உலகிற்கு அனுப்பியது

'தீர்ப்பளிக்கவன்று,'

 அவர்வழியாக 

'உலகம் மீட்புப்பெறவே.'

இயேசுவே அதைத்தான் சொல்கிறார்.

"நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்."

இந்த வசனத்துக்கு உள்ள பொருளை நூற்றுக்கு நூறு அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்.

அவர் உலகிற்கு வந்ததன்  நோக்கத்தை அப்படியே சொல்கிறார்.

அட்டடியானால் மத்தேயு நற்செய்தியில்  இயேசு இறுதி நாளில் தீர்ப்பிடுவதாக எழுதியிருப்பதை எப்படிப் பொருள் கொள்வது?

இயேசு தன் போதனையில்  பிறர் அன்புப் பணி செய்வதன் மூலமே இறையன்பு செய்ய முடியும் என்ற உண்மையை வலியுறுத்துகிறார்.

நாம் விண்ணகம் செல்வோமா அல்லது செல்லமாட்டோமா என்று தீர்மானிப்பது

நாம் இறைவனுக்காக பிறரன்புப் பணிகள் செய்கிறோமா அல்லது செய்யவில்லையா என்பதுதான்.

 செயலிலுள்ள இறையன்பும், பிறரன்பும்தான்

இயேசு தன் மரணத்தினால் நமக்குத் தரத் தயாராக வைத்திருக்கும் மீட்பைப் பெற நமக்குத் தகுதியைத் தரும்.  

இயேசுவின் வார்த்தைப்படி நாம் வாழ்ந்தால் நமக்கு மீட்பு.

நாம் வாழாவிட்டால் விண்ணகத்தை நாம்தான் இழக்கிறோம்.

கடவுள் நம்மைத் தள்ள மாட்டார்,

இயேசு தீர்ப்பிடமாட்டார். நாம் தான் நம்மைத் தீர்ப்பிட்டுக் கொள்கிறோம்.


"என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவனுக்குத் தீர்ப்பிடும் ஒன்று உண்டு:

 நான் கூறிய வார்த்தையே அவனுக்கு இறுதி நாளில் தீர்ப்பிடும்."
(அரு.12:48)

இயேசு,

 "வார்த்தையே தீர்ப்பிடும்."

என்கிறார்.

அவரது வார்த்தையை நாம் கடைப் பிடிக்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்துதான் தீர்ப்பு.

கடைப்பிடிப்பதும், கடைப்பிடிக்காதிருப்பதும் நாம் தான்.

ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெறுவது ஓடுகிறவன்தான்.

இறுதி நாள் பற்றி இயேசு பேசும்போது 

அவர் வலியுறுத்திக் கூறுவது 

நாம் பிறரன்பு செயல்களை செய்தால் மட்டுமே மீட்பு பெற முடியும் என்பதைத்தான்.

மருத்துவர் நோயாளிக்கு மருந்து கொடுத்துவிட்டு 

"இதை சாப்பிட்டால் மட்டுமே குணமாக முடியும்,

 ஆகவே மறக்காமல் ஒழுங்காக மருந்தைச் சாப்பிடுங்கள்"
என்று சொல்லுகிறார்.

மருத்துவர் தீர்ப்புச் சொல்லவில்லை. 
 பிழைக்க வழி சொல்லுகிறார்.


 மருந்தைச் சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும்  நோயாளியின் பொறுப்பு.

  சாப்பிட்டால் குணமாகும்,
சாப்பிடாவிட்டால் குணமாகாது.

மருந்தை அவன் ஒழுங்காகச் சாப்பிடாமல் இறந்துவிட்டால்

மருத்துவர்  மரணத் தீர்ப்பிட்டு  விட்டார் என்று என்று சொல்லலாமா?

சிலர் கேட்கலாம்

 "இயேசு அன்பு உள்ளவர், நம்மை மீட்க வந்தார்.

 அதே சமயத்தில் இயேசு நீதி உள்ளவர், ஆகவே நீதியின்படி தீர்ப்பிடலாம்  அல்லவா?"

உண்மை. இயேசு அளவற்ற அன்பு உள்ளவர் போல்,

 அளவற்ற நீதியும் உள்ளவர்.

 இது மறுக்க முடியாத உண்மை.

மனித கண்ணோக்கில் உள்ள நீதிக்கும், இறைவனின் நீதிக்கும் பாரதூர வித்தியாசம் உள்ளது.

மனித நீதிப்படி நீதிமன்றத்தில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.

நிரபராதி விடுவிக்கப்பட வேண்டும்.

மனித நீதிபதி குற்றவாளியை பார்த்து,

 "நான் உன்னை நேசிக்கிறேன், ஆகவே  விடுவிக்கிறேன்"

 என்று கூற முடியாது.

"நான் உன்னை நேசிக்கிறேன்,
ஆகவே நீ செய்த குற்றத்திற்கு நானே பரிகாரம் செய்கிறேன்'' என்றும் கூற முடியாது.

இறைவனின் எல்லா பண்புகளும் அளவு இல்லாதவை.

 கடவுள் அளவற்ற அன்புள்ளவர் ,

அளவற்ற நீதியுள்ளவர்,

 இரண்டு பண்புகளும் அளவற்றவை.

 ஆகையால் இரண்டும் இணைந்தே செயல் புரிகின்றன.

  மனிதன் செய்த பாவத்தினால் தண்டனை பெறத் தகுதி உள்ளவன்.

  நீதிப்படி அவன் தண்டிக்கப்பட வேண்டும், 

ஆனால் அன்புப்படி   அவன் மன்னிக்கப்பட வேண்டும்.

அன்புப்படி மன்னிக்கப்பட வேண்டுமானால் 

நீதிப்படி  அவன் பாவத்திற்கு பரிகாரம் செய்தாக வேண்டும்.

ஆனால் அளவற்ற கடவுளுக்கு எதிராக செய்யப்பட்ட பாவத்திற்கான பரிகாரமும் அளவற்ற விதமாய் இருக்க வேண்டும்.

 ஆனால் அளவுள்ள மனிதனால் அளவற்ற விதமாய் பரிகாரம் செய்ய முடியாது.

ஆனாலும் மனிதனால் தான் செய்யப் படவேண்டும்.

ஆகவே கடவுள் மனிதனாய் பிறந்து 

மனிதன் செய்யவேண்டிய பரிகாரத்தை 

மனிதராக அவரே செய்தார்.

 அவர் மனிதன் ஆகையால் பரிகாரம் செல்லும், 

அவரே கடவுளாகையால் பரிகாரம் அளவற்ற விதமாய் இருக்கும்.

ஆகவே அன்புமயமான கடவுளே நீதிப்படி பரிகாரம் செய்தார்.

தன் உடலில் இருந்த   இரத்தத்தில் ஒரு துளியைக் கூட மீதம் வைக்காமல் சிந்தி

 நமக்காக தனது உயிரையும் கொடுத்து  

முழுமையான கடவுளும், முழுமையான மனிதனுமாகிய இயேசு

நாம் செய்யவேண்டிய பரிகாரத்தை அவரே செய்தார்.

ஆகவே இறைவனின் நீதி கூட நம்மை மன்னிக்கவே செய்கிறது.

இறைவன் நமக்காக சிந்திய ரத்தத்தை நாமே வீணாக்கி விடக்கூடாது.

இறைவார்த்தையை நமது  வாழ்வாக்குவோம்.

நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம். 

No comments:

Post a Comment