நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
(மத்தேயு நற்செய்தி 8:8)
தன் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடப்பதாகச் சொன்ன நூற்றுவர் தலைவரிடம்
இயேசு, "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.
நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."
என்றார்.
இவ்வார்த்தைகள் அவருடைய தாழ்ச்சியையும், இயேசுவிடம் அவர் கொண்டிருந்த அளவு கடந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.
இயேசு பரிசுத்தர் என்பதை ஏற்றுக் கொள்வதோடு, அவர் கால் மிதிக்கும் அளவுக்கு தன்னுடைய வீடு பரிசுத்தமானதல்ல என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்.
தாழ்ச்சி இயேசுவுக்கு மிகவும் பிடித்தமான குணம்.
அவரது தாழ்ச்சியையும், நம்பிக்கையையும் கண்ட இயேசு அவர் கேட்டுக் கொண்டபடி அவரது பையனைக் குணமாக்குகிறார்.
இந்த நிகழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்?
நூற்றுவர் தலைவரின் தாழ்ச்சியும், நம்பிக்கையும்தான்.
நாம் திரு விருந்தின்போது திவ்ய நற்கருணை நாதரை நமது நாவில் வரவேற்குமுன் நூற்றுவர் தலைவரின் வார்த்தைகளைத் தான் சொல்கிறோம்.
அவற்றை உணர்ந்து சொல்கிறோமா? மனப்பாடமாக ஒப்பிக்கிறோமா?
அதைப் பற்றிக் கொஞ்சம் தியானிப்போம்.
நம்மைப் பற்றி நாம் தியானிப்பது நம்மை நாம் உள்ள படியே தெரிந்து கொள்வதற்காக.
, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்."
இந்த வார்த்தைகளை நூற்றுவர் தலைவர் உணர்ந்து சொன்னார்.
காலையில் வாசனை சோப் போட்டுக் குளித்து விட்டு, சுத்தமான உடை அணிந்து அலுவலகம் செல்கிறோம்.
சென்றவுடன் நாம் செய்யும் முதல் வேலை என்ன?
நாம் அமரவிருக்கும் நாற்காலியை ஒரு துணியால் சுத்தம் செய்கிறோம்.
எதற்காக?
சுத்தமான உடையோடு அழுக்குள்ள இடத்தில் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக.
ஆண்டவர் நம்மிடம் வரும் போது,
"ஆண்டவரே, நீர் பரிசுத்தர். நீர் வந்து அமரக்கூடிய அளவுக்கு எனது இதய நாற்காலி சுத்தமாக இல்லை."
என்று நமது உண்மை நிலையை ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் அடுத்த வினாடி அவரை வரவேற்க நமது நாக்கை நீட்டி விடுகிறோம்.
அது எப்படி?
நூற்றுவர் தலைவர் சொன்னதைக் கேட்டு, இயேசு அவருடைய வீட்டிற்குப் போகாமலேயே அவர் பையனைக் குணமாக்கினார்.
நம்மைப் பொருத்தமட்டில் நான் தகுதி அற்றவன் என்று சொன்ன பிறகும் நற்கருணையை வாங்கி விடுகிறோம்.
அது எப்படி?
இதைப்பற்றி எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
திவ்ய நற்கருணை வாங்க வேண்டுமென்றால் நமது ஆன்மா சாவான பாவ மாசு இல்லாமல் இருக்க வேண்டும்.
இதை நினைவு படுத்துவதற்காகத்தான்
"ஆண்டவரே, என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதி அற்றவன்" என்ற செபம்.
சாவான பாவ நிலையில் உள்ளவர்கள் இந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டு நற்கருணை வாங்கக் கூடாது.
பாவ சங்கீர்த்தனம் மூலம் பாவ மன்னிப்புப் பெற்று விட்டுதான் நற்கருணை வாங்க வேண்டும்.
இதை நமக்கு ஞாபகப் படுத்தவே தாய்த் திருச்சபை நற்கருணை வாங்கும் நிகழ்வில் இந்த செபத்தைச் சேர்த்திருக்கிறது.
திருப்பலிக்குச் செல்லும் முன்னாலேயே நமது ஆன்மாவை பரிசோதனை செய்து,
சாவான பாவம் இருந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்து விட வேண்டும்.
அற்பப் பாவங்கள் மட்டும் இருந்தால் திவ்ய நற்கருணை வாங்கத் தடை இல்லை.
அவற்றுக்காகவும் பாவ சங்கீர்த்தனம் செய்யலாம், ஆனால், கட்டாயமில்லை.
சாவான பாவம் உள்ளவர்கள் பாவ சங்கீர்த்தனம் செய்தாக வேண்டும்.
அற்பப் பாவத்தோடு இறப்பவர்கள் அவற்றுக்காக உத்தரிக்கிற தலத்தில் பரிகாரம் செய்த பின்பு தான் விண்ணகம் செல்ல முடியும்.
உத்தரிக்கிற தலத்தில் நமது பரிகார காலத்தைக் குறைக்க வேண்டுமென்றால் அதை நாம் வாழும் போது உலகிலேயே செய்து விட வேண்டும்.
உலகிலேயே எப்படிப் பரிகாரம் செய்வது?
நாம் பரிகார வாழ்வாக வாழ்வதன் மூலம்.
நமது அற்பப் பாவங்களுக்கும் பாவ சங்கீர்த்தனம் செய்யலாம்.
செய்தால் நமது ஆன்மா எந்த பாவமும் இல்லாமல் பரிசுத்தமாக இருக்கும்.
நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பரம தந்தையிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும்.
நமக்கு வரும் சிறு நோய்கள் கூட பாவப் பரிகாரமாக மாறிவிடும்.
எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் அதில் சிறு சிறு கட்டங்கள் இருக்கும்.
அவற்றை அப்படியே பாவப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.
உத்தரிக்கிறதலக் காலம் கணிசமாகக் குறையும்.
தவிர்க்க முடியாத துன்பங்களை வேறு வழியில்லாமல் அனுபவித்தால் அதில் எந்தப் பயனும் இல்லை.
பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டு அனுபவித்தால் மோட்சத்துக்குள் சீக்கிரம் நுழைந்து விடலாம்.
"ஆண்டவரே, எனது ஆன்மா விண்ணக வாழ்வுக்குள் நுழைய தகுதி அற்றதாக இருக்கிறது.
ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்.
நான் தகுதி பெறுவேன்."
லூர்து செல்வம்.