Thursday, October 31, 2024

பாவப் பரிகாரமும், உத்தரிப்பும்.

பாவப் பரிகாரமும், உத்தரிப்பும்.


"தாத்தா,ஒரு சின்ன சந்தேகம்.''

''' கேளு.''

"உத்தரிக்கிற ஸ்தலம் எங்கே இருக்கிறது?"

""அதற்குப் பதில் சொல்லுமுன் ஒரு முக்கியமான உண்மையைத் தெளிவு படுத்த வேண்டும்.

நீ எங்கே இருக்கிறாய்?"

"இப்போ உங்க முன்னால் இருக்கிறேன்.''

"நான் இருக்கிற இடத்தில் உன்னால் இருக்க முடியுமா?"

"முடியாது. அங்கே நீங்கள் இருக்கின்றீர்களே!"

'"நான் இருக்கிற இடத்தில் நீ ஏன் இருக்க முடியாது?"

"நாம் இருவரும் திடப் பொருட்கள்.
ஒரு திடப் பொருள் ஆக்கிரமித்து இருக்கும் இடத்தை மற்றொரு திடப் பொருளால் ஆக்கிரமிக்க முடியாது."

""கரெக்ட். எங்கே இருக்கிறாய் என்றால் என்ன அர்த்தம்?"

''எந்த இடத்தில் இருக்கிறாய் என்று அர்த்தம்."

"'இப்போ கவனி. இடத்தைப் பற்றி அறியவே எங்கே என்ற கேள்வியைப் பயன்படுத்த வேண்டும்.

உத்தரிக்கிற ஸ்தலம் ஒரு இடம் அல்ல.

அது ஒரு வாழ்க்கை நிலை, மோட்சத்தைப் போல.

வாழ்க்கை நிலைக்கு இடம், நேரம் இரண்டும் கிடையாது.

நாம் இப்போது இடத்தில் வாழ்கிறோம்.

ஆனால் நமது மரணத்துக்குப் பிறகு வரும் வாழ்க்கை இடம், நேரம் ஆகியவற்றுக்கு 
அப்பாற்பட்டது."

"கடவுளும் இடத்துக்கும் நேரத்துக்கும் அப்பாற்பட்டவர் தானே.

கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறோம், அவர் எங்கும் இருக்கிறார் என்று சொல்கிறோம். 
அது எப்படி?"

"நாம் காலத்துக்கும் இடத்துக்கும் உட்பட்ட உலகில் வாழ்கிறோம்.

நமது மொழியும் அதற்கு உட்பட்டது தான்.

இடம் காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை நிலையை விபரிக்க நமது மொழியில் வார்த்தைகள் இல்லை.

நாம் புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது அனுபவத்தில் கூட சடப் பொருள் அல்லாதவற்றை உள்ளபடியே விபரிக்க  நமது மொழியில் வார்த்தைகள் இல்லை.

உனக்கு பார்வை இருக்கிறதா?"

"இருக்கிறது.'

"காண்பி.''

"இதோ."

"'அது கண். நான் கண்ணைக் காண்பிக்கச்‌ சொல்லவில்லை.

பார்வையைக் காண்பி என்றேன்."

"கண் ஒரு பொருள், பார்வை பொருள் அல்ல. பொருளைத்தான் 
காண்பிக்க முடியும்."

"'பார்வை ஒரு கருத்து.

அதேபோல் அன்பு, அறிவு, ஆசை...
போன்ற கருத்துக்களையும் காண்பிக்க முடியாது.

புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு பார்வை இருக்கிறது, அன்பு இருக்கிறது போன்றவற்றை அவருடைய செயல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்."

''கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?"

"'கடவுள் நம்மைப் போல இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கவில்லை.

அவர் ஆவி. ஆவியால் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்க முடியாது.

கடவுள் தனது வல்லமை, ஞானம் போன்ற பண்புகளால் எங்கும் இருக்கிறார்.

எல்லா இடங்களும் அவருடைய வல்லமையால் தான் இருக்கின்றன.''


"புரிகிறது. இப்போது உத்தரிக்கிற ஸ்தலத்தைப் பற்றிக் கூறுங்கள்.''

"'காலத்துக்கும் இடத்துக்கும் உட்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் மரணம் அடையும் போது அவற்றுக்கு அப்பாற்பட்ட நித்திய வாழ்வுக்குள் செல்கிறோம். .

இங்கு 'செல்கிறோம்' என்ற வார்த்தை கூட இடத்தோடு சம்பந்தப்பட்டது.

ஆனால் இதை விபரிக்க நமது மொழியில் வார்த்தைகள் இல்லை. ஆகவே அதைப் பயன்படுத்துகிறேன்."

''நான் புரிந்து கொண்டேன். தொடர்ந்து சொல்லுங்கள்."

''மோட்சத்துக்குள் பரிசுத்தவான்கள் மட்டுமே நுழைய முடியும்.

நாம் திருமுழுக்குப் பெற்ற போது நமது ஆன்மா பரிசுத்தம் அடைந்தது. 

திருமுழுக்கு பெற்றவுடன் நாம் இறந்தால் நாம் நேரே மோட்சத்துக்குள் போய் விடலாம்.

ஆனால் நாம் வளரும்போது செய்கிற கர்மப் பாவங்களால் நமது பரிசுத்தத்தனத்தை‌‌ இழக்கிறோம்.

பாவ சங்கீர்த்தனம் மூலம் பாவ மன்னிப்பு பெறுகிறோம்.

பாவ மன்னிப்புப் பெற்றாலும் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

போதிய பரிகாரம் செய்தபின் தான் நமது ஆன்மா மோட்ச வாழ்வுக்கு ஏற்ற பரிசுத்தத் தனத்தை அடையும்.

போதிய பரிகாரம் செய்யுமுன் நாம் இறந்து விட்டால் நேரடியாக மோட்சத்துக்குள் நுழைய முடியாது.

உத்தரிக்கிற ஸ்தலம் வழியாகவே மோட்சத்துக்குள் நுழைய முடியும்.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் பரிகாரம் செய்து விட்டு, ஆன்மா முழு பரிசுத்தம் ஆனபிறகு தான் மோட்சத்துக்குள் நுழைய முடியும்."

"எவ்வளவு காலம் உத்தரிக்கிறத் ஸ்தலத்தில் இருக்க வேண்டும்?"

"'இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

ஏனென்றால் காலம் என்றவுடன் நம் மனதில் மணி, நாள், ஆண்டு தான் ஞாபகத்துக்கு வரும்.

இந்தக் கணக்கு பூமியில் மட்டும் தான்.

மறுவுலகில் கிடையாது.

ஒன்று மட்டும் சொல்லலாம்.

மன்னிக்கப்பட்ட பாவங்களுக்கும், அற்பப் பாவங்களுக்கும் பரிகாரம் செய்தவுடன் ஆன்மா
 மோட்சத்துக்குச் செல்லும்."

"பரிபூரண பலன் என்றால் என்ன?"

"'உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து முழுமையான விடுதலை கொடுக்கும் பலன்.

உத்தரிக்கிற ஆன்மாக்களின் திருநாள் அன்று உத்தரிக்கிற ஆன்மாவுக்காக நாம் இந்த பலனைப் பெற்று கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கலாம்.

எந்த ஆன்மாவுக்காக அதை ஒப்புக் கொடுக்கிறோமோ அந்த ஆன்மா உடனடியாக மோட்சத்துக்குச் சென்று விடும்.

அதற்காக நாம் 
பாவ சங்கீர்த்தனம் செய்து, 
முழுப் பூசை கண்டு,  
நற்கருணை அருந்தி, பாப்பரசருடைய கருத்துகளுக்காக செபிக்க வேண்டும்.

உத்தரிக்கிற ஆன்மாக்கள் நமக்காக செபிக்கலாம்.

ஆனால் தங்களுக்காக செபிக்க முடியாது.

நாம் நமக்காகவும் செபிக்கலாம்.

அவர்களுக்காகவும் செபிக்கலாம்.

அவர்களுக்காகச் செபிப்பது நமது பிறர் சிநேகக் கடமை.''

"நமது பாவங்களுக்காக நாம் பூமியில் பரிகாரம் செய்ய முடியாதா?"

"முடியும். செய்ய வேண்டும். நோன்பு இருப்பது, 
ஒறுத்தல் முயற்சிகள் செய்வது, 
நமக்கு ஏற்படும் நோய்நொடிகளையும், துன்பங்களையும் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொள்வது போன்றவற்றால் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.

யாராவது நம்மைத் திட்டினால் பதிலுக்குத் திட்டாமல் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொள்ளலாமே.

பலதுளி பெறு வெள்ளம். நிமிடத்துக்கு நிமிடம் சிறு ஒறுத்தல் முயற்சிகள் செய்யலாமே.

தின் பண்டங்களைக் குறைப்பதே ஒறுத்தல் முயற்சிதான்.

சிறு சிறு மனவல்லப செபங்களைச் சொல்லி பரிகாரமாக ஒப்புக் கொடுக்கலாம்.

இயேசுவே இரட்சியும்.
இயேசுவே இரக்கமாக இரும்.
அருள் நிறை மரியே வாழ்க.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லலாமே.

செபம் சொல்வோம், 
தினம் செபமாலை சொல்வோம்.
பாவத்துக்காகப் பரிகாரம் செய்வோம்.

உலகிலேயே உத்தரித்து விட்டால் இறந்தவுடன் மோட்சம் தான்."

லூர்து செல்வம்.


Wednesday, October 30, 2024

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். (மத்தேயு நற்செய்தி 5:9)

 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். 
(மத்தேயு நற்செய்தி 5:9)

தாயைப்‌போல் பிள்ளை என்பார்கள்.

நாம் நம்மைப் படைப்பால் பெற்ற தந்தையின் பிள்ளைகள்.

நமது தந்தை சமாதானத்தின் தேவன்.

ஆகவே நாம் நமது சமாதானமான வாழ்வினால் நமது  விண்ணகத் தந்தையைப் பிரதிபலிக்க வேண்டும்..

சமாதானமாக வாழ்வது எப்படி?

நாம் பாவமில்லாமல் இறையன்புடன் வாழும் போது இறைவனோடு சமாதானமாக வாழ்கிறோம்.

பிறரன்புடன் பிறருக்கு உதவி செய்து வாழும்போது நாம் பிறரோடு சமாதானமாக வாழ்கிறோம்.

சமாதான வாழ்வுக்கு அன்பு அடிப்படை.

அன்பு இருக்கும் இடத்தில் பாவம் இருக்காது.

அன்பு இருக்கும் இடத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது.

சமாதான வாழ்வை இரண்டு நோக்கிலிருந்து பார்ப்போம்.

1. சமாதானமாக வாழ்வது.
(Living peacefully)
2. சமாதானம் செய்வது.
(Making peace)

1.சமாதானமாக வாழ்வது.

நாம் பிறரை அன்பு செய்து, அவர்களை ஏற்றுக் கொண்டு,
அவர்களைப் புரிந்து கொண்டு, அவர்களோடு சண்டை சச்சரவு எதுவும் செய்யாமல் வாழும் போது நாம் சமாதானமாக வாழ்கிறோம்.

நம்மால் சமாதானத்துக்கு எந்த இடையூறும் வராது.

நாம் தேவை இல்லாமல் மற்றவர்களுடைய உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்.

நம்மால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.

மற்றவர்களோடு அன்போடு பேசுவோம், ‌கோபமாகப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பேசாமல் அமைதியாக இருப்போம்.

கோபப்பட நேர்ந்தால் மன்னிப்புக் கேட்போம்.

மற்றவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர்கள் கேட்காமலேயே உதவி செய்வோம்.

விண்ணுலகை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் நாம் பெறவிருக்கும் 
பேரின்பத்தை மற்றவர்களும் பெற வேண்டும் என்ற பிறரன்பு நோக்குடன் அவர்களையும் நம்மோடு வர அழைப்போம்.

நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அன்பு இயேசுவை‌ அவர்களுக்கும் கொடுப்போம்.

சீமோன் இயேசுவுக்குச் சிலுவையைச் சுமக்க உதவியது போல நாமும் அவர்களுக்கு உதவுவோம்.

அன்னை மரியாள் சிலுவையைச் சுமந்து கொண்டிருந்த தன் மகனுக்கு ஆறுதல் கூறியது போல நாமும் மற்றவர்களுடைய துன்ப வேளையில் ஆறுதல் கூறுவோம்.

2. சமாதானம் செய்வது.

நாம் காரணமாக இல்லாமல் மற்றவர்கள் நம்மோடு பேசாமல் இருந்தாலும்,

ஏதோ காரணத்துக்காக நம்மோடு கோபப்பட்டு விட்டு சென்று விட்டாலும் 

நாமாகச் சென்று சமாதானம் செய்வது நல்ல கிறிஸ்தவனுக்கு அழகு.

கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தது நாம்.

ஆனால் நம்மோடு சமாதானம் செய்து கொள்ள,

அவருடைய சமாதானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள,

சர்வ வல்லப கடவுள் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து மனிதனாகப் பிறந்து நாம் செய்ய வேண்டிய பாவப் பரிகாரத்தை அவரே செய்தார்.

 நாம் பாவ மன்னிப்பு பெறுவதற்காக நாம் கேட்காமலேயே பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி நாம் நமது அயலான் நமக்கு விரோதமாகச் செய்த குற்றத்தை நாமாக மன்னித்து‌ அவனோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

நாம் நமது அயலான் செய்த குற்றத்தை நாமாக மன்னித்தால் தான் கடவுள் நாம் செய்த பாவத்தை மன்னிப்பார்.

 நமது அயலானை மன்னித்தால்தான் நாம் நமது கடவுளுக்கு ஏற்ற பிள்ளைகள்.

ஆகவே நமது சுய நலனுக்காகவாவது நமது அயலானை மன்னிக்க வேண்டும்.

சமாதானம் இருவர் ஒருவரோடு ஒருவர் செய்யும் அன்பை மையமாகக் கொண்டது.

நாம் நேசிப்பது போல நேசிக்கப்படவும் வேண்டும்.

ஆகவே மற்றவர்கள் நம்மை நேசிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.

நற்செய்தி சமாதானத்தின் செய்தி.

ஆகவே உலகெங்கும் சமாதானத்தைப் பரப்ப நம்மால் இயன்றதைச் செய்வோம்.

சமாதானமே உருவான கடவுளின் மக்களாக வாழ்வோம், இன்றும், என்றென்றும்.

லூர்து செல்வம்.

"எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே! (லூக்கா நற்செய்தி 13:34)

"எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே! 
(லூக்கா நற்செய்தி 13:34)

எருசலேம் யூத மக்கள் வாழ்வின் மையம்.

அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை பாஸ்கா விழா கொண்டாட எருசலேமுக்கு வந்து விடுவார்கள்.

எருசலேமில் தான் அவர்களுடைய ஆலயம் இருந்தது.

எருசலேம் ஆலயத்தில்தான் குழந்தை இயேசு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப் பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் கலிலேயாவிலுள்ள நசரேத்தில் வாழ்ந்த திருக்குடும்பம் யூதேயாவிலுள்ள எருசலேம் ஆலயத்துக்கு வருவார்கள்.

இயேசுவுக்கு 12 வயது நடக்கும் போது அவர்கள் வந்ததையும், ஆலயத்தில் தங்கி விட்ட இயேசுவை சூசையும் மரியாளும் மூன்று நாட்கள் தேடியதை நாம் அறிவோம்.

அறிவது மட்டுமல்ல செபமாலை சொல்லும் போதெல்லாம் அதைத் தியானிக்கிறோம்.

இயேசு எருசலேமை மிகவும் நேசித்தார்.

இயேசு பெத்லகேமில் பிறந்து, நசரேத்தில் வளர்ந்தாலும் அவரது வாழ்வின் மையம் எருசலேம் தான்.

தீர்க்கத் தரிசிகளில் சிலர் கொல்லப்பட்டது எருசலேமில் தான்.

"எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே!" என்கிறார்.

1.யோயாதாவின் மகன் செக்கரியா கல்லால் எறிந்து கொல்லப்பட்டார். 
(2 குறிப்பேடு 24:21)

2.செமாயாவின் மகன் உரியா.
அரசர் அவரை வாளுக்கு இரையாக்கி, அவருடைய சடலத்தைப் பொதுமக்கள் கல்லறையில் வீசி எறிந்தார். "
(எரேமியா 26:23)

3.இறை மகன் இயேசு நாடெங்கும் பயணித்து நற்செய்தி அறிவித்துவிட்டு 
யூதர்களால் கொல்லப் படுவதற்காகவே எருசலேமுக்கு வந்தார்.

4.திருச்சபையின் துவக்க காலத்தில் புனித சின்னப்பர் எருசலேமில் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார்.
(திருத்தூதர் பணிகள் 7:59)

ஆகவேதான் இயேசு,

''எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே!" என்கிறார்"

இந்த வசனத்தை வாசித்து தியானித்தபோது மனதில் ஒரு எண்ணம் உதித்தது.

ஒவ்வொரு நிகழ்வையும் இரண்டு கோணங்களிலிருந்து பார்க்கலாம்.

பார்க்கும் கோணத்துக்கு ஏற்ப தோன்றும் எண்ணங்கள் மாறுபடும்.

மரணத்தை உலக நோக்கில் பார்த்தால் அது வாழ்வின் இறுதி.

ஆன்மீக நோக்கில் பார்த்தால் அது நித்திய பேரின்ப வாழ்வின் ஆரம்பம்.

இயேசுவின் சிலுவை மரணம் யூதர்களின் பார்வையில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை.

ஆனால் நமது ஆன்மீகப் பார்வையில் பாவிகளாகிய நமக்கு மீட்பு அளிக்க இறை மகன் செய்த தியாகம்.

இயேசுவின் மரணத்தால் நாம் உயிர் பெற்றோம்.

இயேசு தனது மரணத்தால் நமது ஆன்மீக மரணத்தை வென்றார்.

எருசலேம் நகரம் இறை வாக்கினர்களை விண்ணக பேரின்ப வாழ்வுக்குள் 
அனுப்பிய நகரம்.

இன்றைய காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கத்தோலிக்கத் திருச்சபை நமது எருசலேம்.

திருச்சபைக்கு வெளியே உள்ளோர் சிற்றின்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் போது 

நாம் பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு துன்பக் கடலில் ஆழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் சிற்றின்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருப்பவர்களுக்கு கரையில் பேரிடர் வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது.

சிலுவையின் பாரத்தால் ஆழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது.

திருச்சபையின் எதிரிகள் நாம் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இயேசுவுக்குச் செய்ததை நமக்கும் செய்யலாம்.

நாமும் அவரைப் போலவே 
"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று கூறிக்கொண்டே 
(லூக்கா நற்செய்தி 23:46)
மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து தந்தையிடம் செல்லலாம்.

 "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" . 
(லூக்கா நற்செய்தி 23:43)
என்ற இயேசுவின் வார்த்தைகள் இப்போதே நமது காதுகளில் ஒலிக்கின்றன.

அன்று இறைவனுக்கான ஆலயம் எருசலேம் நகரில் இருந்தது.

இன்று நாமே எருசலேம் தான். இறைவனின் ஆலயம் நமக்குள்ளே இருக்கிறது.

ஆலயத்தில் தான் இறைவனோடு வாழ்ந்த கொண்டிருக்கிறோம்.

விரைவில் புதிய எருசலேம் ஆலயத்தில் இருப்போம், என்றென்றும் இறைவனோடு.

லூர்து செல்வம்.

Monday, October 28, 2024

"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். லூக்கா நற்செய்தி 13:24

( "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். 
லூக்கா நற்செய்தி 13:24)

எல்லா விதமான வாழ்க்கை வசதிகளும் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டிடத்திற்குள் செல்லத் தீர்மானித்து வந்து கட்டிடத்தின் முன் நிற்கிறோம்.

ஆனால் அதன் வாயில் நாம் வந்த வேகத்தில் உள்ளே நுழைவது மாதிரி இல்லை.

நமது உடலின் உயர அகல அளவுக்கு வாயில் இல்லை.

பக்கவாட்டில் திரும்பி உடலின் இரு பக்கங்களும் நிலைக்கம்பில் உரசும்படி நெளிந்து வளைந்து,

அதனால் ஏற்படும் உடல் வலியைத் தாங்கிக் கொண்டுதான் உள்ளே செல்ல முடியும்.

பக்கத்தில் ஒரு கட்டிடம் இருக்கிறது.

அதன் உள்ளே எந்த விதமான வாழ்க்கை வசதியும் இல்லை.

உட்கார ஒரு பலகை கூட இல்லை.

ஆனால் வாயில் அகலமாக கவர்ச்சிகரமாக உள்ளது.

நடனமாடிக்கொண்டே உள்ளே செல்லலாம்.

குறுகிய வாயில் உள்ள வீடு வசதிகள் நிறைந்த வீடு.

அகலமான வாசல் உள்ள வீடு எந்த வசதியும் இல்லாதது.

கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை வசதிகள் உள்ள வீடுதான் வேண்டும் என்று குறுகிய வாயில் வழியாக உள்ளே நுழைவீர்களா?

வாழ்க்கை வசதிகள் எதுவும் தேவையில்லை, ஜாலியாக நுழைந்தால் போதும் என்று அகலமான வாயில் வழியே நுழைவீர்களா?

ஒன்றுமில்லாமல் இருந்த நாம் கடவுளால் உருப்பெற்று உலகில் நுழைந்தோம்.

எதற்காக?

வாழ்வதற்காக.

எப்படி வாழ்வதற்காக?

நாம் தேர்வு செய்வதற்காக நம்முன் இரண்டு நோக்கங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன.

1. நித்திய பேரின்ப வாழ்வு.
2. நித்திய பேரிடர் வாழ்வு.

இந்த இரண்டு நோக்கங்களில் எதாவது ஒன்றை நோக்கி பயணிக்க வேண்டும்.

நாம் தேர்வு செய்யும் நோக்கத்திற்கு ஏற்ப நமது உலக வாழ்க்கை முறை இருக்கும்.

நமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் தான் நமது நோக்கத்தை அடைய முடியும்.

நித்திய பேரின்ப வாழ்வைத் தேர்வு செய்வோர் வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும்?


நித்திய பேரின்ப வாழ்வென்னும் வீட்டின் வாயில் மிகவும் இடுக்கமானது.

அங்கு செல்லும் வழியும் முட்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையைப் போன்றது.

விண்ணகம் செல்லும் ஆன்மீக வழியில் நடப்போர் தங்கள் விருப்பப்படி நடக்க முடியாது.

கடவுளின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு இயேசு வகுத்துக் கொடுத்த ஒழுக்க நெறிகளின் படி நடக்க வேண்டும்.

உடலை ஒறுத்து நடக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அதை இன்பமாக ஏற்று மகிழ்ச்சியுடன் நடக்க வேண்டும்.

சிலுவைக்குப் பின்புதான் உயிர்ப்பு, இது இயேசு காட்டிய வழி.

சிலுவைப் பாதை தான் மீட்பின் பாதை.

இயேசுவோடு பேரின்ப வீட்டில் வாழ விரும்புகிறவர்கள் சிலுவையைச் சுமந்து தான் ஆக வேண்டும்.

சிலுவை கனமாக இருக்குமே!

கனமானதாகத்தான் இருக்கும்.‌ ஆனால் விண்ணகத்தில் அனுபவிக்கவிருக்கும் பேரின்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிலுவையின் கனம் இலேசாக இருக்கும்.

சிலுவை வாழ்வு தற்காலிகமானது,
பேரின்ப வாழ்வு நிரந்தரமானது.

நித்திய பேரிடர் வாழ்வை நோக்கமாகக் கொண்டவர்கள் எப்படி வாழ வேண்டும்?

வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.

கட்டளைகளை மீறலாம்.
சிற்றின்பத்தில் மிதக்கலாம்.

பேரிடர் வாழ்வு வீட்டுக்கான பாதையும் அகலமானது, வாயிலும் அகலமானது.

அனுபவிக்கவிருக்கும் பேரிடரும் மிகுதியானது.

சிற்றின்ப வாழ்வு தற்காலிகமானது, பேரிடர் நிரந்தரமானது.

பேரின்ப வாழ்வைத் தேர்ந்தெடுப்போம்.

இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயல்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, October 27, 2024

அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது" என்றார். (லூக்கா நற்செய்தி 13:21)

 அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது" என்றார். 
(லூக்கா நற்செய்தி 13:21)

அரிசியை நனைய வைத்து, உரலில் இட்டு ஆட்டி மாவாக்குகிறோம்,

எதற்கு?

இட்லி அவிக்க அல்லது தோசை சுட.

ஆட்டிய மாவைக் கொண்டு உடனே இட்லி அவிக்கலாமா?

மாவு புளித்த பின்புதான் இட்லி அவிக்கலாம் அல்லது தோசை சுடலாம் 


மாவு புளிக்க என்ன செய்ய வேண்டும்?

அரைத்த மாவோடு கொஞ்சம் புளிப்பு மாவு சேர்க்க வேண்டும்.

சேர்க்கப்பட்ட புளிப்பு மாவு எல்லா மாவையும் புளிக்க வைத்து விடும்,

பாலில்‌ ஊற்றப்பட்ட உறைமோர் 
பாலைத் தயிராக்குவது போல.

இயேசு ஏன் இறையாட்சியை புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகிறார்?

இறையாட்சிக்கும் புளிப்பு மாவுக்கும் என்ன சம்பந்தம்?

இறையாட்சியை ஏற்றுக் கொண்ட  சிலர் உலகில் வாழும் போது முழு உலகமும் இறையாட்சியை ஏற்றுக் கொள்ளும்.

தோமையார், சவேரியார், அருளானந்தர், வீரமாமுனிவர், அன்னைத் தெரசா போன்ற சில இறையாட்சியினர் இந்தியாவுக்கு வந்தார்கள்.

கோடிக்கணக்கானோர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

காலம் வரும், அப்போது இந்தியர் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறுவர்.

நாம் புளிப்பு மாவாகச் செயல்பட வேண்டும்.

இறையாட்சியின் வளர்ச்சி  மெதுவானதாக இருக்கலாம். 
 ஆனால், இறுதியில் முழு பூமியையும் நிரப்பி விடும்.

ஒவ்வொரு கிறிஸ்தவரும் இயேசுவின் போதகங்களை வாழ்வதன் மூலம் புளிப்பு மாவாகச் செயல்பட வேண்டும்.

இறையாட்சியின் வளர்ச்சியில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு  உண்டு.

நாம் பார்வையாளர்கள் அல்ல, வளர்ச்சியில் பங்கேற்பவர்கள்.

இயேசுவின் போதகங்கள் மிகவும் வல்லமை வாய்ந்தவை.

 இயேசு அனைத்துலக அரசர்.
அவர் உலகெங்கும் இருப்பதால் அவரது அரசும் உலகெங்கும் இருக்கிறது.

ஆனாலும் அவரை அரசராக ஏற்றுக் கொள்ளாத லௌகீகவாதிகளும் உலகில் இருக்கிறார்கள்.

நமது வாழ்வைப் பார்த்து அவர்கள் ஆன்மீகவாதிகளாக மாற வேண்டும்.

புளிப்பு மாவு செயல்படுவது போல நாமும் செயல்படுவோம்.

 "விண்ணகத் தந்தையே, உமது ஆட்சி உலகெங்கும் வருக."

என்கிற விண்ணப்பத்தை தந்தை ஏற்றுக் கொள்வார்.

லூர்து செல்வம்

Saturday, October 26, 2024

அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். (லூக்கா நற்செய்தி 6:12)

அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். 
(லூக்கா நற்செய்தி 6:12)

இந்த இறை வாக்கைத் தியானிக்க ஆரம்பிக்கும் போது மனதில் சில கேள்விகள் எழுகின்றன.

இவற்றுக்கான பதிலை மனிதர்களால் சுயமாக அறிந்து கொள்ள முடியாது.

தியானிக்கும் நாம் அளவுள்ள மனிதர்கள்.

அளவுள்ள மனிதர்களால் அளவில்லாத கடவுளைப் பற்றி எப்படி முழுமையாக அறிய முடியும்?

முழுமையாக அறிய முயல்வது கடல் முழுவதையும் கரண்டியால் அள்ள முயல்வதற்குச் சமம்.

ஆனாலும் செய்ய முடியாததையும் செய்ய முயற்சிப்பது மனித இயல்பு.

 எழும் கேள்விகள் 
1. இயேசு கடவுள். அவரே அவரோடு எப்படி செபித்தார்?

2.அவர் ஏன் செபிக்க வேண்டும்?

தியானிப்போம்.

இயேசு இறைமகன்.

முழுமையாக கடவுள். முழுமையாக மனிதன்.

செபம் என்றால் இறைவனோடு ஒன்றித்திருப்பது.

இறை மகனும், இறைத் தந்தையும், தூய ஆவியும் நித்திய காலமும் ஒருவருள் ஓருவராக ஒன்றித்திருக்கும் ஒரே கடவுள்.

அப்படியானால் தம திரித்துவத்தின் வாழ்வே நித்திய செப வாழ்வுதான்.

தம திரித்துவம் - ஒரே கடவுள், மூன்று ஆட்கள்.

இறை மகன் - ஒரு ஆள், இரண்டு சுபாவங்கள்.


தேவ சுபாவத்தில் அளவில்லாத இறை மகன்  அளவுள்ள கன்னி மரியின் வயிற்றில் மனித உரு எடுத்தார்.

மரியாள் மனிதனின் தாயா?
கடவுளின் தாயா?

கடவுளின் தாய், ஏனெனில் கடவுள்தான் அவள் வயிற்றில் மனு உரு எடுத்துப் பிறந்தார் .

மரியாளிடமிருந்து கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

இயேசுவுக்கு சுபாவங்கள் இரண்டு, ஆனால் ஆள் ஒன்று.

ஆளைப் பிரிக்க முடியாது.

இறைமகன் மனித சுபாவத்தில் பாடுபட்டு மரித்தார்.

பாவத்தைத் தவிர மற்ற எல்லா மனிதப் பண்புகளும் அவரிடம் இருந்தன.

பிறக்கும் போது அன்னை மரியின் கன்னிமைக்குப் பழுது ஏற்படாதவாறு பிறந்தார்.

 கண்ணாடிக்கு பழுது ஏற்படாமல் ஒளி அதன் வழியே வருவதுபோல் இயேசு பிறந்தார்.

பிரசவ வேதனை அனுபவிக்காத ஒரே பெண் அன்னை மரியாள் மட்டுமே.

மனிதனாகப் பிறந்த இறைமகன் மனிதனாக  உலகில் வாழ்ந்தார்.

பசித்தது, உணவு உட்கொண்டார்.
வளர்ந்தார்.
செபித்தார்.
துன்பங்களை அனுபவித்தார்.
மரணமும் அடைந்தார்

அவரது உலக வாழ்வின் போது அவர் செய்த ஒவ்வொரு செயலையும் நமக்கு முன் மாதிரிகையாக இருக்கும் படி செய்தார்.

அவரது செபமும் நமக்கு முன்மாதிரியான செயல்தான்.

அவரது வாழ்வே செபமாக இருக்கும் போது ஏன் நற்செய்தி ஆசிரியர் அவர் இரவெல்லாம் செபித்ததாக எழுதுகிறார்?

அதுவும் நமக்கு முன் மாதிரிகை காட்டவே.

இயேசு இரவெல்லாம் செபித்து விட்டு 

"விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்."
(லூக்கா நற்செய்தி 6:13)

திருத்தூதர்களைத் தேர்வு செய்யுமுன் செபித்தார்.

நாமும் முக்கியமான வேலைகளை செபத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற நற்செய்தியை செயல் மூலம் போதித்தார்.

அவர் சொல் மூலம் போதித்த அனைத்தையும் வாழ்ந்து காட்டினார்.

உதாரணமாக:

போதனை:
"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."
(லூக்கா நற்செய்தி 6:20)

சாதனை:
அவர் ஒரு ஏழைக் கன்னியின் வயிற்றில் கருவுற்று மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

"இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்."
(மத்தேயு நற்செய்தி 8:20)


போதனை;
"உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."
(லூக்கா நற்செய்தி 6:28)

சாதனை:
"மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள். 

அப்போது (இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்.) 
(லூக்கா நற்செய்தி 23:33,34)

இயேசு சாதித்ததைப் போதித்தார்.

போதித்ததைச் சாதித்தார்.

நமது வாழ்விலும் போதனையும் சாதனையும் ஒன்றாக இருக்க வேண்டும்.

இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி நமது ஒவ்வொரு செயலையும் செபத்தோடு ஆரம்பிப்போம்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஒவ்வொரு நாளையும் ஆரம்பித்து 

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நாள் முழுவதும் வாழ்ந்து,


தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் இரவில் தூங்கச் செல்வோம்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் மரணிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

தந்தை, மகன், தூய ஆவியோடு ஒன்றித்து நித்திய காலமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, October 25, 2024

இயேசு அவரைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், "ரபூணி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்றார். (மாற்கு நற்செய்தி 10:51)

 இயேசு அவரைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், "ரபூணி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்றார். 
(மாற்கு நற்செய்தி 10:51)

பார்வையற்ற ஒருவர் "இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று சப்தமாக, உருக்கமாகச் செபித்தார்.

இதயத்திலிருந்து வந்த உருக்கமான செபத்தை ஏற்றுக் கொண்ட இயேசு,

"உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்

அவர் "ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்றார். 

'மீண்டும்' என்ற வார்த்தையிலிருந்து அவர் பார்வை உள்ளவராக இருந்து அதை இழந்தவர் எனத் தெரிகிறது.

இயேசு அவரிடம், "நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார்.

 உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, இயேசுவைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். 

இறை வசனத்தை‌ நமது ஆன்மீக வளர்ச்சியை மையமாக வைத்து தியானிப்போம்.

வசனத்தை மட்டும் ஆராய்வது நமது நோக்கமாக இருக்கக் கூடாது.

உணவு என்பதற்காக நாம் அதை உண்பதில்லை. உடல் வளர்ச்சிக்காக உண்கிறோம்.

இறைவாக்கு நமது ஆன்மீக உணவு.

தினமும் பைபிள் வாசிக்க வேண்டும் என்பதற்காக வாசிக்கக் கூடாது.

வாசித்ததை நமது ஆன்மீக வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும் யோசிக்க வேண்டும்.

"வாசி, யோசி, விசுவசி."

ஏற்கனவே பார்வையோடு இருந்த ஒருவன் தனது பார்வையை இழக்கிறான்.

அதாவது பார்வையால் அவன் அனுபவித்த அத்தனை நன்மைகளையும் இழக்கிறான்.

மீண்டும் பழைய அனுபவத்தைப் பெறுவதற்காக மீண்டும் பார்வை பெற விரும்புகிறான்.

நாசரேத்தூர் இயேசுவைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறான்.

அவரைச் சந்திக்க ஆசையோடு இருந்திருக்கிறான்.


தான் உட்கார்ந்திருந்த   வழியே இயேசு போகிறார் என்று அவர் கேள்விப்பட்டவுடன், 

"இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று வேண்டுகிறான். 

விசுவாசத்தோடு வேண்டுகிறான்.

இயேசுவும் அவனது விசுவாசம் நிறைந்த வேண்டுதலை ஏற்று அவனுக்குப் பார்வை அளிக்கிறார்.

அவன் அவரைப் பின்பற்றுகிறான்.

ஆன்மீக ரீதியாக எந்த விடயத்தில் நாம் அவனைப் போல் பார்வையை இழந்தவர்களாக இருக்கிறோம்?

நாம் திருமுழுக்குப் பெறும்போது தேவ இஷ்டப் பிரசாதத்தைப் பெற்று இறை உறவைப் பெறுகிறோம்.

இங்கு அருள் பற்றி ஒரு முக்கியமான விளக்கத்தைக் குறிப்பிட வேண்டும்.

இறை அருள் இரு வகை.

1.தேவ இஷ்டப் பிரசாதம்.
(Sanctifying grace)

2.உதவி வரப்பிரசாதம்.
(Actual grace)

நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக இறைவனோடு நமக்கிருந்த உறவை முறித்துக் கொண்டோம்.

ஆனால் கடவுள் மாறாதவர். அவரது உறவு மாறாதிருக்கிறது.

நாம் திருமுழுக்குப் பெற்றபோது நாம் பெற்ற அருள் தேவ இஷ்டப் பிரசாதம்.

இதற்குப் பொருத்தமான தூய தமிழ் வார்த்தை கிடைக்குமா என்று சிந்தித்துப் பார்த்தேன்.

 நாம்  இழந்த இறை உறவை தேவ இஷ்டப் பிரசாதத்தைப் பெறும் போது திரும்பப் பெற்றோம்.

ஆகவே அதை "இறை உறவு அருள்" என்று அழைக்கலாமா?

யாருக்காவது வேறு தூய  தமிழ் வார்த்தை கிடைத்தால் சொல்லுங்கள்.


இந்தக் கட்டுரையில் "இறை உறவு அருள்"  என்றே அழைக்கிறேன்.

திருமுழுக்கின்போது நாம் பெற்ற இறை உறவு அருள்தான் நமக்கு இறை உறவை மீட்டுத் தந்தது.

இந்த அருள் இல்லாமல் நாம் மீட்புப் பெற முடியாது.

இந்த அருள் இல்லாமல் நம்மால் விண்ணகம் செல்ல முடியாது.

இந்த அருள் இல்லாமல் நாம் திவ்ய நற்கருணை உட்கொள்ளக் கூடாது.

இந்த அருள் இல்லாமல் நாம் திருமண ஒப்பந்தம் செய்யக்கூடாது.

இந்த அருள் இருந்தால் ஆன்மா உயிரோடு இருக்கும்.

நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத் தின்று பாவம் செய்ததால் அவர்களது ஆன்மா ஆன்மீக உயிரை இழந்தது.


"ஆனால் தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்; என்று கடவுள் சொன்னார்", என்றாள்."
(தொடக்கநூல் 3:3)

சென்மம் பாவத்தோடு பிறந்த நாம் ஆன்மீக உயிர் இல்லாமல் பிறந்தோம்.

திரு முழுக்கின்போது ஆன்மீக உயிரைப் பெற்றோம்.

இறை உறவு அருளோடு வாழும் வாழ்வுதான் கிறித்தவ வாழ்வு.

இறை உறவு அருளோடு செய்யும் நற்செயல்களுக்குத் தான் நமக்கு விண்ணகத்தில் சன்மானம் கிடைக்கும்.

எப்படி பார்வை உள்ளோர் மட்டும் உலகை அனுபவிக்க முடியுமோ

அப்படியே இறை உறவு அருள் உள்ளவர்கள்தான் ஆன்மீக வாழ்வை அனுபவிக்க முடியும்.

ஆகவே திருமுழுக்கின்போது பெற்ற அருளை இழக்காமல் வாழ வேண்டும்.

கர்மப் பாவம் இருவகை.

1. அற்பப் பாவம்.
2. சாவான பாவம்.

அற்பப்பாவம் பரிசுத்தத் தனத்தின்மீது சிறிது மாசு, அழுக்கு படியச் செய்யும், ஆனால் ஆன்மீக உயிருக்கு ஆபத்து இல்லை.

அற்பப்பாவத்தோடு இறப்பவர்கள் உத்தரிக்கிறத் தலம் சென்று, ஆன்மா மாசு நீங்கி பரிசுத்தம் அடைந்த பிறகு விண்ணகம் செல்வார்கள்.

சாவான பாவம் இறை உறவு அருளைக் கொன்று விடும். ஆன்மா மரணமடையும்.

எப்படி பார்வை அற்றவர்கள் உலக வாழ்வை அனுபவிக்க முடியாதோ

அப்படியே சாவான பாவ நிலையில் உள்ளவர்கள் ஆன்மீக வாழ்வை அனுபவிக்க முடியாது, நற்செயலே செய்ய முடியாது, சாவான பாவ நிலையில் இறந்தால் விண்ணகம் செல்ல முடியாது.

மனித பவகீனத்தினால் சாவான பாவத்தில் விழ நேர்ந்தால் உடனே பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்று விட வேண்டும்.

பார்வையை இழந்தவன் இயேசுவை அழைத்தது போல சாவான பாவம் செய்தவர்கள் இயேசுவின் பிரதிநிதியான குருவானவரை அணுகிப் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பாவ மன்னிப்புப் பெற்று இயேசுவின் ஆன்மீக வழியில் விண்ணகம் நோக்கி நடக்க வேண்டும்.

மறுபடியும் சாவான பாவத்தில் விழாமல் கவனமாய் வாழ வேண்டும்.

ஆன்மாவைப் பரிசுத்தமாகக் காப்பாற்ற வேண்டும்.

இடைவிடாத செப வாழ்வு அதற்கு உதவியாக இருக்கும்.

நாம் திருமுழுக்கு பெற்றபோது இறை உறவு அருளைப் பெற்றோம்.

அன்னை மரியாள் இறைவனின் விசேச வரத்தினால் இறை உறவு அருளோடு உற்பவித்தாள்.

உற்பவிக்கும்போது இருந்த பரிசுத்த நிலையில் இறுதிவரை வாழ்ந்தாள்.

உதவி வரப்பிரசாதம்.

"இது கடவுளின்  உதவி அருள். 

இது நாம் நற்செயல்களைச் செய்யத் தூண்டுகிறது.

 பாவத்தைத் தவிர்க்கவும் உதவுகிறது. 

இது அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வினாடியும் கடவுள் 
தனது உதவி அருளைக் கொண்டு நம்மை வழி நடத்துகிறார்.

உதவி அருள் காலையில் படுக்கையில் இருந்து எழ உதவுகிறது,

நம்மை செபம் செய்யத் தூண்டுகிறது ,

சோதனைகளை வெல்ல உதவுகிறது,

நாம் சாவான பாவத்தில் விழுந்து விட்டால் மனஸ்தாபப்பட்டு, பாவ சங்கீர்த்தனம் செய்யத் தூண்டுகிறது.

நல்லதைச் சிந்திக்க, நல்லதைப் பேச, நல்லதைச் செய்ய உதவுகிறது.

நிறைய உதவி அருளைத் தரும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால்,

இறை உறவு அருள் நமது ஆன்மாவை வாழச் செய்கிறது.

உதவி அருள் ஆன்மா உற்சாகமாக செயல் புரிய உதவுகிறது.

இறை உறவு அருள் நிலையில் பரிசுத்தமாக வாழ்வோம்.

உதவி அருள் உதவியுடன் நற்செயல்கள் புரிந்து வாழ்வோம்.

ஒவ்வொரு இறைவாக்கையும் 

வாசித்து,

யோசித்து,

விசுவசித்து 

வாழ்வோம்.

நிலை வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்.

Thursday, October 24, 2024

தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். (லூக்கா நற்செய்தி 13:8)

 தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். 
(லூக்கா நற்செய்தி 13:8)

அத்தி மரம் காய்க்காமல் வெற்று‌ மரமாக நிற்பதைப் பார்த்த‌ அதன் உரிமையாளர் அதை வெட்டி விட நினைக்கிறார்.

காய்க்காத மரத்தை வளர்த்து என்ன பயன் என்று நினைக்கிறார்.

ஆனால் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருப்பவர் அதற்கு ஒரு ஆண்டு கால அவகாசம் கேட்கிறார்.

அதற்குப் புதிதாக உரம் போட்டு நீர்ப் பாய்ச்சினால் அதற்குக் காய்க்க வாய்ப்பு இருக்கிறது என்பது அவர் நம்பிக்கை.

இது உவமை.

உவமை குறிக்கும் உண்மை?

அத்தி மரம் மனிதன், 
உரிமையாளர் கடவுள்.

கடவுள் மனிதனைப் பரிசுத்தமானவனாகப் படைத்தார்.

ஆனால் மனிதன் ஆரம்ப காலத்திலேயே பாவத்தினால் தனது பரிசுத்தத்தனத்தை இழந்தான்.

கடவுள் நினைத்திருந்தால் அவன் பாவம் செய்தவுடனே அவனை அழித்திருக்கலாம்.

ஆனால் அவரே அவனுக்குக் கால அவகாசம் கொடுக்கத் தீர்மானித்தார்.

அவனைத் திருத்தும் வேலையை அவரது ஒரே மகனிடம் ஒப்படைத்தார்.

இறைமகன் மனிதனை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து மனிதன் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்தார்.

தனது அருள்வரங்களால் மனிதனை மீட்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.

அத்தி மரத்தைக் கவனிப்பவர் அதைச்‌‌ சுற்றிக் கொத்தி, உரமிட்டு,  நீர்பாய்ச்சியதைப் போல 

இயேசு சிலுவையால் நம்மைச் சுற்றிக் கொத்தி, 

தனது உடலையே நமக்கு ஆன்மீக உணவாகத் தந்து,

நமக்கு தனது அருள் வரங்களால் நீர்பாய்ச்சி‌ வருகிறார்.

அவரையே உணவாக உண்ணும் நாம் ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

இறைவனையே உணவாக உண்ணும் நாம்  நற்செயல்களாகிய கனிகளைக் காய்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

அத்தி மரமாகிய நாம் ஆன்மீக ரீதியாக பூத்துக் காய்த்துப் பயன் தர வேண்டும் என்பதற்காகத் தான் 

இயேசு ஏழு தேவத்திரவிய அனுமானங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.

அத்தி மரம் உரத்தைச் சாப்பிட்டால் தான் கனி தரும்.

நாம் தேவத்திரவிய அனுமானங்களைப் பெற்றால்தான் நாம் கடவுளின் அருள் வரங்களைப் பெற முடியும்.

நாம் பிறந்த உடனேயே நமக்கு ஞானஸ்நானம் கொடுத்து விட்டார்கள்.

ஞானஸ்நானம் பெற்ற போது நாம் அடைந்த பரிசுத்த் தனம் கர்மப் பாவத்தால் மாசு அடையும் போது அதை நீக்க பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஒழுங்காகப் பெறுகிறோமா?

பாவமற்ற பரிசுத்த நிலையில் ஒழுங்கான‌ தயாரிப்போடு தினமும், அல்லது ஞாயிறு திருப்பலியின் போதாவது இயேசுவின் உடலை உணவாகப் பெறுகிறோமா?

நற்கருணை நாதரோடு நமது ஆன்மீக வளர்ச்சி குறித்து உரையாடுகிறோமா?

ஒவ்வொரு வினாடியும் இறைவனின் பிரசன்னத்தில் வாழ்கிறோமா?

நமது ஒவ்வொரு நற்செயலையும் நமது ஆன்மீக மீட்புக்காக ஒப்புக் கொடுக்கிறோமா?

நமது துன்பங்களை சிலுவையாக ஏற்றுக் கொண்டு அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கிறோமா?

நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கோள்கிறோமா?

ஆண்டவர் நமக்குத் தந்திருக்கும் கால அவகாசத்தை இவற்றுக்காக ஒழுங்காகப் பயன்படுத்தினால் அவர் விரும்பும் ஆன்மீகக் கனிகளை நம்மால் தர முடியும்.

இயேசு உலகுக்கு வந்ததன் நோக்கம் நிறைவேறும்.

சிந்திப்போம்,

செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, October 23, 2024

நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். (லூக்கா நற்செய்தி 12:58)

நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். 
(லூக்கா நற்செய்தி 12:58)

இவ்வுலகில் நாம் இருப்பதன் நோக்கம் சமாதான வாழ்வு.

நாம் தனிப் பிறவி அல்ல, சமூகப்  பிறவி.

கடவுள் மனிதனைக் குடும்பமாகப் படைத்தார்.

குடும்பம் ஒரு சிறிய சமூகம், குறைந்த பட்சம் கணவன் மனைவி இருவர் இருப்பர்.

ஆதாம் ஏவாள் ஆகிய ஒரு சிறிய சமூகத்திலிருந்து தான் மனுக்குலமாகிய பெரிய சமூகம் பிறந்தது.

ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

பரிசுத்த தம திரித்துவத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று சமாதானம்.

மூவருக்கும் ஒரே சித்தம், ஒரே ஞானம்,  ஒரே தேவ சுபாவம்.

நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம்.

கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் சமாதானமாக வாழ வேண்டுமானால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, 

ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு 

ஒற்றுமையுடன், அதாவது, சமாதானமாக வாழ வேண்டும்.

எதிர் எதிர்ப் பண்புகளை உடைய இருவர் ஒரு குடும்பமாக இணையும் போது கருத்து வேறுபாடுகள் காரணமாக குடும்ப சமாதானத்திற்குப் பங்கம் ஏற்படும்.

அவர்கள் வாழ்நாள் முழுவதும் சமாதானம் இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டே வாழ்ந்தால் 

வாழ்வின் இறுதியில் நடுவராக வரும் கடவுள் முன்னிலையில் எப்படிக் கணக்குக் கொடுப்பார்கள்?

விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அதனால் தான் நமது ஆண்டவர்

"வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்."

என்று சொல்கிறார்.

வாழும்போதே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் 

இறக்கும்போது சமாதானமாக இறப்பார்கள்.

சமாதானத்தின் தேவன் அவர்களின் சமாதான வாழ்வுக்குப் பரிசாக நித்திய பேரின்ப வாழ்வைக் கொடுப்பார்.

கடவுள் ஒருவர். மூன்று ஆட்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஏனெனில் மூவருக்கும் ஒரே சித்தம்.

ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.

Each and every human person is unique.

மனிதனர்களுள் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு.

கருத்துவேறுபாடுகள் உள்ள மனிதர்கள் எப்படி இறைவனின் சாயலில் சமாதானமாக வாழ முடியும்?

ஆனால் இயேசுவின் எதிர்பார்ப்பு அதுதான்.

"ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் "
(மத்தேயு நற்செய்தி 5:48)
என்று ஆண்டவரே கூறியிருக்கிறார்.

தந்தையைப் போல் இருந்தால் தம திரித்துவத்தைப் போல்தான் இருப்போம்.

இயேசுவின் ஆசையை எப்படி நிறைவேற்றுவது?

நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக் கொண்டு வாழலாமே.


அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; 
தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. 
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்.
(1 கொரிந்தியர் 13:6,7)

இத்தகைய அன்பு உள்ளவர்கள் எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு வாழ்வர்.

தங்கள் வேறுபாடுகளைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள்.

சமாதானமாக வாழ்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

மனித பலகீனம் காரணமாக சமாதானக் குறைவு ஏற்பட்டு, சண்டைகள் ஏற்பட்டாலும் அதை நீடிக்க விட மாட்டார்கள்.

மனித இனம் பல அடிப்படைகளில் பிரிந்து கிடக்கிறது.

இனம், மொழி, கலாச்சாரம், மதம், வாழும் இடம், அரசியல் போன்ற அநேக அடிப்படைகளில் மனித இனம் பிரிந்து கிடக்கிறது.

இதனால் மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு.

பிரச்சினைகள் ஒற்றுமையின்மைக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் காரணமாக இருக்கலாம்.

பிரச்சினைகளுக்கு சமாதானமான முறையில் தீர்வு காண வேண்டும்.

சண்டைகள் ஏற்பட்டால் அவற்றுக்கு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும்.

அவற்றை நீடிக்க விடக்கூடாது.

வாழ்பவர்கள் சமாதானத்தோடு வாழ்ந்து சமாதானத்தோடு மரிக்க வேண்டும்.

மரித்த பின் சமாதானத்தின் தேவன் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வைப் பரிசாக அளிப்பார்.

நாம் அனைவரும் விண்ணகப் பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம்.

விண்ணகம் சமாதானத்தின் இருப்பிடம்.

ஆகவே சண்டை போடாமல் நடப்போம்.

சண்டைகள் ஏற்பட்டால் விண்ணக வாயிலுக்குப் போகுமுன் சமாதானம் ஆகி விடுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, October 22, 2024

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். (லூக்கா நற்செய்தி 12:51)

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். 
(லூக்கா நற்செய்தி 12:51)

சமாதானம் X பிளவு, 
எதிர்ப் பதங்கள்.

எப்படி ஒளி இருக்கும் இடத்தில் இருட்டு இருக்க முடியாதோ

அவ்வாறே 

சமாதானம் இருக்கும் இடத்தில் பிளவு இருக்க முடியாது.

இயேசு சமாதானத்தின் தேவன்.

பரிசுத்த தம திரித்துவத்தின் முக்கியமான பண்பு சமாதானம்,

மூன்று ஆட்களும் , ஒருவருள் ஒருவராய் ஒன்றித்து, ஒரே கடவுளாக வாழ்கிறார்கள்.

மூவொரு கடவுள்.

கடவுள் மனிதர்களைத் தன் சாயலில் படைத்தார்.

தனது சமாதானத்தையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

பாவம் அற்ற நிலையில் தன்னோடும், அவர்கள் ஒருவரோடொருவரும் சமாதானத்தோடு வாழும் நிலையில் படைத்தார்.

ஆனால் மனிதர்கள் பாவத்தினால் தங்கள் சமாதான நிலையை இழந்தார்கள்.

ஆனால் கடவுள் மாறாதவர்.

சமாதானம் அவரது இயல்பு.

மனிதர்கள் இழந்த சமாதானத்தை மீட்டுக் கொடுப்பதற்காக மனிதனாகப் பிறந்தார்.

இறைமகன் மனுமகனாகப் பிறந்தது மனிதர்களைச் சமாதான உறவோடு வாழ வைப்பதற்காக.

அதனால் தான் அவர் பிறந்த அன்று வான தூதர்கள்,

"பூவுலகில் நல்மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக" என்று பாடினார்கள்.

நல்ல மனதினர் என்றால் பாவம் இல்லாத மனதினர்.

இயேசு பிறந்ததன் நோக்கமே மனிதர்களின் பாவங்களை மன்னித்து அவர்களைச் சமாதானமாக வாழ வைப்பதுதான்.

மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்தவே இயேசு வந்தார்.

அப்படியானால் இயேசு

"மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்." ‌என்று ஏன் சொல்கிறார்?

ஒரு‌ குடும்பத்தில் உள்ள பத்து பேருக்கும் கொரோனாக் காய்சல் என்று வைத்துக் கொள்வோம்.

காய்ச்சல் விடயத்தில் ஒன்று போல் இருக்கிறார்கள்.

மருத்துவர் வந்து அவர்கள் குணமடையத் தேவையான மாத்திரைகளைக் குடும்பத் தலைவரிடம் கொடுத்துவிட்டுப் போகிறார்.

ஐந்து நாட்கள் கழித்து வந்து பார்க்கிறார்.

ஐவருக்குக் காய்ச்சல் குணமாகி விட்டது.

மருந்தைச் சரியாகச் சாப்பிடாததால் ஐவருக்குக் காய்ச்சல் நீடிக்கிறது.


பக்கத்து வீட்டுக்காரர் மருத்துவரிடம்,

"என்ன காரியமாக அந்த வீட்டுக்குச் சென்றீர்கள்?"
என்று கேட்கிறார்.

''ஒற்றுமையாக இருந்த குடும்பத்தைப் பிரித்து விடச் சென்றேன்."

"புரியவில்லை."

"நான் போகுமுன் காய்ச்சல் விடயத்தில் ஒற்றுமையாக இருந்தார்கள்.

இப்போது ஐவர் ஐவராகப் பிரிந்து விட்டார்கள்.

சுகமாக ஐவர், சுகமில்லாமல் ஐவர்."

"ஏன்?"

"மாத்திரைகளை ஒழுங்காகச்  சாப்பிட்ட ஐவர் குணமானார்கள்.

ஒழுங்காகச் சாப்பிடாத ஐவர் குணம் பெறவில்லை."

குழந்தை இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க‌ அன்னை மரியாளும், சூசையப்பரும் கோவிலுக்குச் சென்றபோது, 

சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, 

அதன் தாயாகிய மரியாவை நோக்கி, 

"இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்."
(லூக்கா நற்செய்தி 2:34)
என்றார்.

இயேசு உலகுக்கு வந்தது மக்களின் எழுச்சிக்காகத்தான்,
வீழ்ச்சிக்காக அல்ல.

ஆனால் இயேசு வருமுன் பாவத்தினால் மக்கள் அனைவரும் வீழ்ந்து கிடந்தனர்.

இயேசு வந்தபின் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எழுந்தனர், ஏற்றுக் கொள்ளாதவர்கள் வீழ்ந்தே கிடந்தனர்.

அன்று சிமியோன் சொன்னதைத்தான் இன்று இயேசு வேறு வார்த்தைகளில் சொல்கிறார்.

இயேசுவின் வருகைக்கு முன்னர் மனித குலமே சமாதானம் இல்லாத நிலையில் இருந்தது.

இயேசு தனது பாடுகளாலும், மரணத்தாலும் அதை மீட்டபின் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டு அதன் படி வாழ்ந்தவர்கள் மீட்பின் பயனை அடைந்தார்கள்,

அதாவது, இறைவனோடு சமாதானம் அடைந்தார்கள்,

அதன்படி வாழாதவர்கள் பிளவு நிலையிலேயே இருக்கிறார்கள்.

இயேசு சமாதானத்தை ஏற்படுத்தினார்.

பிளவுக்கு அவர் பொறுபல்ல.

 இயேசுவின் சிலுவை மரணம், பாவத்திற்கும் தூய்மைக்கும் இடையே ஒரு பெரிய பிளவை உருவாக்கியது.

 அது மனிதர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்தது.

 இயேசுவை நம்புபவர்கள் மற்றும் நம்பாதவர்கள்.

இயேசுவை பின்பற்றுவது என்பது எளிதான பாதை அல்ல.

லௌகீக வாழ்க்கையிலிருந்து பிரிந்து வந்தால்தான் இயேசுவின் போதனைப்படி வாழ முடியும்.

ஆன்மீக வாழ்வுக்கும் லௌகீக வாழ்வுக்கும் இடையில் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

ஆன்மீக வாழ்வையும் லௌகீக வாழ்வையும் சேர்த்து வாழ முடியாது.

நாம் லௌகீக வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தால் அதை முற்றிலும் துறந்து விட்டு ஆன்மீக வாழ்வு வாழ ஆரம்பிப்போம்.

லௌகீக வாழ்க்கையிலிருந்து நம்மைப் பிரித்துத் தன்னோடு சேர்த்துக் கொள்ளவே இயேசு உலகுக்கு வந்தார்.

உலகிலிருந்து பிரிவோம்.

இயேசுவோடு இணைவோம்.

லூர்து செல்வம்.

Monday, October 21, 2024

மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும். (லூக்கா நற்செய்தி 12:48)

மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும். 
(லூக்கா நற்செய்தி 12:48)

கடவுள் எல்லா படைப்புகளையும் ஒரே மாதிரி படைக்கவில்லை.

ஒவ்வொன்றும் எப்படி இயங்க வேண்டும் என்பது அவர் திட்டமோ அப்படிப் படைத்திருக்கிறார்.

மனிதன் தவிர மற்ற எல்லா பிராணிகளும் அவருடைய திட்டப்படிதான் செயல்படுகின்றன.

மனிதனுக்குள்ள சிந்தனை செயல் சுதந்திரம் அவற்றுக்கு இல்லை.

ஆனால் இறைவன் திட்டப்படி செயல்பட்டால் மனிதனுக்குக் கிடைக்கும் நித்திய பேரின்ப வாழ்வு அவற்றுக்குக் கிடையாது.

ஒவ்வொரு மனிதனும் சில திறமைகளோடு படைக்கப் படுகிறான்.

திறமைகள் மனிதனுக்கு மனிதன் மாறும்.

சிலர் அதிகத் திறமைகளுடன் படைக்கப் படுகின்றனர்,

சிலர் குறைந்த திறமைகளுடன் படைக்கப் படுகின்றனர்.

அதிகத் திறமைகளுடன் படைக்கப் படுவோரிடமிருந்து கடவுள் அதிகம் எதிர்பார்க்கிறார்

குறைந்த திறமைகளுடன் படைக்கப் படுவோரிடமிருந்து குறைவாக எதிர்பார்க்கிறார்.

அவரவர் அவரவருக்குக் கிடைத்த திறமைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

அதற்கேற்ற சன்மானம் கிடைக்கும்.

ஒருவருக்கு மிகுந்த பொருட்செல்வத்தைக் கடவுள் ஒப்படைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் மிகுந்த அளவில் பிறர் உதவிப் பணிகள் செய்ய வேண்டும்.

கிடைத்த செல்வத்தைத் தனியாக அனுபவிக்கக் கூடாது.

கடவுள் ஒருவரிடம் அவரது தேவைகளுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்திருப்பதே அவர் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

எப்படித் தனது படைப்புத் தொழிலை தான் படைத்த குடும்பங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறாறோ 

அதேபோல்தான் தனது கொடுக்கும் வேலையையும் தனது படைப்புகளோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நமக்கு உணவு தரும் வேலையைத் தாவரங்களோடு,

நீர் தரும் வேலையை மழையோடு,

வெளிச்சம் தரும் வேலையை சூரியனோடு,

நாம் மூச்சு விட உதவும் வேலையைக் காற்றோடு.....

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கைப் பொருட்கள் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருக்கின்றன.

கடமையை ஒழுங்காகச் செய்யாதவன் மனிதன் மட்டும் தான்.

நாம் இந்தக் குறை இல்லாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.

கடவுளால் நமக்குத் தரப்பட்டிருப்பது நமக்காகப் பயன்படுத்த மட்டுமல்ல,

நமது அயலானோடு பகிர்ந்து கொள்ளவும் தான்.

நம்மிடம் இருப்பதை அயலானோடு பகிர்ந்து வாழும்போது நாம் இறைவன் செய்வதையே செய்கிறோம். 

இறைவன் தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். 

ஆகவே தான் நாம் அவரது சாயலில் இருக்கிறோம். 

நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து , இறைவன் நமக்குத் தந்த அவரது சாயலைப் பழுதின்றி காப்பாற்றுவோம்.

இருப்பதைப் பகிர்ந்து வாழ்வோம்,

 இறைவனின் சாயலில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, October 20, 2024

தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். (லூக்கா நற்செய்தி 12:38)

தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். 
(லூக்கா நற்செய்தி 12:38) 

நமது வாழ்க்கையின் இரண்டு நாட்கள் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது.

நாம் எப்போது பிறப்போம் என்று தெரிந்து கொள்ள நாம் பிறக்குமுன் நாம் இல்லை.

இப்போது நாம் இருக்கிறோம்.

நாம் எப்போது இறப்போம் என்று நமக்குத் தெரியாது.

நமது இறப்பின் நாளை இயேசுவின் வருகை நாள் என்று கருதுகிறோம்.

இயேசு நம்மை அழைக்க எப்போது வருவார் என்று நமக்குத் தெரியாது.

அடுத்த வினாடியாகக்கூட இருக்கலாம்.

எதிர்காலத்தில் எதிர்பாராத நேரத்தில் இயேசு வருவார்.

அடுத்த வருடமா, அடுத்த மாதமா, அடுத்த வாரமா, அடுத்த நாளா, அடுத்த நிமிடத்திலா, அடுத்த வினாடியா?

தெரியாது.

ஒன்று மட்டும் நமக்குத் தெரியும். நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று நமக்குத்‌ தெரியும்.

"நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். " 
(லூக்கா நற்செய்தி 12:40)
என்று நம் ஆண்டவரே கூறியிருக்கிறார்.

எப்படி ஆயத்தமாக இருக்க வேண்டும்?

இயேசுவின் வருகை நேரம் நமது இவ்வுலக வாழ்வின் இறுதி நேரம்.

இயேசு வரும்போது நாம் இவ்வுலக வாழ்வை முடித்து விட்டு அவரோடு விண்ணகம் செல்லத் தயாராக இருக்க வேண்டும்.

அதாவது பாவம் இல்லாமல் இருக்க வேண்டும்.

எப்போதும் பாவம் இல்லாமல் இருக்க வேண்டும்.

இயேசு வரும்போது நாம் விண்ணகம் செல்லத் தயாராக இருக்க வேண்டும்.

எந்த நேரமும் வரலாம் என்பதால் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.

அது மட்டும் போதாது.

நமது ஆன்மா புண்ணியங்களால் நிறைந்திருக்க வேண்டும்.

நமது புண்ணியங்களின் அளவுக்கு ஏற்ப தான் நமது நித்திய பேரின்பத்தின் அளவு இருக்கும்.

ஆற்றிலிருந்து எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

நமது  பாத்திரத்தின் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.

ஆகவே தண்ணீர் எடுத்து வர பெரிய பாத்திரத்தைக் கொண்டு போக வேண்டும்.

ஒரு சிறிய தம்ளர் கொண்டு போனால் அது நிறைய தண்ணீர் கொண்டு வரலாம்.


ஒரு பெரிய குடம் கொண்டு போனால் அது நிறைய தண்ணீர் கொண்டு வரலாம்.

பாத்திரத்தின் கொள்ளளவுக்க்கு தண்ணீரின் அளவு இருக்கும்.

நமது புண்ணிய வாழ்வின் அளவுதான் நமது ஆன்மாவின் கொள்ளளவும் இருக்கும்.

ஆகவே நமது வாழ்நாளில் எவ்வளவுக்கு எவ்வளவு புண்ணியங்கள் செய்கிறோமோ

அவ்வளவுக்கு அவ்வளவு நாம் அனுபவிக்கும் பேரின்பத்தின் அளவும் இருக்கும்.

ஆனால் நமது வாழ்நாளில் பாவத்தை முற்றிலும் அகற்றிவிட்டு நமது ஆன்மாவைப் புண்ணியங்களால் நிறப்ப வேண்டும்.

ஆன்மாவின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்.

நாம் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப நமது புண்ணியங்களின் அளவு இருக்கும்.

ஆகவே ஒவ்வொரு வினாடியும் நற்செயல்கள் செய்து கொண்டேயிருப்போம்.

ஒவ்வொரு வினாடியும் இயேசுவை வரவேற்கத் தயாராக இருப்போம்.

இதைத் தியானிக்கும் போது இதோடு நெருங்கிய தொடர்புடைய இன்னொரு சிந்தனையையும் பற்றித் தியானித்தால் நலமாக இருக்கும்.

சிலருடைய மரணம் எதிர் பார்த்தும் இருக்கும், எதிர் பாராமலும் இருக்கும்.

அது எப்படி?

ஒருவர் சுகமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் சுகமடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் மருத்துவ மனைக்குச் சென்றிருப்பார்.

ஆனாலும் எதிர்மறையாகவும் நடக்கலாம்.

அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள் உடல் நல மருத்துவருடன் மட்டுமல்ல

ஆன்மீக மருத்துவருடனும் தொடர்பில் இருக்க வேண்டும்.

உடல் நலத்தை விட ஆன்மாவின் நலன்தான் முக்கியம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டும்.

பங்குக் குருதான் அவருக்கு ஆன்மீக மருத்துவர்.

அவரோடு தொடர்பு கொண்டு வாரம் ஒருமுறையாவது நற்கருணை நாதரை ஆன்மீக மருந்தாகத் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

தகுந்த தயாரிப்புடன் நற்கருணை நாதரை ஆன்மீக உணவாகவும் மருந்தாகவும் உட்கொண்டு வந்தால் 

உடல்நலத்தைப் பற்றிக் கவலைப் பட வேண்டிய அவசியமேயில்லை.

உலக மருந்து வேலை செய்யாவிட்டாலும் ஆன்மா நன்கு குணமாகி விண்ணக நிலை வாழ்வுக்குத் தயாராகிவிடும்.

நமக்கு இவ்வுலக வாழ்வை விட நிலை வாழ்வே முக்கியம்.

லூர்து செல்வம்.

Saturday, October 19, 2024

பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்றார். (லூக்கா நற்செய்தி 12:15)

 பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்றார். 
(லூக்கா நற்செய்தி 12:15)

புகை வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வாக்கியம் ஞாபகத்தில் இருக்கும்.

"Less luggage, more comfort."

வசதியாக பயணம் செய்ய வேண்டுமா? சுமைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

சுமையின்றி புகை வண்டியில் ஏறுவதும் எளிது, பயணிப்பதும் எளிது, இறங்குவதும் எளிது.

சுமையோடு இரவில் பயணிப்பவர்கள் அதைத் திருடர்களிடமிருந்து காப்பாற்ற விடிய விடிய தூங்காமல் உட்கார்ந்திருக்க வேண்டும்.

கையில் சுமையில்லாவிட்டால் கவலை இல்லாமல் தூங்கலாம்.

புகைவண்டிப் பயணம் நமது ஆன்மீகப் பயணத்துக்கும் பொருந்தும்.

பொருள் மீது பற்றுள்ளவர்கள் அதை ஈட்டுவதிலும், காப்பதிலும் தங்கள் முழு நேரத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கும்.

அருளை ஈட்ட நேரம் கிடைக்காது.

அருளில்லார்க்கு விண்ணுலகம் இல்லை.

"எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்."

ஆசை இறைவன் கொடுத்த வரம்.

பேராசை சாத்தானின் கொடை.

இவ்வுலகில் வாழ குறைந்த பட்சம் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவை விரும்புவது ஆசை.

இது நல்லது.

ஆனால் அளவுக்கு மீறி ஆசைப் படுவது பேராசை.

பேராசை பாவம்.


பேராசை என்பது வெறும் பொருள் சேர்க்கும் ஆசையை மட்டுமல்லாமல்,

 எல்லாவற்றையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசையையும் குறிக்கும்.

அரசியல்வாதியைப் பாருங்கள், பேராசைக்காரன் எப்படி இருப்பான் என்பது புரியும்.

நூற்றுக்கணக்கில் ஈட்டுபவர்கள் ஏதோ சாப்பிட்டும், சாப்பிடாமலும் வாழ்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் ஈட்டுபவர்கள் ஏதோ சாப்பிட்டு வாழ்கிறார்கள்.

லட்சக்கணக்கில் ஈட்டுபவர்கள் வயிறார சாப்பிட்டு வாழ்கிறார்கள்.

ஆனால் சம்பளமும் கிம்பளமும் 
லஞ்சமும் வாங்கி கோடிக்கணக்கில் மிதக்கும் அரசியல்வாதிகள் நாட்டையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய பேராசைக் காரர்களால் எப்படி அருளை ஈட்ட முடியும்?

அளவுக்கு மீறி ஈட்ட முடியாவிட்டாலும் ஈட்ட ஆசைப் படுவதே பேராசைதான்.

பேராசை ஆன்மீக வாழ்வுக்கு‌ எதிரானது.

ஆகவே பேராசைக்கு இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருப்போம்.

"மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது."

உடைமை வெறும் பணத்தை மட்டுமல்ல, நம்மிடம் இருக்கும் எல்லா வகையான பொருட்களையும் குறிக்கும்.

வாழ்வு வெறும் உடல் வாழ்க்கையை மட்டுமல்ல, ஆன்மீக வாழ்க்கையையும் குறிக்கும்.

பணம் உள்ளிட்ட உடமைகள் நமது உடல் வாழ்க்கைக்குப் பயன்படும்.

ஆன்மீக வாழ்க்கைக்கு நேரடியாகப் பயன்படாது.

நாம் இந்த உலகில் உடல் சார்ந்த வாழ்வு வாழ்வதே நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருப்பதற்காகத்தான்.

நமது ஆன்மாவுக்கு உதவிகரமாக இருப்பதற்காகத்தான் நமக்கு உடலையே கடவுள் தந்திருக்கிறார்.

ஆன்மீக வாழ்வுக்கு உதவாத வகையில் நாம் உலக வாழ்வு வாழ்ந்தால்  வாழ்வதே வீண்.

நாம் நியாயமான முறையில் ஈட்டும் உலகப் பொருட்களை பிறர் அன்புப் பணியில் செலவழித்தால் 

உலகப் பொருட்கள் ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருக்கும்.

பொருளின் உதவியால் நற்செயல் புரிவது அருள் ஈட்டும் ஆன்மீகம்.

பிறருக்கு உதவுவதற்காக லஞ்சம் வாங்குவது பாவம்.

வாங்கிய லஞ்சத்தை கோவில் உண்டியலில் போட்டால் வாங்கிய பாவம் தீர்ந்து விடாது.

பாவ மன்னிப்பு கேட்குமுன் லஞ்சத்தைத் தந்தவரிடமே திரும்பக் கொடுத்து விட வேண்டும்.

நம்மிடம் மிகுந்த பொருட்கள் இருப்பது  ஆன்மீக வாழ்வுக்கு எதிரானதா?

இருக்கிற பொருட்கள் மீது உள்ள பற்றுதான் ஆன்மீக வாழ்வுக்கு எதிரானது.

பொருட்பற்று இருப்பவரிடம் அருட்பற்று இருக்க முடியாது.

கடவுள் நமக்குப் பொருளைத் தந்திருப்பதே அதை நற்செயல் புரிய பயன்படுத்தவே.

பொருள் மீது பற்று உள்ளவன் அதை யாருக்கும் கொடுக்க மாட்டான்.

கொடுக்காமல் நற்செயல் புரிய முடியாது.

தருவதில்தான் அன்பு இருக்கிறது.

உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

உடைமைகளைப் பிறருக்குக் கொடுப்பதால் வாழ்வு வரும்.

பேராசைக்கு இடங்கொடுக்காமல் 

 நம்மிடம் இருப்பதைப் பிறருக்கு கொடுப்பதன் மூலம் நிலைவாழ்வை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

Friday, October 18, 2024

அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர். (மாற்கு நற்செய்தி 10:37)

அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர். 
(மாற்கு நற்செய்தி 10:37)

இயேசுவின் சீடர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்டார்கள்,

 ஆனால் அவர்களில் 
 தவறான பொருளில் ஏற்றுக் கொண்டவர்களும். இருந்தார்கள்.

யூதர்களை அடிமைத் தனத்திலிருந்து மீட்பார் என்பது அவர்களின் நம்பிக்கை.

நம்பிக்கையில் தவறில்லை, இயேசு மக்களை அடிமைத் தனத்திலிருந்து மீட்கத்தான் பிறந்தார்.

ஆனால்... என்ன ஆனால்?

உணவு உண்பவனுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும், உண்மை.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உணவு என்ற பெயரில் விற்கப்படுபவைதான் நமது அநேக நோய்களுக்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவு என்ற வார்த்தையின் உண்மையான பொருளைப் புரிந்து கொள்ளாததன் விளைவுதான் நோய்கள்.

அவ்வாறு தான் அடிமைத்தனம் என்ற வார்த்தையின் சரியான பொருளைப் புரிந்து கொள்ளாததன் விளைவுதான் இயேசுவை மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளாதது.

இயேசு மக்களை அடிமைத் தனத்திலிருந்து மீட்கத்தான் பிறந்தார்.

ஆனால் எந்த அடிமைத்தனம்?

ஆன்மீக அடிமைத்தனம்,
பாவத்தின் அடிமைத்தனம்.

நமது முதல் பெற்றோர் சாத்தானின் சூழ்ச்சியால் பாவத்துக்கு அடிமைகள் ஆனார்கள்.

பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து,

அதாவது, 

சாத்தானின் அடிமைத் தனத்திலிருந்து

மனிதரை (யூதர்களை மட்டுமல்ல) மீட்கவே இறைமகன் மனுவுரு எடுத்தார்.

ஆனால்,

அது யூதர்கள் வேற்று நாட்டவர்களால் ஆளப்பட்டு வந்த காலம்.

ஆகவே யூதர்களை அடிமைத் தனத்திலிருந்து மீட்க மெசியா வருவார் என்ற‌ தீர்க்கத் தரிசனத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள்.

அரசியல் அடிமைத் தனத்திலிருந்து மீட்க வருவார் என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள்.

இயேசுவின் காலத்தில் ரோமையர்கள் யூதர்களை ஆண்டு வந்தார்கள்.

இயேசு ரோமையர்களின் அடிமைத் தனத்திலிருந்து யூதர்களை மீட்டு தனி அரசு அமைத்து அரசாள்வார் என்று அவருடைய சீடர்கள் கூட எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அதன் விளைவு தான்

"நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்"

என்ற யாக்கோபு யோவான் ஆகியோருடைய வேண்டுகோள்.

இயேசு உண்மையைப் புரிய வைப்பதற்காக அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?" என்று கேட்டார். 

அவர்கள் ''இயலும்" என்று சொன்னாலும் உண்மையைப் புரிந்து சொன்னார்களா என்று தெரியவில்லை.

பாடுகளின் போது யோவானைத் தவிர மற்ற அனைவரும் அவரை விட்டு ஓடி விட்டார்கள்.

"அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்."
(மாற்கு நற்செய்தி 14:50)

அதுமட்டுமல்ல, " மரித்த மூன்றாம் நாள் உயிர்ப்பேன்" என்று அவர் அவர்களிடம் கூறியிருந்தும் அவர் உயிர்ப்பார் 
என்று யாரும் நம்பவில்லை.

மாறாக யூதர்களுக்குப் பயந்து ஒரு வீட்டில் ஒழிந்து கொண்டார்கள்.

மூன்று ஆண்டுகள் இயேசுவிடம் பயிற்சி பெற்றிருந்தும் அவர்களுக்கு உறுதியான விசுவாசம் ஏற்படவில்லை.

தூய ஆவியின் வருகைக்குப் பிறகுதான் அவர்களுடைய விசுவாசம் உறுதியடைந்தது.

நமது விசுவாசம் எப்படி இருக்கிறது?

நமக்கு மெசியா யார்?

நாமும் யோவானையும் யாக்கோபையும் மாதிரி தான் நடந்து கொள்கிறோமா?

நாம் பைபிள் வசனங்களை வாசிப்பது வசனங்களை மையமாக வைத்து நம்மைப் பற்றித் தியானிப்பதற்காக.

அவர்கள் இருவரும் இயேசுவை அரசியல் விடுதலை வீரராக எண்ணி அவருடைய அரசில் உயர்ந்த பதவி கேட்டார்கள்.

நாம் தினமும் இயேசுவை நோக்கி செபிக்கிறோம், வீட்டிலும், கோவிலிலும்.

அடிக்கடி திவ்ய நற்கருணை நாதரைச் சந்தித்து செபிக்கிறோம்.

திருப்பலிக்கு வரும்போது நாமும் செபிக்கிறோம், பூசைக்கருத்து கொடுத்து குருவானவரையும் நமக்காக செபிக்கச் சொல்கிறோம்.

பாவத்திலிருந்து விடுதலை பெற செபிக்கிறோமா?

உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற செபிக்கிறோமா?

ஆன்மீக நன்மைகளுக்காக செபிக்கிறோமா?

உடல் சார்ந்த நன்மைகளுக்காக செபிக்கிறோமா?

தேர்வில் வெற்றி பெற, வேலை கிடைக்க, சம்பள உயர்வு கிடைக்க, கடன் தொல்லைகள் முடிவுக்கு வர, திருமணம் நடக்க, குழந்தை பிறக்க.... போன்றவை உடல் சார்ந்த நன்மைகள்.

பாவ மன்னிப்புப் பெற, பரிசுத்தத்தனத்தில் வளர, தூய ஆவியின் வரங்களுக்காக, விசுவாசம்  நம்பிக்கை இறையன்பு ஆகிய புண்ணியங்களில் வளர..... போன்றவை ஆன்மா சார்ந்த நன்மைகள்.

நமது செபத்தில் எந்த நன்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

உடல் சார்ந்த நன்மைகள் இவ்வுலகில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆன்மா சார்ந்த நன்மைகள் நித்திய பேரின்ப வாழ்வை ஈட்டும்.

இயேசு உலகுக்கு வந்தது நமது இவ்வுலக வாழ்வை மகிழ்ச்சிப் படுத்தவா?

அல்லது 

நம்மை‌ நித்திய பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்லவா?

துன்பங்கள் வந்தால் அவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டுகிறோமா?

அல்லது 

அவற்றை ஏற்று நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்கிறோமா?

சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் பிறந்தது இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வதற்காக அல்ல.

விண்ணகத்தில் நிரந்தரமாக வாழ்வதற்காக.

ஆன்மீக நலன்களுக்காக வேண்டுவோம்,

இவ்வுலக நன்மைகள் நாம் கேட்காமலேயே கிடைக்கும்.


"ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத்தேயு நற்செய்தி 6:33)

ஆண்டவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்.

லூர்து செல்வம்.

Thursday, October 17, 2024

"நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார். (லூக்கா நற்செய்தி 12:8)

 "நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார். 
(லூக்கா நற்செய்தி 12:8)

இயேசுவை அறிதல்,‌ வாழ்தல், அறிவித்தல்- மூன்றும் சேர்ந்தது தான் கிறிஸ்தவ வாழ்வு.

நற்செய்தி வழியாக இயேசுவை அறிய வேண்டும்,

நற்செய்தியை வாழ்வது மூலமாக இயேசுவை வாழ வேண்டும்,

நற்செய்தியை அறிவித்தல் மூலமாக இயேசுவை அறிவிக்க வேண்டும்.‌

உலக மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக இயேசுவை மீட்பர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வெறுமனே சொல்லால் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது,

வாழ்க்கையாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி நாம் ஏற்றுக் கொண்டால் இயேசுவும் மோட்சத்தில் கடவுளின் சம்மனசுக்கள் முன்னால் நம்மை அவருடைய சீடர்களாக ஏற்றுக் கொள்வார்.

சுருக்கமாகச் சொல்வதானால் 

 மக்கள் முன்னால் இயேசுவை ஏற்றுக் கொள்பவர்ளை அவர் தனது சம்மனசுக்களின் முன்னால் ஏற்றுக் கொள்வார்.

வசனத்தின் அடிப்படையில் நமது வாழ்க்கையை மூன்று நிலைகளாகப் பிரித்து தியானிப்போம்.

1. ஏற்றுக் கொள்ளுதல்.

2. கொடுத்தல்.

3. ஏற்றுக் கொள்ளப் படுதல்.

1.ஏற்றுக் கொள்ளுதல்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் எங்கு இருந்தோம்?

எங்குமே இல்லை.

நாமே இல்லை.
We were nothing.

இல்லாத நம்மை இருப்பவர்கள் ஆக்கியவர் கடவுள்.

முதலில் நம்மை ஆக்கியவரை நாம் ஆக்கியவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர்தான் நமக்கு எல்லாம்.
அவரின்றி நாம் இல்லை.

நாம் நமக்குச் சொந்தமில்லை, நம்மைப் படைத்தவருக்குச் சொந்தம்.

இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் நமக்குச் சொந்தம், நாம் அவருக்குச் சொந்தம்.

அவருக்குச் சொந்தமான நம்மை அவரிடமிருந்து பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை. பிரிந்து வர நமக்கே உரிமை இல்லை.

இந்த உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் அவருக்காக வாழ வேண்டும், அவருக்காக மட்டுமே வாழ வேண்டும்.

இந்த உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

எல்லாம் உமக்காக.

எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்,

எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்,

எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும்,

உந்தன் அதிமிக மகிமைக்கே."

இந்த உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவருக்குச் சொந்தமான நாம் அவருக்காக வாழ வேண்டும் என்றால் அதோடு இணைந்திருக்கும் மற்றொன்று உண்மையையும் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் என்ற வார்த்தையால் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களையும் குறிக்கிறோம்,

கர்த்தர் கற்பித்த செபத்தில் 
"எங்கள் தந்தையே" என்பது போல.

படைக்கப்பட்ட அனைவரும் அவருக்குச் சொந்தம்.

இப்போது சொல்லாமலே புரியும், 

அவரை நேசிக்க வேண்டும் என்று சொல்லும் போது அவருக்குச் சொந்தமான அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

கடவுளை நேசிக்கும் போது நம்மையும்,(ஒவ்வொருவரும் அவரவரையும்), நமது பிறரையும் நேசிக்க வேண்டும்.

நான் என்னை நேசிப்பது போல என் அயலானையும் நேசிக்க வேண்டும்.

அப்படியே ஒவ்வொருவரும்.

இறையன்பும் பிறரன்பும் பிரிக்க முடியாதவை.

இறைவனை நேசிப்பவன் நிச்சயம் பிறரையும் நேசிப்பான்.

பிறரை நேசிக்காதவன் இறைவனையும் நேசிக்கவில்லை.

நாம் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

ஒரு ஏழை அவசரமான மருத்துவச் செலவுக்காகக் கொஞ்சம் பணம் கேட்கிறான்.

நம்மிடம் காணிக்கை போடுவதற்காகப் பணம் இருக்கிறது.

அவனிடம் கொடுத்து விட்டால் காணிக்கை போட முடியாது.

உண்மையில் ஏழையின் மூலம் பண உதவி கேட்பவர் கடவுள் தான்.

ஏழைக்கு உதவாமல் பணத்தைக் காணிக்கைப் பெட்டியில் போட்டால் அதைக் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

தீர்ப்பு நாளில் நம்மைப் பார்த்து,

"நான் மருத்துவச் செலவுக்குப் பணம் கேட்டேன், நீ தரவில்லை"

என்பார்.

இறைவனுக்காகப் பிறருக்குச் செய்யும் பணி இறைப்பணி.

இறைவனைத் தந்தையாகவும், பிறரைச் சகோதரர்களாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2. கொடுத்தல்.

ஏற்றுக் கொள்வதோடு நெருங்கிய தொடர்புடையது கொடுத்தல்.

ஏற்றுக் கொள்ளாமல் கொடுக்க முடியாது.

ஏற்றுக் கொள்வதே வாழ்ந்து கொடுப்பதற்காகத்தான்.

நாம் ஏற்றுக் கொண்ட இயேசுவையும், அவருடைய நற்செய்தியையும்‌ அது வரை ஏற்றுக்கொண்டிராத மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இயேசுவை அறியாதவர்களும் அவரை அறிந்து ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

வார்த்தையினாலும், நமது முன்மாதிரிகையான வாழ்க்கையினாலும் இதைச் செய்ய வேண்டும்.

3. ஏற்றுக் கொள்ளப் படுதல்.

இவ்வுலக வாழ்வின் போது நமது முழுநேர வேலையே நாம் இயேசுவை ஏற்றுக் கொள்வதும், அவரை மற்றவர்களுக்குக் கொடுப்பதும்தான்.

இவ்வேலையைச் சிறப்பாகச் செய்தால் இவ்வுலக வாழ்க்கையின் முடிவில் இறைமகன் இயேசு மோட்சவாசிகளின் முன்பாக நம்மை நித்திய பேரின்ப வாழ்வுக்குள் ஏற்றுக் கொள்வார்.

இயேசுவை ஏற்றுக் கொள்வோம்.

அவரை அனைவருக்கும் கொடுப்போம்.

அவரோடு நிலைவாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, October 16, 2024

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். (திருப்பாடல்கள்.145:10)

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 
(திருப்பாடல்கள்.145:10)

இவை இன்று பாட வேண்டிய திருப்பாடல் வரிகள்.

நன்றி உணர்வோடு பாட வேண்டிய வரிகள்.

உருவாக்கப்பட்ட அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனது வல்லமையால் உருவாக்கப்பட்டன.

இறைவன் ஆறாம் நாளில் மனிதனைப் படைக்குமுன் அவனது பயன்பாட்டுக்காக உலகம் உள்ளிட்ட முழு பிரபஞ்சத்தைப் படைத்தார்.

படைப்புகள் அனைத்தும் படைத்தவரின் வல்லமையையும், படைப்புக்குக் காரணமான அன்பையும் பிரதிபலிக்கின்றன.

விழா நாட்களில் நமக்கு வரும் பரிசுகளின் தன்மையை பரிசு அளித்தவரின் தன்மையைத் தீர்மானிக்கிறோம் அல்லவா,

அதைப் போல படைப்புகளின் தன்மையை வைத்து, படைத்தவரின் தன்மையைத் தீர்மானிக்கலாம்.

நாம் தொட்டு உணரக்கூடிய நமது உடலின் அற்புதமான அமைப்பை வைத்தும்,

உடலின் பொறிகள் ஐந்தாயினும் அவை இணைந்து இசைந்து செயல்படும் விதத்தை வைத்தும்

அதைப் படைத்தவரின் அளவிட முடியாத ஞானத்தை யூகித்துக் கொள்ளலாம்.

மனிதன் வாழும் பிரபஞ்சத்தின் உறுப்புகளான சூரிய சந்திர நட்சத்திரங்களுக்கு மனிதனுக்குரிய புத்தி அறிவு இல்லாவிட்டாலும்,

கடவுளால் கொடுக்கப்பட்ட இயற்கை விதிகளையும்,

அவற்றின்படி அணுபிசகாமல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக அவை இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தையும் பார்த்தால் 

எல்லாம் வல்ல இறைவனின் எல்லையற்ற ஞானம் அவற்றில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

இயைற்கை விதிகள்படி இயங்கிக் கொண்டிருப்பதன் மூலம் தங்கள் நன்றி உணர்வைக் கடவுளுக்குக் காட்டுகின்றன.

அவை அறிவற்ற சடப்பொருட்கள்.

அவற்றால் விதிகளை மீற முடியாது என்பது உண்மைதான்.

ஆனால் அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாமே,

அவை இயற்கை விதிகளின்படி இயங்குவது போல நாம் இறைவனின் சித்தப்படி வாழ வேண்டுமென்று!

இறைவனின் சித்தப்படி வாழ்வதன் மூலம் நாம் நம்மைப் படைத்தவருக்கு நமது நன்றி உணர்வைத் தெரிவிக்க வேண்டும்.

உள்ளத்திலிருந்து எழும் வார்த்தைகளால் அவரைப் போற்றுவதோடு நமது நற்செயல்களால் நமது நன்றியை வெளிப்படுத்த வேண்டும்.

இயற்கையின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் மகிமையைக் காணலாம்.

 இறைவனை அன்பு செய்யும்  நாம் அவரைப் போற்றி மகிமைப் படுத்த வேண்டும்.

 இறைவனை நேசிப்பவர்கள் யாருடைய அறிவுரையும் இன்றியே அவரைப் போற்றுவார்கள்.

 தங்கள் வாழ்வில் அவர் செய்து கொண்டு வருகிற நன்மைகளுக்காக அவரைப் புகழ்வார்கள்.

நம்மைப் படைக்குமுன் இயற்கையைப் படைத்ததே அவர் நமக்குச் செய்த முதல் நன்மை.

இங்கு ஒரு முக்கியமான உண்மையைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

நமது நண்பர் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக நமக்குத் தரும் பரிசுப் பொருளை 

அவர் முன்னாலேயே போட்டு உடைத்தால் அவருக்கு எப்படி இருக்கும்?

ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

கடவுள் நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கும் நமது தந்தை.

நம்மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக நாம் பயன்படுத்துவதற்காக அவர் நமக்குத் தந்துள்ள அன்புப் பரிசு தான் நாம் வாழும் உலகம்.

மலைகளும், காடுகளும் , குன்றுகளும், ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும், ஆறுகள் ஓடும் சமவெளிகளும்,  தண்ணீர் தேங்கி நிற்கும் ஊருணிகளும், குளங்களும், குட்டைகளும், ஏரிகளும் உலகை அழகுபடுத்தும் இயைற்கை வளங்கள்.

இயற்கை உலகில் வாழும் நமக்குத் தந்த அன்புப் பரிசு.

நாம் பயன்படுத்துவதற்காகத் தந்த அன்புப் பரிசு.

இந்த பரிசைப் பயன்படுத்துகிறோமா?

அல்லது பாழ் படுத்தி அழிக்கிறோமா?

இயற்கையைப் பயன்படுத்தி வாழ்வதற்குப் பதில் அழித்து வாழ்கிறோம்.

காடுகள் மலைகளின் வளம்.
பருவக்காற்றுகளைத் தடுத்து மழை பெய்யக் காரணமாக இருப்பவை மலைக்காடுகள்.

மரங்களை வெட்டாமல் இயற்கை வளத்தை அனுபவிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும்.ண

மனிதன் இயற்கைக் காடுகளை அழித்து செயற்கையாக தோட்டங்கள் போட்டான்.

இதுதான் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட அழிவுக்குக் காரணம்.


அநேக இடங்களில் பருவ மழை ஒழுங்காகப் பெய்யாமைக்குக்
காடுகள் அழிப்புதான்.

இயற்கையை அழிக்கும் மனிதன் அதனாலே அழிவான்.

இயல்பிலேயே இயற்கை சுத்தமானது.

இயற்கையாக உள்ள சுத்தமான காற்றைச் சுவாசித்துதான் உயிர் வாழ்கிறோம்.

மனிதனால் மாசு படுத்தப்பட்ட காற்றைச் சுவாசிப்பதுதான் நமது அநேக நோய்களுக்குக் காரணம்.

கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுதல், வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலை களிலிருந்தும் வரும் புகை, சாக்கடைகள் ஆகியவற்றால் காற்று மாசுபடுகிறது.

அனைத்து வீடுகளிலும் நாம் அமைத்திருக்கும் septic tanks நிலத்தடிநீர் மாசுபடக் காரணமாக உள்ளன.

இயற்கையை நாம் மாசுபடுத்தினால் அது நம்மை மாசுபடுத்தும்.

இயற்கை அழகை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படிப் பரிசுப் பொருளைப் பார்த்தவுடன் கொடுத்தவர் ஞாபகத்துக்கு வருகிறாரோ  

 அதுபோல இயற்கையைப் பார்த்தவுடன் அதைப் படைத்த இறைவன் ஞாபகத்துக்கு வரவேண்டும்.

இயற்கையைப் படைத்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

எப்போதாவது நாம் சுவாசிக்கும் காற்றைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

இறைவன் படைத்த இயற்கையினால்தான் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் உயிர் வாழும் ஒவ்வொரு வினாடியும் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.

"ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவற்றுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்,

 உம்முடைய அன்பர்களாகிய நாங்கள் உம்மைப் போற்றிப்
புகழ்கின்றோம்."

என்று இறைவனை நன்றியோடு பாடித் துதிப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, October 15, 2024

"ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார். (லூக்கா நற்செய்தி 11:52)

"ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 11:52)

அறிவுக் களஞ்சியம் என்றால் என்ன?

இறைவனைப் பற்றிய அறிவைத் தருகின்ற திருவிவிலியம்.

இறைவன் தீர்க்கக் தரிசிகளின் மூலமாக நமக்கு அறிவித்த நற்செய்திகள் திருவிவிலியத்தில் அடங்கியுள்ளன.

திருவிவிலியம் இறைவனது வார்த்தை.


திருவிவிலியம் நம் வாழ்வின் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைத் தரும் ஒரு அறிவுக் களஞ்சியம் போன்றது.

நாம் மீட்புப் பெற திருவிவிலிய அறிவு இன்றியமையாதது.

திறவுகோல்?

வீட்டிற்குள் செல்ல வேண்டுமென்றால் வீட்டுக் கதவைத் திறக்க வேண்டும்.

கதவைத் திறக்க திறவுகோல் வேண்டும்.

இயேசுவின் காலத்தில் திருவிவிலியம் திருச்சட்ட அறிஞர்கள் கையில் இருந்தது.

அதைத் திறக்க வேண்டிய திறவுகோல் அவர்கள் தான்.

இறைவார்த்தைக்கு அவர்களும் சரியான விளக்கத்தைக் காண்பதுமில்லை, (நீங்களும் நுழைவதில்லை.)

சாதாரண மக்களை சரியான விளக்கத்தைக் அறிய 
விடுவதுமில்லை. (நுழைவோரையும் தடுக்கிறீர்கள்.)

அதை வாசித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்.

மக்களுக்கு சுயமாக எதுவும் தெரியாதாகையால் அவர்கள் கொடுத்ததுதான் விளக்கம்.

அவர்கள் சரியான விளக்கத்தைக் கொடுப்பதுமில்லை,

சாதாரண மக்களைச் சரியான விளக்கத்தைப் பெற விடுவதுமில்லை.

அவர்கள் தங்கள் கடமையைச் செய்யாததால்தான்

இயேசு, "திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு!"

என்று கூறுகிறார்.

ஏன்"நீங்களும் நுழைவதில்லை."
என்கிறார்?

திருச்சட்டங்கள் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டனவோ அதைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை.

சட்டத்தின் எழுத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அதற்கும் விருப்பம் போல் பொருள் கொடுத்தார்கள்.

ஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது என்பது சட்டம்.

ஒரு முறை சீடர்கள் வயல்வெளியில் கதிர்களைக் கொய்து கசக்கியதையே செய்யக்கூடாத வேலை என்றார்கள்.

இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதையே ஓய்வு நாளில் செய்யக்கூடாதது என்றார்கள்.

ஓய்வு நாளின் கடவுளையே ஓய்வு நாள் கடமையை மீறுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.

திருச்சட்ட அறிவைக் கொண்டு மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்றார்கள்.

 இறைவனின்  இரக்கத்தை விட சட்டங்களை மிகவும் முக்கியமாகக் கருதினார்கள்.

இரக்கத்தின் காரணமாக இயேசு நோயாளிகளைக் குணமாக்கினார்.

அதைத் தவறு என்றார்கள்.

இந்தக் கால நிலைமையின் அடிப்படையில் இந்த வசனத்தைக் தியானிப்போம்.

மீட்படைய பைபிள் அத்தியாவசியமானது இப்போதும் அனைவரும் நம்புகிறோம்.

ஆனால் நாம் பைபிளை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

பைபிளைச் சரியாகப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்,

தவறாகப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

விண்ணுலக வாழ்வை அடைய 
பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வுலகில் வசதியாக வாழப் 
பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

அருளை ஈட்டப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

பொருளை ஈட்டப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

இறைச்செய்தியை அறிவதற்காக இதுதான் பைபிள் என்று உலகுக்குத் தொகுத்துக் கொடுத்தது இறைமகன் இயேசு நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபை.

அது கொடுத்த பைபிளுக்கு மொத்தம் 73 புத்தகங்கள்.

பழைய ஏற்பாடு 46.
புதிய ஏற்பாடு.    27.

துவக்கத்திலிருந்தே பைபிள் செய்திகளை மக்களுக்குப் போதித்து அவற்றுக்கு உரிய விளக்கத்தைக் கொடுத்து வந்தது கத்தோலிக்கத் திருச்சபைதான்.

பதினாறாம் நூற்றாண்டு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

தாய்த் திருச்சபையின் பைபிள் போதனையைக் கேட்டு மக்கள் அதன்படி வாழ்ந்து வந்தனர்.

பதினாறாம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதிகள் என்று தங்களையே அழைத்துக் கொண்ட சிலர் 

கத்தோலிக்க பைபிளிலிருந்து தங்களுக்கு விருப்பமில்லாத ஏழு புத்தகங்களை நீக்கி விட்டு,

 அதற்குப் பைபிள் என்ற பெயரை வைத்துக் கொண்டு,

 பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுத்து போதிக்க ஆரம்பித்தார்கள்.

 அவர்கள் வைத்திருந்தது  உண்மையான பைபிள் அல்ல,

வசனங்களுக்கு அவர்கள் கொடுத்த விளக்கம் உண்மையான விளக்கமும் அல்ல.

அவர்கள் பைபிளை சரியாகப் பயன்படுத்தவில்லை.

ஒரு மாணவன் வீட்டுப் பாடமாக ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியைப் பாராப் பாடமாக படித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய அம்மா அவனுடைய ஆத்திச்சூடி அறிவைச் சோதிக்க விரும்பி,

"ராஜா, ஊக்கமது கைவிடேல் என்ற பாட்டுக்கு அர்த்தம் சொல்லு."

பையன் பதம் பிரித்து பொருள் சொன்னான்,

"ஊக்கம் = ஊக்கம் தரக்கூடிய,
மது = மதுவை,
கைவிடேல்= விட்டு விடாதே.

மது அருந்தும் பழக்கத்தை விட்டு விடாதே, ஏனெனில் மது அருந்தினால் ஊக்கம் கிடைக்கும்."

பைபிள் வசனங்களுக்கு இதைப் போல் சொன்னால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் சிலர் பைபிள் வசனங்களுக்கு தப்பும் தவறுமாய் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

பைபிளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு  வசனங்களுக்கு விருப்பம் போல் பொருள் சொலலும் பிரிவினை சபைகள் ஏறத்தாழ 45000 உள்ளன.

இவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

இவர்கள் ஏற்றுக் கொள்வது ஏழு புத்தகங்கள் இல்லாத பைபிளை.

இவர்களில் பலர் காணிக்கை வசூலுக்காக மட்டுமே பைபிள் போதகம் செய்கிறார்கள்.

இவர்களுக்கு பைபிள் ஒரு வியாபாரப் பொருள்.

இவர்கள் பைபிள் பணி புரிவது அருள் ஈட்ட அல்ல, பொருள் ஈட்ட.

இயேசு சட்ட நூல் அறிஞர்கள் செய்ய தவற்றினைக் சுட்டிக் காண்பித்தது நாம் அப்படிப் பட்ட தவறுகளைச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான்.

பைபிளை வாசிக்கும் போது

 வசனங்களின் உண்மையான பொருளை

பைபிளைத் தந்த கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைப்படி புரிந்து கொண்டு 

அதன்படி வாழ்வோம்.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைப்படி வாழ்வோம்.

ஒவ்வொரு திருப்பலியின் போதும் பைபிள் வாசகங்களுக்கு குருவானவர் கொடுக்கும் விளக்கத்தைக் கூர்ந்து கவனிப்போம்.

இறைவாக்கு நமது வாழ்வாகட்டும்.

லூர்து செல்வம்.

Monday, October 14, 2024

"ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. "(லூக்கா நற்செய்தி 11:43)

 "ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. "
(லூக்கா நற்செய்தி 11:43)

இயேசு அன்றைய பரிசேயர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதன் நாம் எப்படி குறைகள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை நமக்கு உணர்த்த விரும்புகிறார்.

பரிசேயர்கள் ஆலயத்தில் முதன்மையான இருக்கைகளில் அமர விரும்பினார்கள்.

வெளியிடங்களில் மக்கள் தங்களை வணங்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

கோவிலில் எல்லா இருக்கைகளும் மக்கள் அமர்வதற்காகத்தான் போடப் பட்டுள்ளன.

முதல் வரிசையில் யாரும் அமரக்கூடாது என்று இயேசு சொல்லவில்லை.

ஒரு செயல் சரியானதா, தவறானதா என்று தீர்மானிப்பது செய்பவரின் நோக்கம் தான்.

கோவிலுக்கு நன்கொடை கொடுப்பது சரியா? தவறா?

இறையன்பின் அடிப்படையில் கொடுத்தால் அது நற்செயல்.
அதற்கு விண்ணகத்தில் பலன் உண்டு.

ஆனால் சுய விளம்பரத்துக்க்கக் கொடுத்தால் 
அது நற்செயல் அல்ல, 
அதற்கு விண்ணகத்தில் என்ன பலனும் இல்லை.

கடவுளுக்கு நமது செயல்களின் அந்தரங்க நோக்கம் தெரியும்.

பரிசேயர்கள் மற்றவர்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காக முதல் இருக்கைகளைத் தேடினார்கள்.

அது தவறு.

சுத்தமான உடை அணிந்து கோவிலுக்கு வருவது சரி.

மற்றவர்கள் தங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான உடை அணிந்து கோவிலுக்கு வருவது தவறு.

அவர்கள் தங்களது தவற்றின் மூலம் மற்றவர்களைப் பாவத்தில் விழ வைக்கிறார்கள்.

நாம் மற்றவர்களை வணங்க வேண்டும்.

வணங்கும் போது மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்.

நாம் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்கிறோம்.

மற்றவர்கள் வணங்குவதை நட்பின் அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறோம்.

வணங்குவதும், வணக்கத்தை ஏற்றுக் கொள்வதும் சரி.

ஆனால் நாம் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற தற்பெருமை உணர்வுடன் பிறரின் வணக்கத்தை எதிர் பார்ப்பது தவறு.

இதைச் சுட்டிக்காட்டவே இயேசு பரிசேயர்களைப் பார்த்து,

" நீங்கள் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்கள்." என்கிறார்.

பரிசேயர்கள் மக்களுக்கு முன்னால் தங்களை புனிதர்களாக காட்டிக்கொள்ள விரும்பினர்.

மக்களின் பாராட்டை பெற ஆசைப்பட்டனர். சந்தை வெளிகளில் நடந்து செல்லும் போது, மக்கள் தங்களை வணங்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

அன்றைய பரிசேயர்களைப் போல இன்றும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நமது அனுபவத்தில் அறிகிறோம்.

நாம் அப்படிப் பட்டவர்களாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

 தங்களை நல்லவர்கள் என்று காட்டிக்கொள்ள, சமூக வலைதளங்களில் தங்களது நல்ல செயல்களை பகிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

தாங்கள் தாராள குணம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ள கோயில்களுக்கு நிறைய நன்கொடைகள் தருபவர்களும் 
இருக்கிறார்கள்.

 உள்ளத்தில் பக்குவம் இல்லாதவர்கள்தான் இப்படிச் செய்வார்கள்.

நாம் நற்செயல்கள் செய்ய வேண்டும்.

நமது விசுவாசம் நமது நற்செயல்களில்தான் வெளிப்பட வேண்டும்.

செயல்கள் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம் என்று இறைவாக்கு கூறுகிறது.

நமது செயல்கள் விசுவாசத்தின் பிள்ளைகளாக இருக்க வேண்டும், தற்பெருமையின் பிள்ளைகளாக அல்ல.

நாம்  மற்றவர்களை விட மேலானவர்கள் என்று உள்ளத்தில் நினைப்பதே தவறு.

அப்படி நினைப்பது நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே இடைவெளியை உண்டாக்குகிறது.

நல்லவர்கள் தாழ்ச்சியின் பிள்ளைகள்.

சிந்தனையிலும், சொல்லிலும், 
செயலிலும் 
பரிசுத்தர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, October 13, 2024

உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும். (லூக்கா நற்செய்தி 11:41)

உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும். 
(லூக்கா நற்செய்தி 11:41)

பரிசேயர்கள் காரண காரிய தொடர்பு இல்லாமல் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அவர்கள் சாப்பிடுமுன் கை கழுவ வேண்டும். இது ஒரு சடங்கு.

காரணம், சுத்தமாக்குதல்.
காரியம், கை கழுவுதல்.

மனிதனுக்கு வெளியில் தெரியக்கூடிய உடல்‌ மட்டுமல்ல,

ஊனக்கண்ணால் பார்க்க முடியாத ஆன்மாவும் இருக்கிறது.

சாப்பிடுமுன் கை கழுவுவது வெளிப்புற சுத்தத்திற்காக.

மனிதன் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் 

உட்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும், வெளிப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

வெளிப்புற சுத்தத்தை நோக்கமாகக் கொண்டு கை கழுவுவது போல, 

உட்புறச் சுத்தத்திற்காகவும் செய்யவேண்டியதைச் செய்ய வேண்டும்.

ஆனால் அவர்கள் ஆன்மாவின் சுத்தத்துக்காக எதுவும் செய்யவில்லை.

ஆகையால்தான் அவர்கள் காரண காரியத் தொடர்பின்றி சடங்குக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றேன்.

இறை வசனத்தைத் தியானிப்போம்.

"உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள்."

உட்புறம் என்றால் என்ன?

உட்புறம் மனிதனின் உள்ளத்தை குறிக்கிறது. 

நமது ஐம்புலன்கள் நமது வெளிபுறத்தை உருவாக்குவது போல


நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், மற்றும் நோக்கங்கள் ஆகியவை நம்முடைய உட்புறத்தை உருவாக்குகின்றன.

உருவம் இல்லாத கருத்துகளாகிய (Concepts) எண்ணங்கள், உணர்வுகள்,  நோக்கங்கள் ஆகியவற்றின் உறைவிடம் நமது உள்ளம்.

மனிதன் பரிசுத்தமானவனாக இருக்க வேண்டுமென்றால் அவனது உள்ளம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

வெளிப்புற சுத்தம் மட்டும் அவனைப் பரிசுத்தமானவனாக மாற்றாது.

தர்மம் என்றால் என்ன?

நம்மிடம் உள்ளவற்றைத் தாராளமாக பகிர்ந்து கொள்வதுதான் தர்மம்.

பணத்தைப் பகிர்ந்து கொள்வது மட்டும் தர்மம் அல்ல.

மற்றவர்களுக்கு உதவுவதற்காக  நம்முடைய நேரத்தையும் திறமைகளையும் பகிர்ந்து கொள்வதும் தர்மம் தான்.

இவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் 

நமது எண்ணங்களும், உணர்வுகளும்,  நோக்கங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

முதலாவது பகிர்ந்து கொள்ள எண்ண வேண்டும், அதாவது, விரும்ப வேண்டும்.

பகிர்ந்து கொள்வதன் நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு உதவுவது நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியான உணர்வுகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நமது உட்புறம் பரிசுத்தமானதாக இருந்தால் நமது பகிர்வு மற்றவர்களையும் பரிசுத்தமானவர்களாக மாற்றும்.

நமது நேரத்தையும், திறமைகளையும் மற்றவர்களை 
பரிசுத்தமானவர்களாக மாற்றுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

"அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்."

நமது தூய்மையான எண்ணங்களையும், உணர்வுகளையும், நல்ல நோக்கத்தோடு மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது 

நமது உள்ளும் புறமும் மட்டுமல்ல, மற்றவர்களுடைய உள்ளும் புறமும் தூய்மையாகும்

ஆனால் நமது உள்ளத்தில் உள்ள எண்ணங்களும், உணர்வுகளும், நோக்கங்களும் பாவகரமானவைகளாக இருந்தால் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நம்மைப் போல ஆக்கி விடுவோம்.

ஆகவே நமது வெளிப்புறத்தை மட்டுமல்ல, உட்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பரிசேயர்கள் பல வெளிப்புறச் சடங்குகளை கடைபிடித்தாலும், 

அவர்களின் உள்ளம் தூய்மையாக இல்லை என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.

வெளிப்புறச் சுத்திகரிப்பை விட உட்புறச் சுத்திகரிப்பே முக்கியம்.


நாம் வெளியில் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும், நம் உள்ளத்தில் பொறாமை, கோபம், பொய் பேசுதல் போன்ற பாவங்கள் இருந்தால், நாம் உண்மையிலேயே தூய்மையானவர்களாக இருக்க முடியாது.

உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல் மிகவும் முக்கியம்.

தர்மம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்: 

நாம் தர்மம் செய்யும் போது, நம் உள்ளத்தில் உள்ள சுயநலம், பொறாமை போன்ற குணங்கள் குறையும். 

அதற்கு பதிலாக, நம் உள்ளத்தில் கருணை, அன்பு, மற்றும் இரக்கம் போன்ற நல்ல குணங்கள் வளரும்.

 உள்ளம் தூய்மையானவர்கள், தூய்மையான வாழ்க்கையை வாழ்வார்கள்.

 அவர்கள் மற்றவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்துவார்கள், 

சமூகத்திற்கு நன்மை செய்வார்கள், 

மேலும் கடவுளுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் 
 நமக்கு  வெளிப்புறச் சுத்திகரிப்பை விட உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதே முக்கியம்.

  தர்மம் செய்வதன் மூலம் நாம் நம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி,

 ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழ்வோம்.

"தர்மம் தலை காக்கும்."

லூர்து செல்வம்.

Saturday, October 12, 2024

யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். (லூக்கா நற்செய்தி 11:30)

யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். 
(லூக்கா நற்செய்தி 11:30)


இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இயேசுவின் போதனையை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள், ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருந்தார்கள்.

ஏற்றுக் கொள்ளாதவர்கள் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தான் சரியான போதகர் என்று நிரூபிக்க அடையாளம் காட்ட வேண்டும் என்று கேட்டார்கள்.

இயேசு பழைய ஏற்பாட்டுத் தீர்க்கத்தரிசி யோனாவைத் தனக்கு அடையாளமாகக் கோடுக்கிறார்.

யோனா கடலுக்குள்  எறியப்பட்ட போது ஒரு பெரிய மீன் அவரை விழுங்கி விட்டது.


 யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார். 


மூன்றாவது நாள் மீன் அவரைக் கரையில் கக்கி விட்டது.

" யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்."

என்று இயேசு கூறுகிறார்.

மூன்றாம் நாள் கக்கப்பட்ட யோனாவின் போதனையை நம்பி‌ நினிவே நகர மக்கள் மனம் திரும்பினார்கள்.

யோனாவை அடையாளமாகக் காட்டியதன் மூலம் இயேசு தனது மரணத்தையும், அடக்கத்தையும், மூன்றாம் நாள் உயிர்க்கப் போவதையும் முன்னறிவிக்கிறார்.

இயேசு போதிக்கும் போது நம்பாதவர்கள் அவரது உயிர்ப்பைப் பார்த்த பிறகாவது அவருடைய வார்த்தைகளை ஏற்று மனம் திரும்ப வேண்டும்.

யோனா நினிவே நகர மக்களை மனம் மாறச் செய்தார்.

இயேசுவும் மக்கள் மனம் மாறவே போதிக்கிறார்.

இயேசுவின் போதனையை மக்கள் ஏற்றுக் கொண்டு, மனம் திரும்பி, இறை அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நினிவே நகர மக்கள் யோனாவின் வார்த்தைகளை நம்பி,

 சாக்கு உடை உடுத்தித் தவம் செய்ததோடு 

தங்களை மன்னிக்கும்படி கடவுளை நோக்கி மன்றாடினார்கள். 

தம் தீய வழிகளையும், தாம் செய்துவந்த கொடுஞ்செயல்களையும் விட்டொழித்தார்கள்.

கடவுளும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

இயேசுவின் போதனையைக் கேட்பவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும்.

கடவுள் இரக்கமுள்ளவர்.

நாம் பாவம் செய்தாலும் மனம் திரும்பி மன்னிப்புக் கேட்க கால அவகாசம் கொடுக்கிறார்.

அதை‌ மனம் திரும்பவும் மன்னிப்புக் கேட்கவும் பாவப் பரிகாரம் செய்யவும் நாம் பயன்படுத்த வேண்டும்.

கால அவகாசம் கொடுத்ததற்காக நன்றி கூற வேண்டும் 

பாவ வாழ்க்கையை விட்டதோடு நின்று விடாமல் புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து,
நம்மை மன்னிக்க
 மனிதனாகப் பிறந்த இயேசு நமக்கு எல்லா வகையிலும் முன்மாதிரிகையாக வாழ்ந்தார்.

 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. 
(மத்தேயு நற்செய்தி 5:3)
என்று நமக்குப் போதித்த இயேசு,

நமக்கு முன்மாதிரிகையாக அவரே ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து,
ஏழையாக மரித்தார்.

பகைவர்களை நேசியுங்கள் என்று போதித்த இயேசு 
தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்து நமக்கு முன் மாதிரிகை காட்டினார்.

உலக இறுதியில் மரித்தோர் அனைவரும் உயிர்ப்பர் என்பதை நாம் நம்பும் பொருட்டு அவரே மரித்த‌ மூன்றாம் நாள் உயிர்த்தார்.

அவர் உயிர்த்தது அவர் இறைவன் என்பதற்கு ஆதாரம்.

உலகைச் சார்ந்ததாகிய நமது உடல் (Material body)விண்ணகம் செல்வதற்காக ஆன்மீக உடலாக 
(Spiritual body) மாறி உயிர்க்கும்.

ஆகவே நமது உடலுக்கு உரிய மரியாதையைக் கொடுப்போம்.

அதைப் பாவம் செய்யப் பயன்படுத்தாமல் புண்ணிய வாழ்வு வாழப் பயன்படுத்துவோம்.

இயேசு தனது பரிசுத்தமான உடலை நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் பயன்படுத்தினார்.

தவ முயற்சிகள் செய்வதன் மூலம் நாமும் நமது உடலைப் பாவப்பரிகாரம் செய்யப் பயன்படுத்துவோம்.

தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆன்மாவுக்கு அது செய்யும் நன்றிக் கடனாக இருக்கட்டும்.

இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து விண்ணகம் சென்றது போல 

நமது உடலும் உலக இறுதி நாளில் உயிர்த்து விண்ணகம் செல்ல அதை வாழ்த்துவோம்.

லூர்து செல்வம்.