Thursday, June 18, 2020

நீங்கள் கேட்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையானது இன்னது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்."(மத். 6:8)

"நீங்கள் கேட்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையானது இன்னது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்."
(மத். 6:8)
_______________________________
."எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.

32 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.

33 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:31 - 33)

ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்பவர்கள்

சாப்பாடு கேட்டால் சாம்பார், கூட்டு, ரசம், மோர் கேளாமலே வரும்.

இட்லி கேட்டால் சட்னி 
கேளாமலே வரும்.

எது முக்கியமானதோ அதைத் தான் கேட்க வேண்டும்.

ஜவுளிக் கடைக்கும் போய்,

"புதுத் துணிமணிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல பை தாருங்கள்" என்று கேட்டால் கடைக்காரன் சிரிப்பான்.

"முதலில் ஜவுளி எடுங்க , சார்.
பை நீங்க கேளாமலே வரும் என்பான்.

இறைவன் நம்மைப் படைத்தது அவரது இராட்சியத்துக்காக.

பரலோக இராட்சியத்துக்கு உலகத்தின் வழியே போக வேண்டும்.

நமது எண்ணம் நாம் போகிற இடத்தின் மேல் இருக்க வேண்டும், வழியின் மீது அல்ல.

நாம் நமது பிள்ளைகளை எங்கேயாவது அனுப்பும்போது செலவுக்குக் காசு கொடுத்து அனுப்புவதில்லை?

நமக்குத் தெரிவது கடவுளுக்குத் தெரியாதா?

நமக்கு உடலும் இருப்பதால் நமது விண்ணகப் பயணத்தில் உணவு, உடை, இருப்பிடம் தேவை என்று அவருக்குத் தெரியும்.

ஆகவேதான் இயேசு, 

"கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:

 இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
என்கிறார்.

சொல்பவர் சர்வ வல்லபக் கடவுள்.

கடவுள் நிச்சயமாகச் சொன்னதைச் செய்வார்.

ஆகவே நாம் இறையரசை அடுத்த காரியங்களில் மட்டும் கவனம் செலுத்துவோம்.

நமக்கு என்னென்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

யாரோ கேட்கும் கேள்வி காதில் விழுகிறது.

''நாம் ஒரு வேலையும் பார்க்காமல், பணமும் சம்பாதிக்காமல் கோவிலில் செபம் செய்து கொண்டே இருந்தால், கடவுள் அவராக வந்து உணவு, உடை, வீடு தருவாரா?"

இப்படிக் கேட்பவர்கள் இறையரசைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளாதவர்கள்.

இறையரசு அன்பின் அரசு.
இது ஒரு ஆன்மீக அரசு.
Spiritual Kingdom.

இறைவனையோ, நமது ஆன்மாவையோ, அது செய்யும் அன்பையும் நமது ஊனக் கண்களால் பார்க்க முடியாது.

இறை அரசையும் 
ஊனக் கண்களால் பார்க்க முடியாது. அது ஆன்மீக அரசு,

எப்படி இறைவனும் நமது ஆன்மாவும் அதில் இருக்கும் அன்பும் உண்மையோ

 அதுபோல இறை அரசும் உண்மையானது.

இறையரசை பார்க்க முடியாவிட்டாலும் நமது ஆன்மாவினால் அதை உணரமுடியும்.

எப்படி நாம் அன்பு செய்வதை நம்மால் உணர முடிகிறதோ அதுபோல இறை அரசையும் உணர முடியும். 

இறைவன் நமது அரசர்.

அன்பின் அரசர்.

அவரது அன்பின் எல்கைக்குள்    நாம் அன்புடன் இருக்கும்போது  இறை அரசில் இருக்கிறோம்.

இறைவனது அன்பிற்கு எல்கை கிடையாது.

நாமும் அன்புடன் இருக்க வேண்டும்.

இறையரசில் நமது செயல்பாடுகள் மூவகைப்படும்.

1. இறைவனை நேசித்து, வழிபடுதல்

2. நம்மை நேசித்து, விண்ணக வாழ்விற்குத் தயார் செய்தல்.

3. அயலானை நேசித்து,  அவனுக்குப் பணிபுரிதல். அயலானுக்குப் பணி புரியும்போது இறைவனுக்கே பணிபுரிகிறோம்.

இந்த மூன்றையும் செய்ய ஆசிக்கும்போது இறையரசைத் தேடுகிறோம்.

இந்த மூன்றையும் செய்யும் போது இறையரசில் வாழ்கிறோம்.

இவ்வுலக அரசு நம் உடலோடு சம்பந்தப்பட்டது.

நமது உணவு, உடை, இருப்பிடம், இவற்றுக்கு வேண்டிய பொருள் இவ்வுலக அரசைச் சார்ந்தது.

எப்படி உடல் ஆன்மீக விசயங்களில் ஆன்மாவுக்குப் பணிபுரிகிறதோ,

அவ்வாறு இவ்வுலக அரசு இறையரசுக்கு உதவிகரமாய் இருக்கவேண்டும்.

ஆன்மாவுக்கு எவ்வாறு உடல் பணிபுரிகிறது?

ஆன்மா நேசிக்கிறது. நேசத்தைச் செயலில் காட்டுவது உடல்.

ஆன்மா திருப்பலியில் பங்கேற்கிறது. கோவிலுக்கு அழைத்துக் செல்வது உடல்.

ஆன்மா திருவிருந்தை அருந்துகிறது. இயேசுவை நாவில் வாங்குவது உடல்.

ஆன்மா நோன்பு இருக்கிறது.
அதற்காக பட்டினி கிடப்பது உடல்.

ஆன்மா நற்செய்திவை அறிவிக்கிறது. அதற்காக பேசுவது உடல்.

ஆன்மா அயலானுக்கு உதவுகிறது.அவ்வுதவியைக் கொண்டு செல்வது உடல்.

இறுதியில் ஆன்மா விண்ணகம் செல்கிறது. அதற்கு விடை கொடுப்பது உடல்.

இவ்வாறு சடப்பொருளாகிய உடலின் உதவியால்தான் நம்மால் ஆன்மீக வாழ்வு வாழ முடியும்.

மேற்கூறியவற்றில் ஆன்மாவின் செயல்.பாடுகள் அனைத்தும் இறையரசு சம்பந்தப் பட்டவை.

உடல் இவ்வுலக சம்பந்தப்பட்டது. இவ்வுலகம் இறையரசுக்கு உதவிகரமாய்
இருப்பதற்காகத்தான் 

இறைவன் உலகைப் படைத்த பின் ஆன்மாவைப் படைத்தார்.

இப்போது இறை வார்த்தையின் விளக்கத்திற்கு வருவோம்.

உலக அனுபவத்தில் 

நாம் பிறந்த உடனேயே இவ்வுலக சம்பந்தப்பட்ட உணவு, உடை இருப்பிடம் போன்ற இவ்வுலக வசதிகளை தான் தேடுகிறோம்.

தொடர்ந்து நமது படிப்பு, வேலை, சம்பளம் போன்றவற்றை

  இவ்வுலக வசதிகளை அதிகரித்துக் கொள்வதற்காகவே நாம் தேடுகிறோம்.

நம் மறை சம்பந்தப்பட்ட விசயங்களில் கூட 

பக்தியை விட இவ்வுலக சம்பந்தப்பட்ட 
ஆடம்பரங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

ஆனால் ஆண்டவர் இறையரசை முதலில் தேடச் சொல்லுகிறார்.

இறையரசைத் தேடும் போது அவற்றிற்கு உதவியாக இருக்கக்கூடிய இவ்வுலக உதவிகள் இறைவன் அருளாலேயே கிடைக்கும்.

கேள்வி எழுப்பலாம்: 

எப்படிக் கிடைக்கும்?
நாம் உழைத்தால்தானே கிடைக்கும்?

ஆமா, உழைத்தால்தான் கிடைக்கும்.

ஆனால் உழைக்கத் தேவையான சக்தியையும், சூழ் நிலையையும் உருவாக்கித் தருபவர் இறைவன் தானே! 

நாம் உழைப்பதற்கு வேண்டிய இடமாகிய உலகைப் படைத்து விட்டுதான் உழைக்க வேண்டிய நம்மைப் படைத்தார்.

இறையரசிற்காகத்தான் இவ்வுலகம்.

இறைவனையும், பிறனையும் அன்பு செய்து, 

அன்பிலிருந்து பிறக்கும் நற்செயல்களை செய்வதற்கே

 நாம் இவ்வுலகில் ஈட்டுகின்ற செல்வங்கள் படைக்கப்பட்டன.

வாழ்வதற்காக உண்பது போல

நமக்கும், அயலானுக்கும் உதவுவதற்கே உலக செல்வத்தை ஈட்ட வேண்டும்.

பொருள் ஈட்டுவது உலகச் செயல். இது உலக அரசைச் சார்ந்தது.

உதவுவது அன்பை வளர்க்கும் ஆன்மீகச் செயல். ஆன்மீகச் செயல் இறையரசைச் சார்ந்தது. 

உதவுவதற்காக உழைப்பவர்களுக்கு, உழைப்பின் பயன் வாழ்வதற்கும், உதவுவதற்கும் போதுமானதாக இருக்கும்படி இறைவன் பார்த்துக் கொள்வார்.

சிலர் தங்கள் உழைப்பின் பலன் அதிகரித்தாலும் 

தங்கள் வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வதிலேயே குறியாய் இருப்பார்களே அல்லாமல் 

பிறருக்கு உதவ விரும்ப மாட்டார்கள்.

செல்வந்தர்களாய், பிறருக்கு உதவாமல் வாழ்பவர்களுக்கு அறிவுரையாகத்தான்

இயேசு செல்வந்தன், ஏழை இலாசர் உவமையைக் கூறினார்.

செல்வந்தன் முழுக்க முழுக்க இவ்வுலகில் வாழ்ந்தான், 

இறையரசில் வாழவே இல்லை.

விளைவு?

இவ்வுலக வாழ்வு முடிந்தபின் அவனால் விண்ணகம் செல்ல இயலவில்லை.

இவ்வுலகில் வாழும் போது இறையரசைத் தேடி, வாழ்ந்திருந்தால்,

அது மறுவுலகிலிலும் தொடர்ந்திருக்கும், பேரின்ப வாழ்வாக.

சிலர் நினைக்கலாம் 

நம்மிடம் இப்போது இருப்பதை தானம் செய்துவிட்டால் நாளைய செலவுக்கு என்ன செய்வது என்று.

 ஆனால் ஆண்டவன் சொல்கிறார்:

"நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதீர்கள்.

 நாளைய தினம் தன்னைப்பற்றிக் கவலைகொள்ளும்.

 அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்." ( மத். 6:34)

"அன்றன்றுள்ள அப்பம் இன்று தாரும்" என்று தான்  தந்தை
 யிடம் செபிக்கிறோம்.
"
 தந்தை மீது விசுவாசம் இருந்தால் 

நாளைக்கு வேண்டியதை தந்தை நாளைக்குத் தருவார் என்று நம்புவோம்.


இயேசுவை விசுவசிப்போம்.

இவ்வுலகிலேயே இறையரசில் வாழ்ந்து,

அதை இறைவனோடு இணைந்த பேரின்ப வாழ்வாக மறுவுலகிலும் தொடர்வோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment