நமது விசுவாசம் நமது வாழ்வாகியிருக்கிறதா?
Are we living our Faith?
*********************************
ஒருவனுக்குக் கண் இருக்கிறது, பார்க்க முடியும், ஆனால் பார்ப்பதில்லை.
காது இருக்கிறது, ஆனால் எதையும் கேட்கமாட்டான்.
வாயிருக்கிறது, ஆனால் பேசமாட்டான்.
உயிர் இருக்கிறது. ஆனால் அசைய மாட்டான்.
அவனைப் பற்றி அபிப்பிராயம் கேட்டால் என்ன சொல்வோம்?
அவன் இருப்பதும் ஒன்றுதான், இல்லாதிருப்பதும்
ஒன்றுதான்.
விசுவாசம் இருப்பவன் அதை வாழாவிட்டால், விசுவாசம் இல்லாதது போல் தான்.
அதனால் செயலில்லா விசுவாசம் செத்த விசுவாசம் என்று சொல்கிறார்கள்.
விசுவாசம் நமக்கு இறைவன் அளித்துள்ள அற்புதமான நன்கொடை.
இயேசு நமது இரட்சகர் என்பதை விசுவசிக்கிறோம்.
திவ்ய நற்கருணையில் மெய்யாகவே இயேசு இருக்கிறார் என்பதை விசுவசிக்கிறோம்.
ஆனால் விசுவாசம் மட்டும் நமக்கு மீட்பைத் தராது.
"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்." (மத். 28:20)
இயேசு சீடர்களிடம் வெறுமனே "போதியுங்கள்." என்று சொல்லவில்லை.
"கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்." என்று சொன்னார்.
போதிக்கும் போது கிடைப்பது விசுவாசம்.
விசுவாசத்தைத் கடைப்பிடிக்கும்போது, அதாவது, வாழும்போது
கிடைப்பது மீட்பு.
வீடு திரும்புகிறோம்.
வீட்டிற்குள் நுழையும் போது நாம் பணிபுரியும் கம்பெனி M.D சோபாவில் அமர்ந்து நமது பெற்றோரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்!
நமக்கு எப்படி இருக்கும்!
"சார், வணக்கம்! எப்போ வந்தீங்க? நீங்கள் வருவது தெரிந்திருந்தால் வேகமாக வந்திருப்பேனே!"
நமக்குத் தெரியும்,
நம்மைப் படைத்தவர், பாவத்திலிருந்து நம்மை மீட்டவர்
நமக்காகவே
கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறார் என்று.
நமக்காகத் தன்னையே சிலுவை மரத்தில் பலியாக்கிய அதே இயேசுவைத்தான்
திருப்பலியின் போது தந்தை இறைவனுக்கு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கப் போகிறோம் என்று.
ஆனால் தெரிந்திருந்தும் நாம் எவ்வளவு வேகமாக, உற்சாகமாக கோவிலுக்கு வருகிறோம்?!
சினிமாவுக்குப் போகும்போது உள்ள வேகம் ஆண்டவரைப் பார்க்கப் போகும்போது இல்லையே!
இயேசு நமது விசுவாசத்தில் இருக்கிறார், வாழ்க்கையில் இல்லை!
ஒரு காதலன் தன் காதலியைச் சந்திக்கும்போது அவள் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அவனது பேச்சைவிட பார்வையே கூர்மையாக இருக்கிறது.
ஏன்?
அவள் மீது அவன் கொண்டுள்ள அன்பு அவனை அவளை நோக்கி ஈர்க்கிறது.
நாமும் இயேசுவை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிப்பதாகச் சொல்லுகிறோம்.
ஆனால் திருப்பலியின் போது நமது கண்ணும், கருத்தும் பீடத்தின் மீது மட்டும் இருக்கிறதா?
அல்லது உள்ளத்தை எங்கோ அலைய விட்டு விட்டு உடலை மட்டும் கோவிலில் வைத்திருக்கிறோமா?
இயேசு நம் விசுவாசத்தில் இருக்கிறார், உள்ளத்தில் இல்லை.
திருவிருந்தின்போது இயேசுவையே உணவாக உட்கொள்கிறோம்.
பிரியாணி சாப்பிடும்போது எவ்வளவு ருசித்துச் சாப்பிடுகிறோம்!
நமது இரட்சகரை நாவில் வாங்கும்போது அவரது இனிமையை எப்போவாவது ருசித்துப் பார்த்திருக்கிறோமா?
Have we ever tasted how Sweet Jesus is?
ஒரு சாக்லெட்டிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட நமது மீட்பருக்குக் கொடுக்க வில்லையே!
விசுவாசத்தில் இருக்கும் இயேசு நமது வாழ்க்கையில் இல்லை!
நாம் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவர் நமது வீட்டிற்கு வருவதாக இருந்தால், நமது வீட்டை எவ்வளவு சுத்தமாகவும், அலங்காரமாகவும் வைத்திருக்கிறோம்.
அவர் விரும்பாத ஒரு பொருள் வீட்டில் இருந்தால் அதை அவர் வரும்போது வீட்டில் வைத்திருப்போமா?
இயேசுவுக்குப் பாவம் பிடிக்காது. அவரைச் சிலுவையில் அறைந்ததே நமது பாவம் தான்.
கோபம், மோகம், காய்மாகாரம் போன்ற துர்க் குணங்கள் இயேசுவுக்குப் பிடிக்காது.
நாம் பாவ நிலையிலும், துர்க்குணங்கள் நிறைந்த. மனதுடனும் அவரை உட்கொண்டால்
நாம் இயேசுவை வீட்டிற்குக் கூப்பிட்டு அவமதிக்கிறோம்!
விசுவாசத்தில் இருக்கும் இயேசு நமது வாழ்க்கையில் இருந்தால் பாவங்களோ, துர்க்குணங்களோ நம்மை அண்டாது.
வெளிச்சம் வரும்போது இருட்டுக்கு என்ன வேலை?.
சிலர் நற்கருணை வாங்கிய வுடன், திருப்பலி முடியு முன்னரே, கோவிலை விட்டுப் போய்விடுகிறார்கள்.
அவர்களுக்கு நற்கருணையில் ஆண்டவர் இருப்பது தெரியும்.
தெரிந்தும் அவரிடம் பேசாமல் யாருடனோ பேசுவதற்கு வெளியே போனால் என்ன அர்த்தம்?
அவருக்கு அவர்கள் வாழ்க்கையில் இடம் இல்லை என்று அர்த்தம்.
ஒருவன் ஒரே முறை மட்டும் உரிய தயாரிப்புடன் திவ்ய நற்கருணை உட்கொண்டால் புனிதன் ஆகி விடுவான் என்று கூறுவார்கள்.
ஒருவனுக்கு வாழ்வில் ஒரு நாள்தான் திருமணம் நடக்கும்.
அந்த திருமண நாளுக்காக வீட்டை எப்படி தயாரிக்கிறார்கள்?
வீடு உள்ளும், புறமும் தூய்மை யாயும், அழகாகவும் இருக்கும்.
அது போல் சரியான முறையில் ஆண்டவரை நற்கருணை மூலம் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்
நமது உள்ளத்திலுள்ள எல்லா பாவக் கறைகளையும்,
பாவ நாட்டங்களையும், எல்லாவிதமான துர்க் குணங்களையும் முற்றிலும் அப்புறப்படுத்தி விட்டு
அதை எல்லா வித புண்ணியங்களாலும் அலங்கரிக்க வேண்டும்.
மெய்யான தேவனை உள்ளத்தில் ஏற்கிறோம் என்ற முழு உணர்வுடன் நற்கருணையைப் பெற வேண்டும்.
அந்த நாளில் நமது உள்ளம் மிகவும் புனிதமாக இருக்கும்.
அன்றைய தினம் நாம் இறக்க
நேரிட்டால் இயேசுவுடன் நாமும் நேரே நாமும் நித்திய பேரின்பத்திற்குள் நுழைந்து விடுவோம்.
அந்த அளவிற்கு நமது உள்ளம் புனிதமாக இருக்கும்.
அன்றைய நாளில் இயேசு நம் வாழ்க்கையில் இருப்பார்.
அன்றைய நாளின் புனிதத்துவத்தை நாம் அப்படியே வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தால்,
நாம் இயேசுவை வாழ்கிறோம்.
வழக்கமாக தியானத்திற்கு (Retreat) செல்லும்போது இத்தகைய அனுபவம் ஏற்படும்.
ஆனால் தியானம் முடிந்து வீட் வீட்டிற்கு வரும்போது தியான அனுபவம் தியான அனுபவமாகவே போய்விடுகிறது.
வாழ்க்கை அனுபவமாக மாறுவதில்லை.
வாழ்த்கை அனுபவமாக மாறினால் நாம் இயேசுவைப் போலல்ல, இயேசுவாகவே வாழுவோம்.
அதாவது நாம் வாழ மாட்டோம், இயேசு நம்மிடம் வாழ்வார்.
நமது ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கும்போதும்,
"விண்ணகத் தந்தையே,
இன்று முழுவதும், எனது விருப்பப்படி அல்ல,
உமது விரும்பப்படியே நடப்பேன்,
அதற்கு வேண்டிய வரம் தாரும்"
வேண்டுவதோடு, இறைவனின் சித்தத்திற்கு முற்றிலும் பணிந்து நடப்போம்.
அன்றைய முழுவதும் நற்கருணை நாதருடன் கைகோர்த்து நடப்போம்.
அன்றைய நாள் முழுவதும் கிறிஸ்துவின் எளிமை, பரிவு, பணிவு, ஆத்ம தாகம் போன்ற பண்புகள் நம்மை வழிநடத்தும்.
ஏற்றதாழ்வு பார்க்காமல் எல்லோரையும் நேசிப்போம்.
நமக்கு எதிராக யார் குற்றம் செய்தாலும் மன்னிப்போம்.
நமக்கு தீங்கு செய்பவர்களுக்கும் நன்மை செய்வோம்.
பிறர் வசதியாக வாழ நமது வசதிகளைத் தியாகம் செய்வோம்.
நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நற்செய்தியை அறிவிப்வோம்.
இதே போன்று நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் வாழ்ந்தால் நமது வாழ்க்கையே விசுவாச வாழ்க்கையாக மாறும்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஆதித்திருச்சபையில் நற்கருணை நாதருக்காக
தங்கள் உயிரையே தியாகம் செய்த வேதசாட்சிகள் நினைவுக்கு வருகிறார்கள்.
ரோமை சாம்ராஜயத்தை ஆண்டு வந்த நீரோ போன்ற கொடுங்கோல் மன்னர்கள் காலத்தில்
கிறிஸ்தவர்கள் ஈவு இரக்கம் இரக்கம் இன்றி கொல்லப்பட்டார்கள்.
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை மறுதலித்து வாழ்வதை விட கிறிஸ்துவுக்காத உயிரைத் தியாகம் செய்வதே மேல்
என்று,
ஆயிரக் கணக்கானோர் கிறிஸ்துவுக்காக உயிரைத் தியாகம் செய்தார்கள்.
உயிருக்குப் பயப்படாமல் திவய பலி பூசை கண்டார்கள். நற்கருணை நாதரை ஆன்மீக உணவாக உண்டார்கள்.
நற்கருணை நாதர் கொடுத்த தைரியத்தில் பயப்படாமல் விசுவாசத்தை வாழ்ந்து வந்தார்கள்.
நற்கருணை நாதருக்காத உயிரைக் கொடுத்த தார்சிஸ் என்ற சிறுவன் என் நினைவுக்கு வருகிறான்.
அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
இன்று உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது கொரோனா வைரஸ் மன்னன்.
அவனது கொடுங்கோன்மைக்குப் பயந்து,
அவன் நம்மைக் கொன்று விடுவான் என்று பயந்து,
உயிர் வாழ்வதற்காக
திருப்பலி காணாமல், திருவிருந்து அருந்தாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிறோம்.
என்னுடைய இயலாமையை நினைக்கும் போது என் மேலே எனக்கு வெட்கமாக இருக்கிறது.
ஆனாலும், இது ஒரு சவால் ஆன காலம்.
சாத்தான் நம்மைப் பார்த்து சவால் விடுகிறது:
. "சாதாரண காலத்தில் உன்னுடைய ஞானத் தந்தையர்களுடைய நேரடி மேற்பார்வையில் விசுவாசத்தை வாழ்ந்தாயே.
இப்போ தனியாக வீட்டில் இருந்து விசுவாசத்தை வாழ்ந்து காண்பி பார்க்கலாம்."
கொரானா மன்னன் ஆட்சியில் சாத்தான் கொஞ்சம் விளையாடிக் காண்பிக்கும்.
சாதாரண காலத்தில் நமக்கு ஆலோசனை நல்கி, ஞான வாழ்வில் வழிநடத்தி வந்த பங்குச் சாமியாரோடு நேரடியாக பேச முடியாதது கொஞ்சம் கஸ்டம் தான்.
Phone மூலம் confidential ஆன ஆன்மீக விஷயங்களைப் பேச முடியாது.
சாத்தான் அதன் அடிப்படையில்தான் சாத்தான் சவால் விடுகிறது.
ஆனாலும் உறுதிப்பூசுதலின்போது பரிசுத்த ஆவி தந்த திடம் நம்மோடுதான் இருக்கிறது.
அதைத் தந்த பரிசுத்த ஆவியும் நம்மோடுதான் இருக்கிறார்.
நம்மை பொறுத்த மட்டில் நம்முடைய விசுவாசத்தின் ஆழத்தை வீரத்தோடு காண்பிக்க வேண்டிய நேரம் இது.
யாருடைய உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும்
பரிசுத்த ஆவியின் உதவி இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதை எண்பிப்பதற்கு நமக்கு கிடைத்த சந்தர்ப்பம் இது.
அது மட்டுமல்ல,
கீழ்ப்படிதலை விட மேலான புண்ணியம் எதுவும் இல்லை என்பதை நாம் உணர்வதற்காக
இறைவன் தந்த சந்தர்ப்பம் இது.
இக்கட்டான சூழ்நிலையிலும் நமது ஞான மேய்ப்பர்களின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே இறைவனின் முன்னிலையில் மிக பெரிய சாதனை.
கீழ்ப்படியாமை லூசிபெரைச் சாத்தானாக்கியது.
கீழ்ப்படிதல் நம்மை புனிதராக்கும்.
விசுவாசத்தைத் திடமாக வாழ வேண்டிய சந்தர்ப்பத்தைத் தந்த இறைவன்,
அதற்கான உதவிகளையும் செய்திருக்கிறார்.
முன்பு பங்குச் சாமியாரின் பிரசங்கத்தை மட்டும் கேட்டு வந்தோம்.
இப்போது Youtube மூலமாக எத்தனை சுவாமிமார்களின் பிரசங்கங்களை வேண்டுமானாலும்,
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம். பயன் பெறலாம்.
இது இறைவன் தந்த உதவி.
இருந்தாலும் திருப்பலி காண முடியாததும், திருவிருந்து அருந்த முடியாததும் ஒரு குறைதான்.
அது இறைவனே அனுமதித்திருக்கும் குறை.
இறைவன் எதைச் செய்தாலும் நமது நன்மைக்கே என்று ஏற்றுக் கொண்டால் அதுவே ஒரு புண்ணியம்.
அது மட்டுமல்ல ஜெபமும், தவமும் செய்யவும்,
உதவி தேவைப்படும் அயலானுக்கு வேண்டிய உதவி செய்யவும்
இறைவன் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வோம்.
எந்த சூழ் நிலையிலும் நமது விசுவாசத்தை வாழ்வோம்.
வெற்றியோடு விண்ணகம் புகுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment